Friday 18 February 2022

திருஷ்டிசிருஷ்டி - சிருஷ்டிதிருஷ்டி - பரிபூரணம் [உலகம் (அறிவுணர்வாக / பிரம்மமாக) முழு உண்மை]

 2022-02-18


திருஷ்டிசிருஷ்டி - சிருஷ்டிதிருஷ்டி - பரிபூரணம் [உலகம் (அறிவுணர்வாக / பிரம்மமாக) முழு உண்மை]


அனுதினமும் ஸ்ரீ பகவானுடன்

தேவராஜ முதலியார் நாட்குறிப்பிலிருந்து ‍- மார்ச் 16, 1945 முதல் ஜனவர் 4, 1947 வரை

 

பக்கம் 220-221

 

கடிதம் மேலும் தொடர்ந்தது, “ரமண மகரிஷி அத்வைத வேதாந்தத்தின் அஜாத வாதத்தின் பிரதிநிதி. அது சிறிது கடினமானது தான்” இது பற்றி பகவான் குறிப்பிட்டார், “யாரோ அவரிடம் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். நான் அஜாத வாதத்தை மட்டும் போதிக்கவில்லை, நான் எல்லாக் கொள்கைகளையும் ஆமோதிக்கிறேன். 

 

கேட்பவரின் சக்திக்குத் தக்கப்படி ஒரே உண்மையை வெவ்வேறு விதமாக வெளியிட வேண்டியிருக்கிறது. அஜாத கொள்கை, ஒரு உண்மையைத் தவிர வேறொன்றும் இருப்பதில்லை. பிறப்பு, இறப்பு, நீட்டல், சுருக்கல், சாதகன், முமுக்ஷ, முக்தி, பந்தம், விடுதலை ஒன்றுமே இல்லை; ஒன்றே ஒன்று மட்டுமே உள்ளது என்கிறது. 

 

இந்த உண்மையை ஜீரணிக்க முடியாதவர்களுக்கு, ‘சுற்றுமிருக்கும் கன உலகை எப்படி அலட்சியம் செய்வது?' என்று கேட்பவருக்கு, கனவு அனுபவத்தைச் சுட்டிக்காட்டி, 'நீ பார்ப்பதெல்லாம் காண்பவனைச் சார்ந்துள்ளன ; காண்பவனை விட்டுக் காட்சி இல்லை என்று தெரிவிக்கப் படுகிறது.' இதற்கு திருஷ்டிசிருஷ்டி வாதமென்று பெயர். அதாவது மனதிலிருந்து சிருஷ்டித்து, தன்மனம் சிருஷ்டித்ததையே ஒருவன் பார்க்கிறான். 

 

இதையும் கிரகிக்க முடியாமல் மேலும், கனவு மிகச்சிறிய காலமே; ஆனால் உலகோ, எப்போதுமே இருக்கிறது! கனவு எனக்கு மாத்திரம்; இந்த உலகை, என்னைத் தவிர மற்றவர்களும் பார்த்து அனுபவிக்கிறார்கள். அப்படிப்பட்ட உலகுக்கு இருப்பு இல்லை என்று கூற முடியாது என்று வாதிப்பவர்களுக்கு, சிருஷ்டிதிருஷ்டி வாதம் அளிக்கப் படுகிறது. 

 

அதில், 'கடவுள் முதலில் இன்ன விஷயத்தை இன்ன பொருளிலிருந்து சிருஷ்டித்தார், பின்னர் அவற்றிலிருந்து மற்ற பொருள்கள் படைக்கப்படுகிறது' என்று போதிக்கப்படுகின்றன. இந்தச் சாரார்க்கு இது மட்டுமே திருப்தியளிக்கும். 

 

இல்லாவிட்டால் அவர்கள் மனம் திருப்தியடையாமல் தம்மைத்தாமே, 'எப்படி எல்லா பூகோளம், எல்லா வரைபடங்கள், அனைத்து விஞ்ஞானங்கள், நட்சத்திரங்கள், கோளங்கள், அவற்றை செலுத்தும் நியதிகள், அல்லது அதற்கு சம்பந்தப்பட்டவை, முதலிய எல்லா அறிவும் முழுவதும் பொய்யாக இருக்குமா?' என்று கேட்டுக் கொள்வார்கள். இவர்களுக்கெல்லாம், 'ஆம். கடவுள் இவற்றை யெல்லாம் சிருஷ்டித்தார். அதனால், நீ பார்க்கிறாய்' என்று சொல்வது உத்தமம்.” 

 

டாக்டர் மசாலாவாலா, “இவை யெல்லாமே உண்மையாக முடியாது. ஏதாவது ஒரு சித்தாந்தமே உண்மையாக இருக்க முடியும்” என்று கூறியதற்கு பகவான், “இவையனைத்தும் கற்பவனின் பக்குவத்திற்குப் பொருந்தும்படி விளக்கப்படுகிறது. பரிபூரணம் ஒன்றாகத்தானே இருக்க முடியும்” என்று விளக்கினார்.

 

பக்கம் 242-243

 

இதிலிருந்து, பலவித தத்துவ மார்க்கங்களைப் பற்றிப் பேச்சு திரும்பியது. உண்மை ஒன்றே உள்ளது என்று ஒரு சாரார்; மூன்று சாச்வத உண்மைகள் ஜகத், ஜீவன், ஈஸ்வரன் அல்லது பதி, பசு, பாசம், உள்ளன என்று மற்றொருவர். 

 

இது சம்பந்தமாக பகவான் சற்றே நகைச்சுவையுடன் கூறினார், “அத்வைதிகள்  அல்லது சங்கரருடைய சார்புடையவர்கள் உலகின் இருப்பை மறுக்கிறார்களென்றோ, அதை மித்தை என்று சொல்கிறார்களென்று சொல்வதோ சரியே அல்ல. 

 

 

மாறாக, மற்றவர்களை விட அவர்களுக்கு உலகம் அதிக உண்மையாக இருக்கிறது. அவர்களுடைய உலகம் என்றும் இருக்கும். மற்றவர்களுடைய உலகத்திற்கு ஆரம்பம், வளர்ச்சி, அழிவு மூன்றும் இருப்பதால் அது உண்மை ஆகாது. 

 

 

ஆனால் அத்வைதிகள் சொல்லும் உலகத்தை உலகமாக மட்டுமே கண்டால் அது உண்மையல்ல. மாறாக உலகத்தை, பிரம்மமாகக் கண்டால் அது உண்மை, சத்தியம். அனைத்தும் பிரம்மம், பிரம்மத்தைத் தவிர எதற்கும் இருப்பில்லை. உலகம் பிரம்மமாக இருப்பது சத்தியம். இவ்விதமாக அவர்கள் மற்ற சாராரைவிட உலகுக்கு அதிகம் இருப்பு தருகின்றனர். 

 

 

உதாரணமாக மூன்று அடிப்படைகளை நம்பும் சாராருக்கு, உலகம் மூன்றில் ஒரு பங்கே உண்மை;

ஆனால் அத்வைதிகளுக்கோ உலகம் பிரம்மமென முழுதும் உண்மையானது; உலகமும் சத்தியமும் வேறல்ல. 

 

 

அது போலவே மற்ற சாரார்கள் கடவுள் அல்லது பிரம்மத்திற்கு மூன்றில் ஒரு பங்கே உயர்நிலை தருகிறார்கள். மற்ற இரண்டு அடிப்படைகளும் கடவுளின் சத்தியத்தின் எல்லையைச் சுருக்குகின்றன. 

 

 

ஆகையால், சங்கரரை மாயாவாதி என்று யாராவது கூறினால், ‘சங்கரர் மாயை என்பதே இல்லை என்கிறார் என்று எதிர்வாதிக்கலாம். மாயையின் இருப்பை மறுத்து அதை மித்யை (பொய்) என்பவரை எப்படி மாயாவாதி என்பது?

 

 

யாரொருவர் மாயையின் இருப்பை ஒப்புக்கொண்டு, உலகை அதன் சிருஷ்டி என்கிறார்களோ, அவர்களே மாயாவாதிகள். ஈசன் இல்லை என்பவனை ஈசுவரவாதி என்று சொல்ல முடியாது. ஈசுவரனுடைய இருப்பை ஊர்ஜிதம் செய்பவனையே அப்படிச் சொல்ல முடியும்.” 

 

 

பகவான் தொடர்ந்தார், “உண்மையில் இவையனைத்தும் வீண் வாதங்களே. இத்தகைய சர்ச்சைகளுக்கு முடிவே இல்லை. செய்ய வேண்டிய சரியான காரியம் என்னவென்றால், யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லாததும் அனைத்தும் மறைந்தும், தூக்கத்தில் உள்ளதுபோல, மறையாமல் விளங்கும், அந்த 'நான்' என்பதைக் கண்டுபிடிப்பதே. பிறகு இத்தகைய சந்தேகங்களுக்கும் வழக்குகளுக்கும் ஏதாவது இடமிருக்கிறதா என்று பாருங்கள்” என்றருளினார்.


2022-02-14


தொல்:

இன்றைய அறிவியல் புரிதல் விளக்கத்தின் படி நாம் காண்பன அனைத்தும் (புற உலகம், காலம், இடம், நம் உடல், எண்ணங்கள், உணர்ச்சிகள்...) நம் மூளையில் நரம்புச் சமிஞ்கைகளின் விளைவே. அதாவது நாம் பார்ப்பது எதுவும் உண்மையில் இருப்பதற்குச் சான்று எதுவும் கிடையாது. ஏனெனில் எல்லாச் சான்றுகளும் மூளையில் நரம்புச் சமிஞ்கைகளின் விளைவே. இஃது அபத்தம்.

 

மாறாக, அத்வைதத்தின் படி, நான் காண்பன எல்லாம் உண்மையில் இருக்கின்றன. அவை மாறா பின்புலத்தில் தோன்றும் காட்சிகளாக மிக உண்மையானவை.

 

எடுத்துக்காட்டாக, நாம் பார்க்கும் சூரியன், அறிவியல் புரிதலின் படி நம் மூளையில் தோன்றுவதே (அந்த மூளை எங்கு தோன்றுகிறதோ?).

 

அத்வைதத்தின் படி நாம் பார்க்கும் சூரியன், நம் உடல், மூளை உள்பட உண்மை. ஆனால் மாறிக் கொண்டே இருப்பவை என்ற பார்வையில் அவை நிலையற்றவை. அவற்றைக் காணும் மாறா அறிவுணர்வே நிலையான உண்மை.

 

அத்வைதத்தின் படி அறிவியலும் அதன் கண்டு பிடிப்புகளும் விளக்கங்களும் அத்தகைய காட்சி என்ற அளவில் உண்மைகளே. இந்த அடிப்படையில் காட்சிகளுக்குள் தோன்றுவனவற்றிற்கிடையே உள்ள பொருத்தங்கள் (correlations) உண்மையே. அதாவது எண்ணங்களுக்கும் அதனால் மூளையில் விளையும் நரம்பு சமிஞ்கை வலைப் பின்னல்களுக்கும் (patterns) இடையே உள்ள பொருத்தம். இதைத் தவறாகப் புரிந்து கொண்டு மூளைதான் எண்ணங்களை உருவாக்குகிறது என்று முடிவு செய்யும் போது அது முதல் பத்தியில் சொன்ன அபத்தத்திற்கு இட்டுச் சென்று விடுகிறது.

 

அத்வைதம் என்பது ஒரு கருத்து. அதைப் பிடித்துக் கொண்டிருப்பதே அத்வைதம் இல்லை. எப்படித் தண்ணீர் என்ற சொல், கருத்து தாகத்தைத் தணிக்காதோ, தாகத்தைத் தணிப்பதற்குத் தண்ணீர் என்ற பொருள்தான் வேண்டுமே தவிர தண்ணீர் என்ற சொல்லோ கருத்தோ அன்றோ (மனிதனைத் தவிர மற்ற விலங்குங்கள் தண்ணீர் என்ற சொல், கருத்து இல்லாமலே தண்ணீரைப் பருகி வாழ்கின்றன). அதே போல் அத்வைதம், அறிவியல் என்ற சொற்களை, கருத்துகளைக் குறித்து விருப்பு வெறுப்பு கொள்ளாமல் அவற்றின் வாயிலாகத் தேடப்படுவ‌தில், சுட்டிக் காட்டப்படுவதில் கவனம் செலுத்தினால் பயனுண்டு.

 

2022-02-14


தேவராஜ்:


“அத்வைதத்தின் படி நாம் பார்க்கும் சூரியன், நம் உடல், மூளை உள்பட உண்மை. ஆனால் மாறிக் கொண்டே இருப்பவை என்ற பார்வையில் அவை நிலையற்றவை. அவற்றைக் காணும் மாறா அறிவுணர்வே நிலையான உண்மை”

 

மாற்றம் ஒன்றே மாறாதது

 

மாறா அறிவுணர்வு இருக்க முடியுமா?  அறிவுணர்வும் மாறுமல்லவா?

 

மாற்றம் மட்டும்தான் நிரந்தரம். அனைத்து உயிரினங்களும், அவற்றுக்கே உரித்தான குணங்கள் மற்றும் பண்புகளை உள்ளடக்கியிருக்கின்றன. அவை நிலையானது என, நம்பப்படுகிறது.

 

ஆனால், அனுபவத்தில் என்ன காண்கிறோம்? அன்பு வெறுப்பாகிறது; வெறுப்பு பாசமாகிறது; கோபம், சாந்தமாகிறது; சாந்தத்தை கோபம் காலி செய்கிறது. அதாவது மனிதனின் குணம் மாறி கொண்டே இருக்கிறது.

 

ஏன்? தேவை, வசதி, வாய்ப்பு, சூழ்நிலைக்கு ஏற்ப, ஆபத்தை தவிர்த்து, நன்மை கருதி, குணம் மாறுபடுகிறது; மாற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறது. இதைத்தான் மாற்றம் ஒன்றே மாறாதது; மாற்றம் மட்டும்தான் நிலைத்திருக்கும் என்கிறோம்.


2022-02-14


தொல்:


ரமணரிடம் இது போன்ற கேள்வி கேட்ப்பட்டு பதிலளித்துள்ளார். கீழே பார்க்கவும்.


=======

அனுதினமும் ஸ்ரீ பகவானுடன்

தேவராஜ முதலியார் நாட்குறிப்பிலிருந்து ‍- மார்ச் 16, 1945 முதல் ஜனவர் 4, 1947 வரை



பக்கம் 321


15-6-46


மாலையில் சந்நிதிக்குள் நான் சென்ற பொழுது பகவான், “நாம் பார்ப்பதெல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது; எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் இதற்கெல்லாம் ஆதாரமாக, மூலகாரணமாக ஏதோ ஒன்று மாறாததாக இருக்க வேண்டும்” என்றருளினார்.


சுப்பராமய்யா: இவையனைத்திற்கும் ஆதாரமாயிருப்பது மாறாததாக இருக்கவேண்டும் என்று கற்பனை செய்வதற்கு என்ன நிரூபணம் இருக்கிறது?


பகவான்: 'நான்' மாறாதது என்பது வெறும் எண்ணமோ கற்பனையோ அல்ல. அது எல்லோரும் உணர்ந்துள்ள ஓர் உண்மை. மாறிக்கொண்டிருக்கும் அனைத்துப் பொருள்களும் இல்லாத தூக்கத்தில் 'நான்' இருக்கிறது. அது கனவிலும் நனவிலும் இருக்கிறது. மற்றவை அனைத்தும் வருகின்றன போகின்றன. ஆனால் 'நான்' மாற்றமற்று இருக்கிறது.


ஆச்ரமத்திற்கு அடிக்கடி வரும் டாக்டர் எஸ். மணி (சென்னையில் உதவி இயக்குனர், பொது சுகாதாரத் துறை), பகவானிடம், “ஆனால் இப்பொருள்கள், அதாவது இந்த உலகம் தோன்றுவானேன்?” என்று கேட்டார்.


பகவான்: அது யாருக்குத் தோன்றுகிறது? நீர் பார்க்கிறீர்; அதனால் உலகம் இருக்கிறது. பார்ப்பவரைத் தவிர்த்து உலகம் தனியாக இருக்கிறதா? அது உம்மிடம் வந்து 'நான் இருக்கிறேன்' என்கிறதா? நீர் பார்ப்பதாக, உணர்வதாக சொல்வதைத் தவிர, அதன் இருப்பிற்கு வேறு என்ன நிரூபணம் உள்ளது?


=======



'மாற்றம் ஒன்றே மாறாதது / நிரந்தரம் / நிலைத்திருக்கும்' என்ற சொற்றொடர் குறிப்பது என்ன? மாற்றம் தொடர்ந்து இருந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும் என்பதே. 'மாறாதது / நிரந்தரம் / நிலைத்திருக்கும்' என்ற சொல் 'தொடர்ந்து மாறும்' என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது சொல் விளையாட்டு. இவை போல் நிறைய உள்ளன. எடுத்துக்காட்டு: நகர்த்த முடியாத ஒன்றை எல்லையில்லாதை வலிமை கொண்ட ஒருவன் (கடவுள்) நகர்த்த முடியுமா? இவை கவிதை, பாடல், இலக்கிய அறிவுக்களத்திற்கு சுவைக்காக உரியது. தர்க்கக்களத்திற்கு ஒத்து வராதவை.


மாறா அறிவுணர்வு இருக்க முடியுமா? அறிவுணர்வும் மாறும் அல்லவா? என்ற கேள்விகள் 'அறிவுணர்வு' என்பதைப் பற்றிய புரிதலில் உள்ள இடைவெளியைக் காட்டுகிறது.


எடுத்துக்காட்டாக, அறிவுணர்வு என்பது திரை என்று கொண்டால், திரையில் தோன்றும் எந்தவிதமான காட்சிகளாலும் பாதிக்கப் படாமல் திரை இருக்கிறது.


அறிவுணர்வு (திரை) மாறிக் கொண்டு இருந்தால் காட்சியை ஒழுங்காகப் பார்க்க முடியாது. 


வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் அறிவுணர்வு என்னவாக மாறும்? அப்படி மாறுவதை எஃது அறியும்?


அறிவுணர்வு என்பது எண்ணம், சிந்தனை, புரிதல்... இவை அன்று. எல்லாவற்றையும் அறிகின்ற அறிவு, எல்லாவற்றையும் வெளிப்படுத்துகின்ற ஒளி... இப்படி பலவிதமாக அதைச் சுட்டிக் காட்டலாம். ஆனால் உண்மையில் சுட்டிக் காட்டப்படுவது எதுவென்றால் எது சுட்டிக் காட்டுகிறதோ அதைத்தான்.



2022-02-15


தொல்:


மாறா 'நான்' / 'அறிவுணர்வு' என்பது ரமணர் சொல்வது போல் எண்ணமோ, கற்பனையோ அன்று. நம் ஒவ்வொருவர் வாழ்விலும் குழந்தையாக இருந்த போது இருந்த 'நான்' / 'அறிவுணர்வு' ('நான்' என்ற கருத்து அன்று) இன்று வரை அதுவாகவே இருக்கின்றது. அது ஒருவரின் வாழ்வில் மட்டுமன்று, எல்லோரின் வாழ்விலும் அது அதுவாகவே இருக்கிறது.

 

எனக்குள்ள 'நான்' / 'அறிவுணர்வு' என்பது உனக்குள்ள 'நான்' / 'அறிவுணர்வு' என்பதும் ஒன்றே.

 

என் உடலில் உள்ள கார்பன் அணுவும் உன் உடலில் உள்ள‌ கார்பன் அணுவும் ஒன்றே (ஒரே இயல்பு கொண்டவையே). அது போல் தான் 'நான்' / 'அறிவுணர்வு' என்பதும். அது ஆணும் இல்லை; பெண்ணும் இல்லை. அந்த அறிவுணர்வில் தோன்றும் உடல்கள் ஆண், பெண்.... எனப் பலவாக இருக்கின்றன. 

 

எடுத்துக்காட்டாக, கனவுகளற்ற ஆழந்த தூக்கம் அரசனுக்கும் பிச்சைக்காரனுக்கும் ஒன்றுதான். அந்த ஒருமைக்கு என்ன அடிப்படை? அந்த ஒருமை இருவருக்கும் இருக்கும் 'நான்' / 'அறிவுணர்வு' என்பதன் ஒரே இயல்பே.

 

இதை எவ்வளவு விவாதித்தாலும் நிரூபிக்க முடியாது. அதை ஒவ்வொருவரும் அவரவர்களாகவே பகுத்தறிவைக் கொண்டு 'பார்க்க' வேண்டும். அதில் 'நான்' என்ற கருத்து (concept / ego) எழும் முன் குழந்தையாக இருந்த போது, கனவுகளற்ற ஆழந்த தூக்கத்தில் இருப்பது, ஒரு வேலையில் தன்னை மறந்து ஆழ்ந்து (in the flow) இருக்கும் போது (செய்பவன், செயல், செயப்படும் பொருள் என்ற பிரிவினை இன்றி) உள்ள அனுபங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

 

ஆக, தர்க்கம் (பகுத்தறிவு) அனுபவம் இரண்டையும் கொண்டு, நமக்கு ஏற்கனவே கற்பிக்கப் பட்டுள்ளவற்றை ஒதுக்கி வைத்து விட்டு, பார்த்தால் யாருக்கும் விளங்கும். 

 

பெரியாரின் பகுத்தறிவிற்கும் ரமணரின் (ஆதி சங்கரரின்) பகுத்தறிவிற்கும் எந்த முரண்பாடும் இல்லை. இரண்டும் ஒன்றே. இரண்டின் களம் (உலகியல் / லௌகீகம் - மெய்யியல் / ஆன்மீகம்) வேறு என்று வேண்டுமானால் சொல்லலாம். அது கூட ரமணரின் பகுத்தறிவை (அத்வைதம்) ஆழ்ந்து புரிந்து கொண்டால் (அறிவுணர்வே / பிரம்மமே / நானே உலகமாக இருக்கிறது) அவ்வேறுபாடும் இல்லை என்பது விளங்கும்.



No comments:

Post a Comment