Sunday 27 March 2011

உணர உள்ளது ஒருகணமே

2009-04-16

இக்கணத்தில் தோன்றும் காட்சியைத் தவிர்த்து, கடந்த கண (இறந்த காலம்), வரும் கணக் (எதிர் காலம்) காட்சிகள் அனைத்தும் நினைவுகளே. அவை வேறு எங்கும் இல்லை.

இதைக் கண்ட பின், புரிந்து கொண்ட பின் இக்கணத்தில் தோன்றும் காட்சியும் அப்படிப் பட்ட நினைவுகளே அன்றி வேறு அல்ல என்பது புரியும். அதுவும் புரிந்த பின் இக்கணக் காட்சி (நினைவு) என்பது சென்ற கணம் போன்ற‌ காட்சியையும் வரும் கணம் போன்ற‌ காட்சியையும் உள்ளடக்கிய ஒரே காட்சி (நினைவு) என்பது விளங்கும். இதுவும் விளங்கிய பின் எல்லா நடப்புகளும், நகர்வுகளும் நினைவுக்குள் (காட்சிக்குள்) தோன்றும் மாற்றங்களே என அறியலாம். அப்படியான மாற்றங்களைக் காண்பது காலத்தை உணர்த்துகிறதே (implies time movement) / உருவாக்குகிறதே அன்றி காலம் காட்சிக்கு வெளியேயும் இல்லை; உள்ளேயேயும் இல்லை.

காலமும் மாற்றமும் (time and change) ஒன்றின் இரு பக்கங்கள். மாற்றங்கள் பொய்த் தோற்றமே (ஏனெனில் இக்கணத்தில் தோன்றும் ஒரே காட்சி தான் உள்ளது) என்றால் காலமும் அதுவே. ஆக எதுவும் -பொருள், வினை- (objects, actions) இல்லை. எல்லாம் தோற்றமே, இதை எழுதுவதும் படிப்பதும் ஆனத் தோற்றம் (தோற்றங்கள் அல்ல. தோற்றம்!) உள்பட. இது தான் முடிந்த முடிவான உண்மை. இந்த உண்மையை ஒப்புக் கொள்வதும் மறுப்பதும் இந்த உண்மையின் (தோற்றத்தின்) அடக்கமே. 

இதயம் துடிப்பதை நினைப்பதற்கும் மறப்பதற்கும் இதயம் துடித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதயம், நினைப்பது, மறப்பது என்பன எல்லாம் ஒரே காட்சியின் அடக்கமே என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

உணர உள்ளது ஒருகணமே
அக்கணம் உடனடி இக்கணமே
வேறு எக்கணமும் எண்ணமாய்
இக்கணத்தில் தோன்றும் சொப்பனமே
இக்கணத்தில் எல்லாம் நல்விதமே
இலங்குவ தறிவாய் அவ்விதமே

No comments:

Post a Comment