Sunday, 27 March 2011

சுக்கா மிளகா சுதந்தரம் கிளியே

2010-06-15


தித்திக்கும் பழம் தின்னக் கொடுப்பார்
மதுரப் பருப்பு வழங்குவார் உனக்கு;
பொன்னே, மணியே, என்றுனைப் புகழ்வார்;
ஆயினும் பச்சைக் கிளியே அதோ பார்!
உன்னுடன் பிறந்த சின்ன அக்கா,
வான வீதியில் வந்து திரிந்து
தென்னங் கீற்றுப் பொன்னூசல் ஆடிச்
சோலை பயின்று சாலையில் மேய்ந்து
வானும் மண்ணுந்தன் வசத்திற் கொண்டாள்!
தச்சன் கூடுதான் உனக்குச் சதமோ?
அக்கா அக்கா என்று நீ அழைத்தாய்.
அக்கா வந்து கொடுக்கச்
சுக்கா மிளகா சுதந்தரம் கிளியே?
    - பாரதிதாசன்


"உரிமை, சுதந்திரம், விடுதலை என்றால் அதை நான் போராடிப் பெற வேண்டியதாகவோ காப்பாற்ற வேண்டியதாகவோ இருக்கக் கூடாது. அது நான் இழக்க முடியாததாக இருக்க வேண்டும். ஓயாது அதை நான் காத்து, தக்க வைத்துக் கொள்ள கூடியதாகவும் அப்படிச் செய்யாவிடில் இழந்து விடும் தன்மையினதாகவும் இருந்தால் அது வேண்டத் தக்கதோ விரும்பத் தக்கதோ அன்று. நான் மூச்சு விடுவது போன்று எனக்கு சுயாதீனமாகவும் இயல்பானதாகவும் சுதந்திரம் இருக்க வேண்டும். சுருக்கமாக நானும் சுதந்திரமும் வேறு வேறாக இருக்கக் கூடாது. இப்படிச் சொல்வதனால் சுதந்திரம் சுலபமானது என்றோ இலவசமானது என்றோ பொருள் அன்று. சுதந்திரம் பெறுவதன்று, வாழ்வது."
                                    - சரியார்.
2010-06-16

அது யார் சரியார்?
அன்புடன்,
- திருவேலன் 

2010-06-16

அது தான் எனக்கும் தெரியவில்லை. அவ்வப்போது என் காதில் வந்து ஏதாவது உளறி விட்டுப் போகிறார்.

சில நாள்கள் தலையணை பக்கத்தில் குறிப்பேடு பேனாவுடன் தூங்குவேன். தப்பித் தவறி உருப்படியான‌ சிந்தனை குறுக்கே வந்தால் அப்படியே போட்டு அமுக்கி எழுதி விடலாம் என்ற ஐடியாவுடன். ஆனால் ஐடியா வருமுன் அய்யாவுக்குத் தூக்கம் வந்து விடும்.

காலையில் எழுந்து பார்த்தால் குறிப்பேட்டில் கிறுக்கல்கள்! யார் செய்திருக்கக் கூடும்?

உளறல்களையும் கிறுக்கல்களையும் திருடி விடலாம் என்று தோன்றும். ஆனால் அவற்றை என்னுடையது என்று சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. எதற்கு வம்பு என்று பேசாமல் அவர் பெயரிலேயே போட்டு விடுகின்றேன். ஆனால் அது தான் அவர் பெயரா என்று தெரியவில்லை.

அவரிடம், "சொல்வது எழுதுவது கிடக்கட்டும், சரி நீர் யார் என்று சொல்லும்" என்றேன். அதற்கும் ஓரே உளறல். நான் சொன்னதையே மீண்டும் மீண்டும் 'சரி யார், சரி யார்' என்று என் காதில் சொல்லிக் கொண்டு இருந்தார். அப்படியே ஆகட்டும் என்று அதையே பெயராக அவருக்கு வைத்து விட்டேன்.

ஒரு வகையில் அது பொருத்தமானதும் கூட. அவர் பெரியாரோ சிறியாரோ தெரியவில்லை. ஆனால் எதற்கும் சரிப்பட்டு வரமாட்டார். சரிந்து விடவும் மாட்டார். அவர் பொல்லாதவர், புகழ் கொள்ளாதவர். அவர் உளறுவதை ஊன்றிப் பார்ப்பார் அவர் யாருக்கு உறவார் என்று அறிவார்.

சரியார் பற்றிச் சிரி குறிப்பு (அவரே எழுதிய கிறுக்கல்)

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், சரியார் என்று யாருக்கும் தெரியார். அதாவது யார் சரி (சரி யார்?) என்று யாருக்குமே தெரியாது. கொஞ்சம் விளக்கமாகச் சொல்வதென்றால், இவர் தான் முதன் முதலில் சக்கரத்தைக் கண்டு பிடித்தவர். அதாவது வாழ்க்கைச் சுழற்சிக்கும் மன உழற்சிக்கும் இவர் தான் காரணம். அது மட்டுமல்லாது இவர் இல்லாத இடம் இல்லை. பேசாத பேச்சில்லை. எழுதாத எழுத்தில்லை. செய்யாத செயல் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் இவரே இல்லை.

அவ‌ர் அடிக்க‌டி பாடும் திரைப்படப் பாட்டு:

நான் யார் நான் யார் நீ யார் 
நாலும் தெரிந்தவர் யார் யார்

தாய் யார் மகன் யார் தெரியார் 
தந்தை என்பார் அவர் யார் யார்

உறவார் ப‌கையார் உண்மையை உண‌ரார் 
உன‌க்கே நீ யாரோ

வ‌ருவார் இருப்பார் போவார் நிலையாய் 
வாழ்வார் யார் யாரோ

உள்ளார் புசிப்பார் இல்லார் ப‌சிப்பார் 
உத‌விக்கு யார் யாரோ

நல்லார் தீயார் உய‌ர்ந்தார் தாழ்ந்தார் 
ந‌ம‌க்குள் யார் யாரோ

அடிப்பார் வலியார் துடிப்பார் மெலியார் 
தடுப்பார் யார் யாரோ

எடுப்பார் சிரிப்பார் இழப்பார் அழுவார் 
எதிர்ப்பார் யார் யாரோ

பிணியார் வ‌ருவார் ம‌ருந்தார் த‌ருவார் 
பிழைப்பார் யார் யாரோ

உயிரார் ப‌ற‌ப்பார் உட‌லார் கிட‌ப்பார் 
துணையார் வருவாரோ

நரியார் நாயார் கடிப்பார் முடிப்பார் 
நாளைக்கு யார் யாரோ

பிறந்தார் இறந்தார் நடந்தார் கிடந்தார்
முடிந்தார் யார் யாரோ

2010-06-17
சரியாரின் இன்றைய உளறல்

புலமைப்பித்தன் 'நான் யார் நான் யார்' பாட்டில் எழுத மறந்த வரிகளை என் காதில் ஓதி விட்டுச் சென்றார் சரியார்!

சரியார் தவறார் சாவினில் சரிவார்
சமருக்கு வேர் (வேறு) யாரோ?                            1

சரியார் தெரியார் சண்டைக்கு நிற்பார்
உண்மைக்கு உரியாரோ?                                    2

நடிப்பார் வடிப்பார் நாடகம் அடிப்பார்
நம்பிக் கெடுவாரோ?                                          3

பொய்யார் புல்லார் புலம்பித் திரிவார்
பே(போ)தைமை தொலையாரோ?                        4

இறந்தார் இழுப்பார் இருப்பதை மறப்பார்
என்றைக்கு எழுவாரோ?                                      5

ஆண்டார் அழிவார் அடியார் ஆள்வார்
அமைதிக்கு வழி யாரோ?                                    6

மாண்டார் மீண்டார் மறுபடிச் சுழன்றார்
மருண்டே உழன்றாரோ?                                    7

இனியார் இகலார் இக‌ழார் க‌னிந்தார்
இண‌ங்கிப் போகாரோ?                                      8

பெரியார் பிழையார் பிழைக‌ள் பொறுப்பார்
பிடித்தே உயர்வாரோ?                                        9

பகையார் சான்றார் பண்பார் நிறைந்தார்
பதவிக்கு யார் யாரோ?                                        10

கெஞ்சார் அஞ்சார் கொஞ்சும் நெஞ்சார்
குணத்திற்குக் குடியாரோ?                                  11

பொருளார் இழுக்கார் புகழார் மயக்கார்
புன்மைக்கு அலைவாரோ?                                  12

ஆன்றார் அன்பார் ஆவது அறிவார்
அவருக்கு நிகர் யாரோ?                                      13

மனத்தார் இனத்தார் மாண்பால் மணப்பார்
மறையிது மறப்பாரோ?                                      14

குறையார் மறையார் குணமார் கூறார்
கொடுத்தே பெறுவாரோ?                                  15

வெறுப்பார் வீழ்வார் விரிந்தார் வாழ்வார்
விளங்கிக் கொள்வாரோ?                                    16

தெரிந்தார் புரிந்தார் தெளிவால் சிறந்தார்
தேர்ந்தே அறிவாரோ?                                        17

அணைப்பார் பிணைப்பார் அகிலம் இணைப்பார்
அவர்வழி செல்வாரோ?                                      18

நான் யார் அறிந்தார் நாலும் கடந்தார்
ந‌டிப்ப‌தை முடிப்பாரோ?                                      19

தேடினார் அடைவார் திறந்தார் காண்பார்
தேவைகள் நிறைவாரே.                                      20

No comments:

Post a Comment