Thursday, 14 April 2011

தைக்காத 'தை' - குத்தாத சித்திரை

2011-04-14

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி.

கோளத்தில் (sphere) தொட்ட இடமெல்லாம் மையம் என்பது போல் காலச் சுழற்சியில் ஒவ்வொரு கணமும் (புத்தாணடுப்) பிறப்பே.

Everyday is a new life for a wise man என்பது பழமொழி.

'தை' என்றாலும் 'சித்திரை' என்றாலும் புத்தாண்டு (புது வாழ்வு / நல்லாட்சி / மாற்றம்...) புது சிந்தனை / மனப்போக்கு இல்லாமல் வரப் போவதில்லை.

புது மனப்போக்கு (பரவலாக மக்களிடம் அத்தகை மாற்றம்) வருவதில் பொறுப்பு 'தை'யைப் போற்றுவோருக்கும் 'சித்திரை'யைப் போற்றுவோருக்கும் உள்ளது.

'தை' என்பதைத் தமிழ் ஆண்டுப் (திருவள்ளுவர் ஆண்டு) பிறப்பு என்றும் 'சித்திரை' என்பதைத் தமிழ் இந்து மத ஆண்டுப் பிறப்பு எனவும் கொண்டாடலாம். வணிகர்களுக்கும் இரு மடங்கு இலாபம் கிட்டும், பணம் முடங்காது புழங்கும். ஓரிடம் விட்டு ஓரிடம் சென்று கொண்டே இருப்பதால் (இருக்க வேண்டும் என்பதால்) தான் பழந்தமிழர் 'செல்வம்' (செல்வோம் - சென்று கொண்டே இருப்போம்) என்று பெயரிட்டனர்.

கிறித்துவத் தமிழர் ஆங்கில ஆண்டுப் பிறப்பை தான் கொண்டாடுகிறார்கள். அது போன்றே பிற மதத் தமிழரும். தமிழருக்கு என்று மதம் கடந்த ஒரு விழாவாகத் 'தை' தமிழ் ஆண்டாக, திருவள்ளுவர் ஆண்டாகப் பின்பற்றப் படலாம். ஒன்றை மறுத்தும் அழித்தும் தான் மற்றது வர வேண்டும், வளர வேண்டும் என்பதில்லை.

அது காலாவதியான சிந்தனை என்பதை எல்லோரும் உணர்வோமாக. உயிரினங்கள் ஒன்றை ஒன்று சார்ந்தும் ஒன்றுக்கு ஒன்று வழங்கியும் வாழ வைத்தும் பல்கிப் பெருகுகின்றன என்பதும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டும் விழுங்கியும் வாழ்கின்றன என்பதும் உண்மை. முந்தையதே பெரு அளவில் இயற்கையில் இருக்கிறது/இயங்குகிறது என்பது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவு.

வேற்றுமை இருப்பதால் தான் ஒற்றுமை தேவைப்படுகிறது. கருத்து வேறுபாடுகள் இருப்பதால் தான் ஒத்துப் போவது அவசியம் ஆகிறது. இந்த வேறுபாடு ஒழிந்தால் எல்லாம் ஒரே மாதிரி ஆகி விடாது. சைவமும் வைணமும் போரிட்டு ஓய்ந்தன. 'வடகலை'யும் 'தென்கலை'யும் வாதிட்டு அடைந்தன. வேறுபாடுகள் இயற்கை. அவற்றைப் புரக்கவும் போற்றவும் வேண்டும். அவற்றை ஒத்து இயங்க வைக்கவும் வேண்டும். அது தான் நம் முன் உள்ள சவால்.

ஒற்றுமை என்ற பெயரில் எல்லோரும் மழிக்கவும் வேண்டாம், நீட்டவும் வேண்டாம். அதே போல் வேறுபாடுகளைப் புரப்பது என்ற பெயரில் பொது 'அடையாளம்' அற்றுப் போரிட்டு அழியவும் வேண்டாம்.

- சரியார்
================================================================
2011-04-14

ஆண்டுகள் புதிதாய் வருவதும் போவதும்
                 காலச் சுழற்சியை கட்டும் முயற்சி!
கூண்டுகள் போட்டு எண்ணத்தை முடக்கும்
                 பாழாய்ப் போன பழக்கம் விட்டால்
வண்டுகள் சூழும் சோலையைப் போல
                 வாழும் கலையே வண்ண மயமாகும்!
     - தமிழ்மணி
================================================================
2011-04-14

தாண்டுவோம் வாருங்கள் தடைகளை மீறுவோம்
            தமிழ்மணிச் சாலையில் தரையில் பறப்போம்!
  - சரியார்
கவிதை என்ற பெயரில் நாங்கள் எப்படியும் உளறலாம்; தரையிலும் பறப்போம், தண்ணிரிலும் நடப்போம், விண்ணிலும் குந்துவோம், மண்ணிலும் நீந்துவோம்!

No comments:

Post a Comment