2011-01-21
இங்கிலாந்தில் வரும் ஏப்ரல் முதல் கட்டாய ஓய்வு வயது அரசு சட்டத்தால் நீக்கப் படுகிறது. வெறும் வயதைக் காட்டி (தற்போது 65) நிறுவனங்கள் பணியாளர்களுக்கு பணி ஓய்வு கொடுக்க முடியாது. மக்கள் தொகையில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் அவர்கள் நீண்ட காலம் வாழ்வதால் ஓய்வூதியச் சுமை அதிகரித்துச் செல்வதாலும் பணி ஓய்வு வயது ரத்து செய்யப் படுகிறது.
மனிதன் தவிர்த்த உயிரினங்களுக்குப் பணி ஓய்வு என்பது கிடையாது. மனிதருள்ளும் பல கோடி மக்களுக்கு அதற்கு வழியில்லை. ஓய்வு என்பது வேறு வேலை (Rest is change of work) தான் என்றாலும் கட்டாய வேலைக் கடமை, கட்டாய ஓய்வுரிமைக்கு வழி வகுத்தது. இப்போது கடமை கனத்து ஓய்வு கரைந்து வருகிறது.
முன்னேற்றத்தை, உயிர் பிழைக்க உழைக்கும் நேரத்தைக் கொண்டு அளவிட்டால், நாம் அடைந்து வருவதை முன்னேற்றம் என்றோ மற்ற உயிரினங்களை விட நாம் புத்திசாலி என்றோ சொல்லிக் கொள்ள முடியுமா?
சமுதாயத் தளத்தின் அடியில் சில ஆயிரம் கோடி பேருக்கு வேலையே இல்லை, பணி ஓய்வுக்கு என்ன பொருள்? உச்சியில் சில கோடி பேருக்கு வேலையே (அவசியம்) இல்லை, பணி ஓய்வுக்கு என்ன பொருள்? மத்தியில் பல ஆயிரம் கோடி பேருக்கு வேலையும் பணி ஓய்வும் வாழ்வின் பெரும் முக்கிய பகுதிகள்.
முன்னே போனால் இடிக்கும், பின்னே போனால் உதைக்கும் என்ற கதையாக மனிதனின் 'முன்னேற்றம்' உள்ளது மட்டுமில்லை முன்னேயும் பின்னேயும் போவதை யாரும் மாற்றவும் முடியாது. மாற்ற முடிந்தாலுமே எதுவாக மாற்றுவது என்று யோசித்தால் 'உண்மை' விளங்கிவிடும்.
நாகரிகம் என்பது வாழ்வின் நிச்சயமற்ற தன்மையைத் தொடர்ந்து குறைத்து வருவதே ஆகும். Civilization is continuous reduction in the uncertainty of human life. அந்த நோக்கில் மனித சமுதாயம் சராசரியாக முன்னேறி வருகிறது என்று சொல்ல இயலும் என்றாலும் அந்த மாற்றம் மற்ற உயிரினங்களின் (பூச்சி, விலங்கு, தாவரம்) பிழைப்பு நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளதாலேயே ஆகும். ஆக நிச்சயமற்ற தன்மை இடம் பெயர்ந்துள்ளதே (displacement) தவிர ஒட்டு மொத்தத்தில் நிச்சயமற்ற தன்மை கூடவோ குறைவோ இல்லை. இதே போன்ற இடம் மாற்றத்தை மனித சமுதாயத்தின் படிக்கட்டுகளுக்குள்ளும் பார்க்கலாம். மேல் தட்டினருக்கு நிச்சயமற்ற தன்மை குறைந்து வருவது நடு, கீழ்த்தட்டினருக்கு அது கூடி வருவதாலேயே சாத்தியமாகிறது. Conservation of energy leads to conversation uncertainty as well.
மனிதருக்கு உண்மையிலேயே விலங்குகளை விட அறிவு இருக்குமானால் இதை என்றோ புரிந்து கொண்டு 'இடம் பெயர்' முன்னேற்றக் கருத்து அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றிருப்பர்.
மனிதருக்கு அப்படியான அறிவு இல்லை. வரவும் முடியாது. இயற்கையில் அதற்கு இடம் இல்லை. ஆனால் தனி மனிதனுக்கு அப்படியான அறிவும் விடுதலையும் வர முடியும். வந்துள்ளது. இயற்கையில் அதற்கு இடம் உள்ளது. அந்த இடத்திற்கு அதிகம் போட்டி இல்லை! அங்கு பகலும் இரவும் ஒன்று; பணியும் ஓய்வும் ஒன்று; முன்னேற்றமும் பின்னேற்றமும் ஒன்று.
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன் (திருக்குறள்: 629)
No comments:
Post a Comment