Monday 1 August 2011

கற்பனைகள் பலவிதம் உள்வினைகள் ஒருவிதம்

2011-07-31

கணிதத்தில் உள்ள முடிவிலியை (infinity), எதிர் எண்களை (negative numbers), கற்பனை எண்ணை (imaginary number i, which is when multiplied by itself gives -1), மூன்று பரிமாணங்களுக்கு மேல் உள்ள பொருளை (object having more than three dimensions) உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? இவை இல்லாமல் அறிவியல்/தொழில் நுட்ப வளர்ச்சிகள் இல்லை என்பதை உலகில் எத்தனை பேர் தெரிந்து வைத்துள்ளார்கள் அல்லது உணர்ந்துள்ளார்கள்? அதே போல் முருகன், சிவன்... போன்ற கற்பனைக் கடவுள்கள் இல்லாத உலகம் எங்கு இருக்கிறது?

மேற்கண்ட கணிதக் கற்பனைகளின் பயனை, நன்மையை நாம் ஏற்றுக் கொள்வது போல் உலகில் பல கோடி மக்களுக்கு அவர்களின் அன்றாட வாழ்க்கையில் மதம் சார்ந்த கற்பனைகள் பயனை, நன்மையை தருகின்றன என்பதை நாம் ஏற்றுக் கொள்ளாவிடில் நாம் அதை உணராதக் கற்பனை உலகில் இருக்கிறோம் என்றே பொருள்.

எனக்குப் புகை பிடிப்பதிலும் ஆல்கஹால் பானங்களிலும் என்ன துய்ப்பு / இன்பம் / மகிழ்ச்சி இருக்கிறது என்று புரியவே இல்லை என்பதால் அப்படியான துய்ப்பு / இன்பம் / மகிழ்ச்சி கிடையவே கிடையாது என்று சொன்னால் எப்படி இருக்கும்? போட்டவனுக்குத் தானே போதை தெரியும்.

ஒரு குடி போதைக்காரர், சில பித்துக்குளிகள் சொற்களை மடக்கிப் போட்டு
க் 'கவிதை' என்று சொல்லி மகிழ்வதில் என்ன இருக்கிறது என்று சொன்னால் நாம் அவரைப் பற்றி என்ன நினைப்போம்?

மதத்தின் பெயரால் நடந்த போர்களை விட‌ 'இச'த்தின் பெயரால் நடந்த/நடந்து கொண்டு இருக்கும் போர்கள்/அழிவுகள் அதிகம். மேலும் அறிவியல்/தொழில் நுட்ப வளர்ச்சிகள் மதத்தின் பெயரால் நடந்த/நடந்து கொண்டு இருக்கும் சுரண்டல்களை விட மிக மிக அதிகமானச்/மோசமானச் சுரண்டல்களுக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் வழி வகுத்துள்ளன.

மதம், 'அனைவரும் கடவுளின் படைப்புகள்', 'கடவுளின் முன் அனைவரும் சமம்' என்று சொல்லி ஏற்றத் தாழ்வுகளையும், உழைப்புப் பிரிவினைகளையும் நியாயப்படுத்தினால், அறிவியல்/தொழில் நுட்ப வளர்ச்சிகளும் அதையே இன்னும் சூழ்ச்சியாகச் செய்ய வழி காட்டியுள்ளன.

"Science without religion is lame. Religion without science is blind." (Albert Einstein)

இந்த இடத்தில் மதம் என்பது பொது நல நோக்கம் என்று கொள்ள வேண்டும். ஐன்ஸ்டைன் சாணிக்குப் பொட்டிட்டு, கல்லுக்குத் தேர்த்திருவிழா நடத்தும் சடங்குகளைக் குறிப்பிடவில்லை என்பது தெளிவு. பெரியாரும் 'மதம் மக்களுக்கு அவசியம் வேண்டும். அதாவது எல்லாருக்குமான பொது ஒழுக்க நெறிகள் என்ற பொருளில்' என்று ஓர் இடத்தில் குறிப்பிடுகின்றார்.

மதம் மனிதனை உயர்த்தவில்லை என்றால் அறிவியல்/தொழில் நுடப வளர்ச்சிகள் (selfish gene, survival of the fittest justifications!) அவனை இன்னும் மிக மோசமான அயோக்கியனாக மாற்றியுள்ளன.

"Technological progress is like an axe in the hands of a pathological criminal." (Albert Einstein)

அறிவியல் ஆராய்ச்சி உலகத்தில் உள்ள 'மதப்' பிடிவாதங்கள் (dogmatism), மோசமான நடைமுறைகள் பற்றி The Trouble With Physics (http://www.thetroublewithphysics.com/) என்ற நூலில் வந்துள்ளது.

இன்று உலகில் மத நிறுவனங்கள் அல்லது அது சார்ந்த நிறுவனங்கள் நடத்தி வரும் அற, உதவித் தொண்டுகளைப் போல் அறிவியல்/தொழில் நுட்ப வளர்ச்சியால் சுரண்டலின் உச்சியில் இருக்கும் நிறுவனங்கள் என்ன செய்கின்றன, எவ்வளவு செய்கின்றன‌? குறைந்த அளவு அறிவியல்/தொழில் நுட்ப வளர்ச்சியைத் (மதத்திற்கு எதிராகத்) தூக்கிப் பிடிக்கும் தனி நபர்கள்/நாடுகள் எவ்வளவு தூரம் உலக வளங்களை, அறிவியல்/தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ள முன் வருகின்றனர்?

மதம் எளிமையான கதை மூலம் உலகைப் புரிந்து கொண்டு (அதில் இருப்பதைத் தலைவிதி என்று ஏற்றுக் கொள்வதும் அடங்கும்) வாழ வழி காட்டுகிறது. அறிவியல் சிக்கலான கதை மூலம் உலகைப் புரிந்து கொள்ளச் சொல்கிறது. எளிமையான கதை பெரும்பாலோருக்கு எடுபடுவது தான் இயல்பு. இதற்கு மாறாக உலகில் பெரும்பாலோர் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவியல் சிந்தனை அன்று.

திருக்கழுக்குன்றத்தில் ஆண்டு தோறும் நடக்கும் கோவில் திருவிழாவின் போது கோவிலைச் சுற்றியுள்ள கடைகளில் அந்தச் சில நாள்களில் நடக்கும் வணிகம் ஓர் ஆண்டு முழுவதும் நடக்கும் வணிகத்திற்குச் சமம் என்று நான் பள்ளிப் பருவத்தில் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த எங்கள் குடும்ப நண்பர் மூலம் அறிந்தேன். ஆக, மதம் மனதிற்கு மட்டும் மருந்தன்று வாழ்விற்கு அடிப்படையான‌ பணத்திற்கும் வழியாக உள்ளது.

மத நம்பிக்கைகள் குறைந்து வரும் இங்கிலாந்தில் அந்த இடத்தைக் கால்பந்து சங்கங்கள் பிடித்துள்ளன. இங்கிலாந்து அணி விளையாடும் போட்டி அன்று இங்கு விற்கும் பீர் (beer) வணிகம் ஒரு பில்லியன் பவுன்கள் என்று செய்திகள் கூறுகின்றன. ஒரு மதம் போய் வேறு ஒரு மதம் வந்துள்ளது. கோவிலைச் சுற்றி வீபுதி, தாயத்து... வணிகம் போல் கால்பந்து அணிகளின், விளையாட்டு வீரர்களின் டி சட்டைகள், தலைக் குட்டைகள், தொப்பிகள், கைப் பட்டைகள்... என்று வணிகம் அமோகமாக நடக்கிறது.

இதையும் விட மோசமாகப் போலி அறிவியல் அடிப்படையில் நடக்கும் நீர், விட்டமின் மாத்திரைகள், முடி வளர்க்கும் மருத்துவம்.... என 'எளிமையான' அற்புதங்களின் வணிகம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றது.

இது தான் நடப்பு (எதார்த்தம்). ஒரு குட்டையிலிருந்து மறு குட்டைக்குத் தாவும் முன்னேற்றம்! பெரும்பாலோர் அப்படித் தான் இருப்பார்கள் / இருக்க முடியும் என்றால் அதை ஏற்றுக் கொண்டு, கணக்கில் கொண்டு சிந்திப்பதும் செயல்படுவதும் தான் வெற்றி பெறும். அது தான் இன்று உலகில் நடக்கிறது.

இக்காரணம் தொட்டே ஒரு தமிழன் என்ற அடையாளத்தின் அடிப்படையில் 'தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு' அமைவதில் நப்பாசை இருந்தாலும் பற்றற்ற பார்வையில் அதுவும் ஒரு வழமையான அரசாகவே இன்றைய நிலையில் இருக்க இயலும் என்பதால் அமைந்தே தீர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. [அதிலும் 'தமிழன்' என்ற அடையாளம் என் சுய விருப்பத் தேர்வு இல்லாத போது (யாருக்கும் இல்லை) அதில் நடைமுறை வாழ்வுக்கு மேல் அதிகப் பற்று கொள்வது அடிமைத் தனமும் பழங்குடி மனப்பான்மையும் (tribalism) ஆகும். நான் இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன். பெரும்பாலோர் (வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாமல்) நடைமுறையில் அப்படித்தான் வாழ்கிறார்கள்.] ஏனெனில் அரசு என்பது ஒரு வன்முறை இயந்திரமே; அடக்கு முறைச் சாதனமே.

அந்த வகையில் அமெரிக்க குடியரசுக் கட்சியினர் (Republicans) கூறும் 'குறைந்த அளவு அரசு' (minimum Govt) என்பது சரியென்றாலும் அவர்கள் அந்த அடிப்படையில் வலியோர் மெலியோரை ஏமாற்றி வாழ்வதற்கு இராணுவப் பாதுகாப்பு/அடக்கு முறைக்கு அரசைப் பயன்படுத்தும் அயோக்கியர்களாக உள்ளார்கள்.

அரசு ஒரு வன்முறை இயந்திரம் என்பதைச் சொன்ன மார்க்சியத்தின் அடிப்படையில் அமைந்த சோசலிச அரசுகள் கடுமையான வலிமையான மையப்படுத்தப் பட்ட அரசுகளைத் தான் நிறுவின. அதனால் அவை மக்கள் விடுதலைக்கு எதிரானவையாகவே போயின.

அரசின் மூலம் மக்களுக்கு உண்மையான விடுதலை என்றும் வர முடியாது. நாம் ஒவ்வொருவரும் அவரவர் விடுதலையைத் தனித்தனியாக‌ச் சாதித்தாக வேண்டும். அது தான் ஆன்மீகம். அதே சமயம் அது ஏதோ அன்றாட வாழ்வுக்கும் அறிவியலும் அப்பாற்பட்டதன்று.

பள்ளியிலும் கல்லூரியிலும் கணிதம், இயல்பியல், வேதியியல், உயிரியல்... என்று தனித் தனியாகப் பிரித்துப் படிப்பது ஒரு பொய்யான ஆனால் வசதியான பிரிவினையே. இயற்கைப் பொருள்களும் வினைகளும் (objects and processes) அப்படிப் பிரிந்து இல்லை.

அதே போல் தான் ஆன்மீகம், அறிவியல், அரசியல், பொருளியல், தனி வாழ்வு, பொது வாழ்வு... என்ற பிரிவினைகளும். வாழ்க்கை அப்படிப் பிரிந்து இல்லை.

"The whole of science is nothing more than a refinement of everyday thinking." (Albert Einstein)

பின்வரும் மேற்கோளை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றால் நீங்கள் ஓர் ஆன்மீகச் சிந்தனையாளரே. ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் ஓர் அறிவியல் மனப்பான்மையாளரும் அன்று.

"A human being is a part of a whole, called by us _universe_, a part limited in time and space. He experiences himself, his thoughts and feelings as something separated from the rest... a kind of optical delusion of his consciousness. This delusion is a kind of prison for us, restricting us to our personal desires and to affection for a few persons nearest to us. Our task must be to free ourselves from this prison by widening our circle of compassion to embrace all living creatures and the whole of nature in its beauty." (Albert Einstein)

ஆன்மீகம், அறிவியல், மதம்.... என்ற அடையாளக் குறிகளுக்குள் நம்மைக் குறுக்கிக் கொள்ளாமல் சிந்தித்தால் எல்லோரிடமும் எல்லா வகையான சிந்தனைகளும் இருப்பதைப் பார்க்க முடியும். நம்மிடம் மதம் போன்ற 'நம்பிக்கை'க்கு இடம் இல்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. அறிவியலின் (கணிதம் உள்பட) அடிமட்டத்தில் சான்றுகள் இல்லாத, நிரூபிக்க முடியாத அனுமானங்களே (axioms) உள்ளன என்பதை அறிய வேண்டும்.

எல்லாவற்றையும் நாமே தனி ஆளாக ஆய்வு செய்து, சோதனை செய்து ஏற்றுக் கொள்ள இயலாது. சமுதாய ஒழுங்கிற்கு ஆராயாது ஏற்றுக் கொண்டு இட்ட கட‌மைகளைச் செய்யும் மனப்பான்மையும் (அடிமைத்தனமும்) அவசியமாகும். அப்படி இல்லாமல் மனித சமுதாயமோ தேனீக்களின் கூடோ எறும்புகளின் புற்றோ.... இயங்க இயலாது.

"The problem of mankind is to combine three things: economic efficiency, social justice, and individual liberty"
            - Maynard Keynes in 1926 lecture.(The Guardian Tuesday, February 15 2005)
('combine' here means 'balancing'; now we are sacrificing the remaining two for the first - economic efficiency that too for the vested interests only not for everyone)

David Eagleman of Baylor school of Medicine has been pioneer in brain research. His recent book is "Incognito".
டேவிட்டின் நூலைப் பற்றிய வாசகர்கள் கருத்துகளைப் படித்தேன். அவர் நூலைப் படிக்கவில்லை. ஆனால் அது போன்ற கருத்தில் எழுதப்பட்டுள்ள நூல்களைப் படித்துள்ளேன். நம் மேல்மனத்திற்கு எட்டுவது மிகக்குறைவே; ஆழ்மனதில் நடப்பவை பெரும்பாலும் நம் மேல்மனக் கவனத்திற்கு வருவதே இல்லை. "The User Illusion: Cutting Consciousness Down to Size"  என்ற நூலைப் படித்துப் பார்க்கவும்.

பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால்
     பணிகின்றேன் பதியே நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால்
     குழைகின்றேன் குறித்த ஊனை
ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால்
     உறங்குகின்றேன் உறங்கா தென்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச்
     சிறியேனால் ஆவ தென்னே
             - திருவருட்பா 6 ஆம் திருமுறை: 10 தற் சுதந்தரம் இன்மை: 3369

டேவிட் நூலைப் படித்தும் புரிந்து கொள்ளலாம். திருவருட்பாவைப் படித்து விட்டு நம் மனதை உற்று நோக்கியும் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் ப்ருசு ('Bruce Lipton - Biology of Perception -
http://www.bbc5.tv/eyeplayer/video/biology-perception-psychology-change) சொல்லும் செய்தி வேறு; ஒரு வகையில் எதிரானதாகும். அதாவது நம் நம்பிக்கைகள், புரிதல்கள் (beliefs and perceptions) தான் பெருமளவில் நம் உயிரியக்கத்தை (உடலியல்) தீர்மானிக்கின்றன என்பதாகும். நம் நம்பிக்கைகளை மாற்றினால், புரிதல்களை மாற்றினால் நம் உயிரியலை (biology) மாற்ற முடியும் என்பது அவர் வாதம். இதை எவ்வளவு தூரம் பிற அறிவியலறிஞர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர் ஹோமியோபதி போன்ற மருத்துவங்களை (அறிவியல் அடிப்படையில்) ஆதரிக்கிறார். அவர் அமெரிக்காவில் அதிகம் பேர் இறக்கக் காரணம் அலோபதி மருந்துகளே என்று கூறுகிறார். அதனால் அவரைப் புறக்கணித்து ஒதுக்கி வைத்திருக்கலாம். Please watch many of his videos in YouTube.

புதிய மனிதர்கள் இன்றி புதிய சமுதாயம் இல்லை. புதிய மனிதர்கள் என்றால் நான்கு கண்கள், எட்டு கைகள்... என்ற மாற்றம் அன்று. புதிய சிந்தனையே புதிய மனிதர்கள்.

[இவை எவையும் உயர்வு தாழ்வு மனப்பான்மையில் கூறப் படவில்லை. 'நான்' ஞானியும் இல்லை; சாணியும் இல்லை; அல்லது இரண்டும் தான்; எனில் எல்லோரும் அவ்வாறே. எல்லோரும் சாரத்தில் (essence) சமம்; சடத்தில் (gross) சமமில்லை. இதை விளக்கப் புகுந்தால் நீண்டு விடும். பிறகு ஒரு வாய்ப்பில் விரிவாகப் பார்ப்போம்.]

"We can't solve problems by using the same kind of thinking we used when we created them." (Albert Einstein)

ஆனால் அதற்கு முன் சிக்கலைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் இல்லாத ஊருக்குப் போகாத வழியைத் தேடிக் கொண்டு இருப்போம்.

உலகமயமாகி விட்டச் சமூகப் பொருளாதார அரசியல் சூழலில் பழங்குடி, தேசிய (tribalism, nationalism) மனப்பான்மையுடன் சிக்கல்களை அணுகினால் (சிக்கல்களுக்கு அப்படியான அணுகுமுறைகள் ஒரு காரணம்) கிளையில் உட்கார்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டுவது போலாகும்.

செய்வது எளிது செய்வது எதுஎவ்வென
உய்யும் தெளிவே அரிது
Easy it is to act as told
Rare to tell clear and bold
        (சரியாரின் மறுக்குறள்)

"The highest possible stage in moral culture is when we recognize that we ought to control our thoughts". - Charles Darwin
"நம் சிந்தனைகளை நாம் கட்டுப்படுத்தியாக வேண்டும் என்று புரிந்து கொள்ளும் நிலை தான் நம் பண்பாட்டின் உச்சக் கட்ட வளர்ச்சிப் படியாகும்."

உள்ளத்தின் மாற்றமே உண்மை; உருமாற்றம்
கள்ளத்தின் மாற்றமே காண். (சரியாரின் புதுக்குறள்)
So, the real evolution is not eradicating diseases, achieving long-life etc but psychological (thinking / attitude) change. I am sure Bruce Lipton will agree with this statement.

புதிய சிந்தனைகள் எங்கிருந்து வரும், வர முடியும்? அதற்கும் ஏற்கனவே வழிகாட்டுதல்க‌ள் உள்ளன. அது ஆன்மீகத்தில் தெளிவாக உள்ளது. அறிவியலைச் சரியாகப் பார்த்தால் அதிலும் உள்ளது. 'எல்லாம் பிரம்மம்' என்ற வலைப் பதிவைப் படிக்கலாம்.

புதிய சிந்தனை நம்மை நாம் புரிந்து கொள்வதன் மூலம் தான் (தன்னை அறிந்தான் தரணியை அறிந்தான்) வர முடியும். மதத்தையோ (அதன் மூல நூல்களையோ) அறிவியலையோ எந்த ஒன்றை மட்டுமோ ஒரே மூலமாகத் (only source) தூக்கிப் பிடித்தால் 'நம்பிக்கையும்' 'அடிமைத்தனமும்' தான் வரும். சிந்தனை விடுதலைக்கு அவை அறிகுறி அல்ல. 'நம்மை அறிந்தால்' வலைப்பதிவு படிக்கலாம். ஆன்மீகம், அறிவியல் இரண்டின் மைய இலக்கு 'தன்னை'ப் புரிந்து கொள்வதே.

மாறாக ஆன்மீக (மத) அற்புதங்களும் (கற்பனை / உண்மை) அறிவியல் தொழில் நுட்ப அற்புதங்களும் (கற்பனை / உண்மை) நம்மை மைய இலக்கை விட்டுக் கவனத்தைத் திருப்பி மயக்குகின்றன. தன்னை அறிவதில் இது ஒரு முக்கியமான கட்டமே. யோகா, தியான அற்புதங்களில் மயங்கி ஆன்மீகத்தின் மையத்தைத் தவறு விடுவது போல், மருத்துவம், புற வாழ்க்கைச் சாதனங்கள் போன்ற தொழில் நுட்பத்தின் அற்புதங்களில் மயங்கி அறிவியலின் மையத்தைத் தவற விடுகின்றோம்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.
     - திருவாசகம்:19 5.திருச்சதகம் 2.அறிவுறுத்தல்

"வானாகி மண்ணாகி... உண்மையுமாய் இன்மையுமாய்..." (திருவாசகம்) என்பது போன்ற‌ன, 'தமிழ் இலக்கிய வரிகள்' என்பதை விட நிலையான உண்மையைச் சொல்கின்றன என்பதே போற்றப்பட வேண்டிய முதற் சிறப்பு.

திருக்குறளில் பல அதிகாரங்களை (நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவா அறுத்தல்....) நாம் ஏதோ போகிற காலத்தில் படித்துப் புலம்ப வேண்டியவை என்று ஒதுக்கி வைத்துள்ளோம். அவை புதிய மனிதரை உருவாக்கும் புதிய சிந்தனைக்கான நல்ல மூலங்களாகும். 'குட்டுப்பட்டக் குரங்கன்' கூட உதவலாம்.

All Einstein's quotes are from:
http://rescomp.stanford.edu/~cheshire/EinsteinQuotes.html

No comments:

Post a Comment