Tuesday, 19 April 2011

பிள்ளைகள் பெரியவர்களுக்கு உணர்த்தும் உண்மை

2011-04-19

பிள்ளைகள் பெரியவர்களுக்கு உணர்த்தும் உண்மை

என் தங்கையின் ஐந்து வயது மகன் தொலைக்காட்சியில் வரும் 'ஜெய் ஹனுமான்' தொடர் விசிறி, பக்தன். அவனுக்கு அனுமானைப் போலப் பறக்க ஆசை. அம்மாச்சியிடம் (பாட்டி) சொல்ல, 'அவர் நீ அனுமான் போலச் சாமி ஆனால் தான் பறக்க முடியும்' என்று சமாளித்தார் (என்று நினைத்துக் கொண்டு மாட்டிக் கொண்டார்). பிள்ளைகளுக்கே உரித்தான போக்கில் தான் எப்படி சாமி ஆவது என்று கேட்க, மேலும் சமாளிக்க, 'நீ செத்தால் தான் சாமி ஆகலாம்' என்றார் அம்மாச்சி. அடுத்து 'எப்போது சாவேன்' என்றான். 'வயதாகித் தான் சாவாய்' என்றார். அதிலிருந்து அவ்வப்போது 'நான் எப்பதான் சாவனோ, சாமி ஆகிப் பறக்க வேண்டும்' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டு இருப்பான்.

ஒரு நாள் தாத்தா, பையனுக்கு வழி காட்டுவதாக, உணர்வுட்டுவதாக நினைத்துக் கொண்டு, 'தம்பி, நீ பெரியவன் ஆகி என்ன படிக்கிறப் போறே' என்றார். அவனோ, 'உனக்கு ஏன் தாத்தா அந்தக் கவலை. அதுக்குள்ள நீ செத்து சாமி ஆகி விடுவே' என்றானே பார்க்கலாம்.

பல நேரங்களில் நாம் அப்படித் தான் எதிர்காலத்தைப் பற்றி அளவுக்கு மீறிக் கவலைப் படுகிறோம். சில நேரங்கள் தான் நாம் அப்போது இருக்கப் போவதில்லை என்பது உரைக்கிறது.

மகன் முருகன் அப்பா சிவனுக்கு ஓம் என்ற மந்திரத்தின் பொருளை விளக்கியது இதிகாசக் கதையோ (mythology), உருவகக் கற்பனையோ (parable), குறியீட்டுப் புனைவோ (symbolic story) ஆனால் அன்றாட வாழ்வில் அது நடந்து கொண்டு தான் உள்ளது. ஆங்கிலத்தில் கூட 'பிள்ளை மனிதனுக்குத் தந்தை' (child is the father of man) என்ற பழமொழி உணடு.

இது போன்ற சுவையான நிகழ்ச்சிகள் அன்றாடம் வீட்டுக்கு வீடு குடும்பத்துக்குக் குடும்பம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. மற்றவர்களும் பகிர்ந்து கொள்ளலாமே.

No comments:

Post a Comment