Tuesday 26 July 2022

சிவம் யான்

சிவம் யான்

2022-07-15

தேவராஜ்

 

(இது எல்லாம் நான் இல்லை என்று சொல்லும் ஆதிசங்கர்.
‘யான்’ - சிதானந்த ரூபச் சிவம் யான், சிவம் யான் என்பதை
எப்படி புரிந்துக் கொள்வது?)
 
நிர்வாண ஷட்கம் / ஆத்ம ஷட்கம் (ஸ்ரீ சங்கரர்) - தமிழில்
 
உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவனும் ‘யான்’ என்பதை இயல்பிலேயே
அனுபவித்து உணர்கிறது என்றாலும் அதன் உண்மை
ஸ்வரூபத்தை அறிவதில்லை. உடல், மனம், அறிவு என்று
ஒவ்வொன்றாக அதன்மீது படிந்துள்ள அடுக்குகளையே யான்
என்று கருதுகிறது. அவை யாதொன்றும் ஆத்மாவாகாது,
அவற்றுடன் தொடர்புடையது போல் தோன்றினாலும்
அவற்றிலிருந்தும் வேறுபட்ட உணர்வு நிலையே
(சைதன்யம்) ஆத்மா. 
 
மனம் புத்தி தன்னுணர்வு சித்தம் அல்ல யான்
நா செவிகள் அல்ல நாசி விழிகள் அல்ல 
விண்ணும் மண்ணுமல்ல ஒளியும் காற்றுமல்ல 
சிதானந்த ரூபச் சிவம் யான் சிவம் யான்.
 
மூச்சல்ல யான் ஐந்து உயிர்க்காற்றுகளல்ல
ஏழு தாதுக்களல்ல  ஐந்து கோசங்களல்ல
வாக்கல்ல கரங்களும் கால்களுமல்ல
குதமும் குறியுமல்ல
சிதானந்த ரூபச் சிவம் யான் சிவம் யான்.
 
வெறுப்பில்லை எனக்கு விருப்பில்லை 
ஆசையில்லை எனக்கு மோகமில்லை
செருக்குமில்லை எனக்கு பொறாமையுமில்லை
அறமில்லை பொருளில்லை இன்பமில்லை வீடுமில்லை 
சிதானந்த ரூபச் சிவம் யான் சிவம் யான்.
 
புண்ணியமில்லை பாவமில்லை சுகமில்லை துக்கமில்லை 
மந்திரமில்லை தலமில்லை
வேதங்களில்லை வேள்விகளில்லை
துய்ப்பல்ல யான் துய்ப்போனும் துய்பொருளும் அல்ல
சிதானந்த ரூபச் சிவம் யான் சிவம் யான்.
 
மரணபயமில்லை எனக்கு சாதிபேதமில்லை 
தந்தையில்லை எனக்கு தாயில்லை 
பிறப்புமில்லை உறவில்லை நட்பில்லை
குருவில்லை சீடனுமில்லை
சிதானந்த ரூபச் சிவம் யான் சிவம் யான்.
 
விகற்பமற்றோன் யான் உருவற்றோன்
எங்கெங்குமாய் எல்லாப் புலன்களிலுமான 
வியாபகத்தினால் எனது தொடர்பற்றது 
என ஒன்றும் இல்லை முக்தியுமில்லை பந்தமுமில்லை
சிதானந்த ரூபச் சிவம் யான் சிவம் யான்.
 

========================

தொல்:


இது போல் ஆதி சங்கரர் கூறியுள்ளதையும் சேர்த்துச் சிந்தித்துப்
பார்க்க வேண்டும். பிரும்ம மயமாக‌, அதாவது ஆத்ம
ஸ்வரூபமாக உலகை நோக்குங்கால் அது நிஜமே என்று
சொல்லியிருக்கிறாரே.
 
பிரும்ம மயமாக உலகைப் பார்த்தால் என்றால் என்ன?
'நான்' என்பதைத் தவிர வேறு ஏதுவும் இல்லை என்று சொல்லி
யுள்ள போது, பிரும்மம், உலகம், நான் என்று பல உள்ளனவா?
திரைப்படத்தைப் பார்ப்பது போல் உலகம் நமக்குத் தெரிய
வேண்டுமா? மேலே ரமணர் 'காண்பவரே திரையாக
மிஞ்சும் போது...' என்று சொல்லியிருப்பதைக் கவனிக்கவும்.
 
இவை ஒரே உண்மையைப் பல கோணங்களில் சொல்வதாகும்.
அவை எல்லாம் ஒன்றையே சுட்டிக் காட்டுபவை. எதைச்
சுட்டிக் காட்டுகின்றன? எது சுட்டிக் காட்டுகிறதோ, எது
சுட்டிக் காட்டப்படுவதைப் பார்க்கிறதோ அதை!
 
***
நானும் இருப்பும் வேறல்ல. தனித்த-நான் என்பது இருப்பின்
தோற்றமே / இருப்புக்குள் தோற்றமே. அவ்விருப்பை எந்தப்
பெயர் சொல்லி அழைத்தாலும் அவை அனைத்தும் இருப்பின்
தோற்றமே. அப்படி எந்த ஒரு மாறாத நிரந்தரமான சத்தியம்
(இருப்பு) எதுவும் இல்லை என்று மறுத்தாலும் அதுவும்
இருப்பின் தோற்றமே.
 
எடுத்துக்காட்டாக:
 
அவன்: எல்லாம் அவரவர் தலைவிதிப் படிதான் நடக்கும்.
 
இவன்: எனக்குத் தலைவிதி என்பதில் நம்பிக்கை இல்லை.
 
அவன்: அதுதான் உன் தலைவிதி. நீ தலைவிதியை நம்பாதது உன்
தலைவிதிப் படி தான் நடக்கிறது.
 
தலைவிதி என்பதற்குப் பதிலாக 'இறைவன் செயல்' என்று
போட்டுக் கொள்ளலாம். 'கடவுள் நம்பிக்கை' என்று போட்டுக்
கொள்ளலாம்.
 
https://tholthamiz.blogspot.com/2011/08/blog-post_06.html - கடவுள் திறந்த மனம்
 
இவை வட்டவாதங்கள். இவற்றைக் கேலி செய்யலாம். ஏனெனில்
நிரூபிக்க முடியாது. நிரூபிக்க எதுவும் இல்லை. ஆனால்
அவ்வுண்மையை, அவ்வுண்மையும் தானும் வேறன்று என்று
உணரலாம். உணர்ந்த உண்மையைச் சுட்டிக் காட்டலாம்.
ஆனால் விளக்கிச் சொல்லி உணர்த்தி விட முடியாது.
 
உண்மையை உணர்ந்தது என்பதும் ஒரு தோற்றமே.
உண்மையை உணர இயலவில்லையே என்பதும் ஒரு
தோற்றமே. இரண்டிற்கும் ஒரு கோணத்தில் எந்தவித‌
வேறுபாடோ, உயர்வு / தாழ்வோ, அஞ்ஞானம் / மெஞ்ஞானம்
என்பதோ இல்லை. மறு கோணத்தில் உண்டு. அவ்விரண்டு
கோணங்களும் அதே இருப்பின், இருப்புக்குள் தோற்றங்களே.
 
***
 
ஆத்ம ஷட்கமத்தில் ஆதி சங்கரர், நான் இது அல்ல, அது
அல்ல, இது இல்லை, அது இல்லை... என்று சொல்லியிருப்பதை
மட்டும் எடுத்துக் கொண்டால் அஃது ஒரு வகையில், 'எங்கப்பன்
குதிருக்குள் இல்லை' என்று சொல்வது போலாகும்.
 
இதைப் படிக்கின்றவரின் நிலையில் (இடம், காலம்)
அப்படியான ஆதி சங்கரரே இல்லை என்று ஆகும். அஃதே
உண்மையான பொருள்.
 
"நிகழ்காலத்தைப் பற்றிக் கொண்டுதான் இறந்த காலமும்
எதிர்காலமும் நிற்கின்றன. இறந்த காலத்தில் நிகழ்ந்த போதும்,
எதிர் காலத்தில் நிகழப் போகும் சமயமும் நடப்பவைகள்
அந்தந்த நிகழ்காலத்திலேயே நடக்கின்றன. ஆகையால்
நிகழ்காலம் என்ற ஒன்றே மூன்று காலங்கள் ஆகின்றன."
 
மேற்கண்டது முந்தைய மின்னஞ்சலில் தேவராஜ் பகிர்ந்து
கொண்டது. ஆனால் இறந்த காலமும் எதிர்காலமும் எங்கே
இருக்கின்றன? அவை இரண்டும் இக்கணத்தில் (நிகழ்
காலத்தில்) தோன்றுபவையே (appear). எனவே முக்காலம்
என்பதே இக்கணத்தின் தோற்றம். 
 
காலம் என்பது பொய் என்று ரமணர் சொல்லியுள்ளார்.
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சொல்லியுள்ளார். ஆல்பர்ட்
ஐன்ஸ்டைன் சொல்லியுள்ளார். இன்னும் பலர்
சொல்லியுள்ளனர். நாம் நினைத்துக் கொண்டு இருப்பது
போல், கடந்த நிகழ் எதிர் கால ஓட்டம்  இல்லை.
 
http://tholthamiz.blogspot.com/2011/03/blog-post_3380.html - உணர உள்ளது ஒருகணமே
 
அவர்கள் சொல்லியுள்ளதைப் படிக்கும் நம் நிலை, பார்வையில்
அவர்கள் சொல்லியுள்ளதன் படி, அவர்கள் அப்படிச் சொல்ல
வில்லை, அவர்கள் இருந்ததும் வாழ்ந்ததும் இல்லை என்று
ஆகும். அவர்களும், அவர்கள் அப்படி சொன்னதும்
இக்கணத்தில் தோன்றும் ஒரே தோற்றத்தின் உள்ளடக்கமே.
 
'முக்காலமும் உணர்ந்த ஞானிகள்...' என்று சொல்வதன் பொருள்
அவர்களுக்கு இத்தோற்றத்திற்குள் நடந்ததாகத் தோன்றுபவை,
நடக்க இருப்பதாகத் தோன்றுபவை எல்லாம் அறிந்ததாகப்
பொருளன்று. அவர்கள் முக்காலத்தின் தோற்றத் தன்மையை,
தோற்றத்திற்கு அப்பால் அவற்றிற்கு தனியாக இருப்பு இல்லை
என்ற உண்மையை உணர்ந்தவர்கள் என்று பொருள் கொள்ள
வேண்டும்.
 
இறந்த காலமும் எதிர் காலமும் இக்கணத்தின் தோற்றமே.
அதாவது திரைப்படத்தில், ஓவியத்தில் நாம் பார்க்கும்
முப்பரிமாண (three dimensional) ஆழம் (perception of depth) போன்றதே.
 
கீழ்க்கண்ட கனசதுரத்தின் (cube) ஆழம் என்பது படத்தில் இல்லை.
ஏனெனில் படம் வரைப்பட்டிருக்கும் திரை / தாள்  நீளம், அகலம்
(length and width) என்ற இரண்டு பரிமாணங்களை மட்டுமே
கொண்டுள்ளது. திரைக்கு / தாளுக்கு ஆழம் (depth) என்ற
பரிமாணம் இல்லை. 




ஆனால் கனசதுரத்தின் ஆழத்தை நாம் கற்பனை செய்து
கொள்கிறோம். இதே போல்தான் நாம் இக்கணத்தில் இறந்த
கால ஆழத்தையும் எதிர் கால ஆழத்தையும் கற்பனை செய்து
கொள்கிறோம். 
 
இறந்த காலம் பற்றிய எண்ணங்களை நினைவுகள் (memories)
என்றும் எதிர் காலத்தைப் பற்றிய எண்ணங்களை
எதிர்பார்ப்புகள் (expectations), கற்பனைகள் (imaginations) என்றும்
சொல்லிக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் எல்லாம்
இக்கணத்தில் தோன்றும் எண்ணங்களே (thoughts).
 
"நான் எழுந்தால் சகலமும் எழும்.
நான் அடங்கினால் சகலமும் அடங்கும்" - ரமணர்
(நான் = தான் என்ற அறிவுணர்வு)
 
ரமணர் சொல்லியுள்ள 'சகலத்தில்' காலம், இடம், பிரபஞ்சம்,
சூரியன், சந்திரன், உலகம், ஜீவராசிகள், தாவரங்கள், ரமணர்,
ஆதி சங்கரர், காந்தி, கோட்சே, உலகப் போர்கள், அறிவியல்
கண்டு பிடிப்புகள், பழந்தமிழர் சிறப்பு, பண்பாடு,
இலக்கியங்கள், ஆரியப் பார்ப்பன ஆதிக்கம், பெரியார்,
நீயும் நானும் பிறந்து வளர்ந்து படித்து ஓசூரில் வேலை
செய்து வெளிநாட்டில் வாழ்ந்தது, இம்மின்னஞ்சலை சில
மணித்துளிகளுக்கு முன் நீ படிக்க ஆரம்பித்தாய்... என
எல்லாம் அடங்கும். அனைத்தும் இக்கணத்தில் தோன்றுவ
தல்லாமல் வேறு எங்கும் இல்லை.
 
ஒரு கதைப் புத்தகத்தில் ஒரு கதைப் பாத்திரம் பிறந்து,
வளர்ந்து, படித்து, திருமணம் செய்து, பிள்ளைகளைப்
பெற்று வளர்த்து அவர்களுக்குத் திருமணம் செய்து,
பேரப்பிள்ளைகளுடன் விளையாடி நோய்வாய்ப் பட்டு
இறந்தது வரை சொல்லப்பட்டு இருக்கிறது. அப்புத்தகம்
முழுவதும் இக்கணம் என்று வைத்துக் கொண்டால்
அக்கணத்திற்குள் தான் பிறப்பு முதல் இறப்பு
வரையிலான கால ஓட்டம் உள்ளது.
 
கதைப் பாத்திரம் பிறந்ததைச் சொல்லும் 10 ஆம்
பக்கத்தை, நாம் 11 ஆம் பக்கம் படிக்கும் போது இறந்த
காலம் என்று நினைத்துக் கொள்கிறோம். 500 வது
பக்கத்தில் அவர் இறந்து போவார் என்பதை எதிர்காலம்
என்று நினைத்துக் கொள்கிறோம்.
 
இதற்கும் நடைமுறையில் நம் பிறப்பு (கடந்த காலம்)
இறப்புக்கும் (எதிர் காலம்) எந்த வேறுபாடும் இல்லை.
 
காலம், இடம், உலகம், நம் உடல், மனம்... எல்லாம் நாம்
நினைப்பது போல் இல்லை. ஆனால் அவை தோற்றங்கள்
என்ற அளவில் நடப்பு உண்மை. கனசதுரப் படத்தின்
ஆழத்தை, அது வெறும் தோற்றமே, நம் கற்பனையே
என்று தெரிந்திருந்தாலும், நாம் நடைமுறை, பயனுள்ள‌
உண்மை என்று எடுத்துக் கொள்கிறோம். 
 
அதே போல் தான், யான் என்பது சிவரூபம் (அறிவுணர்வு,
பிரும்மம்...) என்று தெரிந்து கொண்டே, தனித்தனியாக
இருப்பது போல் தோற்றமளிப்பவனவற்றை உண்மை
என்று நம்பவும் செய்கிறோம்.
 
தனித்தனியாக இருப்பது போல் தோற்றமளிப்
பவனவற்றை உண்மை என்று நம்பிக் கொண்டே நம்
சுய இருப்பு இவை அனைத்துக்கும் ஆதாரமான
அறிவுணர்வே, அதுவே நாம் என்றும் புரிந்து கொள்கிறோம்.
 
இத்தோற்றத்திற்குள்ளேயே நம் ஒவ்வொருக்கும்
பெற்றோருக்கு மகன், மனைவிக்குக் கணவன்,
பிள்ளைகளுக்குத் தந்தை, அண்ணனுக்குத் தம்பி,
தம்பிக்கு அண்ணன், நண்பனுக்கு நண்பன், பக்கத்து
வீட்டுக்காரனுக்குப் பக்கத்து வீட்டுக்காரன், தமிழன்,
இந்தியன், ஆசியன், மனிதன், பாலூட்டி...பல
பாத்திரங்கள் உள்ளன். இவை அனைத்தும் ஒரே
சமயத்தில் உள்ளன.
 
இதே லாஜிக்கில் சற்று தள்ளி நின்று (சங்கரர் சொல்லும்
நான் இது அல்ல, அது அல்ல, இது இல்லை, அது இல்லை...)
பார்த்தால் தூய‌ அறிவுணர்வாகிய நாம் தோன்றுகின்ற
எல்லாவுமாக, எல்லாவற்றிற்கும் ஆதாரமாக
இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். அந்தப் புரிதல் தனித்த
ஒருவரின் (personal understanding) புரிதல் இல்லை. அது
தனித்த ஒருவரின் தோற்றத்தன்மையை ஊடுருவிப்
பார்க்கும் பொதுப்புரிதல் (impersonal understanding).
 
அதனால் தான் ஒருவர் தான் ஞானமடைந்து விட்டதாகவோ,
உண்மையைப் புரிந்து கொண்டு விட்டதாகவோ சொல்வதே
அக முரண்பாடானது. ஏனெனில் அப்படி ஒரு தனித்த
'நான்' / 'தான்' இல்லை என்பதே அந்த ஞானம், புரிதல். அஃது
எப்படி தனித்த ஒருவருக்கு வர முடியும்? ஆனால்,
இத்தோற்றத்திற்குள் அப்படிப் பேசப்படுவதும்
சொல்லப்படுவதும் நடக்கும். அத்தோற்ற அளவில்
அஃது ஒரு நடைமுறை, பயனுள்ள உண்மை.

No comments:

Post a Comment