Sunday, 27 March 2011

'நான்' பிம்பம் - சாட்சி ஆகவே உய் - அனைவருக்கும் எட்டும் அத்வைதம்

2010.07.22
 
'நான்' பிம்பம் - சாட்சி ஆகவே உய் - அனைவருக்கும் எட்டும் அத்வைதம்
    (சரியாரின் அத்வைதப் புலம்பல்)

கண்ணாடியில் தெரியும் என் பிம்பத்திடம் கேள்வி கேட்டால் பதில் கிடைக்குமா? அது போல் தான் 'நான் யார்' என்று நான் ஆன்ம விசாரணை செய்வதும் ஆகும். கண்ணாடியில் தெரியும் பிம்பம் எப்படி (என்னைத் தவிர்த்து) தனித்து இல்லையோ அது போல் 'நான்' என்பதே (என்னுடைய) பிம்பமாக இருக்க அது எப்படி 'நான் யார்' என்று கேட்கவோ விசாரணை செய்யவோ புரிந்து கொள்ளவோ முடியும்?

கண்ணாடியை நான் பார்க்காவிடில் எப்படி அங்கு என் பிம்பம் இருக்க முடியாதோ (இருக்கிறது, இல்லை என்று முடிவு செய்ய இயலாது) அது போல் 'நான்' என்பதைத் தொட்டுத் தொடர்ந்து வரும் சிந்தனைகள் இல்லாவிடில் 'நான்' என்பது இருக்க முடியாது (இருக்கிறது, இல்லை என்று முடிவு செய்ய இயலாது).

இதையும் புரிந்து கொள்வது 'நான்' இல்லை. இந்தப் புரிதலும் நானும் வேறல்ல. பிம்பம் என்னைத் தவிர்த்து இல்லை. 'புரிதல்' என்பதே ஒரு பிம்பம். ஒட்டு மொத்த பிரபஞ்ச பிம்பத்தின் ஒரு பகுதி.  ஓட்டு மொத்த பிம்பமே ஓர் எண்ணம், காட்சி.

'நான்' என்பது ஓர் எண்ணமே என்பது புரிவதும் (என்னைத் தவிர்த்த) மற்ற எல்லாப் பொருள்களும் (உயிருள்ளவை, உயிரற்றவை) எண்ணங்களே என்பது புரிவதும்  தோன்றுமானால், அப்படிப் புரிவதும் தோன்றுவதும் புரிவதான, தோன்றுவதான  எண்ணங்களே.

ஓர் எண்ணம் தோன்றுகிறது. அதற்கு அடுத்து அந்த ஓர் எண்ணம் தோன்றியதாக மற்றோர் எண்ணம் தோன்றுகிறது.  இது உண்மையா?

எண்ணம் 1. "நான் மனிதன்".

எண்ணம் 2: "'நான் மனிதன்' என்று ஓர் எண்ணம் சற்று முன்பு தோன்றியது".

எண்ணம் 1 க்கும் எண்ணம் 2 க்கும் தொடர்பு, எண்ணம் 2 இல் அன்றி, எங்கு உள்ளது? எண்ணம் 2, எண்ணம் 1 ஆல் வந்தது (காரண காரியம்) என்று முடிவு செய்ய எந்த ஆதாரமும் இல்லை. அப்படிக் காரண காரியம் கற்பிப்பதும்  ஒரு தனி எண்ணமே தவிர வேறு என்ன?

மேலும் எண்ணம் 1 இருந்தது, தோன்றியது என்பதற்கு எண்ணம் 2 ஐத் தவிர்த்து எந்தச் சான்றும் ஆதாரமும் நிரூபணமும் இல்லை. எண்ணம் 2 இல் தான் எண்ணம் 1 ம் தோன்றுகிறது என்பதே இக்கண அனுபவ அடிப்படையில் ஆன உண்மை.  அதாவது இக்கணத்தில் தோன்றும் இந்த ஒரே ஓர் எண்ணத்தைத் தவிர, அதற்கு வெளியே வேறு எதுவும் கிடையாது.

இது சட்டென்று விளங்கி விடுமானால், முழுப் பிரபஞ்சம் அதன் ஆக்கம், வளர்ச்சி, அழிவு முதல் பூமி, உயிர்கள் பிறப்பு, வளர்ச்சி, இறப்பு எல்லாம் இக்கணத்தில் தோன்றும் ஓர் (ஒரே ஓர்) எண்ணமே (காட்சியே) என்பது தெளிவாகி விடும். சென்ற நொடி (கணம்) என்பதும் வரும் நொடி என்பதும் இந்நொடியில் தோன்றும் ஒரே காட்சியின் பகுதிகளே. கால ஓட்டம் என்பது கருத்தே. இத்தகையப் புரிதலும் அதே காட்சியின் ஒரு பகுதியே தவிர அதைத் தாண்டியதன்று. இப்புரிதல் காட்சியைப் பாதிக்கிறதா இல்லையா ?  அப்படியான பாதிப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதுவும் காட்சியே, காட்சிக்குள் அடக்கமே.

ஞாலம் என்பதே பொய்
காலம் என்பதே பொய்
காட்சி காண்பதே மெய்
சாட்சி ஆகவே உய்
    - சரியார்

No comments:

Post a Comment