Tuesday 5 April 2011

விலங்குப் பண்ணை

விலங்குப் பண்ணை
ஜார்ஜ் ஆர்வெல்

கதைச் சுருக்கம்
2005-12-29

பண்ணை விலங்குகள் பண்ணையாரால் சுரண்டப்படுவதையும் இறைச்சிக்காகக் கொல்லப்படுவதையும் பொறுக்காது, பன்றிகளின் தலைமையில் பொங்கித் திரண்டு, பண்ணையாரை விரட்டி விட்டுப் புது உலகம் கண்டன.

ஆனால் இயற்கையாகத் தாங்களே தங்கள் தேவைகளைத் தேடிக் கொள்வதை மறந்து போன பண்ணை விலங்குகள், வேறு வழியின்றிப் பன்றிகளின் மேலாண்மையை ஏற்று, முன்போல் உழைத்தன. ஆனால் ஒருவரின் இலாபத்திற்காக அன்று. தங்கள் அனைவரின் ஒட்டு மொத்த நல வாழ்விற்காக. அதாவது, அவை அப்படி நினைத்தன. முதலில் கொண்டாட்டமாக இருந்த வேலைகள் பின்னால் தண்டனை போல் ஆயின.

பன்றிகள் அதிகாரத்தைச் சுவைத்த பின், தங்கள் மேல் நிலையைத் தக்க வைத்துக் கொள்ளவும் நியாயப் படுத்திக் கொள்ளவும் தேவையான சட்ட திட்டங்களை நடைமுறைப் படுத்தின. பண்ணையார் எந்த நேரமும் பண்ணையை மீட்கத் தாக்கக் கூடும் என்று விலங்குகளைப் பயத்தில் வைத்து வேலை வாங்கின. பண்ணையைக் காப்பாற்றத் தங்களைப் போன்றோர், மற்ற விலங்குகளை விடச் சிறப்பு நிலையில், வேலை செய்யாமல் இருந்து வழி நடத்த வேண்டியது அவசியம் என்றன.

மாறிய பன்றிகளின் மன்பான்மைக்கேற்ப, புரட்சியின் தொடக்கத்தில் கொண்ட கொள்கைகளும் முழக்கங்களும் இரவோடு இரவாக மாற்றப்பட்டன; மறைக்கப்பட்டன; திரிக்கப்பட்டன. எதிர்த்தவர்கள் பன்றியேயாயினும், துரோகப்பட்டம் (பண்ணையாருக்கு உதவியதாக) சூட்டப்பட்டு, வளர்ப்பு நாய்ப் பாதுகாப்புப் படையால், இருந்த சுவடு தெரியாமல் அழிக்கப்பட்டன.

உழைத்துக் களைத்த அடிமை விலங்குகள் முன்பு இருந்த நிலை தேவலாமா, இன்றைய நிலை நல்லதா என்று யோசிப்பதற்குக் கூடத் திறன் இன்றிக் கண்டதையும் சொன்னதையும் நம்பிக் கெட்டன.

பன்றிகள், முடிவில், பண்ணைப் பொருள்களை விற்க மனிதர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, பண்ணையார் வீட்டில் குடி புகுந்து தனித்து வாழ்ந்தன. ஓர் இரவு பண்ணையார் வீட்டில் விருந்தும் கேளிக்கையுமாக இருந்த சத்தம் கேட்டு அடிமை விலங்குகள் சன்னல் வழியாகப் பார்த்த போது, அங்கு கை குலுக்கிக் குடித்துச் சிரித்துக் கொண்டிருந்த பன்றிகளுக்கும் மனிதர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் மயங்கின.

No comments:

Post a Comment