Saturday, 16 April 2011

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

2008-06-19

ஆனி 5, திருவள்ளுவர் ஆண்டு 2039

இன்று மதிய இடைவேளையில் காலாற‌க் கால்நடையாகச் (அதாவது கால் போன போக்கில்) சென்ற போது மனம் (தான் போன போக்காக) 'இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே' (திரைப்படம்: திருவருட் செல்வர்) என்ற பாடலை முணுமுணுத்துக் கொண்டு வந்தது. அதன் வரிகள் மனநிலைக்குப் பொருத்தமாக இல்லாததால் அடுத்து 'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான், அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்' என்ற பாடலுக்குத் தாவியது. அதுவும் நிறைவைத் தராததால் அதன் தொடக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு தானே ஒரு பாட்டை இட்டுக் கட்டியது. அதுவே இதுவே!


ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அனைத்து மாகவே தெரிகின்றான்

இருக்கிற தென்பதும் அவனே - இறை
இல்லை என்பது
ம் அவளே
கருத்தும் காட்சியும் அதுவே - அதைக்
கண்டதும் விண்டதும் ஒன்றே                                   (ஆண்டவன்...)

வெறுப்பிலும் விருப்பிலும் விளங்கும் - பெரும்
வெற்றியும் தோல்வியும் புரியும்
வறுமையும் செழுமையும் வாழ்வே - அதன்
வலிமையும் மெலிமையும் சார்பே                           (ஆண்டவன்...)


பிறப்பும் இறப்பும் கனவே - அறிவுப்
பேதைமை கூர்மைக்கு உறவே
சிறப்பும் செல்வமும் மனமே - காணும்
சிறுமையும் பெருமையும் தனதே                             (ஆண்டவன்...)

சிரிப்பதும் அழுவதும் சிவமே - எல்லாச்
செயல்பொருள் சக்தியின் வடிவே
தரிப்பதும் மரிப்பதும் தாயே - தானே
தன்னிடம் திரும்பிடும் சேயே                                    
(ஆண்டவன்...)

கொடுப்பதும் கெடுப்பதும் குணமே - குறைக்
கூறிச் சினமுறும் விசைப்புலமே
நடுமையும் கொடுமையும் நட்பே - நம்பி
நடிப்பதும் பார்ப்பதும் நாமே                                         (ஆண்டவன்...)

அணைப்பதும் உதைப்பதும் அறமே - தொடர்
ஆக்கமும் அழிவும் அழகே
பிணைப்பதும் பிரிவதும் மருளே - என்றும்
பிரியாதன சேருவதும் அருளே                                    (ஆண்டவன்...)

தருவதும் பறிப்பதும் இறையே - தன்னைத்
தொலைத்தே தேடிடும் நிறையே
கருவே காயே கனியே - விரிந்த‌
காலமிடம் வினைபொருள் வெளியே                         (ஆண்டவன்...)

வருவதும் போவதும் இயல்பே - மாற்றி
வைத்திட நினைப்பது துயரே
உருவிலும் அருவிலும் உளதே - ஒன்றி
உணர்வதும் ம(றை)றப்பதும் ஒளியே                       (ஆண்டவன்...)

No comments:

Post a Comment