Tuesday 26 July 2011

நம்மை அறிந்தால்

2005


நம்மை அறிந்தால்

அதியன்:
இன்று கவியங்கர நிகழ்ச்சி - தங்கை
அருவியின் கவிதை, மகிழ்ச்சி!
அளவறி:
கவிதை, ஆகா!
காலப் பயணம் செய்யும் கருத்து விதை!
அதியன்:
உண்மைதான்!
விதையாக இருந்து பயன் ஏது? - செயல்
விளைந்திட வேண்டும் மண் மீது!



அருவியின் கவிதை


நம்மை அறிந்தால் நன்மை தழைக்கும்
நம்மை அறிந்தால் நல்வாழ்வு செழிக்கும்

உயிரின வரிசையில் சமுதாய விலங்கு
உயர்ந்திட இயல்பில் உண்டோ வரம்பு

இயற்கையின் அங்கம் என்றள வறிந்து
இயங்கிட இன்பம் என்றுமே தங்கும்

பிழைத்திட முயல்வது உயிரின் தன்மை
தழைத்திட வேண்டுமே பல்லுயிர்ப் பன்மை

இயற்கை தேர்ச்சி எட்டிடப் போட்டி
அயல்கை ஆட்சி அண்டிடும் வாய்ப்பு

வாழ்ந்திடும் வன்மை வளர்த்திடும் நன்மை
ஆழ்ந்திடப் புரியும் அன்பெனும் தன்மை

எல்லோர் திறன்களும் என்றும் சமமிலை
எல்லோர் சமத்துவம் எதிர்க்க வாழ்விலை

இலக்கும் நீதியும் இல்லை பிறிதிடம்
இலங்கிய மனிதர் ஏகுவர் உயர்விடம்

ஒன்றிய வளர்ச்சி ஓங்கிய அறிவால்
கொன்று குவித்ததும் கொடிய அறிவால்

தந்திடும் ஆக்கம் தன்னின் முனைப்பு
அந்ததன் முனைப்பு அழிவும் கொடுக்கும்

ஓய்வு கொள்ள வேறு வேலை
சாய்வு கொள்ள செயலறு மூலை

அடையா ளமடங் காஆள் ஆகும்
கிடையா கிடமறு கேள்வி போகும்

சினிமா போதை சிகரெட் போதை
இனிப்பும் போதை எதிலும் போதை

சிலைமேல் பக்தி சிலர்மேல் பக்தி
கலைமேல் பக்தி கரையுதே சக்தி

கலை கேளிக்கை கலந்து மகிழ
விலை ஆதிக்கம் விழுந்து சிக்க

விளையாடத் தணியும் வேட்டை வேகம்
விளையாட்டுப் போரோ வெற்றி மோகம்

நண்பர் பகைவர் நடுவர் மனிதரே
எண்ணி நடந்தால் எவரும் அன்பரே

உண்டதில் பாதி மீதியைச் செரிக்கும்
மண்டிடும் வாய்குழி தோண்டியே மரிக்கும்
(Half of what we eat is used up in digesting the other half.
I dig my grave with my mouth)

மகிழ்ச்சி என்றே சொகுசுகள் தேடும்
மகிழ்ச்சி வாழ்வைப் பகிர்ந்திடக் கூடும்

நிரம்பிய வயிறு நிறையா மனது
அரங்கினில் ஆடும் அழிவே கூடும்

உடலும் குறை உள்ளமும் குறை
தடமதன் முறை தமக்கே இறை

கூட்டு முயற்சி கொடுத்த தெல்லாம்
நீட்டு கைகளை நேயவர்க் கெல்லாம்

புகழ்ச்சி மயக்கம் புகழ்பவர் மீதும்
உகந்தவர் மகிழ ஓருரை போதும்

நிறையும் தேவை நிறையா விருப்பம்
குறையும் ஆசை குறையா மகிழ்ச்சி

உள்ளம் துலங்க உடலும் விளங்கும்
பள்ளம் விலக்க படிப்பும் நட்பும்

வல்ல உள்ளம் வலிய உடலம்
நல்ல ஊட்டம் நாளும் தேவை

தோன்றிய உயிரில் தொலைந்தவை அதிகம்
ஊன்றி நிலைப்பது ஒன்றுமே இல்லை

என்செய் தோம்நாம் என்றே ஏக்கம்
தன்செயல் பலவெனத் தகுதித் தாக்கம்

தரமிடும் தம்செயல் தமக்குக் கீழ்மேல்
உரமிடும் குணமே ஓயாத ஊட்டம்

எல்லாம் இலவயம் இழப்போம் ஊக்கம்
எல்லாம் வணிகம் இழப்போம் மனிதம்

வறுமை நோய், தீய வளமே தாய்
சிறுமைப் பேய், பெருஞ் செல்வமே சேய்

மூடிய உலகில் முடியா வளர்ச்சி
தேடியே இருந்தால் தேயுமே சுழற்சி

மக்கள் ஆட்சி மக்களே ஆள்வது
மக்கள் சாட்சி மக்களை மேய்ப்பது

மனிதக் குழந்தை மண்ணின் துயரம்
இனிதாய் தந்தை எல்லா உயிர்க்கும்

அற்புதம் நாமே அவலமும் நாமே
உற்றிட உயர்வு உறுதுணை ஆய்வு

பேரின வாதம் சிற்றின பேதம்
ஓரின எண்ணம் உருப்படும் திண்ணம்

எழுதி விடுவதால் என்ன தள்ளும்
விழுது விடுவதால் வெஞ்செயல் கொள்ளும்

நசுக்கும் இனம் அதற்கும் சிறை
பொசுக்கும் சினம் போக்கிடும் கறை

கொடுமை சீற்றம் கொல்லன் சம்மட்டி
நடுமை சுற்றம் நகர்த்தும் தீக்கட்டி
(Evil generates the energy in which goodness is forged)

நல்லவை நம்பி நடிப்பால் மயங்கும்
அல்லவை அடியில் அதுவாய் முளைக்கும்
(Goodness creates the vulnerability in which evil raises)

மனிதன் குறை மக்கள் நிறை
இனியேன் திரை எதற்கும் சபை

ஒருவர் இனியர் ஊரார் கொடியர்
இருமை இயல்பு ஏற்றம் இலக்கு

ஆற்றமும் காலமும் அளந்திடும் எவரையும்
ஆற்றலைக் குவித்திட அணுகளும் பிளவுறும்

எட்டாத் திறமை எவர்க்கும் உண்டு
முட்டாள் தனத்திற்கு முடிவே இல்லை

சிரிக்கும் வேளை சிந்திக்கும் மூளை
செரிக்கும் நோயை செதுக்கும் ஆளை

தன்மை புரிய உன்னைத் தோண்டு
உண்மை தெரிய உள்ளம் தாண்டு

நம்மை அறிவது நாற்கால் தொன்மை
நம்மை அறிவது நம்மனப் பான்மை

ஆய்வும் திருத்தமும் ஆக்கும் நம்மை
போய்விடம் இல்லை புடவியே எல்லை.

சரியார் பற்றிச் சிரி குறிப்பு (அவரே எழுதிய கிறுக்கல்)

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், சரியார் என்று யாருக்கும் தெரியார். அதாவது யார் சரி (சரி யார்?) என்று யாருக்குமே தெரியாது. கொஞ்சம் விளக்கமாகச் சொல்வதென்றால், இவர் தான் முதன் முதலில் சக்கரத்தைக் கண்டு பிடித்தவர். அதாவது வாழ்க்கைச் சுழற்சிக்கும் மன உழற்சிக்கும் இவர் தான் காரணம். அது மட்டுமல்லாது இவர் இல்லாத இடம் இல்லை. பேசாத பேச்சில்லை. எழுதாத எழுத்தில்லை. செய்யாத செயல் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் இவரே இல்லை.

No comments:

Post a Comment