Sunday 3 March 2024

மனதைக் கவனி - இப்படி எளிமையாகவும் புரிந்து கொள்ளலாம் - 2

 03-Mar-2024

மனதைக் கவனி - இப்படி எளிமையாகவும் புரிந்து கொள்ளலாம் - 2

மனம் ஒரு கண்ணாடி

நம்முடைய காலைத் தொடைக்குப் பின்பக்கம் மடிக்க முடிகிறது. ஆனால் காலை முன்பக்கம் மடிக்க முடியமா? முடியாது. தொடை, காலை இணக்கும் முட்டியின் அமைப்பு அப்படிச் செய்ய முடியாத படி அமைந்துள்ளது. இதை நாம் புரிந்து கொள்கிறோம். புத்தகத்தில் படித்து அன்று. நம் உடலைப் பற்றிய நம் சுய அறிவால். அதனால் காலைத் தொடைக்கு முன்பக்கம் மடிக்க முயல்வதில்லை.

இதை நம் மனதிற்கும் பொருத்திப் பார்ப்பதுதான் மெய்யுணர்வு. மனதால் புரிந்து கொள்ளக் கூடியதையும் புரிந்து கொள்ள முடியாததையும் பிரித்து ஆய்ந்து அறிந்து, ஒப்புக் கொண்டு, மனம் தன்னால் இயலாததில் இயலும் என்று மயங்குவதை அடையாளம் கண்டு தவிர்த்துக் கொள்வதே 'மனம் இற்றுப்' போதல். 

மனதை எங்கு பயன்படுத்த வேண்டுமோ, எப்படிப் பயன்படுத்த வேண்டுமோ அப்படி அளவாகப் பயன்படுத்திக் கொள்ளப் பழகுவதுதான் மெய்யுணர்வு. இதை விரிவாகப் பார்க்கும் போது அதில் கடவுள் நம்பிக்கை ஓர் உத்தியாகப் பயன்படலாம். கடவுள் நம்பிக்கை இல்லாமலும் பழகிக் கொள்ள முடியும். அதனால் கடவுள் நம்பிக்கை அவசியமில்லை.

காலைப் பின்பக்கம் மடிக்க எந்த முட்டி இணைப்பு உதவுகிறதோ அதே முட்டி இணைப்புதான் காலை முன்பக்கம் மடிக்க விடாமல் தடுக்கிறது. அதே போல் மேற்கண்டவாறு மனதைப் புரிந்து கொள்வதும் அதைப் பயன்படுத்துவதும் தவிர்ப்பதும் மனமே தான். மனம் அப்படிப் பக்குவப்படுவதை, முதிர்ச்சி அடைவதை நாம் 'தன்னை அறிதல்', 'ஞானம் பிறந்தது', 'மனத்தூய்மை', 'மனத்திட்பம்', 'தவம்' என்று பலவாறு சொல்கிறோம்.

மு.வ. இதையே 'மனம் ஒரு கண்ணாடி. அதில் மாசு படிந்திருந்தால் தன்னையும் தெளிவாகக் காட்டாது, தன்னில் பிரதிபலிப்பவற்றையும் தெளிவாகக் காட்டது' என்று சொல்லியுள்ளார்.

தன்னிலை விளக்கம் - 1

 20-Feb-2024

தன்னிலை விளக்கம் - 1

குடும்ப வளர்ப்பு, சூழலால் முதலில் மு.வ. நூல்கள் மூலம் தன்னை அறிதல் என்பது மேலோட்டமாக இருந்தது. பிறகு நாத்திக, பகுத்தறிவு சிந்தனைகளில் என் கவனக்குவிப்பு இருந்தது.

என்றாலும் பள்ளிப் பருவத்திலேயே ஆழமாகப் புரியாத வகையில் 'தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே, ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே' என்ற வள்ளலார் பாடல் என்னை ஈர்த்தது, அதைப் பாடிக் கொண்டிருந்தது நினைவில் உள்ளது.

ஓசூரில் வாழ்ந்த காலத்தில் பெரியார் படிப்பக‌த்தில் வரும் தோழர்களிடம் பிறருக்குப் பகுத்தறிவைப் பரப்புவதை விட நாம் முதலில் அதைச் சரியாகப் புரிந்து கொள்வதும் வளர்த்துக் கொள்வதும் அதன்படி வாழ்வதும் முக்கியம் என்று வலியுறுத்திப் பேசி வந்துள்ளேன். நண்பர் தென்னை கணேசன் இதை நன்றாக அறிவார்.

ஒருமுறை மா.லெ.கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஓசூரில் என் இல்லத்தில் வந்து உரையாடிக் கொண்டிருந்து விட்டு, நீங்கள் வழமையா தி.க.காரர் போல் பேசவில்லை என்று சொல்லிச் சென்றார். என் கருத்துகளைச் சொல்வதிலும் திறந்த மனதுடன் மாற்றுக் கருத்துகளை அணுகுவதிலும் உள்ள பக்குவத்தையே அவர் குறிப்பிட்டார் என்று அனுமானித்தேன்.

அதே சமயம் சண்முகசுந்தரத்தின் நண்பர் சந்திரசேகர் என்னைக் குறித்து சண்முகசுந்தரத்திடம் ‘he has more heat than light’ என்று சொன்னார் என்பதைச் சண்முகசுந்தரம் மூலம் அறிந்தேன். அதுவும் ஒரு வகையில் உண்மை. உணர்ச்சிதான் இயக்கும். வெறும் அறிவு மட்டும் வினைக்குத் தூண்டாது.

நானும் நண்பன் ஆறுமுகப் பெருமாள் பிள்ளையுமாக பெங்களூர் சென்று அறிவியல் நூல்கள் வாங்கிப் படித்து வந்ததால் பகுத்தறிவு மட்டும் போதாது என்றும் அறிவியல் மனப்பான்மையின், உலகையும் நம்மையும் அறிவியல் பூர்வமாகப் புரிந்து கொள்வதன் முக்கியத்துவ‌ம் விளங்கியது. இதில் நண்பர்கள் சண்முகசுந்தரம், தில்லைக்குமரன் வழியாக அறிமுகமான சில‌ நூல்களுக்கும் பங்குண்டு.

பிறகு, நண்பர் பேராசிரியர் வீரபாண்டியன் மூலம் மார்க்சிய பெரியாரியல் சிந்தனைகள் வந்து சேர்ந்தன. முன்பு இருந்த நாத்திகம், பகுத்தறிவு என்பது பெரியாரியலின் ஒரு அம்சமே. ஆனால் வீரபாண்டியன் மூலம் பெரியாரியலை விரிவாகப் புரிந்து கொள்ள வழி கிடைத்தது.

தம்பி திருவள்ளுவன் மூலம் வந்த ஓமியோபதி அடிப்படைகள் குறிந்த கருத்துகளும் இவற்றிற்கிடையில் வளம் சேர்த்தன.

ஓசூர் பெரியார் படிப்பகத்தில் வெறும் பகுத்தறிவு என்று இல்லாமல் அறிவியல் கண்ணோட்ட விளக்கங்களும் நடத்தினோம். சண்முகசுந்தரத்தின் துணைவியார் அவ்விதம் உயிரியல் அறிவியல் வகுப்பு வழங்கினார்.

தென்னை.கணேசன் மூலம் அறிமுகமான புலவர் நாகூரான் சைவசித்தாந்த  வகுப்பு எடுத்தார்.

பெரியார் படிப்பகம் ஆரம்பிக்கும் முன்னரே, நண்பர்கள் நாங்கள் தங்கியிருந்த அறைக் கூடத்திலேயே கு.வெ.ஆசான், குடந்தை கதிர். தமிழ்வாணன் போன்றோரின் வரலாறு, தமிழ் இன்பம், இலக்கண‌ம் பற்றிய‌ வகுப்புகள் நடத்தினோம். அறிவுப் பணி, நல்ல, முற்போக்கு சிந்தனைகளைப் படிப்பதும் பகிர்வதும் பிறரிடமிருந்து பெறுவதும் தொடர்ந்து நடந்து வந்தன.

அடுத்து பதின்கவனகர் கனகசுப்புரத்தினம் அவர்கள் தொடர்பால் மெய்யுணர்வுப் பார்வை கிடைத்தது. ஆனால் அதை அப்போது மெய்யுணர்வு என்று நான் உணரவில்லை. பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை, பெரியாரியல் உடன் அப்பார்வை சில புதிய, ஒன்றை ஒன்று நிறைவு செய்யும், கோணங்களைத் தந்தது. நான் அறிவியல் பார்வையில் அவருடன் பகிர்ந்து கொண்டதை அவர் மேடைப் பேச்சில் குறிப்பிட்டும் வந்தார்.

என்றாலுமே திருக்குறளில் அறத்துப்பாலில் துறவறவியலின் அதிகாரங்களில் என் கவனம் திரும்பவில்லை. பாயிரம் அதிகாரங்கள் மனப்பாடமாய் இருந்தாலும் மனதை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

அதன் பின் தேடியவற்றையும் கிடைத்தவற்றையும் சுருக்கிச் சொன்னால் இன்று பகுத்தறிவு, அறிவியல், சமுதாய சிந்தனைகள் சரியான திசையில் செல்ல ஒவ்வொருவருக்கும் தன்னைப் பற்றிய, தான் யார் என்பது பற்றிய தெளிவு அவசியம் என்று புரிகிறது. அதை மெய்யுணர்வு என்று சொல்வதில் அல்லது வழக்கத்திலுள்ள ஆன்மீகம் என்று அழைப்பதில் எனக்குத் தயக்கமில்லை.

ஆனால் இதில் வளர்ந்து வரும் தெளிவு, உறுதி அப்படியான பெயர்களுக்குள் அடைப்பட்டுக் கொள்ளாமலேயே புரிந்து கொள்ள முடியும் என்று புலப்படுகிறது. அதை அவ்வப்போது பகிர்ந்து கொண்டு வருகிறேன். சில என் எழுத்தாக இருக்கலாம். சில அலன் வாட்ஸ் போன்றோரின் பேச்சாக இருக்கலாம். மற்றும் சில அறிவியல் தளத்தில் உள்ளவர்களின் கட்டுரை, பேட்டியாக இருக்கலாம். சில ஆன்மீக, குறிப்பாக ஞான மார்க்க, உரைகளாக இருக்கலாம்.

பகுத்தறிவு, அறிவியல், சமுதாய நலன் என்பவை தேவையில்லாமல் போய் விடவில்லை. அவை இன்றும் என்றும் அவசியம். அறிவியல் மனிதர் வந்தடைந்துள்ள, வளர்த்தெடுத்துள்ள ஒப்பற்ற கருவி. ஆனால வழக்கம் போல், அதாவது மதத்தின் உண்மையான அடிப்படை போல் அறிவியலும் சீர்கெட்டு வருகிறது. 

மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு அப்பால் மதம் என்று எதுவும் உள்ளதா?

இங்கு மதம், மெய்யுணர்வு இரண்டும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

அறிவியலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அப்பால் அறிவியல் என்றும் எதுவும் உள்ளதா?

இரண்டுக்குமே இல்லை என்றும் இருக்கிறது என்றும் சொல்லலாம்.

பின்பற்றுபவர்களின் பண்பைத் தவிர்த்து பின்பற்றப்படும் கொள்கை என்பது வெறும் மனக்கோட்டையே என்ற பார்வையில் இல்லை.

பின்பற்றுதல் என்பது என்றுமே 100 விழுக்காடு சரியாக இருக்க முடியாது, கொள்கை என்பது ஒரு செம்மையான முழுமையான ஒரு வகையில் அடையா இயலாத‌ நிலையைச் சுட்டுவது என்ற பார்வையில் இருக்கிறது.

---

இது என் மனப்போக்கு வளர்ந்து வந்தது பற்றி ஒரு மேலோட்டமான சுருக்கம். இதில் பல நெளிவு, சுளிவு, வளைவு, வழி தவறுதல்கள் எல்லாம் கொடுக்கப்படவில்லை. 

இது ஒரு வகையில் எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் கதை. இது போல் ஒவ்வொருவருக்கும் கதை இருக்கும். நம் பெயரே நம் கதையின் பெயர்தான்.

எல்லோருடைய‌ வாழ்க்கைக் கதையும் முக்கியம். எதுவும் உயர்வு தாழ்வு கிடையாது.

ஒரு வகையில் நம் கதைகள் என்பது இருப்பின் கதைகளே. 

(தொடரும்...)

மனதைக் கவனி - இப்படி எளிமையாகவும் புரிந்து கொள்ளலாம் - 1

 20-Feb-2024

மனதைக் கவனி - இப்படி எளிமையாகவும் புரிந்து கொள்ளலாம் - 1

"மனம் ஓடுவதைத் தடுத்து நிறுத்த முயல வேண்டாம். மனம் உயரப் பழகுவோம்." - டாக்டர் மு.வ.

"மனதைத் தள்ளி நின்று வேடிக்கைப் பார்க்கக் கற்றுக் கொள்வோம்." - டாக்டர் மு.வ.

உடலை நாம் எப்படி அணுகுகிறோமோ அதே போல் மனதையும் அணுகுவதே மெய்யுணர்வின் சாரம் (the essence of spirituality) என்று சொல்லலாம்.

எடுத்துக்காட்டாக, உடலுக்குள் என்ன உணவு போகிறது என்பதில் நமக்கு விழிப்புணர்வு உள்ளது. முழுமையாக இல்லாவிட்டாலும் குறைந்த அளவாவது உள்ளது. ஆனால் அதே போன்ற விழிப்புணர்வு நம் மனதுக்குள் என்ன போகின்றது என்பதில் உள்ளதா? பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.

உடலை மனதைக் கொண்டு ஆளுகிறோம். முறையான உணவு கட்டுப்பாட்டிலோ, உடற்பயிற்சி செய்வதிலோ, பல் விளக்குவதிலிருந்து குளிப்பது, நோய் வராமல் தடுக்க முயல்வது, வந்தால் அதற்கு உரிய மருத்துவம், ஓய்வு கொடுப்பது என்று உடலைப் பராமரிப்பதிலோ நாம் மனதைப் பயன்படுத்துகிறோம்.

ஆனால் மனதை ஆள எதைப் பயன்படுத்துவது? மனதையே தான் பயன்படுத்த வேண்டும். வேறு வழியில்லை. வேறு கருவி இல்லை.

உடலை ஆள மனதைப் பயன்படுத்துவதே பெரிய சவாலாக உள்ளது.

ஆங்கிலத்தில் "The spirit is willing but the flesh is weak" என்ற சொல்வழக்கு உள்ளது.

என்றால் மனதை ஆள மனதைப் பயன்படுத்துவது மாபெரும் சவால்தானே.

சினம் இறக்க கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும் 
மனம் இறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே தாயுமானவர்

இங்கு 'மனம் இறக்க' என்பதை 'மனதை ஆள' என்று புரிந்து கொள்வது தான் சரி. மனதை அதாவது எண்ண ஓட்டத்தை முற்றிலும் நிறுத்தி விடுவது சமாதி. அதைச் சாதிக்க முடிந்தாலும் அப்படியே இருந்து விட முடியாது. அதிலிருந்து வெளிவந்துதான் ஆக வேண்டும். எண்ண ஓட்டம் முன்பு போல் ஆரம்பித்து விடும்.

மனதைக் கவனிப்பது என்பது நமக்குத் தெரியாத புதிய வித்தை அன்று. எனக்கு கடுங் கோபம் வந்து விட்டது. எனக்கு அவமானமாகப் போய் விட்டது. நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன். அவர்கள் பாராட்டியது எனக்குப் பெருமையாக இருந்தது. அதைச் செய்து முடித்தது எனக்குப் பெருமிதமாக இருந்தது. எனக்கு இருமனமாக இருக்கிறது. ஒரே குழப்பமாக இருக்கிறது. இப்படி எல்லாம் நாம் சொல்வது எதைக் காட்டுகிறது? நம் மனதை நம்மால் கவனிக்க முடிகிறது என்பதைத்தானே.

ஆனால் அப்படிக் கவனிப்பது உடனுக்குடன் இல்லாமல் பொதுவாக அம்மனநிலையைக் கடந்த பின்பே தெரிவதாக உள்ளது. குழப்பம், தயக்கம் போன்றவற்றை அவை இருக்கும் போதே நம்மால் கவனிக்க முடிகிறது.

இப்படித் தானியக்கமாக (automatically / involuntarily)  மனதைக் கவனிப்பதைச் சுய உணர்வுடன் (conscious attention) அவ்வப்போதே கவனிக்க முடியமா?

முயற்சி செய்தால் தானே முடியும் முடியாது என்பது தெரியும். அதிலும் எந்த அளவுக்குத் தெளிவு, உறுதியுடன் முயற்சி செய்கிறோம் என்பதும் முக்கியமல்லவா? ஏனோ தானோ என்று முயற்சி செய்து விட்டு இதெல்லாம் புரட்டு, ஏமாற்று வேலை, யாராலும் முடியாது என்று தீர்ப்பு சொல்லலாம். அது அவரவர் இயல்பு. 

அவர்களைக் குறை சொல்வதோ அவர்களை எடை போடுவதோ அவர்களின் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதோ நமக்கு அவசியமில்லை. அவர்கள் சொல்வதை வைத்து, இது போன்றவற்றில், நாம் முடிவு செய்வது நம் சுய மரியாதை அன்று.

இதை எழுதுவதால் மனதைத் தொடர்ந்து கவனிப்பதில் முழு நேர வெற்றி பெற்று விட்டேன் என்று நினைத்து விடக் கூடாது. ஆனால் இதை எழுத எனக்குத் தகுதி இருக்கிறதா?

நிச்சயமாக இதை உபதேசிக்க எனக்குத் தகுதி இல்லை. ஆனால் பின்பற்றி ஓரளவு பலன் கண்டவன் என்பதால் நட்பு முறையில் பகிர்ந்து கொள்ளத் தகுதியுள்ளது.

பிறர் படிக்க வேண்டும், பின்னூட்டம் தர வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது. அது அவரவர் உரிமை. ஒரு வகையில் இவை போன்றவற்றை அவர்கள் மனதிற்குள் அனுமதிப்பதா என்று முடிவு செய்வதே இப்பகிர்வின் படியாகும், படித்து விட்டோ அல்லது படிக்காமலோ.

சுய உணர்வுடன் மனதைக் கவனிப்பது என்றால் என்ன?

இரண்டு மணி நேரம் போல் திரைப்படம் பார்க்கிறோம். அதில் வரும் காட்சிகளில் மனதைப் பறி கொடுக்கிறோம். ஆடல், பாடல், மகிழ்ச்சி, சோகம், நகைச்சுவை, காதல், பாசம், வேதனை, அச்சம், ஆபத்து என எல்லா உணர்ச்சிகளிலும் திளைக்கிறோம். ஆனால் ஒரு விநாடி கூட நாம் பார்ப்பவை அத்தனையும் உண்மையல்ல என்பதை நாம் மறப்பதில்லை. அதே சமயம் நினைப்பதும் இல்லை, அதாவது 'நான் திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன், இவை எல்லாம் நடிப்பு, உண்மையல்ல' என்று வாய் வார்த்தையாக, எண்ணமாக மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருப்பதில்லை, நமக்கு நாமே மனதிற்குள் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. ஆனால் அவ்வுண்மையை, அதாவது அது திரைப்படமே, நிஜமன்று என்ற உண்மையை மறப்பதும் இல்லை.

நினைப்பதும் இல்லை. மறப்பதும் இல்லை. இது என்ன புதுக் கரடி என்று என்று கேட்கலாம். புதுக் கரடியோ பழைய கரடியோ, இது சரியா என்று அவரவர் யோசித்து முடிவு செய்து கொள்ளலாமே.

இதே போல் மனதைக் 'கவனிக்காமல்' கவனிக்க முடியுமா? அதாவது ஓர் எண்ணம் தோன்றும் போது, இந்த எண்ணம் எனக்குத் தோன்றுகிறது என்று அதைப் பற்றி நினைக்காமல் கவனிக்க முடியுமா? அப்படித் தோன்றும் அந்த எண்ணத்தையும் கவனிக்க முடியுமா?

(தொடரும்...)