Monday 1 August 2011

மேலே போக மேற்கே வழி - West Is The Only Way Forward

2011-07-20

இது வளர்ந்த மேற்கு நாடுகளில் வாழும் கீழ்த்திசை நன் மன்பான்மையினோருக்காக எழுதப்பட்டது ஆகும்; வளரும் நாடுகளில் வாழ்வோர் ஆற்ற வேண்டிய கடமைகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகாது.

இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு கூற்றிற்கும் எடுத்துக்காட்டு, விளக்கம் கொடுத்தால் கட்டுரை பல பக்கங்களுக்கு நீண்டு விடும். அதனால் இந்தப் பிழிவான கருத்துகள் அவரவரைச் சிந்தித்துப் பார்க்க தூண்டுமானால் அதுவே பயன்.


மேலே போக மேற்கே வழி
West Is The Only Way Forward


இங்கு மேற்கு என்பது பரந்த மனப்பான்மை, திறந்த உள்ளம், அறிவியல் நோக்கு, சட்டத்தின் முன் அனைவரும் சமம், மனித உரிமைகள், அனைவருக்கும் சம வாய்ப்புகள், வேறுபாடான கருத்துகள், பழக்க வழக்கங்கள், பண்புகளுக்கு மதிப்பு, மரியாதை, சுதந்திரம், மக்களாட்சி, எந்த ஓர் இசத்திற்கும் அடிமைத்தனம் இல்லாமை, போலித்தனங்கள் குறைவு, அகம் புறம் முரண்பாடுகள் குறைவு, மனிதர் உடல், உள இயல்புகளைப் பற்றிய எதார்த்தமான நடைமுறை, தனிமனித வழிபாடின்மை, பொதுநலப் பொறுப்புணர்வு... போன்ற பண்புகளைக் குறிக்கும்.

இப்பண்புகள் வளர்ந்த மேற்கு நாடுகளில் ஒப்பீட்டளவில் அதிகம் உள்ளன, நடைமுறையில் உள்ளன, வளர்ந்து உள்ளன என்பது கண்கூடு. ஆனால் அவை மேற்கு நாடுகளிலும் உறுதியாக நிரந்தரமாக‌ நிலை கொண்டு விடவில்லை; செத்துப் பிழைத்துக் கொண்டே உள்ளன.  அதற்கு மேற்கின் மோசமான கூறுகளே (திறந்த முனைப் பொருளாதாரம், ஆதிக்கக் குழுக்களின் வணிக, ராணுவ ரவுடித்தனம், நுகர்வு அடிமைத் தனம்...) காரணங்கள் ஆகும். அவற்றால் வளரும் நாடுகள் மட்டுமல்ல வளர்ந்த நாடுகளின் நடு, கீழ்த்தட்டு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

அதே போல் இம்மேற்குப் பண்புகள் வளரும் (கீழ்த்திசை) நாடுகளில் இல்லவே இல்லை என்று சொல்லி விட முடியாது. ஆனால் அவை மேற்கு நாடுகளின் மோசமான கூறுகளைத் தழுவிப் பின்பற்றி வருவதால் (வர கட்டாயப் படுத்தப் படுவதால்) அந்நாடுகளில் இவ்வுயரிய பண்புகள் தளிர்க்கவே தடுமாறுகின்றன. ஏற்கனவே அந்நாடுகளின் பழம் பண்பாட்டில் இருந்த பல உயரிய பண்புகள் நசிந்து விட்டன. மேற்கின் மோசமான கூறுகள் போல் கிழக்கின் மோசமான கூறுகளும் (ஒப்பீட்டளவில் தொலை நோக்கு இன்மை, பொது நோக்கு இன்மை...) இதற்குக் காரணங்கள் ஆகும். இக்கூறுகளின் பாதிப்பாகவும் அடிப்படையாகவும் வரலாற்று உணர்வுக் குறைவு இருந்துள்ளது; இன்றும் அந்நிலை நீடிக்கிறது.

கீழ்த்திசை நாடுகளில் வாழ்வின் அடிப்படையான உண்மைகள் பல ஞானிகள் (புத்தர், மகாவீரர், ஆதி சங்கரர், திருமூலர், வள்ளலார்...) மூலம் வெளிப்பட்டு இருந்தும் அவை பெருமளவில் பயன்படாது போயிற்று; இன்றும் அந்நிலையே நீடிக்கிறது. அதனால் கீழ்த்திசை நாடுகளின் தன்மையை, தொன்மையைத் தோண்டி எடுப்பது மேல்திசை மனப்பான்மையினாலேயே (காலனி ஆதிக்கம்...) ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.

மேற்கு, கிழக்கிலிருந்து நல்ல பண்புகளை (யோகா, தியானம்...) அகவயப்படுத்திக் கொண்டு வருகிறது. ஆனால் கிழக்கு மேற்கின் தீய கூறுகளுக்கு அடிமையாகிக் கொண்டு வருகிறது. அதே நேரம் கிழக்கிலிருந்து இடம் பெயர்ந்தோரால் மேற்கு நன்மையும் தீமையும் அடைந்து வருகிறது. மேற்கில் ஏற்கனவே இருக்கும் மோசமான கூறுகளுடன் கிழக்கின் மோசமான கூறுகளும் இணைந்து மேற்கின் (முதல் பத்தியில் சொன்ன) நல்ல பண்புகளுக்கு ஆபத்தை அதிகரித்து வருகிறது. இதை உணரும் நம்மைப் போன்றோர் மேற்குச் சமுதாயத்தின் அனைத்து முகங்களிலும் (அரசியல், சமுதாய, பண்பாட்டு, விளையாட்டு, தொழில், வணிகம், அதிகாரத்துறை, ஆய்வு, காவல், நீதி, இராணுவம், கல்வி, மருத்துவம்...) ஆர்வம் காட்டிப் பங்கெடுத்து அதன் நல்ல பண்புகளை வலுப்படுத்த வேண்டும். இந்தப் புலங்களில் நாம் வெறும் பயன் பெறுவோராக மட்டும் இருந்து விடாமல், இதைச் செய்ய  மேற்குலகில் நமக்கு உரிமையும் கடமையும் உள்ளன.கடந்த காலங்களில் இவ்வாறு கீழை நாடுகளில் பொறுப்புணர்ந்து செயல்படாததால் இன்றைய சீரழிவு நேர்ந்துள்ளது.

இன்றைய நிலையில் மேற்குலகை மாற்ற ஒப்பீட்டளவில் நம்பிக்கை அதிகம் கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் கீழ்த்திசையில் வீசும் பொருளாதார வளர்ச்சிப் புயலில், அரசியல் சமுதாயச் சீரழிவில் வாய்ப்பு குறைவு. ஆனால் மேற்குலகின் நல்ல பண்புகளை காத்து வளர்ப்பதன் மூலமும் தொடர்ந்து கீழ்த்திசையில் அவற்றைப் பரப்புவதன் மூலமும் கிழக்கும் மேற்கும் சேர்ந்து கரையேற வழியுண்டு; அதுவே சாத்தியம். மேற்குலகின் மோசமான கூறுகளைக் கட்டுப் படுத்த கீழ்த்திசை (கணிசமான மக்கள்) அவற்றைப் புறக்கணித்தாலே போதும்.

வளர்ந்த மேற்குலக நாடுகள் தங்கள் ராணுவ ரவுடித்தனங்களுக்கு 'மேற்குலக வாழ்க்கை முறையைப் பாதுகாக்க வேண்டி' என்று நியாயம் கற்பிப்பத்தில் ஓரளவு உண்மை உள்ளது. அதனால் வளரும் நாடுகளிலும் சேர்ந்து மாற்றம் வராமல் மேற்குலகம் ஒரு கட்டத்திற்கு மேல் சரியான திசையில் வளர இயலாது. மேற்கு மாறக் கீழைக் காற்று வேண்டும். கிழக்கு வெளுக்க மேலைச் சூரியன் வேண்டும். ஒருங்கிணைந்த உலக மனித சமுதாயத்திற்கு ஒருமித்த தீர்வுதான் தேவை; அதுதான் ஆரோக்கியமானதாகவும் நீடிக்கக் கூடியதாகவும் இருக்கும்.

ஒல்வது அறிந்து அறிந்ததன் கண் தங்கிச்
செல்வார்க்குச் செல்லாது இல் (திருக்குறள்:472)
எது நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என்று எண்ணித் தேர்ந்து அதில் நின்று தொடர்ந்து பணியாற்றுவோருக்கு இயலாதது என்று எதுவும் இல்லை.

No comments:

Post a Comment