Friday 18 February 2022

தன்னிச்சை, கடவுள் நம்பிக்கை, நாத்திகன், மாறா ஒன்று ‍(ரமணரின் பதில்கள்)

2022-02-18

தன்னிச்சை, கடவுள் நம்பிக்கை, நாத்திகன், மாறா ஒன்று ‍(ரமணரின் பதில்கள்)


அனுதினமும் ஸ்ரீ பகவானுடன்
தேவராஜ முதலியார் நாட்குறிப்பிலிருந்து ‍- மார்ச் 16, 1945 முதல் ஜனவர் 4, 1947 வரை



பக்கம் 21

8-9-45 காலை:

பெஜவாடா சுப்பராவ் பகவானிடம் “கற்பனைக்கும் தோற்றத்திற்கும் என்ன வித்தியாசம்?” எனக் கேட்டார்.

பகவான்: ஒன்று தன்னிச்சையானது, மற்றது அப்படியல்ல. ஆயினும் தொடக்கத்தில் இல்லாவிட்டாலும், பகுத்தறிவின் கடைசியில் தோற்றத்தையும் தன்னிச்சைப் பிரிவிலேயே சேர்க்க வேண்டும்.

சுப்பராவ்: கனவுகள் அங்கு (தன்னிச்சையில்) உருவாவதைப் போலவா? என்று கேட்டார்.

பகவான்: ஆமாம்.

மற்றொரு அடியார்: நம் விழிப்புநிலை வாழ்வும் நாம் உறக்கத்தில் காணும் கனவு போலவே என்று சொல்லப்படுகிறது. ஆனால் கனவில் நாம் அதை நீக்கி விழித்துக் கொள்வதற்கு எவ்வித முயற்சியும் செய்வதில்லை. அதுபோலவே, கனவு போன்றதேயான நம் நனவு நிலையும் ஏன் தானாகவே முடிவுக்கு வந்து, நம் முயற்சி இல்லாமலேயே, உண்மை விழிப்பான ஞானநிலையில் கொண்டு சேர்க்கக் கூடாது?

பகவான்: விழிப்பு நிலையான இந்தக் கனவை நீக்க நீ முயற்சி செய்ய வேண்டும் என்று நீ நினைப்பதும், உண்மையான விழிப்பு நிலையாகிய ஞானத்தை அடைவதற்கு முயற்சி செய்வதும், அனைத்தும் அந்தக் கனவின் அங்கங்களே. ஞானமுற்றபின், தூக்கத்தில் கனவு என்பதோ, அல்லது விழிப்பு நிலை என்பதோ இல்லை (என்பதுடன்) 'நான்' எனும் உண்மை நிலை மட்டுமே உள்ளது என்பதை அறிவாய்.


பக்கம் 231-233

22-3-46 பிற்பகல்

பின்னர் சுவாமி, “ஆன்மசாக்ஷாத்காரத்திற்கு உத்தமமான வழி எது?” என்று கேட்டார்.

பகவான்: 'நான் உள்ளேன்' என்பதுதான் சாஸ்வதமான, அனைவருடைய சுய விளக்கமான பிரத்யக்ஷமான அனுபவம். 'நான் இருக்கிறேன்' என்பது போல் வேறெதுவும் அவ்வளவு பிரத்யக்ஷமாக இல்லை. மக்கள் எதைப் பிரத்யக்ஷம் என்கிறார்களோ, அதாவது புலன்களின் மூலம் கிடைக்கும்
அனுபவத்திற்கும் பிரத்யக்ஷத்திற்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு.

ஆன்மா மட்டுமே 'அது' (பிரத்யக்ஷம்). பிரத்யக்ஷம் என்பது ஆன்மாவின் மறுபெயர். அதனால் ஆன்மவிசாரம் செய்து 'நான் உள்ளேன்' என்றிருப்பதே நாம் செய்யவேண்டியது. ‘நான் இது', அல்லது 'நான் அது', என்றெண்ணுவது உண்மை அல்ல. ஆன்மாவிற்கு மறுபெயரான ‘நான் உள்ளேன்' என்பதே சத்தியம். நான் கடவுள் என்பது உண்மை அல்ல.

சுவாமி, “உபநிஷத்துக்களே 'நான் பிரம்மமாக உள்ளேன்' என்கின்றனவே” என்றார். 

அதற்கு பகவான், “அதைப் புரிந்து கொள்ள வேண்டியது அப்படி அல்ல. பிரம்மம் 'நான்' என்று இருக்கிறது என்பதே அதன் அர்த்தம். 'நான் பிரம்மமா
யிருக்கிறேன்' என்பதல்ல. ஒருவன் 'நான் பிரம்மம்' 'நான் பிரம்மம்' என்று தியானிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறா னென்று எண்ணக்கூடாது. யாராவது ‘நான் மனிதன்' ‘நான் மனிதன்' என்று எண்ணிக்கொண்டே இருக்கிறானா? அவன் மனிதனா, மிருகமா, மரமா என்று சந்தேகம் எழுந்தாலொழிய அவனுக்கு 'நான் ஒரு மனிதன்' என்று ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. அதுபோல ஆன்மா ஆன்மாவே. பிரம்மம் ஒவ்வொரு பொருளிலும் உயிரிலும் 'நான், நான்' என்று துலங்குகிறது” என்றருளினார்.

அதற்கு சுவாமி, “பக்தனுக்கு பக்தி செய்ய ஒரு கடவுள் தேவை. அவனுக்குக் கடவுளும் இல்லை பக்தனுமில்லை ஆன்மாதான் உண்டு என்று கற்பிக்க வேண்டுமா?” என்று கேட்டார்.

பகவான்: நிச்சயமாக சாதனைக்குக் கடவுள் தேவையே. ஆனால் பக்தி மார்க்கத்தில்கூட, பூரண சரணாகதிக்குப் பிறகே சாதனை முழுமை பெறுகிறது. அகம்பாவத்தை அழித்துவிட்டால் ஆன்மா எப்போதும்போல் ஒளிரும் என்பதைத் தவிர வேறென்ன அதற்குப் பொருள்? எந்த மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தாலும் 'நான்' என்பதிலிருந்து தப்பிக்க முடியாது. நிஷ்காம்ய கர்மத்தைச் செய்யும் ‘நான்', தான் தெய்வத்தைப் பிரிந்திருப்பதாக எண்ணி அவனை அடைய ஏங்கும் 'நான்', தன் உண்மை நிலையை விட்டு நழுவியதாக உணரும் 'நான்', இத்யாதி. இந்த 'நான்' என்பதின் மூலத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். பின் எல்லாச் சந்தேகங்களும் தெளிவாகி விடும். பகவத்கீதையில் எல்லா வழிகளும் ஆமோதிக்கப்பட்டாலும், ஞானியே உத்தமமான கர்மயோகி, உத்தம பக்தன், மிக உயர்ந்த யோகி என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.”

சுவாமி மேலும் பிடிவாதமாக, “ஆன்ம விசாரமே உத்தம மென்று சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் நடைமுறையில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு கடவுள் தேவைப்படுகிறது.”

பகவான்: பெரும்பாலானவர்களுக்குக் கடவுள் அவசியமே என்பது சரி. அவர்களும் கடவுளும் வேறல்ல என்று அறியும் வரை அவர்கள் கடவுளை நாடலாம்.

சுவாமி தொடர்ந்தார்: நடைமுறை வாழ்க்கையில் சாதகர்கள், மிகத் தீவிரமானவர்கள் கூட, மனம் தளர்ந்து, கடவுள் நம்பிக்கையை இழந்து விடுகிறார்கள். அவர்கள் நம்பிக்கையைப் புதுப்பித்து ஊக்குவிப்பது எப்படி? அவர்களுக்காக நாம் என்ன செய்ய வேண்டும்?

பகவான்: கடவுளிடம் நம்பிக்கையில்லை என்றால் பரவாயில்லை. தன்னில், தான் இருப்பதாக நம்புகிறானா இல்லையா? அவன் எங்கிருந்து வந்தான் என்பதை (தன் மூலத்தை) கண்டுபிடிக்கட்டும். 

சுவாமி: அப்படிப்பட்ட மனிதன், தான் வந்த மூலம் தன் பெற்றோரே என்பான்.

பகவான்: அவ்வளவு அறிவிலியாக இருக்க முடியாது. ஏனெனில் அவன் சாதகன் என்றுதான் முதலில் நீங்கள் ஆரம்பித்தீர்கள்.

பக்கம் 234

24-3-46

சுவாமி சம்புத்தானந்தாவின் கடைசிக் கேள்வியான, கடவுள் நம்பிக்கையை இழந்த மனிதனை, தன் மூலத்தைக் கண்டு பிடிக்கும்படி கூறினால், “தன் பெற்றோர்களே தனக்கு மூலம் என்று கூறுவான்” என்பதைக் குறிப்பிட்டேன்.

பகவான்: பெற்றோரே தன் மூலம் என்று சொல்லும் மனிதர்களும் இருப்பார்களா!

நான் கேட்டேன்: அப்படியானால் கடவுளையே நம்பாமல் ஜடப்பொருள்களை மட்டுமே உண்மை எனக் கொள்ளும் நாத்திகனைக் குறித்து நாம் என்ன சொல்ல முடியும்?

பகவான்: அவன் மெதுவாக, படிப்படியாக 'நான்' என்பதன் மூலத்தைக் கண்டு பிடிப்பான். முதலில் கஷ்டங்கள் அவனைத் தனக்கு அப்பாற்பட்ட, தன்னுடைய திட்டங்களை முறியடிக்கும் சக்தி ஒன்று உள்ளது; அது தனது கட்டுப்பாட்டுக்கு அப்பாற் பட்டது என்பதை உணர வைக்கும். பிறகு சடங்குகளில் ஆரம்பித்து முறையான வழிபாடுகளில் இறங்கி ஜபம், கீர்த்தனம், தியானம் இவற்றின் வழியே முதிர்ச்சி யடைந்து, விசாரணையைச் சென்றடைவான்.



பக்கம் 321

15-6-46

மாலையில் சந்நிதிக்குள் நான் சென்ற பொழுது பகவான், “நாம் பார்ப்பதெல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது; எப்போதும் மாறிக் கொண்டிருக்கும் இதற்கெல்லாம் ஆதாரமாக, மூலகாரணமாக ஏதோ ஒன்று மாறாததாக இருக்க வேண்டும்” என்றருளினார்.

சுப்பராமய்யா: இவையனைத்திற்கும் ஆதாரமாயிருப்பது மாறாததாக இருக்கவேண்டும் என்று கற்பனை செய்வதற்கு என்ன நிரூபணம் இருக்கிறது?

பகவான்: 'நான்' மாறாதது என்பது வெறும் எண்ணமோ கற்பனையோ அல்ல. அது எல்லோரும் உணர்ந்துள்ள ஓர் உண்மை. மாறிக்கொண்டிருக்கும் அனைத்துப் பொருள்களும் இல்லாத தூக்கத்தில் 'நான்' இருக்கிறது. அது கனவிலும் நனவிலும் இருக்கிறது. மற்றவை அனைத்தும் வருகின்றன போகின்றன. ஆனால் 'நான்' மாற்றமற்று இருக்கிறது.

ஆச்ரமத்திற்கு அடிக்கடி வரும் டாக்டர் எஸ். மணி (சென்னையில் உதவி இயக்குனர், பொது சுகாதாரத் துறை), பகவானிடம், “ஆனால் இப்பொருள்கள், அதாவது இந்த உலகம் தோன்றுவானேன்?” என்று கேட்டார்.

பகவான்: அது யாருக்குத் தோன்றுகிறது? நீர் பார்க்கிறீர்; அதனால் உலகம் இருக்கிறது. பார்ப்பவரைத் தவிர்த்து உலகம் தனியாக இருக்கிறதா? அது உம்மிடம் வந்து 'நான் இருக்கிறேன்' என்கிறதா? நீர் பார்ப்பதாக, உணர்வதாக சொல்வதைத் தவிர, அதன் இருப்பிற்கு வேறு என்ன நிரூபணம் உள்ளது?

No comments:

Post a Comment