Friday, 25 March 2011

எத்தனை நாள் நம் காட்சி

2004-01-20 / 2008-04-24

உலகம் முழுதும் இருட்டு
        ஓட்டிடும் கதிர்த் திரட்டு
இலகுவாய் உயிர் எழுச்சி
        எப்படி அந்த நிகழ்ச்சி .....(1)
சூரியக் குடும்பத்தின் பிறப்பு. பூமிக் கோளத்தின் உருவாக்கம். எனினும் பூமி தோன்றிய பின் விரைவாக (பூமியின் வயது 4.5 பில்லியன் ஆண்டுகள். ஆனால் உயிர் கிட்டத்தட்ட 4 பில்லியன் ஆண்டுகளாக உள்ளது.) எப்படிச் சுலபமாக உயிர் தோன்றியது என்பது அறிவியலருக்கும் வியப்பை அளிக்கிறது.

தொண்ணூ றணைய தனிமம்
        தொகுக்க முடியா உருவம்
என்னே இயற்கை மாட்சி
        எத்தனை நாள் நம் காட்சி .....(2)
தனிமங்கள் 90+ தான் உள்ளன. ஆனால் அவற்றால் அமைந்த தோற்றங்கள் (உருவங்கள்) எண்ணில் அடங்கா. இயற்கையின் மாட்சி தான் என்னே! நம் தோற்றமும் மறைவும் அதன் விதிகளுக்கு உட்பட்டது தான். எனவே எத்தனை நாள் மனிதரின் காட்சி இங்கு நடக்கும்?

விண்மீன் கொடுத்த அணுக்கள்
        விரிந்த நமது உலகம்
எண்ணிட முடியா தொலைவு
        எங்கும் வெடிப்பின் அலைவு .....(3)
அணுக்கள் விண்மீன்கள் (stars) என்ற அணு உலையில் வார்த்தெடுக்கப் பட்டவை. அவற்றால் நம் உலகம் விரிந்து பரந்து விளங்குகிறது. கார்ல் சாகன் (Carl Sagan) சொன்னது போல் விண்மீன் துகள் விண்மீன்களைப் பற்றி எண்ணி வியக்கிறது (We are star stuff pondering the stars). எண்ணிப் பார்க்க முடியாத தொலைவு பிரபஞ்சமாக இருப்பினும் எங்கும் ஆதி வெடிப்பின் (big bang) கதிரிய‌க்க அலைவு (cosmic background radiation) காணப்படுகின்றது.

செல்லின் யுகமே மொத்தம்
        சேர்ந்த வளர்ச்சி சொச்சம்
புல்லை உண்டு பிழைப்பு
        நுண்புழுவால் நமது செரிப்பு .....(4)
உயிர் கிட்டதட்ட 3 பில்லியன் ஆண்டுகள் செல் வடிவத்திலேயே இருந்தது. பல செல் உயிரி போன்ற படிப்படி வளர்ச்சி குறுகிய காலத் தோற்றமே. நாம் உண்பது புல் தான் (நெல், கோதுமை போன்றவை புல் வகையே. மேலும் தாவரங்கள் உணவுக் கோபுரத்தில் அடிப்படையாக உள்ளன.) நம் குடலில் இருக்கும் நுண்ணுயிரிகள் (பாக்ட்ரீயாக்கள்) தான் உணவைச் செரிக்க உதவுகின்றன.

மண்ணுக் கில்லை கருணை
        விண்ணுக் கில்லை கொடுமை
எண்ணிப் பார்த்தால் இதனை
        எப்படி எழுந்த தியற்கை .....(5)
கருணையும் கொடுமையும் மண்ணிலும் விண்ணிலும் காணப்படவில்லை. எனினும் அவை இயற்கையின் எழுச்சிதான். எப்படி இவ்வியற்கை அமைந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பரிணாம வளர்ச்சி விதிகளும் மரபணுக்களின் கூட்டுச் செயலும் நம் சிந்தனைக்கும் ஆய்வுக்கும் உரியன.

பொருள் ஈர்ப்பு விசையே
        புடவி தோற்றிய இறையே
அருள் இல்லா இறைக்கு
        அணு ஆற்ற‌ல் துணையே .....(6)
பொருள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை (gravity) தான் இந்தப் புடவி (பிரபஞ்சம்) தோன்றக் காரணம் ஆகும். ஆதலால் அவ்விசையை இறை என்றழைக்கலாம். ஆனால் அஃது அருள் (விருப்பு, வெறுப்பு) இல்லாத இறை. அது மட்டுமே போதாது. அதற்கு அணுக்களின் உள்ளே இயங்கும் ஆற்றல் (strong and weal nuclear forces) துணையாக அமைந்து இவ்வியக்கத்தகு வேறுபாடுகளைத் தோற்றுவித்துள்ளது.

அமுதைப் பொழியும் நிலவு
        அருகில் வந்தால் கூற்றம்
மெதுவாய்த் தள்ளிச் செல்ல‌
        மேவும் உறவு மாற்றம் .....(7)
அழகிய நிலவு எப்படித் தோன்றியது? இன்றைய அளவில் பெரும்பாலோரால் (அறிவியல் அறிஞர்கள்) ஏற்றுக் கொள்ளப் பட்ட கருதுகோள்: பூமியின் மீது செவ்வாய் கிரகம் அளவில் ஆன ஒரு கோள் வந்து மோதிய போது சிதறிய துண்டுகள் ஒன்று சேர்ந்து நிலா உருவாயிற்று. பூமியின் ஈர்ப்பை விட்டுப் போகும் அளவுக்குப் பெரியதாக இல்லாததாலும் பூமியின் மீது விழுந்து விடும் அளவுக்குச் சிறியதாக இல்லாததாலும் அது பூமியைச் சுற்றிக் கொண்டு உள்ளது. என்றாலும் அது மிக மெதுவாகப் பூமியை விட்டு விலகிச் சென்று கொண்டுள்ளது. அது அருகில் வந்தால் பூமியின் தட்பவெப்பங்கள் மாறிப் பெரும் அழிவை விளைவிக்கும். விலகிச் செல்வதாலும் பெரும் மாற்றம் வரும்.

சாய்ந்த பூமி அச்சு
        சாய வைத்த நிலவு
காய்ந்து மாரிப் பருவம்
        காண வைத்த வரவு .....(8)
பூமியின் சுழற்சி அச்சு (23.5 பாகை) சாய்ந்து போக நிலவு தான் (அதன் மோதல்) காரணம். அதனால் தான் காயும் பருவமும் (கோடை) மாரிப் பருவமும் (மழை) பூமியில் அமைந்தன.

விசும்பின் தூசு நாமே
        விண்ணின் மைந்தர் தாமே
துசும் புயிரின் வினையால்
        தோன்றிய உயிர் வளியே .....(9)
விசும்பின் (space) தூசு (dust) நாம். அதனால் நாம் விண்வெளியின் பிள்ளைகள். அதே சமயம் சைனோ பாக்ட்ரீயா (cyno bacteria) என்ற நுண்ணுயிரியின் விளைவால் தான் பூமியின் காற்று மண்டலத்தில் (atmosphere) ஆக்சிசன் என்ற உயிர் வளி அதிகமாகி உயர் உயிரிகள் (தாவரங்கள், விலங்குகள்) தோன்ற வழி வந்தது. அவ்வகையிலும் நாம் அத்துசும்புயிரியின் மைந்தர்கள் தாம்.

விண்ணும் மண்ணும் ஒன்றே
        விளக்கும் அணுக்கள் நன்றே
விண்மீன் ஒளிக் கற்றை
        விரிக்கச் சொல்லும் பற்றை .....(10)
விண்ணிலும் மண்ணிலும் உள்ள ஒற்றுமையை அணுக்களின் தன்மை விளக்கும். விண்மீன்கள், வெளி கிரகங்கள் இவ்வற்றின் கட்டமைப்பு, உள்ளடக்கத்தை அவை பிரதிபலிக்கும் ஒளிக்கற்றை விரித்தால் (spectrum) அக்கிரங்களுக்கும் நமக்கும் உள்ள உறவைக் காட்டும்.

பொங்கும் குழம்பு பூமி
        பொறுக்கு தட்டிய ஓடு
த‌ங்கும் அழிவின் ஆட்சி
        தடுக்க முடியா வீழ்ச்சி .....(11)
பூமி உள்ளே பொங்கும் தீக்குழம்பாக உள்ளது. மேலே காய்ந்த ஓடாக (தீக்காயத்தின் மேல்) நிலம் உள்ளது (plate tectonics). என்றும் அழிவின் ஆட்சி தான் முடிவில். அந்த வீழ்ச்சியை நம்மால் தடுக்க முடியாது.

உயிர்போய் எங்கே முடியும்
        ஓடி எப்படித் தப்பும்
உயிருக் குண்டு உபாயம்
        உனக்கும் எனக்குமே அபாயம் .....(12)
உயிர் தோன்றியது. எனவே எப்படியும் அழியும். எங்கே போய்த் தப்பும் என்று கவலைப் படுகிறோம். 'உயிர்' பிழைத்துக் கொள்ளும். அதற்குப் பல வழிகள் உள்ளன. பூமியின் வரலாற்றில் அது பல முறை நிகழ்ந்துள்ளது (mass extinction). ஆனால் நீயும் நானும் (மனிதர்கள்) இருப்போமா? புரிந்து நடந்து கொள்ளாவிடில் நமக்குத் தான் அபாயம், உயிருக்கன்று. 

பின் (பெரிய) குறிப்பு:

பல ஆண்டுகளாக இலக்கிய வீதி இனியவன் அய்யா என்னை இளைஞர்களுக்கு நம்பிக்கையும் வழிகாட்டுதலும் கொடுக்கும்படியாக எழுதத் தூண்டிக் கொண்டு இருந்தார். என் தாய் மாமா மகன், இளம் வயது முதல் தோழன் இராசாராமும் அவ்வப்போது இதை வலியுறுத்தி வந்தான்.

ஆனால் நமக்குத் தெரிந்த அரைகுறையில் என்னத்தை எழுதுவது என்ற தயக்கமே இருந்து வந்தது. ஒரு வழியாக 2004 இல் 'நம்மை அறிந்தால்' என்ற தலைப்பில் ஒரு நூல் எழுத ஆரம்பித்தேன். கடிதம், கட்டுரை, கவிதை(!), உரையாடல், நாடகம், போட்டி, நகைச்சுவை எனக் கலவையாக எழுத முனைந்து எல்லாம் இணையாக வளர்ந்தன.


'நம்மை அறிந்தால்' என்ற தலைப்பு நம்முடைய அடிப்படை, பூர்வீகம், பரிணாம வளர்ச்சித் தொன்மை இவற்றை எண்ணி வைக்கப் பட்டது. அந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் நம்மை வழிப்படுத்திக் கொள்ள இயலாது. அறிவியலை முதன்மையாகக் கொண்டே அன்றைய சிந்தனைகளின் வேர்கள் இருந்தன என்றாலும் மெய்மையியல் கருத்துகளின் சாயல் கொஞ்சம் இருக்கவும் செய்தது.

அந்நூலுக்காக எழுதப்பட்டதே 'அறிவே செயலே அதுவே' என்ற உரையாடல். அதை ஏற்கனவே உங்களில் பலர் படித்திருக்கலாம். அது மேலெழுந்த வாரியாக ஆன்மீகத்தைக் கிண்டல் செய்வது போல் இருந்தாலும் படிப்பவர் மனதைப் பொறுத்து 'மறைந்து இருந்தே காட்டும் மர்மத்தை' உணரலாம்.

அந்நூலுக்காக அறிவியல் கருத்துகளைக் கொண்டு கவிதை(!) எழுத முனைந்த போது வந்தது தான் 'எத்தனை நாள் நம் காட்சி'. கவிதை 20-01-2004 இல் எழுதப் பட்டது. கவிதை விளக்கமும் இக்குறிப்பும் 24-04-2008 இல் எழுதப் பட்ட

நூல் கால்வாசி எழுதிக் கொண்டிருக்கும் போதே 'நமக்குப் புத்தி போதவில்லை. இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குப் புத்தி கொள்முதல் செய்து விட்டுப் பிறகு எழுதுவோம்' என்று ஒதுக்கி வைக்க நேர்ந்தது.

2005-இன் தொடக்கத்தில் Alexander Technique என்ற body posture exercise கற்றுக் கொண்ட போது நமக்கு நம் உடலின் அன்றாட செயல்களைப் (உட்காருவது, எழுவது, படுப்பது, நடப்பது, நிற்பது...) பற்றிக் கூடச் சரியாகத் தெரியாமல் தப்பும் தவறுமாகச் செய்து கொண்டு வந்ததை உணர்ந்ததும் நூல் நின்று போனதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

2005-இன் மையத்திலிருந்தே ஆன்மீகக் கருத்துகளை ஆய்வு செய்து வந்த போது 'நமக்கு நூல் எழுதத் தகுதியோ, அறிவோ, அனுபவமோ இல்லை' என்று தெளிவாயிற்று. 2006, 2007 களில் அது மேலும் முன்னேறிப் 'புத்தி கொள்முதல் செய்யக் கிளம்பி உள்ள புத்தியும் பறி போனதாக' ஆயிற்று. அதனால் தமிழ் உலகத்தில் அரைகுறை 'அறிவாளி' பிரபலமான எழுத்தாளர் ஆவது ஒன்று குறைந்தது.



இடையிடையே கருத்துகள் பொங்கி வந்தாலும் நண்பர் தென்னை.கணேசன் வேண்டுகோளுக்காக மட்டுமே எழுதப் பட்டது. இப்போதும் 'கூர்த்த அறிவெல்லாம் கொள்ளை கொடுத்த' நிலை தான் என்றாலும் எல்லா(ர்) உளறல்களுடன் இந்த உளறலையும் கடலில் விட்ட சிறுநீராகக் கலப்பதில் தவறில்லை என்று புரிகிறது. எல்லாம் அத(வ)ன் செயல்!

இன்னும் சில குப்பைக் கிளறல்கள் உள்ளன; கூட்டி(க் குறைத்து) வெளியே தள்ளும் வேளை வரும்.

கூர்த்த அறிவு அத்தனையும் கொள்ளை கொடுத்து உன் அருளைப்
பார்த்தவன் நான் என்னை முகம் பாராய் பராபரமே!
              

            - பராபரக் கண்ணி - தாயுமானவர்

No comments:

Post a Comment