Thursday, 29 December 2011

மூன்று முக உண்மை

2011-12-27

மூன்று முக உண்மை


கீழ்க்கண்ட‌ மூன்று புரிதல்களும் ஒரே நேரத்தில் ஒரே அளவில் வேண்டும்.

1. இந்த உலக வாழ்க்கை நாடகத்தில் கொடுக்கப்பட்டுள்ள‌ வேடத்திற்குத் தக நடிப்பு (உயர்வு / தாழ்வு, உண்மை / பொய், நீதி / அநீதி, இன்பம் / துன்பம், முன்னேற்றம் / பின்னேற்றம்...).

2. எல்லாம் இயற்கை / இறைவன் செயல். அடையும் இலக்கு எதுவும் இல்லை. இக்கணத்தில் நடப்பதுதான் இருப்பதுதான் உண்மை. தனித்தனிப் பொருள்கள் / செயல்கள் என்பது அடிப்படையான மாயை / முரண்பாடு.  எல்லா வேடங்களுக்கும் (கதைப் பாத்திரங்களுக்கும்) பின்னால் உள்ளது ஒரே ஆற்றலே (இறைவனே / இயற்கையே).

3. எதுவும் நடக்கவில்லை. இருக்கவில்லை. தோற்றம் மட்டுமே உள்ளது. 'நான்' என்ற அறிவுணர்வு எழாவிடில் எதுவும் இருக்கிறது இல்லை என்பதே (என்ற கருத்தே) எழாது. கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்பன இந்த‌ ஆதி அந்தமில்லா ஒரு கணக் காட்சியின் உள்ளடக்கமே. ஓடுவது காலம் அன்று, மனமே / அறிவுணர்வே.

சுருக்கமாக,

1. எல்லாம் நாடக வேடங்களே (many roles)
2. எல்லாம் வேடங்களுக்கும் மூலம் ஒன்றே (one source)
3. எல்லாம் தோற்றங்களே (one appears as many)

இதை இன்னும் சுருக்கமாக 'எல்லாம் ஒன்றே' (all one) என்று சொல்லி விடலாம். என்றாலும் இப்படி அதை மூன்று முகங்களாகப் புரிந்து கொள்வதில் அந்த மூன்று பரிமாணங்களை ஒத்திசைந்து இயங்க / வாழ உதவும்.

இந்த மூன்று முக உண்மையே நிலையான உண்மை. இதைப் புரிந்து கொள்ளப் படிப்போ, பயிற்சியோ அவசியமில்லை. எந்த மன மூட்டமும் இல்லாமல் பார்த்தால், சிந்தித்தாலே போதும். ஆனால் நடைமுறையில் அப்படி ஒரு நிலை (ஒரு சிலருக்குத் தவிர்த்து) இயற்கையாக அமையாததாலும் எல்லா மனங்களும் பல வகையான கற்பிக்கப்பட்டக் கருத்துகளால் மூட்டம், மாசு படிந்து இருப்பதாலும் அவற்றை நீர்த்துப் போய்த் தெளிய வைக்கப் படிப்பும் பயிற்சியும் தேவைப்படுகின்றன.

இந்த மூன்று பரிமாணங்களும் தனித் தனியாகவோ ஒன்றன் பின் ஒன்றோ அல்லது முக்கியத்துவத்தில் பயன்பாட்டில் முதல், இரண்டு என்று வரிசையிலோ இல்லை. இவை ஒரே நிலையில் உள்ளன. பூமி தன்னைச் சுற்றும் போதே சூரியனையும் சுற்றிக் கொண்டு அதே சமயம் சூரியக் குடும்பமாகப் பால் வெளி மண்டலத்தைச் சுற்றிக் கொண்டும் மேலும் பால் வெளி மண்டலமாகச் சுழன்று கொண்டும் நகர்ந்து கொண்டும் இருப்பதைப் போல் மூன்று முக உண்மைகள் ஒரே நேரத்தில் ஒரே அளவில் ஒரே நிலையில் ஒரே 'உண்மை'யாக உள்ளது.

Monday, 19 September 2011

பிச்சையோ பிச்சை

2011-09-19

பிச்சையோ பிச்சை

'பிச்சை' எடுப்பது கேவலமாகவும் போற்றுதல், வணங்குதலுக்குரிய துறவுப் பெருமையாகவும் நம் இந்து மதப் பண்பாட்டில் உள்ளது. இன்றைய இந்து மதம் என்பது பழந்தமிழர் மதங்களான சைவம் (சிவனியம்), வைணவம் (மாலியம்), புத்தம், சமணம், வேத மதம், சீக்கியம்... போன்றவற்றை நடைமுறையில் உள்ளடக்கி உள்ளது. இதற்கும் மேலும் மதம் கடந்து மக்கள் திருத்தலங்களுக்குப் புனித யாத்திரை (வேளாங்கண்ணி, நாகூர்...) சென்று வருகின்றனர். நாத்திகமும் இந்து மதத்தின் ஒரு பிரிவு என்பதில் ஐயமில்லை.

தன் உழைப்பால் பிழைக்க முடியாத சோம்பேறிகளாகப் பிச்சை எடுப்பது கேவலம் என்றும் தன் முயற்சி, தன் உழைப்பு, தன் சாதனை... என்ற ஆணவம் அற்றுப் போன நிலையில் 'யார் யாரிடம் பிச்சை எடுப்பது' என்று புரிந்த, உணர்ந்த நிலையில் 'பிச்சை' எடுப்பது போற்றுதலுக்குரிய துறவு உள்ளமாகவும் பார்க்கிறோம்.

தன் உழைப்பால் (அதற்குச் சன்மானமாகப்) பொருள் ஈட்டி உயிர் பிழைப்பதை 'தன்மானம்' என்று கருதுகிறோம். 'எல்லாம் இறைவன்/இயற்கையின் செயல்' என்று உணர்ந்து 'தன்மானம்' அழிந்த நிலையில் உடல், உயிர் முதற்கொண்டு எதையும் விரும்பவோ, வெறுக்கவோ இயலாத போக்கில் 'பிச்சை' எடுத்து உயிர் பிழைப்பதை 'உயர்மானம்' (துறவு) என்று கருதுகிறோம்.

அசல் இருந்தால் போலிகளும் வந்து விடுகின்றன. அதற்காக அசல் இல்லாமல் போய் விடாது. ஆகப் போலித் தன்மானங்களும் போலி உயர்மானங்களும் அசல்களுடன் உலகில் உலவுகின்றன.

என் தம்பி திருவள்ளுவன் செங்கற்பட்டு இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்தான். அப்பள்ளிக்கு ஒரு தலைமை ஆசிரியருடன் மிஷன் நியமித்த ஒரு சாமியாரும் பள்ளி நிர்வாகியாக இருப்பார். இப்போது அப்படி உள்ளதா என்று தெரியவில்லை. அதே அமைப்பு, ஏற்பாடு நீடித்தாலும் நீடிக்கலாம். ஆனால் 1970 களில் அப்படி இருந்தது. அச்சாமியாருக்கு நல்ல சீடனாக (மாணவனாக) நெற்றியில் விபூதி இட்டு என் தம்பி நடந்து கொண்டதால் அச்சாமியாருக்கு இவனை மிகவும் பிடித்து இருந்தது. அச்சாமியார் மூலம் தெரிந்து கொண்டது:

இராமகிருஷ்ணா மிஷனில் சாமியாராக வேண்டுமென்றால் அதற்குரிய கல்வி, பயிற்சித் தகுதிக்குப் பிறகு கடைசியாக ஓர் ஆண்டு நாடோடியாகப் பிச்சை எடுத்து வாழ வேண்டுமாம். இப்போதும் அத்தகைய விதிமுறை, நடைமுறை இருக்கிறதா என்று தெரியவில்லை. அச்சாமியார் ஆந்திராவில் ஓர் ஆண்டு ஊர் ஊராகத் திரிந்து பிச்சை எடுத்து வாழ்ந்தாராம். இரவில் வாய்ப்பு கிடைத்தால் காவல் நிலையத்தில் படுத்துக் கொள்வாராம்.

தான் படித்து விட்டோம், தான் சாம்பாதித்து விட்டோம், தான் சாதனை புரிந்து விட்டோம் என்பன மட்டுமல்ல ஆணவம். தான் துறந்து விட்டோம் என்பதும் ஆணவம் தான். அதுவும் அழிய வேண்டுமென்றால் கொஞ்ச காலம் பிச்சை எடுத்துப் பிழைக்க வேண்டும் என்று விதி வைத்துள்ளார்கள் போலும்.

தாயுமானவர் தான் அரசனுக்கு அமைச்சராக இருந்த அதிகாரம் செலுத்திய அதே திருச்சி மாநகரில் துறவு பூண்டு அதே வீதிகளில் பிச்சை எடுத்தார்.

அழிக்கும் கடவுள் சிவபெருமான் பிச்சை எடுத்த பெரிய புராணங்களும் நம் சமயமல்லவா?

பிச்சை சிறுமையா பெருமையா என்பது பிச்சையின் நோக்கம், தன்மை குறித்ததாகும். மற்றபடி எல்லோரும் பிச்சைக்காரர்களே. யாரிடமிருந்து எதற்காகப் பிச்சை எடுக்கிறோம் என்பது தான் வேறுபாடு. காண்க 'கீழிலிருந்து மேல்வரை பிச்சைக்கார மனிதர்கள்' வலைப்பதிவு.

http://tholthamiz.blogspot.com/2011/08/blog-post_5618.html

அவரவர்க்கு வாய்த்த இடம்
அவன் போட்ட பிச்சை
அறியாத மானிடருக்கு
அக்கரையில் இச்சை 

           - 'இக்கரைக்கு அக்கரைப் பச்சை' திரைப்படப் பாடல்

Sunday, 18 September 2011

திருமண வாழ்த்துரை

2011-08-20
திருமண வாழ்த்துரை
மணமகன்: ப.தொல்காப்பியன் மணமகள்: செ.முத்துலெட்சுமி
மணநாள்: ஆவணி 25, திருவள்ளுவர் ஆண்டு 2042 (ஞாயிறு 11.09.2011)
அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயம், தென்னங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

இல்லற வாழ்வில் இணைந்து செல்ல இணைந்திருக்கும் மணமக்களுக்கும் அம்மணமக்களை இவ்வாழ்த்து நிகழ்வில் வாழ்த்த மேடையிலும் பந்தலிலும் இணைந்திருக்கும் அனைவருக்கும்

வணக்கம்!

நண்பர் தென்னை கணேசனும் நானும் 25 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்கள். அவர் தம்பி இராமசாமியையும் அதே போல் நெடுங்காலமாக அறிவேன். இருவர் குடும்பங்களின் படிப்படியான முன்னேற்றத்தையும் கணேசன் வாயிலாகக் குடும்பச் செய்தியாகத் தெரிந்து வருகின்றேன். நண்பர் கணேசனும் எங்கள் குடும்பத்தில் ஒருவராகப் பழகி வருபவர். என் பெற்றோர் உடன்பிறப்புகள், அவர்களின் துணைவியார்கள், சில உறவினர்கள் என்று என் உறவு சுற்றத்தை அறிந்தவர்; சிலரிடம் பழகியவர்.

அந்த அடிப்படையில் தென்னை.கணேசன் குடும்பத்தில் பலருக்கு நேரடியாகத் தெரியாதவன் என்றாலும் அவரின் உறவு சுற்றத்தைப் பற்றி அறிந்தவன் என்ற வகையில் அவருடைய அண்ணன் மகன் திருமணத்தில் மணமக்களை வாழ்த்திச் சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் பொறுப்பைக் கணேசன் எனக்கு இன்று இங்கு வழங்கியுள்ளார். அதற்கு அவருக்கு நன்றியைத் தெரிவிக்கும் வேளையில் இது மணமக்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையட்டும் என்று விழைகிறேன்.

மனிதனுடைய பிறப்பும் இறப்பும் அவன் கையில் இல்லை என்று நாம் அனைவரும் அறிவோம். ஆனால் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் எவற்றை எப்போது சேர்ப்பது, எவற்றை எப்போது விடுவது என்பது நம் கையில் உள்ளது. இதைச் செய்வதில் ஒரு சிக்கல் என்னவென்றால், இவற்றை அலசி ஆராய்ந்து முடிவு செய்து கொண்டு வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாது. இவற்றை அலசி ஆராய்வதும் வாழ்வதும் இணையாக நடக்கும்; இணையாகவே நடக்க முடியும். ஆக, வாழ்க்கை என்பதே ஆய்வு, புரிதலின் வளர்ச்சி. ஆய்வு, புரிதல் என்பதே வாழ்க்கையின் மலர்ச்சி.  இது தான் வாழ்வின் நோக்கம். இதைத் தவிர்த்து நாம் செய்யும் சாதனைகள, அனுபவிக்கும் வேதனைகள் எல்லாம் இதை நோக்கிய பயணமே; அப்பயணத்தில் கடக்க வேண்டிய காட்சிகளே.

இவை எல்லாம் மணமக்களுக்கு இப்போதே புரிந்து விடாது. ஆனால் நிலை வைப்புக் கணக்கில், தொடர் வைப்புக் கணக்கில் (fixed deposit, recurring deposit) போட்டு வைக்கும் சிறு பணம் பெருகி எப்படி 10, 20, 30 ஆண்டுகளுக்குப் பிறகு பயன் தருமோ அது போல் இக்கருத்துகளை உள்ளத்தில் போட்டு அவ்வப்போது அசை போட்டு வந்தால் பெரும் பயன் தரும்; வாழ்வு சிறப்புறும்.

இவை எவையும் என்னுடைய கண்டு பிடிப்புகள் அல்ல. இவை மூத்தவர்களும் முன்னோர்களும் அறிஞர்களும் வலியுறுத்திச் சொல்லியவையே. ஆனால் இவற்றை என் வாழ்க்கையில் உரசிப் பார்த்துப் பின்பற்றிப் பயனடைந்ததால் மணமக்களுக்குச் சொல்ல விழைகிறேன்.

இந்தத் திருமண விழா அழைப்பிதழில் மூன்று திருக்குறள் வரிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை
அன்பின் வழியது உயிர்நிலை
பெரியாரைப் பேணித் தமராக் கொளல்

எது அறன் என்பதற்கு அந்த முழுக்குறளையும் பார்த்தாலே போதும்.

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பதில்லாயின் நன்று

மனித சமுதாய விலங்கு. அவன் தன் விருப்பப் படியே 100 விழுக்காடு வாழ்ந்து விட முடியாது. பிறர் விருப்பப் படியே 100 விழுக்காடு வாழ்ந்து விட முடியாது. 'உனக்காகவே நான் வாழ்கிறேன்' என்று திரைப்படப் பாடல் பாடலாம். ஆனால் நடப்பு உலகில் அது விதிவிலக்கே.

எனவே மனிதன் சில உரிமைகளைப் பெறுவதற்காகச் சில கடமைகளை மேற்கொள்வதே சமுதாயத்திற்கும் அவனுக்கும் உள்ள ஒப்பந்தம். அதைச் சிறிய அளவில் மேற்கொண்டு கற்று, பின்பற்றிப் பழகி வளருவதற்கான வாய்ப்பே இல்வாழ்க்கை.

குடும்பம் என்பது சிறிய சமுதாயம். சமுதாயம் என்பது பெரிய குடும்பம். இரண்டிலும் பிறருடன் ஒத்து வாழ்வது தான் சவால்; சாதிக்க வேண்டிய சாதனை. இதையும் வலியுறுத்தித் திருவள்ளுவர் 'ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்' என்று குறிப்பிட்டுள்ளார்.

சுருக்கமாகச் சொன்னால், எப்படி விட்டுக் கொடுத்தும் கேட்டுப் பெற்றும் ஒத்து வாழ்வது என்பதே மணமக்கள் முன் உள்ள, நம் அனைவர் முன் உள்ள வாழ்க்கைப் பெரும்பணி ஆகும். ஆனால், எந்த அடிப்படையில் ஒத்துப் போவது?

அவரவருக்கு அவரவர் எண்ணமே, தேவையே, இன்பமே பெரிது. தனி உயிர்த் துடிப்பே சுய நலம் தான். ஆனால் அந்த உயிர் உருவாகுவதும் பின் வளர்வதும் இருவர் என்ற ஆண், பெண் இணைப்பாலும் அதைச் சுற்றி உறவு, சுற்றம், நட்பு, இனம், சமுதாயம் என்ற பிணைப்பாலுமே ஆகும்.

அதைத் தான், அந்தக் குடும்பம், உறவு, சுற்றம், நட்பு, இனம், சமுதாயம் என்ற பிணைப்பு எனும் அன்பைக் கொண்டு தான் இங்கு உயிர் நிலைக்கிறது என்பதைத் திருவள்ளுவர், 'அன்பின் வழியது உயிர்நிலை' என்றார். ஆக, அந்த அன்பு என்பது தான் ஒத்துப் போவதற்கும், விட்டுக் கொடுத்தும் கேட்டுப் பெற்றும் வாழ்வதற்கு அடிப்படை.

இதைத் தமிழறிஞர் டாக்டர் முவ வலியுறுத்திச் சொன்னார்:
"வாழ்க்கையில் பிணக்கு(சிக்கல்) ஏற்படுவது இயற்கை. அப்போது அறிவு மட்டும் இருந்தால் பயனில்லை, அன்பு இருந்தால் பயனுண்டு"

கணவன் மனைவி உறவில் கணக்குப் பார்த்தால் பிணக்கு தான் வரும் என்பார்கள். ஆனால் கணவன் மனைவி உறவில் மட்டுமன்று, பெற்றோர் பிள்ளை, அண்ணன் தம்பி, அக்கா தங்கை, மாமா மச்சான்.... என்று எல்லா உறவுகளிலும் கணக்குப் பார்க்க வேண்டும். ஆனால் கணக்கை ஒழுங்காக முழுமையாகப் பார்க்க வேண்டும். உடனடிக் கணக்கையும் பார்க்க வேண்டும். தொலை நோக்குக் கணக்கையும் பார்க்க வேண்டும். நடப்புக் கணக்கையும் பார்க்க வேண்டும். நிலைப்புக் கணக்கையும் பார்க்க வேண்டும்.

அறிவு கணக்குப் பார்க்கும். ஆனால் பொதுவாகச் சரியாகப் பார்க்காது. பெரும்பாலும் அறிவு, கணக்குப் பார்க்கும் போது அன்பைக் கழித்து விட்டுத் தான் கணக்குப் பார்க்கும். ஆகவே அது தப்புக் கணக்காகவே வந்து முடியும். அதனால் தான் அறிவு மட்டும் இருந்தால் பயனில்லை என்றார். அறிவின் கணக்கு அரைகுறைக் கணக்கு. ஆகையால் அது பிணக்கைப் பிளவாக்கி விடும்.

நினைத்துப் பாருங்கள். நாம் இந்த உலகில் பிறக்க என்ன தவம் செய்தோம்? எந்த வகையில் நாம் அதற்குத் தகுதியானோம்? காற்று, நீர், வெப்பம், மரம் செடி கொடிகள், ஆறு மலை கடல்கள், புழு, பூச்சி, பறவை, விலங்குகள், அவற்றை அனுபவிக்க ஆறு புலன்கள் இவை நமக்கு இலவசமாக வழங்கப் பட்டுள்ளன. இதுவே இறைவனின் அன்பு அல்லது இயற்கையின் அன்பு.

ஆனால் நாம் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தப் பல கட்டளைகள், விதிகள், எதிர்பார்ப்புகள், முன் நிபந்தனைகளை வைக்கிறோம். அவை கூடாது என்பதன்று. ஏனெனில் அன்பு ஒரு குருட்டு விசை. இயற்கை / இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாது எல்லோருக்கும் மேற்கண்ட இலவசங்களை வழங்கியுள்ளது. ஆனால் மனித வாழ்க்கை என்பது விருப்பு வெறுப்புகளுக்குள் விளையாடுவது. எனவே விருப்பு வெறுப்புகள் மனதில் படியும் கறைகள், மாசுகள். அதைப் போக்குவது அன்பு.

இதையே டாக்டர் முவ 'அன்பு மனமாசைக் கழுவும் கருவியாகிறது' என்றார்.

ஆக, அறனாகிய‌ இல்வாழ்க்கை என்பது அன்பின் வழி நின்று ஒத்து வாழ்வது என்று அறிந்தோம். அதை நாமாக, ஒருவராக, மணமக்கள் இருவராகச் சாதிக்க‌ இயலாது. அங்கு பெரியோர் துணை வேண்டும். பண்பில் மூத்தோர், முன்னோரைப் பேணி அவர் தம் வழிகாட்டுதல்களை அருகில் வைத்துக் கொண்டால் செய்த தவறுகளை மீண்டும் செய்து துன்புறாது தப்பிக்கலாம்.

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை
அன்பின் வழியது உயிர்நிலை
பெரியாரைப் பேணித் தமராக் கொளல்

என்ற இந்த மூன்றும் ஒரு தொடக்கமாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. அவையே போதும் என்று நினைத்து விடக் கூடாது.

அறமாக இருந்தாலும் அன்பாக இருந்தாலும் பெரியோர் சொல் கேட்பதாக இருந்தாலும் எல்லாவற்றிலும் அளவு உள்ளது. எதையும் முழுமையாகக் கண்களை மூடிக் கொண்டுப் பின்பற்றக் கூடாது. 'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' என்றார் திருவள்ளுவர்.

மெய்ப்பொருள் என்றால் என்ன? அதை எப்படிக் காண்பது?

மெய்ப்பொருள் காண்பது என்பது உணவை உண்டு செரித்து உடலுக்குத் தேவையான ஊட்டமாக உயிர்த்துக் கொள்வது. கண்களை மூடிக் கொண்டு சொன்னதை அப்படியே பின்பற்றுவது என்பது உயிர் ஆபத்தில் இருக்கும் போது பிறர் குருதியை உடலில் நேரடியாக ஏற்றிக் கொள்வது போன்றது.

அது போல் வாழ்வில் நாம் சிந்திக்க இயலாத தடுமாற்றம், துன்பத்தில் இருக்கும் போது அவசரத்திற்கும் அவசியத்திற்கும் பெரியோர், மூத்தோர் சொல்வதை அப்படியே கேட்டு மீளலாம். ஆனால் அன்றாட நடைமுறையில் அவற்றை நாம் சிந்தித்து, உரசிப் பார்த்து நம்முடைய அனுபவமாக உயிர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே மெய்ப்பொருள் காண்பதாகும்.

எனவே இந்த மூன்று திருக்குறள் வரிகளையும் இவை போன்ற பல நல் வாழ்விற்கான சூத்திரங்களையும் தழுவி உள்ளடக்கிக் கடந்து சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் வாழ்க்கை என்பது 'அளவறிதல்' என்று சொல்லி விடலாம்.

'மிகினும் குறையினும் நோய் செய்யும்' என்று திருவள்ளுவர் சொன்னது உணவில் மட்டுமன்று உணர்விலும் தான், உழைப்பிலும் தான், உறக்கத்திலும் தான், துய்ப்பிலும் தான், துயரத்திலும் தான். வரவு செலவிலும் தான். உறவு உரசலிலும் தான்.

வாழ்வில் தேவையற்ற பண்புகள் என்று எதுவும் இல்லை. கோபம் இல்லாது, பொய் சொல்லாது, போட்டி மனப்பான்மை இல்லாது, மான அவமானங்கள் இல்லாது வாழ முடியாது. ஆனால் எல்லாம் இடமறிந்து, காலமறிந்து, பயன் கருதி, அளவோடு இருக்கும் போது, பின்பற்றும் போது வாழ்க்கை வளமாகும்.

எனவே உடலைப் பேணுங்கள். உள்ளத்தைப் பேணுங்கள். உறவைப் பேணுங்கள். அதற்கு அன்புச் செல்வத்தை, அறிவுச் செல்வத்தை, பொருள் செல்வத்தை, அருள் செல்வத்தைப் பயன்படுத்துங்கள்; வாழ்வாங்கு வாழுங்கள் என்று மணமக்களை உங்கள் எல்லோர் சார்பிலும் வாழ்த்தி இந்த வாய்ப்பிற்கும் உங்கள் நேரத்திற்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

நன்றி வணக்கம்.

வாழ்த்துரை வழங்குபவர்கள்
வ.வேம்பையன் (கல்பாக்கம்) - வே.தொல்காப்பியன் (இலண்டன்)
தமிழர் திருநாள் அறக்கட்டளை, மறைமலை நகர் – 603209

Thursday, 15 September 2011

தமிழ் ஓர் இன்பம்

2011-09-15


தமிழ் ஓர் இன்பம் - அதைத்
தட்டில்லாது  உண்போம்
'தட்டு' என்பது தமிழைத் துய்க்க நமக்கு எதுவும் (இடைப்பொருள் ‍- தட்டு) தேவையில்லை. 'தட்டு' என்பது தட்டுபாட்டைக் குறிக்கும். தமிழ் தட்டுப்பாடு ('தமிழுக்கு இல்லைத் தட்டுப்பாடு' திரைப்படப்பாடல்) இன்றி கிடைக்கிறது. தட்டு என்பது எல்லை, வரையறை என்றும் கொள்ளலாம். எனவே தமிழை அளவின்றி (தட்டின்றி) அனுபவிக்கலாம் என்றும் பொருள் கொள்ளலாம்.

சோறும் கறியும் உண்டிடத் திகட்டும்
சொல்லும் பொருளும் சுவையே கூட்டும்
சாறும் சதையும் சலித்தே போகும்
சீரும் அசையும் செந்தமிழ் ஆகும்                        (தமிழ் ஓர் இன்பம்)

எதுவும் பழகப் புளிக்கும் வாட்டும்
எதுகை மோனை இதயம் மீட்டும்
அதுவும் இதுவும் அடைந்திட அலுக்கும்
அணியும் தொடையும் ஆவலை வளர்க்கும்    (தமிழ் ஓர் இன்பம்)

வீடும் வாசலும் இடிந்தே வீழும்
வினையும் பெயரும் விரிந்தே வாழும்
காடும் கடையும் காலத்தில் குலையும்
கற்றதும் கேட்டதும் ஞாலத்தில் விளையும்
    (தமிழ் ஓர் இன்பம்)

உடலும் உயிரும் மடிந்து மறையும்
உரையும் பாவும் படிந்து நிறையும்
கடலும் காசும் வற்றி வறளும்
காலம் வெல்லும் வெற்றிக் குறளும்
                    (தமிழ் ஓர் இன்பம்)



Tuesday, 30 August 2011

Ghosts of Father and Son

2008-03-06




Son:
appA, Are ghosts real?
Father:
Yes, they are real.
S:
Where are they?
F:
Right here, we are all ghosts really. But we pretend as if we are not.
S:
How do I find out that I am a ghost?
F:
What do you mean by ghost?
S:
Something that doesn’t exist really but exists only in imagination.
F:
So, if you are a ghost, you don’t exist. That means you can’t find out that you don’t exist.
S:
That doesn’t sound right. Sure I exist.
F:
Yes, yes.. you exist as a ghost.
S:
Still I have a question, if ghosts are not real, exist only in imagination and I am a ghost, so I don’t exist then who is imagining that I am a ghost or pretending that I am not a ghost?
F:
YOU are (the imagination/pretension) imagining/pretending that you are/are not a ghost.
S:
You are kidding, aren’t you?
F:
Sure I am, that’s what ghosts do.

ஒற்றுமையாக இருப்பது என்பது ஒரு தனித்துவமான திறன்

2011-08-30


எல்லோரும் வாயால் தமிழர்கள் ஒற்றுமைப் பட வேண்டும் என்று பேசிக் கொண்டு அவரவர் தனித் தனி மேடை, கட்சி, தலைவர் பதவி என்று பிரிந்து நின்று கொண்டு இருந்தால் மக்கள் எப்படி ஒன்று படுவார்கள்? ஒவ்வொரு பொது விஷயத்திற்காகவாவது (மரண தண்டனை, ஈழத்தமிழர் உரிமை, காவிரி நீர்ச் சிக்கல்...) ஒரு பொது வேலைத்திட்டத்தில் ஒன்றுபடா விட்டால் எப்படி? எல்லாவற்றிற்கும் 'கருணாநிதி கெடுத்து விட்டார்', 'கருணாநிதி கெடுத்து விட்டார்' என்று பல்லவி, அனுபல்லவி, சரணம் வரை அதையே பாடிக் கொண்டு இருந்தால் எப்படி? இன்னும் எத்தனை காலத்திற்கு? கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழப் போவதில்லையே. இன்னும் சில ஆண்டுகளில் வரப் போகும் நிலைமை மாற்றங்களை எண்ணி நம்மைப் போன்றோர் மாற்று அரசியலுக்குக் குரல் எழுப்பி வலிமை சேர்க்க வேண்டாவா?

நாம் சொல்கின்ற ஒற்றுமை தீவிரக் கோடிகளில் இருப்போரிடம் எதிர்பார்க்கவில்லை. எடுத்துக்காட்டாக‌, இந்தியா இந்து நாடாக இருக்க வேண்டும் என்போருக்கும் தமிழ்நாடு தனிநாடாக இருக்க வேண்டும் என்போருக்கும் இடையில் நாம் ஒற்றுமையை, ஒத்துப் போவதை எதிர்பார்க்கவில்லை.

அதே போல் அவரவர் தங்கள் தங்கள் பற்றுகளை விடவோ, தளர்த்தவோ செய்யாமல் எப்படி ஒற்றுமை வரும்? ஒற்றுமை இலவயமாக வராது. ஒற்றுமை என்பது பெயர்ச் சொல் அன்று. அது ஒரு வினைச் சொல். ஒற்றுமையாக இருக்கத் தொடர்ந்து உழைக்காமல் ஒற்றுமை வராது; நிலைக்காது.

என்னுடைய தலைவர் இவர் தான். என்னுடைய கொள்கை, வழி இது தான் என்று ஒவ்வொருவரும் பிடித்துக் கொண்டு ஆனால் ஒவ்வொருவரின் நோக்கமும் இந்திய நாட்டிற்குள் தமிழ் மொழி, தமிழ் இன, நாட்டு முன்னேற்றம், உரிமை பெறுவது என்று சொல்வதில் என்ன பொருள்?

மக்கள் நலன் தான் முதல். அதற்காகவே கொள்கை. கொள்கைக்காகவே இயக்கம். இந்த வரிசையில் பற்றைப் பற்றவும் துறக்கவும் வேண்டும்.

பற்ற:        மக்கள் நலன்-->கொள்கை-->இயக்கம்.
துறக்க‌:    மக்கள் நலன்<--கொள்கை<--இயக்கம்.

இன்றைய நிலையில் தலைவர்கள் இதைச் செய்ய முன்வர மாட்டார்கள். அதற்குப் பல காரணங்கள் (நேர்மையின்மை, அவர்களுக்கு நிதி உதவி செய்வோருக்குப் பொம்மையாக இருத்தல்...) இருக்கலாம். எனவே ஒவ்வொரு இயக்கத்திலும் உள்ளோர் இவ்விதம் கேள்வி கேட்பதன் மூலம் தலைவர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். நம்மைப் போன்று இயக்கத்தை நம் வாழ்வுக்குச் சார்ந்து இல்லாதவர்கள் இப்படியான சிந்தனைகளைப் பரப்ப வேண்டும்.அதற்குப் பதிலாகப் புகழ்ந்து, இகழ்ந்து முன்பு செய்த தவறையே செய்யலாமா? அது சரியான வழிகாட்டுதலா?

இன்று ஒவ்வொரு கட்சியின் முன்னணி செல்வாக்குடையோர், நம்மைப் போன்றோர் (professionals) எங்கு அதிக சம்பளம், பதவி உயர்வு கிடைக்கிறதோ அங்கு தாவுவதைப் போன்று 'கட்சியைப்' பணம், பதவி கறக்கும் எந்திரமாக்கிவிட்டனர். அதற்கு கொள்கை என்பதும் நோக்கம் என்பதும் விளம்பர உத்திகளாகி விட்டன. அதனால் அத்தகைய கட்சியால் பலன் பெறுவோர் (சிலர் தவிர) என்றும் இன்றைய நிலைமை மாற (பேசுவதைத் தவிர) உதவமாட்டார்கள். 

சில தீயணைக்கும் வேலைகளின் தீவிரம், அவசரம் கருதி நாம் இவர்கள் பின்னால் நின்றால் நாம் பெரிய தவறு செய்கிறோம். இவர்கள் ஒரு தீயை அணைத்த பின் அடுத்த தீ வரும் படி வேலை செய்து கொண்டு இருப்பார்கள். தீ பிடிக்காத பொருள்களைக் கொண்டு வீடு கட்டுவதிலும் அதற்கான ஒழுங்கு முறை, கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதிலும் ஆர்வம் உள்ளவர்களாகக் காட்டிக் கொள்வார்களே தவிர அதில் தீவிரமாக இறங்க மாட்டார்கள்.

மக்கள், 'இந்தத் தீயணைக்கும் அரசியல் வேண்டாம்' என்று நிராகரிக்க நாம் உழைக்க வேண்டும். அது தான் நம்மைப் போன்றோர் இளைஞர்களுக்குக் காட்ட வேண்டிய வழி. அப்படி உழைத்திருந்தால் 'ஜெயலலிதா' இப்படிப் பெரும்பான்மை பெற்றிருக்க வாய்ப்பில்லை. நாம் உடனே கூட்டணி அரசால் ஏற்படக் கூடிய குழப்பம், பின்னேற்றம் இவற்றைக் கண்டு தயங்குகிறோம். போரில் உயிரை விட அல்லது விடுவதைப் போற்றுகிறோம். ஆனால் போர் அல்லாத சிவில் வாழ்க்கையில் முள்பாதையில் மலையேறுவதைத் தவிர்க்க நினைக்கிறோம்.

'கேளுங்கள் கொடுக்கப்படும்' என்றார் ஏசப்பா. எதைக் கேட்ட (demand) வேண்டும் என்ற சிந்தனையை, தெளிவை உருவாக்க வேண்டும்.

இன்றுள்ள 'ஒற்றுமையின்மை' என்ற நிலையிலிருந்து 'ஆரோக்கியமான ஒற்றுமை' என்ற நிலையை அடையப் பலவிதமான சிக்கலான கடினமான துயரமான இடைநிலைகளின் (கூட்டணி அரசு, குழப்பம், மக்கள் நிராகரிப்பு, சில முறை ஆட்சிக் கவிழ்ப்பு....) வழி நடந்தே ஆக வேண்டும். அப்படி அல்லாது எதிர்பார்ப்பது உழைக்காமல் விளையும் அற்புதத்திற்குக் காத்திருப்பதாகவே ஆகும். ஒற்றுமையாக இருப்பது என்பது ஒரு தனித்துவமான திறன் (skill). அது பயிற்சி இல்லாது நமக்கு வந்து விடாது.

பெரியார் தன்னுடைய பணியைக் குறித்து, "இதைச் செய்ய எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ ஆனால் இதைச் செய்தாக வேண்டும், இதைச் செய்ய யாரும் முன்வரவில்லை; எனவே நான் என் மேற்போட்டுக் கொண்டு செய்கிறேன்" என்றார்.

ஆனால் நாம் மாற்று அரசியலுக்குக் குரல் எழுப்பி வலிமை சேர்க்கும் பணியைச் செய்யத் தேவையான வாய்ப்பு, தகுதியுடன் (அரசியலால் வாழ்வு, இலாபம் இன்மை, இவற்றைப் பரப்ப‌ சுதந்திரம்) உள்ளோம். நம்மால் (நம்மைப் போன்றவர்களால்) மட்டுமே செய்யக் கூடிய பணியை அறிந்து (அடையாளம் கண்டு) அதைச் செய்வதுதான் சரியானதாகவும் (right) திறன்மிக்கதாகவும் (effective and productive) இருக்கும். அதற்குத் தேவையான திறன்களை (skills) வளர்த்துக் கொள்ளவும் வேண்டும். நம்முடைய ஆற்றலைப் பிறர் செய்யக் கூடிய தீயணைக்கும் வேலைகளில் ஓரளவுக்கு மேல் ஈடுபட்டு விரயமாக்கி விடக் கூடாது.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க‌
செய்யாமை யானும் கெடும் (திருக்குறள்: 466)

Monday, 29 August 2011

புதிய ஆரோக்கியமான அரசியல் --> புதிய பெயர்

2011-08-29


வைகோ தேர்தல் சீட்டுகளுக்காக வேடம் தரிக்காமல் தனி நபர் தாக்குதலை மையப்படுத்தாமல் தான் கடந்த காலத்தில் செய்த தவறுகளையும், தவறான செயல் திட்டங்களையும் பொது மன்றத்தில் ஒப்புக் கொண்டு ஒரு தீர்க்கமான நடைமுறைச் சாத்தியமான மாற்று அரசியல் அணியை, அரசியல் பண்பாட்டை வளர்த்தெடுக்க நாம் ஆதரவு அளிப்போம்; துணை நிற்போம்.

முதலில் வைகோ, மதிமுக என்ற பெயரை மாற்றிக் கொள்ளலாம். 'தமிழ்நாட்டு வளம்' / 'தமிழ்நாட்டோர் அணி' / ''தரமிக்கத் தமிழ்நாடு'' / 'தன்னிகர் தமிழ்நாடு' / 'மறுமலர்ச்சித் தமிழ்நாடு' போன்ற பெயரை வைத்துக் கொள்ளலாம். அதில் தமிழ் மொழி, தமிழர் (தமிழ் நாட்டில் வாழ்வோர் அனைவரும்), தமிழ் நாடு மூன்றும் அடங்கும்.

பெரிய வணிக நிறுவனங்களும் பன்னாட்டுக் குழுமங்களும் தங்கள் அடையாளப் பெயரை மாற்றுவதற்கு முக்கியத்துவம் தருவதையும் செலவழிக்கும் தொகையையும் கருத்தில் கொண்டால் வைகோ பழைய பாழாய்ப் போன அரசியலிருந்து வேறுபடுத்திக் காட்ட, செயல்பட‌ (உண்மையிலேயே விரும்பினால்) பெயர் மாற்றம் முக்கியமாகும். இது 'திராவிட' அடையாளத்தை நீக்க விரும்புவோருக்கும் உகந்ததாக இருக்கும்.  இதையும் அவரின் முடிவாகச் செய்யாமல் கட்சியில் கலந்து, விவாதித்து அதே சமயம் இவர் அதை வலியுறுத்திப் பேசி, மக்களாட்சி முறையில் முடிவு செய்யலாம்.

அரசியல் அணியும் சமுதாய சீர்திருத்த அணியும் இந்த புதிய அமைப்பின் இரண்டு சம அளவிலான முக்கியப் பிரிவுகளாக இருக்க வேண்டும். யாரும் அரசியல் அணியில் நேரடியாக நுழைய இடம் (விதி முறை) இருக்கக் கூடாது. சமுதாய சீர்திருத்த அணியில் வேலை செய்து பக்குவப்பட்ட பிறகே ஒருவர் அரசியல் அணிக்கு (விரும்பினால்) தேர்தெடுக்கப் பட வேண்டும்.

இத்தகைய அமைப்பைக் கட்டி எழுப்பப் பத்தாண்டுகள், அதற்கு மேலும் கூட ஆகலாம். ஆனால் வைகோ போடும் பாதையில் மற்ற கட்சியினரும் வர வேண்டிய கட்டாயத்திற்குள்ளாவார்கள். அது தான் நம் நோக்கமும் கூட. மக்களும் இயக்கங்களும் ஒன்றோடு ஒன்று உறவாடித் துணை புரிந்து மாறி வளர வேண்டும். இன்றுள்ள தகவல் தொழில் நுட்ப வசதிகளைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் இதை விரைவு படுத்தவும் இயலும்.

பெயர் மாற்றம் பெருமளவு இளைஞர்களைப் பங்கு கொள்ள வைக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம். ஆனால் அது அவர்களுக்கு எப்படிப் பங்களிக்கவும் பொறுப்பேற்கவும் வாய்ப்பு தரப்படும் என்பதைப் பொறுத்து உள்ளது.

காலாவதி ஆகி விட்ட, கறை படிந்து விட்ட‌ 'திராவிடம்', 'முன்னேற்றம்', 'கழகம்' போன்ற அடையாளங்கள் இன்றைய சூழ்நிலையில் (வெறுக்காமல்) புறக்கணிக்கப்பட வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும்.

தமிழ் மொழி, தமிழ் நாட்டில் வாழ்வோர், தமிழ் நாடு (பூகோள எல்லைகள், வளங்கள்...) என்ற ஒருங்கிணைக்கும் அடிப்படையிலான அரசியல் அடையாளம் எடுத்துக் கொள்ளப்படக் காத்திருக்கின்றது.

'பெயரில் என்ன இருக்கிறது' என்பதும் தவறு. 'பெயரில் எல்லாம் இருக்கிறது' என்பதும் தவறு. பெயரைச் சரியாகப் பயன்படுத்தினால் பெரிய சாதனைகளைச் செய்ய, பெரிய திருப்பங்களைக் கொண்டு வர‌ப் பெரிய‌ உதவியாகும்.

இது இன்றைய நிலையில் எல்லாக் கட்சி, தலைவர்களையும் இணைத்து நடைபெற வாய்ப்பில்லை. வைகோ தன்னளவில் தன் கட்சி அளவில் நடைமுறைப் படுத்த முயன்றாலே அதில் சிறு வெற்றி பெற்றாலே பெரிய சாதனை, நல்ல தொடக்கம்.

வைகோ, மதிமுக (எடுத்துக் காட்டுகளே) என்பதற்குப் பதிலாக வேறு பெயர்களைப் போட்டுக் கொள்ளலாம்.