Friday, 15 April 2011

அத்வைதி காணாத கனவு

2011-04-15

"ஓர் இரகசியம்"

"என்ன அது?"

"என்னைத் தவிர எதுவுமே இல்லை"

"அப்படியா?"

"ஆமாம்"

"அப்படின்னா இதை யார்க் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கே"

"என் கிட்டதான்"

"என் கிட்டதானா?"

"ஆமா, என் கிட்டதான்"

"சரி அப்படியே இருக்கட்டும். ஒருத்தர் மட்டுமே இருக்கும் போது என்ன இரகசியம் இருக்கு. வேறு யாருக்கும் தெரியாம இருக்க வேறு யாரும் இல்லாத போது அது எப்படி இரகசியமாகும்?"

"அது என் கிட்டேயே நான் மறைச்சுக் கிட்ட இரகசியம்"

"சரி தான், பாம்பு தன் வாலைத் தின்னுட்டு ஏப்பமும் விட்டு தாம்!"

"என்ன உளர்றே?"

"நானா, நீயா? உன் கிட்டே இருந்து நீ மறைச்சுக் கிட்ட இரகசியம், கஞ்சிக்குக் கட்டை விரலைக் கடிச்சுக்கிட்டுக் குடித்தது போல இல்ல இருக்கு"

"இப்ப ரொம்ப உளர்றே. கஞ்சிக்கு வெங்காயத்தக் கடிச்சுக்கலாம், பச்சை மிளகாயக் கடிச்சுக்கலாம். கட்டை விரலை எப்படிக் கடிச்சுக்க முடியும்?"

"நீயே உன் கிட்டே இருந்து இரகசியம் வச்சுக்க முடியும் போது கஞ்சிக்குக் கட்டை விரலைக் கடிச்சிக்கலாம்."

"நீ அப்படி வர்றியா?"

"ஆமா, நான் அப்படித் தான் வர்றேன்"

"மறைச்சுக்கறதும் மறக்கறதும் ஒரே மாதிரி தானே"

"எந்த மாதிரி?"

"இரண்டாலயும் அது தெரியமா போயிடுதுன்ன‌ மாதிரி"

"சரி, அப்படியே வைச்சுக்குவோம். இப்ப அந்த மறைச்சுக்கிட்டதோ அல்லது மறந்ததோ என்ன ஆயிடுச்சு?"

"மறைச்சுக்கிட்டேன்னு தெரிஞ்சு போச்சு. மறந்துட்டேன்னு ஞாபகம் வந்திடுச்சு"

"அப்படின்னா இனிமே அது இரகசியம் இல்லையே"

"திரும்பவும் மறைச்சுக்கிட்டேன்னா, மறந்துட்டேன்னா அப்ப அது இரகசியம் ஆயிடுமில்ல"

"அது எப்படி முடியும். இப்ப தான் உனக்கு நினைவுக்கு வந்துடுச்சில்ல. எப்படி மறைக்க முடியும் அல்லது மறக்க முடியும்?"

"அதுக்கு ஒரு வழி இருக்கு"

"என்னது?"

"என்னை நானே கொன்னுடுவேன்."

"ஐயோ தலை சுத்துது. உன்னை நீயே கொல்லும் போது நீ எங்க இருப்ப?"

"இரகசியத்தை மறைச்சிட்டு, மறந்திட்டு நான் புதுசா பிறந்து கிட்டு இருப்பேன்"

"எனக்கு வர்ற குழப்பத்துக்கு உன்னை நானே கொன்னாதான் தீரும்."

"அதுக்கு நான் உதவி பண்றேன். உன்னை நானே கொல்றேன். என்னா நீ இரகசியத்த தெரிஞ்சுக்கிட்டே. உன்னை உயிரோடு விடக் கூடாது."
                    - சரியார்
================================================================
Things are not what they seem; nor are they otherwise.
    - Lankavatara Sutra
பொருள்கள் தோன்றுவதும் போலும் இல்லை; மாறாக வேறு எதுவாகவும் இல்லை.

No comments:

Post a Comment