2022-02-18
மனித வாழ்வில் மறுபிறப்பு சாத்தியமா? அறிவியல் சொல்வது என்ன? - பகிர்வுகள்
https://www.bbc.com/tamil/science-60381488
மனித வாழ்வில் மறுபிறப்பு சாத்தியமா? அறிவியல் சொல்வது என்ன?
பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
15 பிப்ரவரி 2022, 02:55 GMT
2022-02-16
தேவராஜ்:
Disclaimer – (இது நான் படித்ததில் இருந்து பகிர்கிறேன்)
இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
புக்குப் பிறவாமல் போம்திசை நாடுமின்
எக்காலத்திவுடல் வந்து எமக்கானதென்று
அக்காலம் உன்ன அருள் பெறலாமே
என்கிறார் திருமூலர்.
மறுபிறவி உண்டா
தனி நபர்கள் என்று எதுவும் உண்மையில் கிடையாது என்று ஞானியர் அனைவரும் மிகத் தெளிவாகத் தொடர்ந்து சொல்லிவந்திருக்கிறார்கள். ஒரு ஞானியிடம் ஒருவர், `மறுபிறவி உண்டா?` என்று கேட்டதற்கு அந்த ஞானி, `யாருக்கு?` என்று திருப்பிக் கேட்டிருக்கிறார். ஆனால் இந்தக் கருத்தை நாம் முக்கியத்துவம் கொடுத்துப் பார்ப்பதில்லை. ஆனால் அதே சமயம் ஏதோ ஒன்று மீண்டும் மீண்டும் தொடர்ந்து பிறவியெடுக்கிறது என்றும் ஞானியர் சொல்லியிருக்கிறார்கள்.
தனி நபர்கள் கிடையாது, ஆனால் ஏதோ ஒன்று பிறவியெடுக்கிறது, என்றால் இதை எவ்வாறு புரிந்துகொள்வது? இந்த இரண்டு கருத்துக்களும் ஒன்றையொன்று மறுப்பதைப் போலிருக்கின்றனவே! பிரபஞ்சம் (The universe) பற்றியும் வாழ்வனுபவத்தைப் (Life experience) பற்றியும் நாம் கொண்டுள்ள அடிப்படைக் கருத்துக்களையே கேள்விக்குட்படுத்தியாக வேண்டும். அப்போதுதான் இந்த விஷயங்களைப் பற்றிய தெளிவு வரமுடியும்.
முதலில் நாம் யாரும் இல்லாவிட்டாலும் கூடப் பிரபஞ்சம் இருக்கும் என்று நம்புகிறோம். பிரபஞ்சமோ அல்லது ஒரு சிறு பொருளோ கூட யாருடைய பிரக்ஞையிலோதான் ( (Awareness) இருக்க முடியும். யாருமே பார்க்காத பொருள் என்று எதுவும் இல்லை. ஒரு கல் இருக்கிறது என்றால் அது யாரோ ஒருவருடைய உணர்வுநிலையில் (Consciousness) ஒரு கணமாவது இருக்கவேண்டும். அப்போதுதான் அதற்கு ‘இருப்பு’ (Existence) உண்டு. காலமும் இடமும் பிரக்ஞையில்தான் இருக்கின்றன. காலமும் இடமும் இல்லாமல் இருப்பு கிடையாது; பிரபஞ்சம் கிடையாது.
நான் உணர்வு
மனிதஜீவனுக்கும் பிரபஞ்சத்துக்கும் மூன்று தளங்கள் இருப்பதாகப் பார்க்கலாம்: உடல், மனம், உயிருணர்வு இம்மூன்றும்தான். மனித உடல் - சொல்லப்போனால் அனைத்து ஜீவன்களின் உடல்களும் - பௌதிகப் பிரபஞ்சத்தின் அங்கம்தான். அனைத்து மனங்களும் பிரபஞ்ச மனத்தின் அம்சங்களே. மனிதனுக்குச் சுயவுணர்வு இருக்கிறது. அதனால் மனம் இருக்கிறது. மிருகங்களுக்கும் மற்ற ஜந்துக்களுக்கும் மனம் இயல்பூக்கங்களாக(Instincts)ச் செயல்படுகிறது. மனிதனிடம் உயிருணர்வு, அறிவுணர்வாக(Awareness) இயங்குகிறது.
தனிமனித ஜீவனுக்குள் மனமும் ‘நான்’ என்ற சுயவுணர்வும் இருப்பது போலவே, முழுப் பிரபஞ்சத்துக்கும் பௌதிகப் பிரபஞ்சம் (The physical universe) உடலாக இருக்கிறது. பிரபஞ்சத்துக்கும் நினைவு இருக்கிறது. ஒரு மனிதக் குழந்தை பிறக்கும்போதே மனிதனாக இயங்குவதற்கான நினைவுக்கூறுகளுடன்தான் பிறக்கிறது. பிரபஞ்ச நினைவு பிரபஞ்சப் பெருமனத்தில் இருக்கிறது. நமக்கு ‘நான்’ என்னும் உயிருணர்வு இருப்பது போல் பிரபஞ்சத்துக்கு ‘நான்’ உணர்வு இருக்கிறது. பிரபஞ்சப் பிரக்ஞையாக அது இருந்து இயங்குகிறது.
பிரபஞ்சம் ஒவ்வொரு கணமும் நம்மைப் போலவே அனுபவம் கொள்கிறது. அதன் பெருமனத்தில் அனுபவம் நினைவாகப் பதிவு கொள்கிறது. பிரபஞ்ச ‘நான்’, பரிணாம இயக்கத்துக்கு வெளியே காலம்-இடமற்று நிலைத்திருந்தாலும் பிரபஞ்ச மனமும் பௌதிகப் பிரபஞ்சமும் பரிணாம இயக்கத்தினுள்தான் அடங்குகின்றன. பெருமனம் மெல்ல தனக்குத் தானே விழித்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. தன்னை ‘நான்’ என்று அது உணரத் தொடங்கியிருக்கிறது.
இதுதான் பரிணாம வளர்ச்சி. தனிமனித மனங்களில் படிவங்கள்(Patterns) இருப்பது போலவே பெருமனத்திலும் இருக்கின்றன. உண்மையில் சொல்லப் போனால் பெருமனத்தின் படிவங்களைத்தான் தனிமனிதப் பிரக்ஞையில் நாம் அனுபவம் கொள்கிறோம். அதாவது பெருமனத்தின் படிவங்கள், தனி மனிதர்கள் என்ற உருவத்தில் வெளிப்படுகின்றன.
-
ஒரு மனிதன் இறந்த பிறகு அவனுடைய பிரக்ஞை நிலை என்ன ஆகிறது? அவன் இருக்கும்போது அவனது ஆசைகள், பயங்கள், துயரங்கள், வேதனை, கோபம், பேராசை, பொறாமை என்ற உள்ளடக்கத்தைக் கொண்டு அவனது உணர்வுநிலை இயங்குகிறது.
அவனது உடல் இறந்தபிறகு அந்த உள்ளடக்கம் - படிவங்கள் - பெருமனத்தின் காலநதியில் போய்ச் சேர்ந்துவிடுகின்றன. இது ஒரு மாபெரும் நதி. மனித உணர்வுநிலையில் ஓடிக்கொண்டிருக்கும் பிம்பங்களின் துயரங்களால் ஆன நதி, காலநதி. இந்த நதி இல்லையேல் அனுபவம் இல்லை; காலம் இல்லை.
இந்த நதியிலிருந்துதான் நாம் நம் உலக அனுபவத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். மனித வாழ்க்கையைப் போர்க்களமாக்கி வைத்திருக்கும் நாடு, மதம், சாதி, மொழி போன்ற மற்ற பல பிரிவுகள் அனைத்தும் இந்த நதியிலிருந்துதான் எழுகின்றன.
இந்த நதி மனித மனத்தின் நனவிலி(Unconscious)யின் இருளில் இயங்கிகொண்டிருக்கும் வரையில் துயரமும் வேதனையும் மனித வாழ்க்கையின் சாராம்சமாக இருப்பதைத் தவிர்க்க வழியில்லை. இதுதான் புத்தரின் நான்கு மேன்மையான உண்மைகளில் முதலாவது: மனித வாழ்க்கை துன்பமும் வேதனையும் நிறைந்தது.
பிறக்கும் புதிய உடல்கள்
இயற்கையின் முறைப்பாட்டில் புதிய உடல்கள் பிறந்தவண்ணம் இருக்கின்றன. அந்த நதியின் படிவங்கள் மீண்டும் அந்த உடல்களின் வழியாக வெளிப்படுகின்றன. வாழ்க்கை அனுபவத்தில் அந்தப் படிவங்கள் சுயவுணர்வு கொண்டு தன்னைத் தான் அறிந்துகொள்ளும் முறைப்பாட்டில் பங்குகொள்கின்றன. சுயவிழிப்பு ஏற்படும்போது, தன் சாரத்தில் தான் பிரபஞ்ச ரீதியிலான உணர்வுநிலை என்று உணரும்போது அந்தப் படிவங்கள் தம் தனியிருப்பை விடுத்துப் பெருமனத்துடன் ஐக்கியமாகிவிடுகின்றன.
உடல்கொண்டு உயிர்வாழும்போது தன்னை ஒரு தனி மனிதனாக - ஒரு ஆளாக - நினைத்துக்கொள்கிறோம். அந்த ‘ஆள்’ ஒரு வெறும் மனப்படிவம். அதற்குத் தனி இருப்பு கிடையாது. அந்த ‘ஆள்’ இறந்து மீண்டும் பிறப்பது இல்லை. உடல் பிறந்து, இருந்து இறக்கிறது.
அது இயற்கை முறைப்பாடு. ‘நான்’ ஒரு தனி ஆள் என்று தன்னை நினைத்துக்கொள்ளும் நபர் யாரும் இல்லை. உதாரணமாக, நாம் ஒரு கார் வாங்குவதாக வைத்துக்கொள்வோம். சில வருடங்கள் கழித்து அந்தக் கார் மிகவும் பழையதாகிப்போகிறது. அப்போது ஒரு புதிய கார் வாங்குகிறோம். அந்தப் புதிய கார், பழைய காரின் மறுபிறவியா? அதுபோலத்தான் இதுவும்.
ஒரு ஆள் இல்லை
உடலின் மரணத்துடன் மனம் அழிகிறதா? மனத்தில் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. அந்தக் குறிப்பிட்ட உடலுடன் ஒரு தனி நபராக நான் இந்த உலகத்தில் வாழ்வதற்குத் தேவையான விவரங்கள் மனஅமைப்பில் சேகரிக்கப்பட்டிருக்கும் அல்லவா; உடலின் மரணத்துடன் அதுதான் அழிந்து போகிறது.
ஆனால் பெருமனத்தின் அம்சமான மனப் படிவம் தன் பரிணாமத்தைத் தொடர்கிறது. அது ஒரு ஆள் இல்லை. உடலுக்கும் மனத்துக்கும் பின்னால் இருந்து இயங்கும் ‘நானுக்கு’ பிறப்புமில்லை இறப்புமில்லை. ஏனெனில் அது கால ஓட்டத்தில் கலந்துகொள்வதில்லை. வெறும் சாட்சிபூதமாக மட்டுமே அது நடப்பது அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறது.
என்னை ஒரு தனி ‘ஆள்’ என்று நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். என் உடல், என் மனம் என்று நினைத்துக்கொள்கிறேன். என் குடும்பம், என் உறவினர் என்று கருதிக் கொள்கிறேன். இந்த உடலை எப்போது ‘நான்’ என்று நான் சுவீகரித்தேன் என்று நான் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இந்தப் பிறவியின் மர்மம் துலங்கும். பிறப்பு-இருப்பு-இறப்பு என்னும் முறைப்பாடு யாருக்கு ஏற்படுகிறது என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.
இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
புக்குப் பிறவாமல் போம்திசை நாடுமின்
எக்காலத்திவுடல் வந்து எமக்கானதென்று
அக்காலம் உன்ன அருள் பெறலாமே
என்கிறார் திருமூலர்.
பிரபஞ்சப் பார்வையில் தனிமனிதர்கள் இல்லை. நான் ஒரு தனிமனிதன் என்று மனம் நினைத்துக்கொள்வதற்கு இப்போது இயங்கிக்கொண்டிருக்கும் அரைகுறை விழிப்புநிலைதான் காரணம். துன்பங்கள் அனைத்தும் இந்த நிலையிலிருந்துதான் உண்டாகின்றன.
மிருகங்கள் வெறும் இயல் பூக்கத்தில் மையம் கொண்டு வாழ்கின்றன. இன்றைய மனிதன் முழுவிழிப்பில்லாமல் இருந்து அவதிக்குள்ளாகிறான். இது ஒரு முடிவான நிலை இல்லை. தூக்கத்திலிருந்து விழிப்பை அடையும் பயணத்தின் பாதி வழியில் இருக்கிறோம். முழுவிழிப்பு அடைந்ததும் தெரியவரும் பேருண்மை இதுதான்: எல்லையேதுமற்ற பிரபஞ்சம் முழுவதிலும் உருவமும் உள்ளீடும் இல்லாத ஒரே பிரக்ஞைதான் - அறிவுணர்வு (Awareness) - இருக்கிறது.
அதுதான் அனைத்து உடல்களிலும் ‘நான்’ என்று தன்னை உணர்ந்துகொள்கிறது. அந்த ‘நான்’ உணர்வை தன் இறந்த கால அனுபவத்தின் வரையறைக்குட்பட்ட மனித மனம், தன் தனிச்சுயம் என்று தவறாக நினைத்துக்கொண்டு விடுகிறது. இந்தக் குழப்பத்தினால் மனித உலகம் துண்டுதுண்டாகப் பிரிந்து உடைந்துபோயிருக்கிறது. மனித வாழ்க்கை அல்லலும் துன்பமும் நிறைந்து இருக்கிறது.
இந்த நிலையிலிருந்து கட்டம் கட்டமாக மனித மனம் விழித்தெழ வேண்டும். தனக்குத் தன்னைத் தெரியவில்லை என்பது தெரியும்போதுதான் தான் யார் என்ற கேள்வியே மனத்துக்கு எழ முடியும். இப்போது, `எனக்கு எல்லாம் தெரியும்` என்ற அறியாமையில் ஆழ்ந்திருக்கும் மனம், துன்பத்தின் வெப்பம் தாங்காமல் விழித்துக்கொள்ளும். அப்போதுதான் துன்பம் நிறைந்திருக்கும் இந்த உலகை அனுபவம் கொண்டிருக்கும் ‘நான்’ யார் என்ற கேள்வியை மனம் தனக்குள் தானே கேட்டுக் கொள்ளும்.
தனக்குள் தானே உள்ளே நுழைந்து ஆராயும். இருளில் இருந்து கரையற்ற ஒளிவெள்ளமாக இருக்கும் பிரபஞ்சப் பிரக்ஞையை அப்போது அது அடையும்.
2022-02-17
தொல்:
மேலே உள்ள விளக்கம் (திருமூலர் பாடலுடன்) ஒரு பார்வை. இதையே உண்மை என்று பற்றிக் கொண்டால் அதுவும் துயரத்திற்கே இட்டுச் செல்லும் என்பதே நான் புரிந்து கொண்ட அத்வைதம். அதனால் துவைதம் என்ற கருத்துச் சிறையிலிருந்து அத்வைதம் என்ற கருத்துச் சிறைக்கு மாறுவது (பற்றிக் கொண்டு அதுவே உண்மை என்று பிடிவாதம் பிடிப்பது) விடுதலை ஆகாது.
அத்வைதத்தைப் பற்றிப் பேசும் போதும் எழுதும் போதும் பொறுப்புணர்ச்சியுடன் அதை விளக்குவது (வாதிடுவது உள்பட) அக்கருத்து அடிமைத்தனத்திற்கு இட்டுச் செல்லக் கூடாது. அத்வைதத்தை நடைமுறை வாழ்க்கையில் கடை பிடிக்க முடியாது. அதே சமயம் அது குறித்த தெளிவு, உறுதி நடைமுறை வாழ்க்கையைப் பாதிக்காது மாற்றாது என்பதும் தவறு.
பற்றற்ற நிலை என்பது பற்றற்ற நிலைக்கும் பொருந்தும். அதை (ஒரு பழத்தின் சுவையை விளக்குவது போல்) விளக்க விளக்கக் குழப்பம் வரும். ஆனால் வாழ்ந்து காட்ட (பழத்தை உண்டு சுவையை உணருவது போல்) முடியும். மற்றவர்களைச் சுவைத்துப் பார்க்கத் தூண்ட அதுவே சிறந்த வழி.
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன் (திருக்குறள்: 629)
இக்குறளுக்குப் பக்கம் பக்கமாக விளக்கம் சொல்லிப் புரிய வைப்பதை விட வாழ்ந்து காட்டுவதே பயன் தரும்; இது மற்ற குறள்களுக்கும் பொருந்தும்.
We should be freely able to move between perspectives (conceptual framework) as fit for the context. We should not forget that the dark side of this is opportunistic hypocrisy. The difference is in the aim - for selfish or for overall harmony.
நம்மால் சுதந்திரமாக சுலபமாக பலவிதமான கருத்துப் பார்வைகளை அந்தந்த தறுவாய்க்கேற்பப் பயன்படுத்திக் கொள்ள முடிவதே பற்றற்ற தன்மை. இதன் இருண்ட முகம் சந்தர்ப்பவாதப் போலித்தனம் என்பதை மறந்து விடக் கூடாது. வேறுபாடு நோக்கத்தில் (எதற்காக இந்தப் பற்றற்ற தன்மை) உள்ளது - சுயநலத்திற்கா, பரந்த ஒத்திசைவிற்கா.
2022-02-17
தேவராஜ்:
இங்கு (மேலே) குறிப்பிட்டுவுள்ள அனைத்தும் உண்டு/ இல்லை என்கிற துவைதம்மாக இருக்கிறது (துவைதம் என்றால் இரண்டு, அத்வைதம் இரண்டற்ற நிலை).
அத்வைதத்தை நடைமுறை வாழ்க்கையில் கடை பிடிக்க முடியாது என்று சொல்லி விட்டு பின்பு வாழ்ந்து காட்ட முடியும் என்று சொன்னால் என்ன பொருள்?. கடைபிடிக்கததையை எப்படி வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுவது. மயக்கமா? அல்லது குழப்பமா?.
தன்னை தானும் அறிந்து கொண்டு, ஊருக்கும் சொல்பவர்கள் தான் போற்ற படுவார்கள்.
வேறுபாடு நோக்கத்தில் (எதற்காக இந்தப் பற்றற்ற தன்மை) உள்ளது - சுயநலத்திற்கா, பரந்த ஒத்திசைவிற்கா. இதில் சுயநலத்தில் பொதுநலம்உண்டு. பொது நலத்தில் சுயநலமும் உள்ளடக்கம். பொது நலத்திற்க்கு என்று யாரும் பிறந்ததுமில்லை இனியும் இருக்குமா என்பது கேள்வி?
2022-02-17
தொல்:
அத்வைதிக்கு அடையாளமே முரண்பாடானவற்றை முகம் சுளிக்காமல் சொல்வதுதான்!
"அத்வைதத்தை நடைமுறை வாழ்க்கையில் கடை பிடிக்க முடியாது. அதே சமயம் அது (அத்வைதம்) குறித்த தெளிவு, உறுதி நடைமுறை வாழ்க்கையைப் பாதிக்காது மாற்றாது என்பதும் தவறு. "
மேலே இரண்டாவது வரியையும் முதல் வரியோடு சேர்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.
மனதுக்கு நிறைவளிக்கின்ற எல்லாவற்றையும் சுயநலம் என்ற அடைப்புக்குள் போட்டு விடலாம் என்பது technical definition. நடைமுறையில் சுயநலமும் பொதுநலமும் தனித்தனியாக உள்ளன என்பது எல்லோருக்கும் புரியும்.
அதனால் இடம் பொருளுக்குத் தக்க வரையறையைப் (definition) பயன்படுத்த வேண்டும்.
கீழ்க்கண்ட வலைப்பதிவுகளைப் படித்தால் மயக்கம் குழம்பும்; குழப்பம் மயங்கும்; தெளிவு துலங்கும்!
http://tholthamiz.blogspot.com/2011/12/blog-post.html மூன்று முக உண்மை
மூன்று முக உண்மைகள் ஒரே நேரத்தில் ஒரே அளவில் ஒரே நிலையில் ஒரே 'உண்மை'யாக உள்ளது.
மூன்று என்று சொல்லி விட்டு பிறகு அவற்றை ஒன்றுதான் என்று அடித்துச் சொல்வதுதான் அத்வைதிக்கு இலக்கணம்!
http://tholthamiz.blogspot.com/2012/09/blog-post.html மூன்று (நான்கு இல்லை ஐந்து) வகை உண்மைகள்
எந்த வகை உண்மையைப் பற்றிப் பேசுகிறோம் என்று தெளிவு இல்லாவிடில் வெவ்வேறு அலை வரிசைகளில் (waves) நாம் தொடர்பு கொள்ள முயன்று தோற்றுக் கொண்டு (பழி சொல்லிக் கொண்டு) இருப்போம்.
2022-02-18
தொல்:
Technical definition vs Practical definition
நாம் அனைவருமே (உடலுழைப்பு, மூளையுழைப்பு) உடலைத்தான் விற்கிறோம் என்ற கறாரான வரையறையில் எல்லோருமே விபசாரம் தான் செய்கிறோம். ஆனால் நடைமுறை வரையறையில் ஒரு குழுவினரை மட்டுமே விபசாரம் செய்வதாகச் சொல்கிறோம்.
மேலுள்ள உடலுழைப்பு, மூளையுழைப்பு என்பனவும் கறாராகப் பார்த்தால் தவறு. உடல் என்றாலே மூளையையும் சேர்த்து தான் குறிக்கிறோம். எனவே மூளையைப் பயன்படுத்தாமல் உடலுழைப்போ உடலைப் (மூளையைத் தவிர்த்து) பயன்படுத்தாமல் மூளையுழைப்போ இல்லை. என்றாலும் நடைமுறையில் உடலுழைப்பாளர்கள் என்றும் மூளையுழைப்பாளர்கள் என்றும் புரிந்து கொண்டு பயன்படுத்துகிறோம்.
பூமியின் மூன்றில் இரண்டு பாகம் கடல் என்றும் ஒரு பாகம் நிலம் என்றும் சொல்கிறோம். கடலுக்கு அடியில் என்ன இருக்கிறதாம்? நிலம் தானே?
கடலை வங்காள விரி குடா என்றும் அரபிக் கடல் என்றும் இந்திய பெருங்கடல் என்றும் இன்னும் பல பெயர்களில் அழைக்கிறோம். எந்த இடத்தில் அவை பிரிகின்றன? எதார்த்தத்தில் ஒரே கடல் தான் உள்ளது!
அம்மணம் தான் உண்மை. ஆடை அதை மறைக்கும் பொய். இதை இப்படிப் பார்க்கிறோமா? தட்பவெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள மற்ற எல்லா விலங்குகளுக்கும் இயற்கைத்திறன் உள்ளது. ஆனால் அவை அந்தத் தட்பவெப்ப வேறுபாட்டு எல்லைக்குள் தான் வாழ இயலும். ஆனால் மனித விலங்கு எல்லாத் தட்பவெப்பத்திலும் வாழ ஆடைகளைப் பயன்படுத்துவது வேறு. ஆனால் இன்று அதன் சமுதாய மதிப்பு என்பது வேறு. அம்மதிப்பு பெரும்பாலும் அம்மணம் (உண்மை உருவம்) என்பது அசிங்கம், அவமானம்; ஆடை உடுத்துவது (பொய் உருவம்) என்பது அழகு, மானம் என்றே உள்ளது.
இவை போன்று நிறைய 'குழப்பங்கள்' நம்மிடம் உள்ளன.
இவற்றை விட மோசமானது: 'காலம்' (what is time) என்பதற்கு நடைமுறை வரையறையும் இல்லை, அறிவியல் வரையறையும் இல்லை. என்றாலும் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று பயன்படுத்திக் கொள்கிறோம், புரிந்து கொள்கிறோம்.
https://www.thoughtco.com/what-is-time-4156799
Physicists define time as the progression of events from the past to the present into the future. Basically, if a system is unchanging, it is timeless. Time can be considered to be the fourth dimension of reality, used to describe events in three-dimensional space. It is not something we can see, touch, or taste, but we can measure its passage.
இது எப்படி இருக்கு? இது போன்ற வரையறையை நாம் சொன்னால் circular definition / begging the question என்பார்கள். ஆனால் விஞ்ஞானிகள் சொல்லலாம்! பொது மனிதன் (common man) எனக்குத் தெரியாது என்று எளிமையாகச் சொல்வதை விஞ்ஞானி சுற்றி வளைத்து மறைமுகமாகத் தெரியவில்லை என்று சொல்வார், அவ்வளவுதான்!
நானும் நீயும் சொன்னால் அது பொய். வக்கீல் பொய் சொன்னால் அது வாதத்திறமை. கவிஞன் பொய் சொன்னால் அது கற்பனை. அரசியல்வாதி பொய் சொன்னால் அது இராஜதந்திரம். அது போல் தான்.
நான் (என்ற கருத்து), உலகம் என்பன எப்படி மாயை (நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் இல்லை என்ற பொருளில்) என்பது ஒரு புறம் இருக்க, நாம் நினைப்பது போல் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் உலகம், வாழ்க்கை என்பதிலேயே பல மாயைகள் (பொய்கள்) பல அடுக்குகளில் (ஒன்றன் மேல் ஒன்றாக) கட்டி வைத்துக் கொண்டுள்ளோம்!
இவை இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆனால் 'முதல் கோணல் முற்றும் கோணல்' என்ற சொல்வழக்குப் படியும், 'முதல் பொய்யை மறைக்க ஆயிரம் பொய்கள் சொல்ல வேண்டும்' என்ற படியும் 'பொருளல்லவற்றை பொருள்' என்று கொண்ட முதல் கோணல்/பொய் தொடர இப்படித்தான் இருக்க முடியும். இது சரியோ தவறோ அன்று, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்வதே.
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு (திருக்குறள்: 351. அதிகாரம் 36: மெய்யுணர்தல்)
இதை நன்கு காண அத்வைதம் (என்ற பகுத்தறிவுக் கருத்துக் கண்ணாடி - அத்வைதம் என்ற சொல் பிடிக்கவில்லை என்றால் substance monism என்று சொல்லிக் கொள்ளலாம் - https://en.wikipedia.org/wiki/Monism) நம் ஊனக் கண்களையும் ஞானக் கண்களையும் நன்றாகத் திறக்கிறது என்றால் மிகையாகாது.
No comments:
Post a Comment