Thursday 7 July 2022

கடவுள் நம்பிக்கை, கோவில் வழிபாடு...

2022-07-06

கடவுள் நம்பிக்கை, கோவில் வழிபாடு...


Dear Thol,

Good Morning. 

கடவுள் நம்பிக்கை, கோவில் வழிபாடு குறித்து தங்கள் கருத்து என்ன?


Good Morning Selva,

கடவுள் நம்பிக்கை, கோவில் வழிபாடு என்பன சடங்குகள். நாம் பல சடங்குகளைப் பின்பற்றுகிறோம். 'வாங்க, வணக்கம், நலமா?' என்று வரவேற்பதும் விசாரிப்பதும் ஒரு சடங்கே. ஆனால் சமுதாய விலங்காகிய நமக்கு அவசியமான சடங்கு.

அதே போன்றுதான். கடவுள் நம்பிக்கை, கோவில் வழிபாடு என்பனவும் சமுதாய அளவில் அவசியமான சடங்குகள். தனிப்பட்ட அளவில் வேறுபடலாம்.

கடவுள் நம்பிக்கை அற்றவர்கள், சிலைக்கு என்ன சக்தி இருக்கிறது, அது வெறும் கல், உலோகம் தானே என்று சொல்பவர்கள் கூட தலைவர்களுக்குப் படம் திறந்து வைத்து மாலை போடுகிறார்கள், சிலை வைத்து விழா எடுக்கிறார்கள், சிலைக்கு ஆண்டுதோறும் மாலை போடுகிறார்கள். ஏன்? அவர்களுக்கும் சடங்குகள் தேவைப்படுகின்றன. நாத்திக கம்யூனிஸ்டு தலைவர்களின் உடல்கள் (லெனின், மாவோ) பெட்டியில் வைத்துப் பாதுகாத்து மக்கள் பார்வைக்கு உள்ளன.

அண்ணா சமாதியில் அணையா விளக்கு எரிகிறது. பெரியாருக்கும் பெரியார் திடலில் சமாதி உள்ளது.

ஆன்மீகச் சொற்பொழிவில் இப்படிச் சொல்வார்கள்: கடவுள், கோவில் வழிபாடு, விளக்கேற்றுதல் போன்றவை, வேட்டியை இடுப்பில் நிறுத்தக் (மனதை ஒருமுகப்படுத்த, உண்மையை தினமும் நினைவுபடுத்திக் கொள்ள) கட்டப் பயன்படும் இடுப்புவார் (பெல்ட்). நடைமுறையில் பெல்ட்தான் இடுப்பில் (நடப்பில்) இருக்கிறது. வேட்டி அவிழ்ந்து விழுந்து விட்டது, பெரும்பாலோருக்கு.

['வாங்க' என்று வாயால் கூப்பிடும் சடங்கு மட்டுமே ஒருவரின் வரவேற்பை, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விடாது; அதுவே சான்றாக ஆகாது. வரவேற்பும் விசாரிப்பும் உதட்டிலிருந்து வருகிறதா (போலித்தனம்) ‍ உள்ளத்திலிருந்து வருகிறதா என்பது சொல்பவருக்கும் கேட்பவருக்கும் புரிந்து விடும்.]

இந்த அடிப்படையில் ஒருவருக்கு மனதை ஒருமுகப்படுத்த, உண்மையை அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ள எந்தச் சடங்கும் பயன்படலாம். அது கடவுள் நம்பிக்கை, கோவிலுக்குச் செல்லுதல் போன்றவையாகவும் இருக்கலாம். அவை அல்லாத வேறு செயல்களும் பயன்படலாம். அது வீட்டுத்தோட்டத்தைப் பராமரிப்பதாக இருக்கலாம். நடைப்பயிற்சியாக இருக்கலாம். தியானம் செய்வதாக இருக்கலாம். இதுபோல் எழுதுவதாகக் கூட இருக்காலாம். எதைச் செய்தாலும் அதை எப்படி எந்த மனநிலையில் செய்கிறோம் என்பதைப் பொறுத்து அது தவமாக மாறிவிடும். அப்போது தனியான சடங்குகள் தேவையில்லை. அதே சமயம் அவற்றை வெறுக்கவோ, எதிர்க்கவோ வேண்டிய அவசியமும் இல்லை. 

இப்படிச் சொல்வதால் அத்தகைய சடங்குகள் தனிமனித அளவிலும் சமுதாய அளவிலும் ஏற்படுத்தும் தீமைகளைப் புறக்கணித்து விட்டு இருப்பது பொறுப்பற்றதாகி விடும். அவற்றின் உண்மை நோக்கத்தை (நன்மைகளை) வலியுறுத்தி தீமைகளைத் தவிர்க்க, கட்டுப்படுத்த நம்மால் இயன்றதைக் குடும்பம், சமுதாய அளவில் செய்ய வேண்டும்.

வீட்டில் மின்சாரம், சமையல் வாயு போன்ற மிக ஆபத்தானவற்றை வைத்துப் பயன்படுத்துகிறோம். அவற்றின் தீமைகளைக் கட்டுப்படுத்த, தவிர்க்க முறையான பாதுகாப்புகளை மேற்கொள்கிறோம். கடவுள் நம்பிக்கை, கோவில் போன்றவையும் அவ்வாறே கையாளப் பட வேண்டும்.

One person's response on WhatsApp:

கடவுள் நம்பிக்கை அற்றவர்கள், சிலைக்கு என்ன சக்தி இருக்கிறது, அது வெறும் கல், உலோகம் தானே என்று சொல்பவர்கள் கூட தலைவர்களுக்குப் படம் திறந்து வைத்து மாலை போடுகிறார்கள், சிலை வைத்து விழா எடுக்கிறார்கள், சிலைக்கு ஆண்டுதோறும் மாலை போடுகிறார்கள். ஏன்? அவர்களுக்கும் சடங்குகள் தேவைப்படுகின்றன. நாத்திக கம்யூனிஸ்டு தலைவர்களின் உடல்கள் (லெனின், மாவோ) பெட்டியில் வைத்துப் பாதுகாத்து மக்கள் பார்வைக்கு உள்ளன"----- Irony at its height

Another person's response on WhatsApp:

நாத்திகம் என்றும் இவ்வுலகத்தை, ஏன் ஒரு பெரு சமூகத்தை ஆட்கொள்ள போவதில்லை,  
இல்லாத பாம்பை அடிப்பது போன்று இந்த பதிவு.

நாத்திகத்தில் பெரும்பாலும் வெறுப்பு இருந்தது இல்லை, நான் இறை மீது நம்பிக்கை கொண்டிருக்கும் போதும், என்றும் நாத்திகத்தை மட்டம் தட்டப்படுவதை  ஏற்பதில்லை.
நாத்திகம் கேள்வியின் வெளிபாடு, அக்கருமத்திற்க்கு எதிரான உணர்வு , நான் நாத்திகவாதிகளை நம்பிக்கையின் தீவினை கண்ட்ரோலர்ஆக பார்க்கிறேன் . 
அறிவும் சிந்தனை மிகுதியும், மனித நேயமும் அதிகரித்திருக்கும் சமூகத்தில் நாத்திக உணர்வு நிச்சயம் நிலைபெறும், ஏன் எனில் அவர்கள் அணைத்து மனிதர்களையும், அவர்களின் நம்பிக்கைகளோடு அரவணைக்க வேண்டும்.
வேற்றாளின் நேர்மாறான நம்பிக்கைகள் பெரும்பாலும் மதத்தோடு பினையப்பட்டு வெளிப்படும். 
மாறுபட்ட நம்பிக்கையை பொறுத்து அவரோடு தாய் பிள்ளை, சகோதரத்தவம் பாராட்ட முதல் படி உன் நம்பிக்கையை நீ சிறுமை படுத்தி பின் அவர் நம்பிக்கையும் கிண்டல் செய்து முதல் அடி எடுக்க வேண்டும்.
நாத்திகம் மதத்தின் நச்சுக்கு மாற்று மருந்து, அனால் அது உணவாக இங்கு ஒப்பிட்டு விமர்சிக்க படுகிறது.

இந்து மதத்தின் குறைகளையும், இஸ்லாமின் குறைகளையும் ஒப்பிடுவது போல் நாத்திகத்தின் குறைகளை மதத்தோடு ஒப்பிடுதல் கேலிக்குரியது 

Thol's response:

பதில் இருத்தவர்களுக்கு நன்றி!


நம் ஒவ்வொருக்கும் தெரிந்ததும் புரிந்ததும் மிக மிகக் குறைவே.


எனவே கருத்துப் பரிமாற்றங்கள் அவசியம். அதுவே நம்மைத் திருத்தும், வளப்படுத்தும்.


நண்பர் ஒருவரின் கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலே தவிர அது மதத்தையும் நாத்திகத்தையும் ஒப்பிடவில்லை. படிப்பவர்கள் அவரவர்கள் பார்வைக்கு (கருத்துக் கண்ணாடி) ஏற்பப் புரிந்து கொள்கிறோம். அப்படித்தான் இருக்க முடியும். யாரும் அதற்கு விதிவிலக்கல்லர்.


யாராலும் கருத்துக் கண்ணாடி இல்லாமல் பார்க்கவோ, படிக்கவோ, புரிந்து கொள்ளவோ இயலாது.


நாம் ஏற்கனவே தெரிந்த வைத்திருப்பவனற்றில் கட்டில் சிறையில் இருக்கிறோம். அவை நம் பார்வைக்குத் திரையாக அமைந்து விட்டன. அதை நம்மால் நீக்க முடியாது.


எடுத்துக்காட்டாக, ‘அ’ என்ற எழுத்தை ‘அ’ என்று அறியும் முன் எப்படிப் பார்த்தோமோ அதுபோல் நம்மால் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் பார்க்க முடியாது. Even before you realize you would have seen/read it as the letter ‘அ’. You cannot see it again as a mere curved line. இது நம்முடைய எல்லாப் புலன்களுக்கும் (பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், உணர்தல், சிந்தித்தல்) பொருந்தும்.


எனவே உரையாடைலை, கருத்துப் பகிர்வைத் தொடர்வதன் மூலம் தான் நம்மால் அந்தக் குறையைக் குறைக்கவும் கரைக்கவும் இயலும்.


Irony at its height  என்பதும் அவர் பார்வை. ஆனால் அப்படியான நாத்திகர் தாக்குதலும் (bashing atheists) அப்பதிலில் இல்லை. அப்பதிலில் சொல்லி இருப்பது மனிதர்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கும் சடங்குத் தேவையே. We are ritualistic animals. We need rituals in all spheres of life.


பதிலில் கடைசியில் மதங்களால் (கடவுள் நம்பிக்கை, கோவில்...) விளையும் தீமைகளைப் புறக்கணிக்க முடியாது என்று சொல்லப்பட்டிருப்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். நாத்திகத்தாலும் தீமைகள் விளைந்துள்ளன. அதே போல் இரண்டிலும் போற்றத்தக்கக் கூறுகளும் உள்ளன.


சிக்கல் ஆத்திக, நாத்திக கருத்துகளில் மட்டும் இல்லை. அதைப் பின்பற்றி நடக்கும் மனிதர்களின் இயல்புகள் அக்கருத்துகளை, அதன் அடிப்படையில் அமைந்த நிறுவனங்களை அதிகாரம், புகழ், சொத்து போட்டிகளால் கெடுத்துவிடுகிறது.


இவற்றைக் கொண்டு அவரவர்கள் மேற்கொண்டு தேடி, சிந்தித்து,ஆய்வு செய்து கொள்வது நல்லது. அதே சமயம் தொடர்ந்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதும் பயன் தரும், தன்முனைப்பான வாதமாக மாறாமல் அதில் ஈடுபடும் நாம் அனைவரும் விழிப்புடன் பார்த்துக் கொண்டால்.

No comments:

Post a Comment