Monday 29 August 2011

மரண தண்டனை

2011-08-24
ஒரு புறம் மனிதரை மனிதர் போர் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கில் கொலை செய்து கொண்டு, மறு புறம் கொடிய குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பது பற்றித் தேவையா, மனிதாபிமானமா, நாகரிகமா என்றெல்லாம் விவாதிக்கிறோம்.

பல ஆயிரம் அடி உயரத்திலிருந்து குண்டுகளைப் பொழிந்து மக்களைக் கொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் ஒரு தற்கொலைக் குண்டுதாரி சில பேர்களைத் தன்னையும் அழித்துக் கொண்டு கொல்வது தீவிரவாதம் என்று வெறுக்கக் கூடியதாகவும் உள்ளது.

ஒரு புறம் தினமும் மில்லியன் கணக்கான விலங்குகளைக் கொன்று புசித்துக் கொண்டு மறு புறம் விலங்குகள் வதை தடுப்பு பற்றி சட்டம் செய்கிறோம்.

மனித குல வரலாற்றில் எது அனுமதிக்கக் கூடிய வன்முறை என்பதும் எது நியாயம் நீதி என்பதும் மாறிக் கொண்டே வந்துள்ளன. இனியும் மாறிக் கொண்டே இருக்கும்.

அதனால் மரண தண்டனை சரியா தவறா என்பதை விட மரண தண்டனை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தேவையா என்பதே சரியான கேள்வி, அணுகுமுறை. ஏனெனில் மரண தண்டனை இனி கிடையவே கிடையாது என்றால் அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வோர் அதிகரித்து சமுதாயத்திற்குச் சுமையாக (ஆயுள் தண்டனைக் கைதிகளாக, மீண்டும் அதே போல் குற்றம் செய்வோர்களாக‌) மாறக் கூடும். அதனால் தான் மரண தண்டனை எல்லா நாடுகளிலும் சமுதாயத்திலும் ஒரே மாதிரியாகப் பார்க்கப் படவில்லை; நடைமுறைப் படுத்தப் படவும் இல்லை; ஒழிக்கப் படவும் இல்லை.

அதனால் மரண தண்டனை ஒரு சமுதாயத்தில் (தற்காலிகமாக) ஒழிக்கப் படச் அச்சமுதாயம் அதற்குத் தகுதியாக வேண்டும்.

அப்படித் தகுதி ஆகுமுன் அதை வலியுறுத்துவது சரியாகாது.

பிரிட்டனில் வாழ்வுக் காப்புரிமையில் (Life Insurance) தற்கொலை செய்து கொண்டாலும் காப்பீட்டுத் தொகை தருவார்கள். ஆனால் இந்தியாவில் தர மாட்டார்கள். ஏன்?

வாழ்வும் (பிறப்பும்) இறப்பும் பிரிக்க முடியாதவை. யார் எப்போது பிள்ளை பெறலாம் என்று சட்டம் போட்டுக் கட்டுப்படுத்த நினைக்காத நாம் ஒருவரின் தீவிர திட்டமிட்ட‌க் குற்றத்திற்காக மரண தண்டனை கொடுப்பதை ஏன் வேறுபாடாகப் பார்க்க வேண்டும்? இறப்பை ஒருவருக்கு வழங்குவதைத் தவிர்க்க வேண்டுமென்றால் பிறப்பையும் அவ்வாறே கட்டுப்படுத்த வேண்டாவா?

எல்லாப் பார்வைகளும் சார்பானவையே. அதை விடுத்துச் சார்பற்ற முறையில் (absolute sense) இவை போன்ற அறத் தடுமாற்றங்களை (moral dilemma) அணுகினால் சிந்தனைக் குழப்பமே விளையும் அல்லது நடைமுறைச் சாத்தியமற்ற கனவாகவே முடியும்.

மரண தண்டனை பற்றி மனிதாபிமானமா என்று பேசி, முழக்கிப் பரப்புரை செய்து மக்களை உணர்வெழுச்சிக்குள்ளாக்கலாம். ஆனால் அவர்களைச் சிந்திக்க வைப்பது தான் முக்கியம்; கடினமானதும் கூட.

"பலர் சிந்திப்பதை விடச் சீக்கிரம் செத்துப் போக‌த் தயாராக உள்ளார்கள்; உண்மையில் அப்படிச் செத்துப் போகவும் செய்கிறார்கள்"
    - பெட்ராண்ட் ரஸ்ஸல்
"Many people would sooner die than think. In fact they do"
    - Bertrand Russell

No comments:

Post a Comment