Wednesday, 23 March 2011

வேண்டாம் வேண்டாம் என்றால் விடுதலை

2011-02-24


யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் (திருக்குறள்: 341)

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல‌ (திருக்குறள்: 342)

மேற்கண்ட திருக்குறள்க‌ளின் அடிப்படையில் சரியார் உளறல் கீழே.

வேண்டாம் வேண்டாம் என்றால் விடுதலை
வேண்டும் வேண்டும் என்றால் வேதனை

தூண்டில் புழுவைத் தாண்டிச் சென்றால்
தொடுமா உன்னை, துன்பச் சோதனை? (வேண்டாம்...)

தாண்டிச் சென்றும் தங்குவ தென்ன‌?
தோண்டுக உன்னைத் தொடரும் சாதனை (வேண்டாம்...)

இப்பொருள் ஈர்க்கும் அப்பொருள் அழைக்கும்
உட்பொருள் உணர்ந்தால் உலகம் உவக்கும்
கைப்பொருள் கசக்கும் காண்பொருள் இனிக்கும்
மெய்ப்பொருள் கண்டால் மேதினி சுவர்க்கம் (வேண்டாம்...)

நடப்பதை அன்றி நாடுவ தில்லை
நாடுவ தென்பதும் நடப்ப தனுள்ளே
திடப்பட இதனைத் தெளிந்திடத் தொல்லை
திறந்திடக் காண்க தீர்வுகள் உள்ளே (வேண்டாம்...)

துறவு என்பது உள்ளத் துறவே
துன்பம் இன்பம் உள்ளத் தளவே
பிறவும் நீயும் பெயரால் பிரிவே
பெருமை சிறுமை எல்லாம் பொதுவே (வேண்டாம்...)

விருப்பை விரும்பா 'வேண்டும்' தெளிவு
வெறுப்பை வெறுக்கா 'வேண்டாம்' கனிவு
விருப்பும் வெறுப்பும் விரியும் இயல்பு
விடுதலை என்பது விரிவின் அறிவு (வேண்டாம்...)
===========================================
மேற்கண்டதற்கு நண்பர் தமிழ்மணியின் பதில்:

தேடுதல் எல்லாம் தெளிவின்றி போனால்
வாடுதல் ஒன்றே வாழ்வென்றாகும் - இதில்
 நாடுதல் என்பது நல்லதர்க் கென்றால்
கூடுதல் இன்பம் வழித் துணையாகும்! 
===========================================
அதற்குச் சரியாரின் உளறல்:

1. ஆகா, தமிழ்மணிக் கவி
2. நோகா துதந்த தமிழடி
3. போகா துவிட்டு நெஞ்சை
4. சாகாத் தமிழுடன் வாழ்க!
        - சரியார்
                [இரவின் உறவில்
                எழுதிக் கொடுத்தவர்]

 தமிழடி:- தமிழால் அடித்தார் - தமிழ்க்
                கவி(சை) அடி கொடுத்தார்!

மேற்கண்ட நான்கு கவிதை(!) வரிகளை வரிசை மாற்றிப் படித்தாலும் பொருள் தரும். இவ்வகைப் பாவிற்கு அடிமறிமண்டில ஆசிரியப்பா என்று பெயர். விளக்கம் கீழே காண்க.

பள்ளிப் பருவத்தில் தமிழ் இலக்கணத்தில் படித்தது. ஆசிரியப்பாவின் ஒரு வகை.

அடி மறி மண்டில ஆசிரியப்பா

1. மாறாக் காதலர் மலைமறந் தனரே
2. ஆறாக் கண்பனி வரலா னாவே
3. ஏறா மென்தோள் வளைநெ கிழ்ம்மே
4. கூறாய்த் தோழி யான்வாழு மாறே

இதன் சிறப்பு என்னவென்றால் வரிகளை எந்த வரிசையில் (1-2-3-4, 4-3-2-1, 2-3-4-1, 3-4-1-2...) படித்தாலும் பொருள் மாறாமல் அதே முழுப் பொருளைக் குறிக்கும்.

ஒரு பெண் தன் காதலரைப் பற்றி தோழியிடம் கூறுவதாக அமைந்த இப்பாடலின் பொருள்.

மனம் மாறாத காதலர் நான் இருக்கும் மலையை மறந்து விட்டாரே.
என் கண்களில் வற்றாது கண்ணீர் வருகின்றதே.
தோள்க‌ள் இளைத்த‌தால் வ‌ளைய‌ல்க‌ள் நெகிழ்ந்து கீழே வ‌ழுக்குகின்ற‌ன‌வே.
நான் எப்ப‌டி வாழ்வ‌து என்று கூறுக‌ தோழியே.
===========================================
விடுவாரா தமிழ்மணி, கொடுத்தாரே பதிலடி!

சொற்களைத் தொடுத்தல் கலை
கற்களை வடித்தல் சிலை
வந்தது எனக்குள் அலை - அதைத்
தந்தது உங்கள் நிலை!

No comments:

Post a Comment