அவன்:
|
| அப்பனே, முருகா, ஷண்முகா, எம்பெருமானே! என்னை மட்டும் காப்பாத்துடா! |
இவன்:
|
| சுயநலக் கிருமி, மத்தவங்க எல்லாம் வாழ வேண்டாமா? |
அவன்:
|
| டேய், அடுத்தவங்களக் கெடுத்து என்னை வாழ வைக்கவா கேட்டேன் |
இவன்:
|
| 'என்னை மட்டும்'ன்னும் கேட்டியே, அதுக்கு என்ன அர்த்தமாக்கும்? |
அவன்:
|
| அடேய்! எழுந்து பல்லு விளக்கு முன்னே இவ்வளவு ஆராய்ச்சி தேவையா? வெளியே வாடா! |
இவன்:
|
| அழிவறையில் உள்ளதடா உலகம் - அதன் கழிவறைகள் காட்டுமடா கலகம், வயிற்றுக் கலகம் |
அவன்:
|
| போதுமடா புலவா! 'எச்சத்தாற் காணப்படும்'ன்னார்1 வள்ளுவர். மனிதரின் முடிவும் எச்சமும்2 மண்ணுக்கு நல்லது.
[1 தக்கார் தகவிலார் என்பத வரவர் எச்சத்தாற் காணப் படும் (திருக்குறள்: 114 அதிகாரம்: 12 நடுவுநிலைமை) |
இவன்:
|
| கழிப்பறையில் பொறக்குமடா ஞானம் - அதை நீ விழிப்புடனே குறித்திடவும் வேணும் |
அவன்:
|
| சரி சரி, புத்தகத்தோடு போனாலே வெளியே வர நேரமாகுது. இன்னும் பேப்பர், பேனா எடுத்திட்டு போனா கிழிஞ்சுடும். அப்பாடா, ஒரு வழியா வெளியே வந்தியா. என்ன சித்தர் பாடலா? காலையிலேயே ஞானம் வழியுது. |
இவன்:
|
| ஏன், நாங்க பாடக் கூடாதா? ஆத்திரத்தில் வந்த சாத்திரமா? போ, போ. |
அவன்:
|
| உள்ளே போக வேண்டியது உள்ள போகனும்; வெளியே வர வேண்டியது வெளிய வரனும். இல்லேன்னா தகராறு தான். ஏன்னு கேளு, நேத்து ஒரு சித்தர் பாடல் படிச்சேன். அதான் நீ பாடுனது அதே மாதிரி உளறலா தெரிஞ்சுது. |
இவன்:
|
| எங்கே எடுத்து விடு, அந்த சித்தர் செப்பியதை. |
அவன்:
|
| மாட்டிக் கிட்டே, யாம் பெற்ற குழப்பம் நீயும் பெறுக. கேளு இதை... |
|
| அறிவே செயலே அதுவே (காப்பிய சித்தர் காப்பு) |
1 |
| அறிவே செயலே அதுவே அறமே மறமே அருளே |
2 |
| உருவே உணர்வே ஒளியே கருவே பொருளே கலையே |
3 |
| விரிவே வெளியே வினையே கரியே நெருப்பே சினையே |
4 |
| அணுவே அலையே அன்பே திணிவே திரிவே தெளிவே |
5 |
| விண்ணே மீனே விசையே எண்ணே எழுத்தே இயலே |
6 |
| மலையே மடுவே மாண்பே இலையே கிளையே இசையே |
7 |
| கண்ணே செவியே கதையே பண்ணே பாட்டே பகிர்வே |
8 |
| மரமே விதையே மகிழ்வே உரமே உளரே அரணே |
9 |
| நீரே நிலமே நினைப்பே ஏரே ஊரே இணைப்பே |
10 |
| சீரே செறிவே சிறப்பே பாரே பரிவே பரப்பே |
11 |
| தேரே தெரிவே திறப்பே கூரே குறியே குவிப்பே |
12 |
| கல்லே மண்ணே கனிவே புல்லே புழுவே புகழே |
13 |
| அகமே புறமே அலைவே பகலே இருளே பண்பே |
14 |
| வயலே வளியே வாழ்வே புயலே பொழிவே வளமே |
15 |
| உயிரே உழைப்பே உயர்வே வெயிலே தணிவே விளைவே |
16 |
| விருப்பே வெறுப்பே விடையே பிறப்பே இறப்பே விழிப்பே |
17 |
| சொல்லே மொழியே சுவையே இல்லே இருப்பே இனிதே |
18 |
| அமிழ்தே ஆறே அழகே தமிழே குறளே வழியே |
19 |
| காடே நாடே கரையே வீடே உறவே விதியே |
20 |
| கதிரே மழையே களிப்பே அதிர்வே திரளே அளிப்பே |
21 |
| அருகே தொலைவே துணையே திருவே திறமே திணையே |
22 |
| செடியே கொடியே இனமே முடிவே முதலே மனமே |
இவன்:
|
| பொறு பொறு, கொஞ்சம் மூச்சு விடு. ஒரேடியா அடங்கிடப் போவுது. |
அவன்:
|
| இன்னும் கேளு |
23 |
| தருவே தணலே நிழலே எருவே பயிரே பழமே |
24 |
| வடிவே உள்ளே வளர்ப்பே விடிவே விந்தே வியப்பே |
25 |
| கடலே முகிலே ஈர்ப்பே அடலே ஒலியே ஆர்ப்பே |
26 |
| வெடிப்பே துடிப்பே விசும்பே இடிப்பே மடிப்பே உலகே |
27 |
| புவியே பொன்னே பொறையே கவியே அணியே உரையே |
28 |
| வாளே கோலே ஏறே தோளே நட்பே வீறே |
29 |
| முள்ளே மலரே புள்ளே கள்ளே கரும்பே தெள்ளே |
30 |
| எள்ளே எறும்பே தேனே வள்ளே வரையே வானே |
31 |
| அங்கே இங்கே எங்கே அன்றே இன்றே என்றே |
32 |
| அய்யே அம்மே அண்ணே மெய்யே பொய்யே உய்யே |
33 |
| கையே காலே சிறகே பையே காற்றே விறகே |
34 |
| ஆணே பெண்ணே அளவே ஊணே ஓடே உளமே |
35 |
| அருவே அடவே அதியே மருவே மடமே மதியே |
36 |
| ஒன்றே பலவே சுழியே நன்றே நலமே பழியே |
37 |
| தாயே தனியே நதியே காயே கனியே கதியே |
38 |
| எலியே புலியே பிழைப்பே வலிதே மெலிதே இழப்பே |
39 |
| சடையே இடையே கடையே படையே தலையே பகையே |
40 |
| ஈடே இடரே போரே பாடே தீர்வே நேரே |
41 |
| புலனே பொறியே நடப்பே கலனே பாயே கடப்பே |
42 |
| புனையே துடுப்பே போக்கே மனையே துறப்பே வழக்கே |
43 |
| முறையே முடியே அடியே பிறையே பீடே பிடியே |
44 |
| குறையே குணமே கூற்றே மறையே நிறையே இறையே! |
இவன்:
|
| முடிஞ்சுதா, இது என்ன குலுக்கல் கவிதையா? |
அவன்:
|
| அப்படின்னா? |
இவன்:
|
| காகிதத் துண்டுகளில் சொற்களை எழுதி உருளையில் போட்டுக் குலுக்கி மூன்று மூன்று சொற்களாக எடுத்துக் கோர்த்துக் கவிதை வரிகளை உருவாக்குவது. |
அவன்:
|
| ஒரு வகையில் அப்படித் தான். உருளையில் குலுக்குவதற்குப் பதிலாக உள்ளத்தில் குலுக்கி எடுத்தது. |
இவன்:
|
| அது எப்படியோ போகட்டும். பாடலுக்குப் பொருள் என்ன? |
அவன்:
|
| இந்தா அடிக் குறிப்பை நீயே படி. |
இவன்:
|
| அருளியவர்: காப்பியச் சித்தர் ('கடிச் சித்தர்' என்றும் அழைப்பர்) தொடக்கம்: பிண்டம் அடக்கம்: அண்டம் காலம்: இடைக்காலம் (இறந்த காலத்திற்கும் எதிர் காலத்திற்கும்) பொருள்: அவரவர் மனம் போல.பொருளை விளக்கினால் 'காப்பின்' ஆற்றல் போய் விடும். பொருள் விளங்கா விட்டால் 'வாழ்வின்' ஆற்றல் போய் விடும். மேலும் உரையாசிரியர்கள் இல்லாத சொல்லாத பொருளை ஏற்றிக் கூற வழி வேண்டாமா? பயன்: இதைத் தவறாமல் நாள் தோறும் 108 முறை சொல்லி நேரத்தை வீணடித்து வருபவர்களுக்குப் படிப்படியாக எல்லாத் துன்பங்களும் வந்து சேர்ந்து முடிவில் வீடு பேற்றிலிருந்து தப்புவர்!
அடிக் குறிப்பு, தலைக் குழப்பம்! உரையாசிரியர்கள் வேறு இன்னும் குழப்புவார்கள். |
அவன்:
|
| எனக்கு வேறு எதுவும் புரியல. அந்தத் தலைப்பு மட்டும் ஒரு மாதிரி புரியுது. அறிவே செயலே அதுவே. |
இவன்:
|
| அறிவு, செயல் சரி. அது என்ன 'அதுவே'? |
அவன்:
|
| எதையும் அறிந்து இருப்பது முதல் நிலை. அறிந்ததைச் செயல் படுத்துவது இரண்டாம் நிலை. பிறகு செயல் வேறு செய்பவர் வேறு என்று இல்லாமல் அதுவாகவே மாறி விடுவது மூன்றாம் இறுதி நிலை. |
இவன்:
|
| எடுத்துக் காட்டாக உளறல் எது தெரிந்து இருப்பது, உளறுவது, உளறலாகவே மாறி விடுவது - ஏன்'டா விடியும் போதே இப்படி! யாருடா இந்த சித்தன் - பித்தன்? |
அவன்:
|
| பா'த்தியா, சித்தர் என்றாலே சித்தனாகத் தான் இருக்கணுமா? இவர் சித்தள்! சரியான பால்பேதியா இருக்கியே! |
இவன்:
|
| பால்பேதியா? அடப்பாவி, செக்ஸிஸ்ட்(sexist) என்று புரியும் படிச் சொல்லக் கூடாதா? |
அவன்:
|
| தமிழின் ஆற்றலைப் பாரு. எப்படிப் புதுப் புதுப் சொற்களை உருவாக்கிக் கொள்ளும் படி வேர்ச் சொற்களின் வளம்! |
இவன்:
|
| தமிழ் கிடக்கட்டும், இப்ப கொஞ்சம் அமிழ்துக்கு வழியப் பாரு. காலையிலேயே குலுக்கலும் கலக்கலுமா இருக்கு. நீ வேற 'பால்பேதி'ன்னு கிட்டு. சித்தள் உளறலே உள்ளத்துக்குப் பேதி மாறி இருக்கு. |
அவன்:
|
| ஆமா, உடலுக்குப் பேதி குடலைச் சுத்தம் செய்யும். உள்ளதுக்குப் பேதி மனதைச் சுத்தம் செய்யும். |
இவன்:
|
| உண்மை தான், ஆனா இப்ப செவிக்கு உணவு அதிகமாகியும் காதை அடைக்குது. வயித்துல பசி அதிகமாகியும் காதை அடைக்குது. அதை கவனி முதல்ல. |
|
| ☺ |