Monday 29 August 2011

பகைவனும் பகைமையும்

2011-08-29

ஒரு சட்டம் தவறாக இருந்தால் அதைச் சரி செய்வது தவறில்லை. ஆனால் அதற்கான மக்களாட்சி முறை பின்பற்றப் பட வேண்டும்.

கருணாநிதி, ஜெயலலிதா என்ற நபர்களை விட நாம் மக்களாட்சி முறைக்கும் அதன் நடைமுறைப் படுத்துவதில் உள்ள பொறுப்புணர்ச்சிக்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தனிநபர்கள் வந்து போவார்கள். ஆனால் நாட்டின் சட்டம் ஒழுங்கு முறைகள் காப்பாற்றப் படவும் செம்மைப் படுத்தப் படவும் வேண்டும். ஆனால் நம் நாட்டில் 'தை' விரும்பிகள் எப்படியாவது அதிகாரத்தைப் பயன்படுத்திச் சட்டமாக்கி விட வேண்டும் என்றும் அதை எதிர்ப்பவர்கள் எப்படியாவது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை நீக்கி விட வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்; அப்படி நடப்பதை ஆதரிக்கிறார்கள். அதனால் மக்களாட்சி முறை கொல்லப்படுவதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. நாம் குழு ஆட்சி மனப்பான்மையில் (எங்கள் ஆட்சி, உங்கள் ஆட்சி...) தான் இன்னும் இருக்கிறோம். மக்களாட்சி மனப்பான்மைக்கு நாம் இன்னும் வரவே இல்லை.

எடுத்துக்காட்டாகத் 'தை'த் திங்கள் ஆண்டுத் தொடக்கம் பற்றி சார்பற்ற முறையில் ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்து அதன் முடிவின் அடிப்படையில் செயல்பட்டால் அது மக்களாட்சி முறை. அதையும் பொறுப்புணர்ச்சியுடன் செய்யாமல் ஒரு சார்பானவர்களைக் குழுவில் போட்டுத் தன் விருப்பத்திற்கேற்ப முடிவைப் பெற்றுக் கொள்ளும் போது மக்களாட்சி முறை தந்திரமாகக் கொல்லப் படுகிறது. Democracy is not perfect but it is the best we have.

சமச்சீர் கல்வி முறை என்பது கருணாநிதியின் கண்டு பிடிப்பு அன்று. அது கல்வியாளர்களின் முடிவு. அதை நீக்க மீண்டும் அதே கல்வியாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

இப்படி அந்தந்தத் துறை நிபுணர்களிடம் பொறுப்பை விட்டு அவர்கள் பரந்த சமுதாய நலனுக்காக முடிவு எடுக்கிறார்களா என்று பொதுமக்கள் பிரதிநிதியாக இருந்து மேற்பார்வை செய்வது, வழி நடத்துவது தான் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசின் (அரசியல் வாதிகளின்) கடமை ஆகும். இது 100 விழுக்காடு சரியாக இயங்கும் மக்களாட்சி உலகில் எங்கும் இல்லை என்றாலும் இது தான் நோக்கம், இலக்கு. இதை நோக்கி மக்களாட்சி முறையைத் தொடர்ந்து செம்மைப்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும்.

மேல்சாதியினரும் ஆதிக்கக் குழுவினரும் இது போல் ஒரு சார்பான நிபுணர்களாக இருந்து பெரும்பாலோர் நன்மையைப் புறக்கணித்ததாலேயே திராவிட ஆரிய, வர்க்கப் பிரிவினைகளும் இயக்கங்களும் எழுந்தன என்பதை மறந்து விட வேண்டாம். ஆனால் அப்படிப் போராடி ஆட்சிக்கு வந்த பின் அதே தவறைச் செய்ததால் வீழ்ச்சி விளைந்தது.

'பறவைக் காய்ச்சல்' குறித்து எப்படி கருணாநிதியோ ஜெயலலிதாவோ முடிவு எடுக்கும் தகுதியற்றவர்களோ அதே போல் தான் மற்ற பல விஷயங்கள் குறித்தும். அவர்கள் ஏதாவது ஒன்றிரண்டில் நிபுணர்களாக இருந்தாலும் அவற்றில் கூட அவர்கள் பங்கு கொள்ளலாமே தவிர தீர்மானிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஒரே துறையில் பல நிபுணர்களின் கருத்துகள் பலவாக இருப்பதை நாம் பார்க்கிறோம்.

கருணாநிதி மக்களாட்சி முறையைப் பின்பற்றவில்லை என்பதற்கு மாற்று ஜெயலலிதா மக்களாட்சி முறையைப் புறக்கணிப்பது ஆகாது. சரியான மாற்று மக்களாட்சி முறையைப் பொறுப்புணர்ச்சியுடன் நேர்மை நியாய உணர்வுடன் நடைமுறைப் படுத்துவதாகும். எடுத்துக்காட்டாக, நம்மைச் 'சூத்திரன்' என்று இழிவுபடுத்திய தன்மைக்கு மாற்று நாம் அத்தன்மையை நோக்கி இழிவாக நடந்து கொள்வதன்று. அத்தன்மை போகும் படி, மறையும் படி நாம் பொதுத் தன்மையுடன் நடந்து கொள்வதே ஆகும்.

"தீயவனை வெறுக்காதே; தீமையை வெறுக்கக் கற்றுக் கொள்" - காந்தி

எனவே பகைவனை வெல்வது (தடுத்து நிறுத்துவது) என்பது உடனடித் தேவையாக இருக்கலாம். ஆனால் அது பகைமையை வெல்வது என்ற பெரிய தொலை நோக்குத் திட்டத்தின் (பண்பின்) ஒரு சிறு கூறாகவே இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment