Tuesday 30 August 2011

ஒற்றுமையாக இருப்பது என்பது ஒரு தனித்துவமான திறன்

2011-08-30


எல்லோரும் வாயால் தமிழர்கள் ஒற்றுமைப் பட வேண்டும் என்று பேசிக் கொண்டு அவரவர் தனித் தனி மேடை, கட்சி, தலைவர் பதவி என்று பிரிந்து நின்று கொண்டு இருந்தால் மக்கள் எப்படி ஒன்று படுவார்கள்? ஒவ்வொரு பொது விஷயத்திற்காகவாவது (மரண தண்டனை, ஈழத்தமிழர் உரிமை, காவிரி நீர்ச் சிக்கல்...) ஒரு பொது வேலைத்திட்டத்தில் ஒன்றுபடா விட்டால் எப்படி? எல்லாவற்றிற்கும் 'கருணாநிதி கெடுத்து விட்டார்', 'கருணாநிதி கெடுத்து விட்டார்' என்று பல்லவி, அனுபல்லவி, சரணம் வரை அதையே பாடிக் கொண்டு இருந்தால் எப்படி? இன்னும் எத்தனை காலத்திற்கு? கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழப் போவதில்லையே. இன்னும் சில ஆண்டுகளில் வரப் போகும் நிலைமை மாற்றங்களை எண்ணி நம்மைப் போன்றோர் மாற்று அரசியலுக்குக் குரல் எழுப்பி வலிமை சேர்க்க வேண்டாவா?

நாம் சொல்கின்ற ஒற்றுமை தீவிரக் கோடிகளில் இருப்போரிடம் எதிர்பார்க்கவில்லை. எடுத்துக்காட்டாக‌, இந்தியா இந்து நாடாக இருக்க வேண்டும் என்போருக்கும் தமிழ்நாடு தனிநாடாக இருக்க வேண்டும் என்போருக்கும் இடையில் நாம் ஒற்றுமையை, ஒத்துப் போவதை எதிர்பார்க்கவில்லை.

அதே போல் அவரவர் தங்கள் தங்கள் பற்றுகளை விடவோ, தளர்த்தவோ செய்யாமல் எப்படி ஒற்றுமை வரும்? ஒற்றுமை இலவயமாக வராது. ஒற்றுமை என்பது பெயர்ச் சொல் அன்று. அது ஒரு வினைச் சொல். ஒற்றுமையாக இருக்கத் தொடர்ந்து உழைக்காமல் ஒற்றுமை வராது; நிலைக்காது.

என்னுடைய தலைவர் இவர் தான். என்னுடைய கொள்கை, வழி இது தான் என்று ஒவ்வொருவரும் பிடித்துக் கொண்டு ஆனால் ஒவ்வொருவரின் நோக்கமும் இந்திய நாட்டிற்குள் தமிழ் மொழி, தமிழ் இன, நாட்டு முன்னேற்றம், உரிமை பெறுவது என்று சொல்வதில் என்ன பொருள்?

மக்கள் நலன் தான் முதல். அதற்காகவே கொள்கை. கொள்கைக்காகவே இயக்கம். இந்த வரிசையில் பற்றைப் பற்றவும் துறக்கவும் வேண்டும்.

பற்ற:        மக்கள் நலன்-->கொள்கை-->இயக்கம்.
துறக்க‌:    மக்கள் நலன்<--கொள்கை<--இயக்கம்.

இன்றைய நிலையில் தலைவர்கள் இதைச் செய்ய முன்வர மாட்டார்கள். அதற்குப் பல காரணங்கள் (நேர்மையின்மை, அவர்களுக்கு நிதி உதவி செய்வோருக்குப் பொம்மையாக இருத்தல்...) இருக்கலாம். எனவே ஒவ்வொரு இயக்கத்திலும் உள்ளோர் இவ்விதம் கேள்வி கேட்பதன் மூலம் தலைவர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். நம்மைப் போன்று இயக்கத்தை நம் வாழ்வுக்குச் சார்ந்து இல்லாதவர்கள் இப்படியான சிந்தனைகளைப் பரப்ப வேண்டும்.அதற்குப் பதிலாகப் புகழ்ந்து, இகழ்ந்து முன்பு செய்த தவறையே செய்யலாமா? அது சரியான வழிகாட்டுதலா?

இன்று ஒவ்வொரு கட்சியின் முன்னணி செல்வாக்குடையோர், நம்மைப் போன்றோர் (professionals) எங்கு அதிக சம்பளம், பதவி உயர்வு கிடைக்கிறதோ அங்கு தாவுவதைப் போன்று 'கட்சியைப்' பணம், பதவி கறக்கும் எந்திரமாக்கிவிட்டனர். அதற்கு கொள்கை என்பதும் நோக்கம் என்பதும் விளம்பர உத்திகளாகி விட்டன. அதனால் அத்தகைய கட்சியால் பலன் பெறுவோர் (சிலர் தவிர) என்றும் இன்றைய நிலைமை மாற (பேசுவதைத் தவிர) உதவமாட்டார்கள். 

சில தீயணைக்கும் வேலைகளின் தீவிரம், அவசரம் கருதி நாம் இவர்கள் பின்னால் நின்றால் நாம் பெரிய தவறு செய்கிறோம். இவர்கள் ஒரு தீயை அணைத்த பின் அடுத்த தீ வரும் படி வேலை செய்து கொண்டு இருப்பார்கள். தீ பிடிக்காத பொருள்களைக் கொண்டு வீடு கட்டுவதிலும் அதற்கான ஒழுங்கு முறை, கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதிலும் ஆர்வம் உள்ளவர்களாகக் காட்டிக் கொள்வார்களே தவிர அதில் தீவிரமாக இறங்க மாட்டார்கள்.

மக்கள், 'இந்தத் தீயணைக்கும் அரசியல் வேண்டாம்' என்று நிராகரிக்க நாம் உழைக்க வேண்டும். அது தான் நம்மைப் போன்றோர் இளைஞர்களுக்குக் காட்ட வேண்டிய வழி. அப்படி உழைத்திருந்தால் 'ஜெயலலிதா' இப்படிப் பெரும்பான்மை பெற்றிருக்க வாய்ப்பில்லை. நாம் உடனே கூட்டணி அரசால் ஏற்படக் கூடிய குழப்பம், பின்னேற்றம் இவற்றைக் கண்டு தயங்குகிறோம். போரில் உயிரை விட அல்லது விடுவதைப் போற்றுகிறோம். ஆனால் போர் அல்லாத சிவில் வாழ்க்கையில் முள்பாதையில் மலையேறுவதைத் தவிர்க்க நினைக்கிறோம்.

'கேளுங்கள் கொடுக்கப்படும்' என்றார் ஏசப்பா. எதைக் கேட்ட (demand) வேண்டும் என்ற சிந்தனையை, தெளிவை உருவாக்க வேண்டும்.

இன்றுள்ள 'ஒற்றுமையின்மை' என்ற நிலையிலிருந்து 'ஆரோக்கியமான ஒற்றுமை' என்ற நிலையை அடையப் பலவிதமான சிக்கலான கடினமான துயரமான இடைநிலைகளின் (கூட்டணி அரசு, குழப்பம், மக்கள் நிராகரிப்பு, சில முறை ஆட்சிக் கவிழ்ப்பு....) வழி நடந்தே ஆக வேண்டும். அப்படி அல்லாது எதிர்பார்ப்பது உழைக்காமல் விளையும் அற்புதத்திற்குக் காத்திருப்பதாகவே ஆகும். ஒற்றுமையாக இருப்பது என்பது ஒரு தனித்துவமான திறன் (skill). அது பயிற்சி இல்லாது நமக்கு வந்து விடாது.

பெரியார் தன்னுடைய பணியைக் குறித்து, "இதைச் செய்ய எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ ஆனால் இதைச் செய்தாக வேண்டும், இதைச் செய்ய யாரும் முன்வரவில்லை; எனவே நான் என் மேற்போட்டுக் கொண்டு செய்கிறேன்" என்றார்.

ஆனால் நாம் மாற்று அரசியலுக்குக் குரல் எழுப்பி வலிமை சேர்க்கும் பணியைச் செய்யத் தேவையான வாய்ப்பு, தகுதியுடன் (அரசியலால் வாழ்வு, இலாபம் இன்மை, இவற்றைப் பரப்ப‌ சுதந்திரம்) உள்ளோம். நம்மால் (நம்மைப் போன்றவர்களால்) மட்டுமே செய்யக் கூடிய பணியை அறிந்து (அடையாளம் கண்டு) அதைச் செய்வதுதான் சரியானதாகவும் (right) திறன்மிக்கதாகவும் (effective and productive) இருக்கும். அதற்குத் தேவையான திறன்களை (skills) வளர்த்துக் கொள்ளவும் வேண்டும். நம்முடைய ஆற்றலைப் பிறர் செய்யக் கூடிய தீயணைக்கும் வேலைகளில் ஓரளவுக்கு மேல் ஈடுபட்டு விரயமாக்கி விடக் கூடாது.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க‌
செய்யாமை யானும் கெடும் (திருக்குறள்: 466)

No comments:

Post a Comment