Saturday 27 August 2011

பெரியோரை வியத்தல் சிறியோரை இகழ்தல்


2011-08-27

ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கைக்குத் தேவைப்படும் சகிப்புத் தன்மையே குமுகாய வாழ்க்கைக்கும் அவசியம் ஆகும். ஒவ்வொரு குழுவினரும் தங்கள் தங்கள் 'யானையைப் பார்த்த குருடர்களைப்' போன்ற‌ புரிதலில் பற்று வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் அனைவரும் ஒன்று பட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே பிரிந்து நிற்கிறோம். இன்னும் எத்தனைக் காலத்திற்கு இப்படி உழலப் போகிறோம்?

தமிழ் நாட்டுத் தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இதே போல் இன்றும் இவ்வளவு இழப்பிற்குப் பின்னும் செய்து கொண்டு இருக்கிறார்கள். தங்கள் தங்கள் பற்றுகளை அனைத்து தமிழ் நாட்டு, ஈழத் தமிழர்களும் அப்படியே ஏற்றுக் கொள்வது போல் பேசி மயங்குகிறார்கள்; மேடையில் முழங்குகிறார்கள். அப்படி இல்லாதவர்களை உணர்வற்றவர்கள் முதல் துரோகிகள் வரை பெயரிட்டுப் பழிக்கிறார்கள்.

"வாழ்க்கையில் பிணக்கு ஏற்படுவது இயற்கை. அப்போது அறிவு மட்டும் இருந்தால் பயனில்லை; அன்பு இருந்தால் பயனுண்டு" என்ற முவ-வின் அறவுரை குடும்ப வாழ்க்கைக்கும் குமுகாய வாழ்க்கைக்கும் பொருந்தும்.

கணவன் மனைவி கருத்து ஒருமிக்கத் 'தான்' (தன் விருப்பம், தன் கருத்து, தன் ஆசை...) என்ற பிடிப்பு தளர வேண்டும்; காதல் (அன்பு, உறவு) மலர மோதல் உதவலாம். ஆனால் காதல் நிலை கொள்ள‌ (stabilize) நீடிக்க (prolong) மோதல் உதவாது. ஒத்திசைவே உதவும். அவ்வப்போது அளவான (உப்பு போல்) ஊடல் துணை செய்யும். குடும்பம் என்பது சிறிய குமுகாயம். குமுகாயம் என்பது பெரிய குடும்பம்.

ஓர் அரசு சட்டமியற்றி நடைமுறைப்படுத்திய‌ 'தைப் புத்தாண்டு' போன்ற செயல்களைப் பழிப்பதன் மூலம் அவற்றை ஆதரிக்கும் அனைத்துத் தமிழர்களையும் பழிக்கிறோம், ஒதுக்குகிறோம் என்பதை மறக்க வேண்டாம். அப்படிச் செய்து விட்டு ஒன்றுபடுவோம் என்று அழைத்தால் எப்படி நடக்கும்? நம் பற்றை உணராமல் அடுத்தவர் பற்றை நாம் எப்படித் தெளிய வைக்க முடியும்?

'தை' விரும்பிகள் 'சித்திரை' விரும்பிகளையும் 'சித்திரை' விரும்பிகள் 'தை' விரும்பிகளையும் முதலில் மதிக்கக் கற்றுக் கொள்வோம். அதை ஏற்றுக் கொள்கிறோமா, அது சரியா இது சரியா என்பதற்கு முன்பு சகக் கருத்துகளை மதிக்கும் பண்பு இல்லாததாலே ஓர் அரசு வலிந்து செய்வதை அடுத்த அரசு வலிந்து மாற்றுவதும் அதன் பின் அந்தந்த விரும்பிகள் வாழ்க, ஒழிக கோஷம் போடுவதும் தொடர்கின்றன. அரசியல்வாதிகள் இப்படிப் பிரிந்து நிற்கும் மக்கள் குழுக்களை மேய்ப்பது சுலபமாகிவிடுகிறது.
 
ஆங்கிலேயர்கள் சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொண்டதன் மூலமே வளர்ந்தார்கள்; சென்ற நூற்றாண்டில் உலகம் முழுவதும் ஆண்டு இன்று தங்களின் சிறு தீவுக்குள் ஒடுங்கிப் போனாலும் வலிமை குன்றாது தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். அதே சமயம் அவர்கள் கையாண்ட(அவர்கள் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும்) பிரித்தாளும் சூழ்ச்சியை நாமே நமக்குச் செய்து கொண்டு அல்லல் படுகிறோம்; சாண் ஏறி முழம் சறுக்குகிறோம்.

இன்று தமிழுக்கும் தமிழனுக்கும் மிக உகந்தது முதலில் நம் கருத்தை வலியுறுத்தும் அதே வேளையில் அடுத்தவர்களைப் பழிக்காமல் மதிக்கக் கற்றுக் கொள்வதே. தமிழ்ச் சமுதாயம்/இனம் பக்குவப் படுவது, முதிர்ச்சி அடைவது என்பது கணிசமான தனித்தனித் தமிழர்கள் பக்குப்படுவது, முதிர்ச்சி அடைவதே.

இப்படிச் சொல்வதை உடனே தனிப் பட்ட நபரைக் குறித்துச் சொல்லப்படும் போதனை என்று எடுத்துக் கொண்டு ஆதங்கப் படவும் என் மீது பாயவும் தேவையில்லை. இந்தக் குறைக்கு நான் அப்பாற்பட்டவனல்லன். I am in the same boat as everybody else. நமக்கு இந்தக் குறை இருப்பது நம் தனிப்பட்ட குற்றம் அன்று. நம் மன இயல்புகள் நாம் பிறந்து வளர்ந்து வாழும் சமுதாயத்தின் தாக்கமே; வெளிப்பாடுகளே. அப்படி அவற்றை நம்மிடமிருந்து பிரித்து எட்ட நிறுத்திப் பார்ப்பது அவசியம். எப்படி என் உடல் நிறை குறைகளுக்கு நான் காரணம் இல்லையோ அதே போல் தான் என் மன இயல்பிற்கும் ஆகும்.

அதனால் நம் நிறைகளுக்காகப் பெருமைப் பட்டுக் கொள்வதும் குறைகளுக்காகச் சிறுமைப் பட்டுக் கொள்வதும் அவசியமற்றவை; எதிர் விளைவையே கொடுக்கும். இதில் மற்ற எல்லோரின் குறை நிறைகளும் அடங்கும்.

இதை, 'ஏதோ எல்லாம் தெரிந்தது போல் இவன் சொல்கிறான்' என்று நினைக்க வேண்டாம். பெரியவர்கள் சொன்னதை நினைவு படுத்திக் கொள்கிறேன். அவ்வளவே.


யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே; 
வாழ்தல்இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; 
முனிவின்இன்னாது என்றலும் இலமே; 
'மின்னொடுவானம் தண்துளி தலைஇ, 
ஆனாதுகல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று 
நீர்வழிப் படூஉம் புணை போல, 
ஆருயிர்முறைவழிப் படூஉம்' என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.             
        - கணியன் பூங்குன்றனார் (புறநானூறு: 192)

நாம் ஒவ்வொருவரும் மன வளர்ச்சியின், முதிர்ச்சியின் ஒரு கட்டத்தில் நம் பெற்றோர், உறவு, சுற்றம், குடும்ப, சமுதாயச் சூழலால் வந்த நல்ல, மோசமான இயல்புகளை, கருத்துகளை, பழக்க வழக்கங்களை, பற்றுகளைக் கண்டறிந்து கொள்வன கொண்டு தள்வன தள்ள வேண்டும். அப்படிக் கண்டறிந்து தன்னுடனே போராடிக் கொண்டு இருக்கும் ஒரு சக மனிதன்/தமிழன் என்ற அடிப்படையில் மேற்கண்ட கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

அதில் சொல்ல வந்ததை மனதில் பதியும் படிச் சுவையாகச் சொல்லச் சில சொற்களைத் தவறாகப் பயன்படுத்தியிருந்தால் மன்னித்துப் பொறுத்தருள்க.

No comments:

Post a Comment