03-Mar-2024
மனதைக் கவனி - இப்படி எளிமையாகவும் புரிந்து கொள்ளலாம் - 2
மனம் ஒரு கண்ணாடி
நம்முடைய காலைத் தொடைக்குப் பின்பக்கம் மடிக்க முடிகிறது. ஆனால் காலை முன்பக்கம் மடிக்க முடியமா? முடியாது. தொடை, காலை இணக்கும் முட்டியின் அமைப்பு அப்படிச் செய்ய முடியாத படி அமைந்துள்ளது. இதை நாம் புரிந்து கொள்கிறோம். புத்தகத்தில் படித்து அன்று. நம் உடலைப் பற்றிய நம் சுய அறிவால். அதனால் காலைத் தொடைக்கு முன்பக்கம் மடிக்க முயல்வதில்லை.
இதை நம் மனதிற்கும் பொருத்திப் பார்ப்பதுதான் மெய்யுணர்வு. மனதால் புரிந்து கொள்ளக் கூடியதையும் புரிந்து கொள்ள முடியாததையும் பிரித்து ஆய்ந்து அறிந்து, ஒப்புக் கொண்டு, மனம் தன்னால் இயலாததில் இயலும் என்று மயங்குவதை அடையாளம் கண்டு தவிர்த்துக் கொள்வதே 'மனம் இற்றுப்' போதல்.
மனதை எங்கு பயன்படுத்த வேண்டுமோ, எப்படிப் பயன்படுத்த வேண்டுமோ அப்படி அளவாகப் பயன்படுத்திக் கொள்ளப் பழகுவதுதான் மெய்யுணர்வு. இதை விரிவாகப் பார்க்கும் போது அதில் கடவுள் நம்பிக்கை ஓர் உத்தியாகப் பயன்படலாம். கடவுள் நம்பிக்கை இல்லாமலும் பழகிக் கொள்ள முடியும். அதனால் கடவுள் நம்பிக்கை அவசியமில்லை.
காலைப் பின்பக்கம் மடிக்க எந்த முட்டி இணைப்பு உதவுகிறதோ அதே முட்டி இணைப்புதான் காலை முன்பக்கம் மடிக்க விடாமல் தடுக்கிறது. அதே போல் மேற்கண்டவாறு மனதைப் புரிந்து கொள்வதும் அதைப் பயன்படுத்துவதும் தவிர்ப்பதும் மனமே தான். மனம் அப்படிப் பக்குவப்படுவதை, முதிர்ச்சி அடைவதை நாம் 'தன்னை அறிதல்', 'ஞானம் பிறந்தது', 'மனத்தூய்மை', 'மனத்திட்பம்', 'தவம்' என்று பலவாறு சொல்கிறோம்.
மு.வ. இதையே 'மனம் ஒரு கண்ணாடி. அதில் மாசு படிந்திருந்தால் தன்னையும் தெளிவாகக் காட்டாது, தன்னில் பிரதிபலிப்பவற்றையும் தெளிவாகக் காட்டது' என்று சொல்லியுள்ளார்.
No comments:
Post a Comment