Tuesday, 12 July 2022

எப்படி புரிந்துக் கொள்வது?

 2022-07-12

எப்படி புரிந்துக் கொள்வது?

பகிர்ந்து கொள்பவர்: தேவராஜ்

எப்படி புரிந்துக் கொள்வது?

புத்தி பூர்வமாக ஒரு நிலையை அறிவது வேறு, உணர்வு பூர்வமாக ஒரு நிலையை அடைவது அல்லது நிலைத்திருப்பது என்பது வேறு. 

"அழகு என்பது பார்ப்பவரின் கண்ணில் இருக்கிறது", என்பார்கள் அல்லவா?
 
உலகத்தை நீ பார்ப்பது இருக்கட்டும், நீ அதை எப்படிப் பார்க்கிறாய் அல்லது பார்ப்பது யார் என்பதைக் கவனித்தாயா?

பார்ப்பவனின் மனதும் காட்சியின் ஒரு பகுதியே.

ஒரு தேசத்தில் நடப்பதைப் பற்றி நாம் தினசரிகளில் பார்க்கிறோம். சில சமயம் வேலை மிகுதியால் நாம் தினசரியைப் பார்க்கவில்லை என்றால், தூரதேச நடப்புகளைப் பற்றி நமக்குத் தெரிந்திருக்காது. 

நம்மைப் பொறுத்தவரை அங்கு ஏதும் நடக்கவில்லை என்பதே சரியான பதில். அங்கு ஏதும் நடக்கவில்லையா என்று கேட்டால், நமது மனது அதில் லயிக்கவில்லை; ஆதலால் நடக்கவில்லை. வேறொருவர் மனது லயித்திருந்தது, ஆதலால் அவருக்கு அது நடந்திருந்தது. 

இரண்டில் எது உண்மை என்று கேட்டால், மனம் எவருக்குத் தோன்றியதோ, அவருக்குத்தான் அந்த உலகம் இருந்தது என்பதே உண்மை அல்லவா? அதாவது, மனதின் அறிவாலேயே உலகம் காணப்படுகிறது.

நடந்தது ஒரே நிகழ்ச்சி என்றாலும் ஒருவருக்கு அதைப் பற்றி அறிவு இருக்கிறது, இன்னொருவருக்கு அறியாமை இருக்கிறது. அந்த மட்டும் சரிதானே. இப்போது அறிவு என்பதும் அறியாமை என்பதும் என்ன?

அறிவு, அறியாமை என்பவை, உலக இயல்பைப் பற்றி நமக்கு ஏற்படும் மெய், பொய் தோற்றங்களைப் பற்றிய அறிவேயாகும். இந்த இரட்டைகள் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாததோடு, ஒன்று தோன்றும்போது மற்றொன்று தோன்றாது. 

இருட்டை உணரும் போது வெளிச்சம் தெரியாது. வெளிச்சம் தெரியும் போது இருளை உணர முடியாது. அதனால் ஒன்றைத் தெரிகின்றது என்ற ஞானம் இருக்கும் போது, மற்றொன்றைத் தெரியவில்லை என்ற அஞ்ஞானமும் கூடவே இருக்கும்.

அறிவில் அறியாமை கலந்திருக்கிறது. அறியாமையில் அறிவு கலந்திருக்கிறது. அறியாமையில் அறிவின் கலப்பு இல்லையென்றால், தெரியவில்லை என்று (கூடச்) சொல்லமுடியாது. ஜடம்போல்தான் இருக்க வேண்டும். இந்தக் கலப்பினால் அது தூய்மையற்றுப் போயிற்று. தூய்மையற்றதை அறிவென்று கூறத்தகாது. 

அதனால் அறிவு என்கிற அறியாமையும், அறியவில்லை என்கிற அறியாமையும் இரண்டும் அறியாமைகளே. இவை இரண்டுக்கும் வைப்பு நிதியாக இருப்பது அகந்தை என்னும் மூலதனம்.

இந்த அறிவும் அறியாமையும் யாருக்கு என்றால் எனக்கு என்று பதில் கிடைக்கிறது. அப்படிச் சொல்பவனை யாரென்று தீர விசாரித்து, அதன் உதிப்புக்குக் காரணமாகிய அகந்தையை அறியத் தலைப்பட்டால் அது ஒரு பொருளே இல்லை என்பதை அறிவான். அகந்தை இருப்பு அற்றதால் இல்லாது ஒழிந்து விடுகிறது. அகந்தை அழிந்த இடத்தில் தனது உண்மை சொரூபம் பொலிவுடன் பிரகாசிக்கிறது. இப்படி உணர்கின்ற அறிவுதான் உண்மை அறிவு. 
***
அகந்தையை அறியத் தலைப்பட்டால் அது ஒரு பொருளே இல்லை ....

இப்படி உணர்கின்ற அறிவுதான் உண்மை அறிவு. 

மேற்கூறிய  கூற்று முரண்பாடாக தோன்றுகிறது. பொருளே இல்லை என்ற பின் உண்மையான அறிவு ஏது?  எப்படி புரிந்துக் கொள்வது?

தொல் பிதற்றல்:

தொல் என்ற பாத்திரத்தின் வழியாக வரும் பிதற்றல் என்றும் கொள்ளலாம். தொன்மையான பிதற்றல், அதாவது ஆதி முதல் இருந்து வரும் பிதற்றல் என்றும் கொள்ளலாம். 

அஃது எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். பிதற்றலைப் படிப்போம். அதாவது படிப்பதைப் பார்ப்போம். அதாவது படிப்பதைப் பார்ப்பதைப் பார்ப்போம். அதாவது படிப்பதைப் பார்ப்பதைப் பார்ப்பதை... போதும் இந்த பிதற்றல்! 

இதைக் கொண்டே இல்லாத அகந்தையாக இருப்பதும் அஃது 'இல்லை' என்ற உண்மையை உணர்வதும் அந்த உண்மை-உணர்வாகவே ஒளிர்வதும் ஒன்றே என்று விளங்கி விட்டால் - அதாவது அப்படி விளங்கிக் கொள்வதும் அதுவே -  மேற்கொண்டு படிக்க வேண்டிய அவசியமில்லை.

அகந்தை என்று தனியாகவும் அதை இருக்கிறது அல்லது இல்லை என்று உணர்கின்ற ஒன்று என்று தனியாகவும் இரண்டு இல்லை. ஆனால் இருப்பது போன்ற தோற்றம் உள்ளது. இத்தோற்றத்திற்குள் அதை அப்படித்தான் உணர முடியும். 

அத்வைதத்தைப் பேசப் போனாலே அது துவைதம் (பிளவு பட்டு விடும்) ஆகி விடும்.

உண்மை வாக்கு மனத்திற்கு எட்டாதது என்று படித்தாலும் புரிந்து கொண்டது போல் இருந்தாலும் மனம் அதை எப்படியாவது புரிந்து கொள்ள (grasp) முற்படுகிறது. அஃதே அதன் விளையாட்டு. அஃதே உண்மை.

எதையும் உணர்கிற அறிவுதான் உண்மை என்று சொல்லி விட்டு, அதைப் புரிந்து கொள்ளத் தவிக்கின்ற, தடுமாறுகின்ற, தள்ளாடுகின்ற மனமே உண்மை என்று எப்படிச் சொல்லலாம் என்ற கேள்வி எழும். 

http://tholthamiz.blogspot.com/2011/04/55.html பதிவிலிருந்து இரண்டு பத்திகள் இங்கு பொருத்தமானவை.

சிலர் எல்லாம் தனக்குத் தெரிந்து விட்டதாய் நினைக்கிறார்கள். சிலர் தனக்கு எதுவும் தெரியவில்லை என்கிறார்கள். சிலருக்கு அனுபவத்தின் தன்மை (மற்ற எல்லா அனுபவங்களைப் போன்றதே) புரிகிறது. சிலர் பயிற்சியால் யார் வேண்டுமென்றாலும் இவ்வனுபவத்தைப் பெறலாம் என்கிறார்கள். சிலர் பயிற்சி செய்ய யாரும் இல்லை என்று கேலி செய்கிறார்கள். இதில் எதுவும் உண்மையில்லை. எல்லாமே உண்மை தான். எல்லாம் பிரம்மம்!

சுருக்கமாகச் சொன்னால் பேசப்படும் கருத்து உண்மையா பொய்யா என்பது தான் விளையாட்டு (game, play). விளையாடுவது தான் (player, actor) பேச்சு (சிந்தனை, சொல், எழுத்து, செயல்...). ஆக, 'பேச்சு' தான் உண்மை என்கிறாயா... சரி தான், விளையாட்டு ஆரம்பித்து விட்டது! ['பேச்சு தான் (அ) நான் தான் (அ) அறிவுணர்வு தான் 'உண்மை' என்பதும் ஒரு கருத்தே. அதை நிரூபிக்கப் போனால் அதுவும் விளையாட்டு ஆகி விடுகிறது].

மேற்கொண்டு கேள்வி எழுலாம், எழும். அதற்குத் தகப் பலவகை பதில்கள் சொல்லப்படலாம், சொல்லப்படும். அஃதே இருப்பு. அதுதான் நடப்பு. அதைத் தாண்டி ஏதோ ஒன்று இருப்பதாகப் பேசப்படுவதும் அப்படி இருப்பதை நம்புவதும் அதை அடையத் துடிப்பதும்... அஃதே இயற்கை, இறைவன், பிரம்மம்... விளையாட்டில் மூழ்கினாலும் விளையாட்டை வேடிக்கைப் பார்த்தாலும் அஃதும் அதுவே.





No comments:

Post a Comment