Sunday 27 March 2011

உடனடி உண்மை (Instant Truth)

2009-04-16

உண்மை மிக எளிது. உடனடியாக உணரக் கூடியது. எந்த நூலையும் படிக்க வேண்டிய அவசியமில்லை. எந்தப் பயிற்சியும் செய்யத் தேவையில்லை. அது மிக வெளிப்படையாக உள்ளதால் மடாதிபதிக்குப் புரியாமல் போகலாம், மாடு மேய்ப்பவனுக்குத் தெரிந்து விடலாம்.

(நம்முடைய) அன்றாட அறிவுணர்வு (awareness of every moment) ஒன்றே அவ்வுண்மை. அதைத் தவிர வேறு எதுவும் இருக்கிறது இல்லை என்று சொல்ல முடியாதவை. அவ்வறிவுணர்வு 'நான்' என்று சுடர்விடுகிறது. இந்த 'நான்' தனித்து நிற்காததாகும் (impersonal).

'நான் அடங்கினால் சகலமும் அடங்கும். நான் எழுந்தால் சகலமும் எழும்' - ரமணர்.

இந்த நான், உடன் எழும் காட்சியோடு ஒன்றி 'நான் மனிதன், ஆண், இந்தியன், தமிழன், இன்னது படித்தவன், இன்ன வேலை செய்கிறவன்...' என்று திரைப்படக் கதை, காட்சியோடு ஒன்றுவது போல் ஒன்றி நின்று இன்ப துன்பங்களில் மயங்கி உழல்கிறது.

திரைப்படத்தைப் பார்ப்பவன் கதையோடு ஒன்றும் நேரத்திலும் தான் அதனால் பாதிக்கப்படாத தனித்தவன் என்ற உணர்வு பின்னே இருந்து கொண்டே இருக்கிறது. அதே போல் தனித்திரா 'நான்' எப்போதும் உலகக் காட்சிகள் எதனாலும் பாதிக்கப் படாமல் சுடர் விட்டுக் கொண்டே இருக்கிறது.

எல்லா இடமும் காலமும் (இங்கு, அங்கு, இப்போது, அப்போது) அதன் நிகழ்வுகளும் இக்கணத்தில் அல்லாது வேறு எங்கும் எவ்விடத்தும் இல்லை. அதுவும் 'நான்' அறிவுணர்வு அல்லாது தோன்றுவதில்லை. இது தனக்குத் தானே சான்றாக உள்ள உண்மை.

கனவுகளற்ற‌ ஆழ்ந்த உறக்கத்தில் நான் என்ற கருத்து (ego) அடங்கி வெறும் 'நான்' ஆக மட்டும் இருப்பதால் உலகக் காட்சிகள் (தன் உடல், மனம் உள்பட) தோன்றுவதில்லை. இந்த வாக்கியம் வண்டியைக் குதிரைக்கு முன் கட்டியது போலாகும். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 'நான் அறிவுணர்வு' ஆழ்ந்த உறக்கம் வந்து போவதையும் உலகக் காட்சிகள் வந்து போவதையும் எப்போதும் அறிந்த வண்ணம் உள்ளது.

இது புதிர் போலத் தோன்றும். இன்னும் எளிமையாக்ச் சொன்னால் 'சிந்திப்பது எதுவோ அதைச் சிந்திக்க முடியாது; அறிவது எதுவோ அதை அறிய முடியாது'.

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை (குறள்: 331)

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணப் பிறப்பு (குறள்: 351)

No comments:

Post a Comment