Thursday 7 April 2011

எல்லாம் பிரம்மம் 5/5

2009-01-30

கால்பந்து, கிரிக்கெட் என்று விளையாட்டுகளுக்கு விதி முறைகள் இருப்பது போல் வாழ்க்கை விளையாட்டுக்கும் பிறப்பு, இறப்பு, வளர்ப்பு, இனப்பெருக்கம், பாதுகாப்பு, புகழ், இகழ், சொந்தக் காலில் நிற்பது, அறிவு, செல்வம், சாதனை, நீதி, நேர்மை, நாணயம், சமத்துவம், ஞானம், மெய், பொய், உழைப்பு, திருட்டு என்று எண்ணிறந்த விதி முறைகளை நமக்கு நாமே வழங்கிக் கொண்டு விளையாடுகிறோம்.

இந்த விளையாட்டை / வேதனையை நிறுத்த முடியவில்லையே என்ற ஏக்கம் / தேடல் நின்று விட்டால் (அதன் தன்மை புரிந்து விட்டால்) பிறகு ஒன்றும் இல்லை, எல்லாம் இருந்த படி இருக்கும் என்றாலும் மாறியிருக்கும். சிரிப்பதும் அழுவதும் சிவமே!

அனுபவம்: மேற்கண்ட மூன்றுமே அனுபவங்கள் தான். என்றாலும் இவற்றை மீறிய ஓர் அனுபவம் 'நான் பிற' என்ற பிரிவினை உணர்வு, அதுவாக வந்தது (எல்லாமே அதுவாக வந்தவையே), அதுவாகப் போய் விடுவது. இது நீடித்து அமிழ்ந்து / அடங்கி இருப்பின் அனுபவத்தைச் சொல்லவோ கேட்கவோ வழியேயில்லை. இது நாக்கில் உணவின் சுவை போல் சில நேரம் நின்று குறைந்து மறையும். பின் உண்டால் மீளும்.

பெரும்பாலான, மின்னல் கீற்று போன்ற கால அளவிலான அனுபவங்கள் கோளாறுகளாக (aberrations) புறக்கணிக்கப் படுகின்றன என்று தோன்றுகிறது. சற்று நீடித்தவை, அதன் விளைவைப் பொறுத்து, மன நோய்களாக கருதப் படுகின்றன. சிலர் 'நானே கடவுள்' என்று கதை விட ஆரம்பித்து விடுகிறார்கள் (அப்படியென்றால் எல்லோரும் கடவுளர்கள் தான் என்பது புரிகிற அளவுக்கு வராமல்).

சிலர் எல்லாம் தனக்குத் தெரிந்து விட்டதாய் நினைக்கிறார்கள். சிலர் தனக்கு எதுவும் தெரியவில்லை என்கிறார்கள். சிலருக்கு அனுபவத்தின் தன்மை (மற்ற எல்லா அனுபவங்களைப் போன்றதே) புரிகிறது. சிலர் பயிற்சியால் யார் வேண்டுமென்றாலும் இவ்வனுபவத்தைப் பெறலாம் என்கிறார்கள். சிலர் பயிற்சி செய்ய யாரும் இல்லை என்று கேலி செய்கிறார்கள். இதில் எதுவும் உண்மையில்லை. எல்லாமே உண்மை தான். எல்லாம் பிரம்மம்!

சுருக்கமாகச் சொன்னால் பேசப்படும் கருத்து உண்மையா பொய்யா என்பது தான் விளையாட்டு (game, play). விளையாடுவது தான் (player, actor) பேச்சு (சிந்தனை, சொல், எழுத்து, செயல்...). ஆக, 'பேச்சு' தான் உண்மை என்கிறாயா... சரி தான், விளையாட்டு ஆரம்பித்து விட்டது! ['பேச்சு தான் (அ) நான் தான் (அ) அறிவுணர்வு தான் 'உண்மை' என்பதும் ஒரு கருத்தே. அதை நிரூபிக்கப் போனால் அதுவும் விளையாட்டு ஆகி விடுகிறது].

கருப்பைச் சிறையில் பத்து மாதம் - பெரும்
கருத்துச் சிறையில் பல நூறு மாதம்
கருத்து 'நான்', காணாச் சிறையாகும் - அதைக்
காணும் ஒளியே நானாகும்!

('நான்' என்ற கருத்து கண்ணுக்கு, அறிவுக்குப் புலப்படாச் சிறையாகும். அப்படி அதை அறியும் ஒளியே 'கருத்தாக' மாறாத நானாகும். அதைக் அந்த ஒளியைக் கருத்தாக மாற்றிச் சிந்திக்கவோ, பேசவோ முயன்றால் அதுவும் 'கருத்து'ச் சிறையாகி விடும்)

அன்புள்ள,
வே.தொல்

பின் குறிப்பு: பெரியார் தொண்டன் (பகுத்தறிவு) ரமணர் அடியான் (மெய்யறிவு) ஆகி விட்டதாகத் தோன்றும். உண்மைக்கு வழி கிடையாது (Truth is a pathless land - JK). அல்லது எவ்வழியும் உண்மைக்கு வழியாகலாம். பெரியார் வழி வராவிடில் ரமணரைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம். 'அறிவுக்கு விடுதலை தா' என்ற பெரியார் வழி ரமணரின் 'அறிவுக்கு உன்னிடமிருந்து விடுதலை கொடு அல்லது நீ அறிவு மாயையிலிருந்து (பொருளல்லவற்றை பொருளாக உணரும் மருள்) விடுதலை பெறு' என்று விளங்கியது.

விடுதலை என்பது தலை / தளை (துன்பம், அடிமைத் தனம், இக்கட்டு, விலங்கு) விடுபடுதல்.

கூர்த்த அறிவு அத்தனையும் கொள்ளை கொடுத்து உன் அருளைப்
பார்த்தவன் நான் என்னை முகம் பாராய் பராபரமே
            - தாயுமானவர் : பராபரக்கண்ணி

கற்றும் அடங்காரில் கல்லாதாரே உய்ந்தார்
பற்று மதப்பேயின் பால் உய்ந்தார் - சுற்றுபல‌
சிந்தைவாய் நோய் உய்ந்தார் சீர்தேடி ஓடல் உய்ந்தார்
உய்ந்தது ஒன்று அன்று என்று உணர்.
            - ரமணர் : உள்ளது நாற்பது

[நூல்கள் கற்றும் (ஆன்ம விசாரணையினால்) அகந்தை அடங்கப் பெறாதவர்களை விடக் கல்லாதாரே பிழைத்தவர்கள், பிடித்துக் கொள்ளும் மதமென்னும் பேயினின்றும் தப்பினார்கள். சுழல்கிற பல சிந்தை, வாக்கு இவ்விரண்டின் நோயினின்றும் தப்பினார்கள். சீரைத் (செல்வத்தை) தேடி நாடு எங்கும் அலைதலைனின்றும் தப்பினார்கள். இப்படியாகக் கல்லாதவர்கள் தப்பின கேடுகள் ஒன்று அல்ல, எத்தனையோ என்று உணர்.]

No comments:

Post a Comment