Thursday, 14 April 2011

தென்னை மரத்தில் ஒரு பிள்ளை

2011-04-14

தென்னை மரம் ஏற ஆள் கிடைக்காததால், கோயம்புத்தூரிலிருந்து  வாங்கிய கருவியில் நான் மரம் ஏற பயிலுவதை காண்க.- பிள்ளை
வள்ளலாரின் பெற்றோர் வள்ளலாரின் இரு அண்ணன்மார்களுக்கு சபாபதி (சைவம்) என்றும் பரசுராமன் (வைணவம்) என்றும் பெயரிட்டனர். அதே போல் வள்ளலாரின் இரு அக்காமார்களுக்கும் சுந்தரம்மாள் (வைணவம்) என்றும் உண்ணாமுலை (சைவம்) என்றும் பெயரிட்டனர். ஐந்தாவதாகப் பிறந்த குழந்தைக்கு (வள்ளலார்) இரு சமயத்தையும் சமப்படுத்தி இராமலிங்கம் (இராமர் - வைணவம். லிங்கம் - சைவம்) என்று பெயரிட்டனர். (ஆதாரம்: 'வள்ளலார் வாழ்கிறார்' பக்கம் 4 மு.பாலசுப்ரமணியன் http://www.vallalar.org/)

நம் குழுவில் உள்ள, என் பல்லாண்டு காலக் கெழுதகை நண்பன், பிள்ளையின் பெற்றோர்கள் அப்படிச் சிந்தித்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் அவனுக்கு ஆறுமுகப் (சைவம்) பெருமாள் (வைணவம்) பிள்ளை என்று பெயரிட்டுள்ளனர். பிள்ளை எங்கள் குழுவில் எனக்கு இணையான மற்றொரு கிறுக்கு. இப்போது (50 வயதில்) மரமேறும் விடலைப் பிள்ளை!

அந்த ஒளிப்படத்தைப் பார்த்ததும் என் கிறுக்கை நான் காட்ட வேண்டாமா? ஒரு கிறுக்கு மேலே. மறு கிறுக்கு கீழே.

=====================================================
ஆறுமுகத்துக்கு ஆறு பத்திகள் (paragraphs)

ஆறுமுகப் பத்தி (பக்தி) 
சாறுமிகு உத்தி
வாழ்ந்திடுக பற்றி
சூழ்ந்திடுமே வெற்றி
=====================================================
தென்னை மரத்தில் ஒரு பிள்ளை
தரும் தீந்தமிழ் நற் கள்ளை

தன்னை அறிந்த மரமேறி
மண்ணைப் புரிந்த உழவாளி
உன்னை ஊக்கும் குணமேறி
உலகை உயர்த்து உளவாளி (தென்னை மரத்தில்...)

[உழவாளி - உழவுத் தொழிலை ஆளுக்கின்ற விவசாயி
உளவாளி - உ(ள்)ளத்தை ஆளுகின்றவன்]

புண்ணைச் சொறிந்தது போதும்
புதிய சிகிச்சைகள் கூறும்
கண்ணைத் திறந்து பாரும்
கனவுகள் நம் கைக் கூடும் (தென்னை மரத்தில்...)

திண்ணைப் பேச்சுகள் வேணும்
தேர்ந்த செயல்கள் தோணும்
பண்ணைப் புறத்தில் இடணும்
பட்டணப் புரத்தில் சுடணும் (தென்னை மரத்தில்...)

[கிராமப் புறத்தில் (பண்ணைப் புறத்தில்) மாற்றங்கள் வந்தால் அது நகரச் சுரண்டிகளைச் (பட்டண புரத்தில்) சுட்டு உலுக்க வேண்டும்.]

மண்ணை உழுதால் போதுமா
மரத்தின் நிழலில் வளருமா
விண்ணைத் தொழுதால் விளையுமா
வினைகள் பலவும் இணையுமா (தென்னை மரத்தில்...)

அன்னைத் தமிழ் சாகுமா
அயல் மொழியென் றாகுமா
தன்னைப் பேணும் தமிழரை
தாழ்ந்து போக வைக்குமா (தென்னை மரத்தில்...)

புன்னைக் குளிர்ச்சியை மடுப்போம்
பொட்டை வெயிலில் நடப்போம்
முன்னைக் குறைகள் விடுப்போம்
முதிர்ந்த‌ சாதனை முடிப்போம் (தென்னை மரத்தில்...)

[புன்னை மரத்தினடியில் குளிர்ச்சியாக இருக்கும்]

                    - சரியார்

No comments:

Post a Comment