Sunday, 27 March 2011

நல்லினமுடைமை

2010-07-01

ஒத்த கருத்துடையவர்கள் குழுவாகச் சேர்வது இயல்பானதே. அது விளையாட்டு விசிறிகளாக இருக்கலாம். கர்நாடக இசைப் பிரியர்களாக இருக்கலாம். இலக்கிய சுவைஞர்களாக இருக்கலாம். அரசியல் அரட்டை அடிப்பவர்களோ, அறிவியல் ஆர்வலர்களோ, ஆதிக்கப் பரவசம் நாடிகளோ (பஜனை மடம்), ஆன்மீக அனுபவம் தேடிகளோ (சத் சங்க‌ம்)... அவரவர் இனத்தோடு உறவைப் பேணுவது தேவைப் படுகின்றது.
இனம் இனத்தோடு சேர்வது இயற்கையே. அதில் தனி நபர் தன் நம்பிக்கை, ஆர்வம் மீது தொடர்ச்சியும் உறுதியும் துய்ப்பும் பெறுகிறார்.

வாழ்வின் ஒரு முக்கியத் திருப்பு முனை, நாம் அதுவரை தானியக்கமாகச் (automatic) செய்து வந்தனவற்றை தன்னுணர்வோடு  (conscious) செய்யத் துவங்குவது ஆகும்.

பசிக்கும் போது மட்டுமே தானியக்கமாகச் சாப்பிட்டு வந்த குழந்தை வளர வளர நேரம் (வேளை) பார்த்தும் ஆசைக்காகவும் (பசி இல்லாவிடிலும்) சாப்பிடத் துவங்கிப் பின் பெரியவராகி வறட்டு கவுரத்திற்காகச் சாப்பிடுவது (அ) சாப்பிடுவதைத் தவிர்ப்பது என்றெல்லாம் குழம்பி, ஒரு கட்டத்தில் மீண்டும் தன்னுணர்வோடு பசிக்கு மட்டுமே சாப்பிடுவது என்று ஆகலாம். இப்படிப் படிப்படியாக மாற வேண்டும் என்று விதியோ கட்டாயமோ இல்லை. ஏதாவது ஒரு கட்டத்தில் தட்டுப் பட்டு, முட்டிக் கொண்டு, சுழன்று கொண்டு நின்றும் விடலாம்.

அது போல் தன்னுணர்வோடு எண்ணங்களைத் தேர்வு செய்வதும் அவ்விதம் தேர்வு செய்த எண்ணங்களை வலிமைப் படுத்தவும் வாழ்வாக்கவும் தன்னுணர்வோடு, தன் உணர்வோடு ஒத்த‌ இனம் தேடிக் கண்டு உறவு கொள்வதும் முன்னேற்றத்தின், முதிர்ச்சியின் அறிகுறி.

திருக்குறளில் அதிகாரம் 45 பெரியாரைத் துணைக் கோடல், 46 சிற்றினம் சேராமை, 47 தெரிந்து செயல் வகை.

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல் (462) எனத் திருவள்ளுவர் இனத்தின் சிறப்பை எடுத்துச் சொல்லியுள்ளார். மேலும் நட்பியலில் வரும் பல அதிகாரங்களும் குறள்களும் இனத்தைக் குறித்து உள்ளன. அதையெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் திருக்குறளில் நட்பு/இனம் என்ற தலைப்பில்/பொருளில் தான் அதிகமான அதிகாரங்கள், குறள்கள் உள்ளன.

முக்கியமாகச் சிற்றினம் சேராமை அதிகாரத்தில் முதல் குறளைத் தவிர மற்ற ஒன்பது குறள்களும் நல்லினத்தின் சிறப்பைக் கூறுவனவே. அந்த அதிகாரத்திற்குச் 'சிற்றினம் சேராமை' என்று பெயர் இருப்பது எதிர்மறையாக இருக்கின்றது. 'நல்லினமுடைமை' என்று உடைமை அதிகாரங்களுள் ஒன்றாகப் பெயரிட்டு இருக்கலாம். அவ்வளவு முக்கியமானதாகும். சிற்றினம் சேராமை குறள்கள் பத்தும் கீழே பின் குறிப்பில் கொடுக்கப் பட்டுள்ளன.

[திருவள்ளுவர் 'உடைமை' (ஒருவர் தன்னுடைய உடைமைகளாகக் கொள்ள வேண்டியவை) என்று குறிப்பிட்ட குணங்கள்:

அறத்துப்பாலில்


8 அன்புடைமை
13 அடக்கமுடைமை
14 ஒழுக்கமுடைமை
16 பொறையுடைமை (பொறுமை)
25 அருளுடைமை


பொருட்பாலில்

43 அறிவுடைமை
60 ஊக்க‌முடைமை
62 ஆள்வினைஉடைமை
100 ப‌ண்புடைமை
101 நாணுடைமை]


அதிலும் குறள்
'மனத்து உளது போல் காட்டி ஒருவற்கு
இனத்து உளது ஆகும் அறிவு' (454) மிகவும் ஆழமானதாகும். அறிவு நம் மனத்தில் (மூளையில்) நம் தனியுடைமையாக இருப்பது போல் தோன்றும் (காட்டி). ஆனால் உண்மையில் அஃது இனத்தில் (collective consciousness/mind/awareness...) தான் உள்ளது.

இக்குறளுக்குச் சுத்தானந்த பாரதியாரின் மொழி பெயர்ப்பு பிரமாதம்!
Wisdom seems to come from mind
But it truly flows from the kind.

கணிதத்தில் ஒரு தேற்றத்தின் (theorem) மறுதலை எப்படி உண்மையாகுமோ அது போல் 

'மனதுளது போல் காட்டி ஒருவற்கு
இனதுளது ஆகும் வெளிறு' (புதுக்குறள்: சரியார்) என்பதும் நடப்பாகும்.
Ignorance may appear personal
When it really is social [மொழி பெயர்ப்பு: தொல்லானந்தா - அதாவது தொல்லையும் (துன்பமும்) ஆனந்தமும் (இன்பமும்) ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை வலியுறுத்த‌ வந்த மகான்!!!]

வெளிறு என்றால் என்ன? அதையும் ஒரு குறள் மூலம் அறிவோம்.

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு (503)
Though deep scholars of stainless sense
Rare is freedom from ignorance.

வெளிறு என்றால் அறியாமை. அறிவு மட்டுமன்று அறியாமையும் 'இன'த்தில் தான் உள்ளது. நம்முடையது என்று எண்ணி 'அறிவால்' செருக்கோ, 'அறியாமையால்' உள்ளக் குறுக்கமோ அடையத் தேவையில்லை. அறிவு நம்முடையது இல்லை என்றால் அறியாமை மட்டும் எப்படி நம்முடையாதாகும்? வெற்றி, கூட்டு முயற்சி என்றால் தோல்வியும் கூட்டு முயற்சியாலே ஆகும் இல்லையா?

என்றாலும் வள்ளுவர் இனத்தை வலியுறுத்தும் போது மனதைப் புறக்கணித்து விடாமல் அதையும் சமமாக உயர்த்திப் பிடித்துள்ளதை ஒவ்வொரு குறளிலும் காணலாம். ஏனெனில் இனம் என்று எதுவும் தனியாக இல்லை (மரங்கள் உண்டு. காடு இல்லை.). மனங்களின் தொகுப்பே இனம். எனினும் மனத்தில் இல்லை. இனத்தில் தான் உள்ளது. திருவள்ளுவர் இப்படியும் போக விடவில்லை. அப்படியும் போக விடவில்லை. ஒரு பக்கம் சாயாதே என்கின்றார். ஒன்றை மிகுத்து ஒன்றைப் புறக்கணிக்காதே என்று சுட்டுகின்றார்.

இதை நானே எழுதினேன் என்றாலும் தவறு (மண்டபத்தில் எவனாவது எழுதிக் கொடுத்ததை வாங்கி வந்தேன் என்றாலும் தவறு!). எழுதியதில் எனக்குப் பங்கே இல்லை என்றாலும் தவறு. எனில் 'நான்' எங்கே இருக்கிறது? எங்கும் இல்லை. எங்கும் இருக்கிறது. நான் தனியாகவும் இருக்கிறது. அதே சமயம் இனத்தில் (இறையில்) கரைந்து காணாமலும் போய் விடுகிறது. (This may sound like quantum mechanics. An electron passes through both holes simultaneously; proved many times in lab experiments).

சரி சரி, நேரம் ஆயிற்று.
இன்றைக்குப் போதுமே இவ்வுளறல், ஏக்கமேன்
என்றைக்கும் ஓதுமே ஊம் (புதுக்குறள்: சரியார்)

[உண்மையை ஓதினால் ஓம். உளறைலை ஓதினால் ஊம்.]

46 சிற்றினம் சேராமை - Avoiding mean company
(சுத்தானந்த பாரதியாரின் ஆங்கில மொழி பெயர்ப்பு)

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும் (451)
The ignoble the noble fear
The mean hold them as kinsmen dear.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு (452)
With soil changes water's taste
With mates changes the mental state.

ம‌ன‌த்தானாம் மாந்த‌ர்க் குண‌ர்ச்சி இன‌த்தான‌ம்
இன்னான் என‌ப்ப‌டுஞ் சொல் (453)
Wisdom depends upon the mind
The worth of man upon his friend.

ம‌ன‌த்துள‌து போல் காட்டி ஒருவ‌ற்கு
இன‌த்துள‌ தாகும் அறிவு (454)
Wisdom seems to come from mind
But it truly flows from the kind.

மனந்தூய்மை செய்வினை தூய்மை இர‌ண்டும்
இன‌ந்தூய்மை தூவா வ‌ரும் (455)
Purity of the thought and deed
Comes from good company indeed.

ம‌ன‌ந்தூயார்க்கு எச்ச‌ம் ந‌ன்றாகும் இன‌ந்தூயார்க்கு
இல்லை நன்றாக‌ வினை (456)
Pure-hearted get good progeny
Pure friendship acts with victory.

ம‌ன‌ந‌ல‌ம் ம‌ன்னுயிர்க்கு ஆக்க‌ம் இன‌ந‌ல‌ம்
எல்லாப் புக‌ழும் த‌ரும் (457)
Goodness of mind increases gain
Good friendship fosters fame again.

ம‌ன‌ந‌ல‌ம் ந‌ன்குடைய‌ர் ஆயினும் சான்றோர்க்கு
இன‌ந‌ல‌ம் ஏமாப்பு உடைத்து (458)
Men of wisdom, though good in mind
In friends of worth a new strength find.

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து (459)
Good mind decides the future bliss
Good company gains strength to this.

நல்லினத்தினூங்குந் துணையில்லை தீயினத்தின்

அல்லற் படுப்பதூஉம் இல் (460)

No help good company exceeds;
The bad to untold anguish leads.

No comments:

Post a Comment