Sunday, 3 March 2024

தன்னிலை விளக்கம் - 1

 20-Feb-2024

தன்னிலை விளக்கம் - 1

குடும்ப வளர்ப்பு, சூழலால் முதலில் மு.வ. நூல்கள் மூலம் தன்னை அறிதல் என்பது மேலோட்டமாக இருந்தது. பிறகு நாத்திக, பகுத்தறிவு சிந்தனைகளில் என் கவனக்குவிப்பு இருந்தது.

என்றாலும் பள்ளிப் பருவத்திலேயே ஆழமாகப் புரியாத வகையில் 'தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே, ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே' என்ற வள்ளலார் பாடல் என்னை ஈர்த்தது, அதைப் பாடிக் கொண்டிருந்தது நினைவில் உள்ளது.

ஓசூரில் வாழ்ந்த காலத்தில் பெரியார் படிப்பக‌த்தில் வரும் தோழர்களிடம் பிறருக்குப் பகுத்தறிவைப் பரப்புவதை விட நாம் முதலில் அதைச் சரியாகப் புரிந்து கொள்வதும் வளர்த்துக் கொள்வதும் அதன்படி வாழ்வதும் முக்கியம் என்று வலியுறுத்திப் பேசி வந்துள்ளேன். நண்பர் தென்னை கணேசன் இதை நன்றாக அறிவார்.

ஒருமுறை மா.லெ.கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஓசூரில் என் இல்லத்தில் வந்து உரையாடிக் கொண்டிருந்து விட்டு, நீங்கள் வழமையா தி.க.காரர் போல் பேசவில்லை என்று சொல்லிச் சென்றார். என் கருத்துகளைச் சொல்வதிலும் திறந்த மனதுடன் மாற்றுக் கருத்துகளை அணுகுவதிலும் உள்ள பக்குவத்தையே அவர் குறிப்பிட்டார் என்று அனுமானித்தேன்.

அதே சமயம் சண்முகசுந்தரத்தின் நண்பர் சந்திரசேகர் என்னைக் குறித்து சண்முகசுந்தரத்திடம் ‘he has more heat than light’ என்று சொன்னார் என்பதைச் சண்முகசுந்தரம் மூலம் அறிந்தேன். அதுவும் ஒரு வகையில் உண்மை. உணர்ச்சிதான் இயக்கும். வெறும் அறிவு மட்டும் வினைக்குத் தூண்டாது.

நானும் நண்பன் ஆறுமுகப் பெருமாள் பிள்ளையுமாக பெங்களூர் சென்று அறிவியல் நூல்கள் வாங்கிப் படித்து வந்ததால் பகுத்தறிவு மட்டும் போதாது என்றும் அறிவியல் மனப்பான்மையின், உலகையும் நம்மையும் அறிவியல் பூர்வமாகப் புரிந்து கொள்வதன் முக்கியத்துவ‌ம் விளங்கியது. இதில் நண்பர்கள் சண்முகசுந்தரம், தில்லைக்குமரன் வழியாக அறிமுகமான சில‌ நூல்களுக்கும் பங்குண்டு.

பிறகு, நண்பர் பேராசிரியர் வீரபாண்டியன் மூலம் மார்க்சிய பெரியாரியல் சிந்தனைகள் வந்து சேர்ந்தன. முன்பு இருந்த நாத்திகம், பகுத்தறிவு என்பது பெரியாரியலின் ஒரு அம்சமே. ஆனால் வீரபாண்டியன் மூலம் பெரியாரியலை விரிவாகப் புரிந்து கொள்ள வழி கிடைத்தது.

தம்பி திருவள்ளுவன் மூலம் வந்த ஓமியோபதி அடிப்படைகள் குறிந்த கருத்துகளும் இவற்றிற்கிடையில் வளம் சேர்த்தன.

ஓசூர் பெரியார் படிப்பகத்தில் வெறும் பகுத்தறிவு என்று இல்லாமல் அறிவியல் கண்ணோட்ட விளக்கங்களும் நடத்தினோம். சண்முகசுந்தரத்தின் துணைவியார் அவ்விதம் உயிரியல் அறிவியல் வகுப்பு வழங்கினார்.

தென்னை.கணேசன் மூலம் அறிமுகமான புலவர் நாகூரான் சைவசித்தாந்த  வகுப்பு எடுத்தார்.

பெரியார் படிப்பகம் ஆரம்பிக்கும் முன்னரே, நண்பர்கள் நாங்கள் தங்கியிருந்த அறைக் கூடத்திலேயே கு.வெ.ஆசான், குடந்தை கதிர். தமிழ்வாணன் போன்றோரின் வரலாறு, தமிழ் இன்பம், இலக்கண‌ம் பற்றிய‌ வகுப்புகள் நடத்தினோம். அறிவுப் பணி, நல்ல, முற்போக்கு சிந்தனைகளைப் படிப்பதும் பகிர்வதும் பிறரிடமிருந்து பெறுவதும் தொடர்ந்து நடந்து வந்தன.

அடுத்து பதின்கவனகர் கனகசுப்புரத்தினம் அவர்கள் தொடர்பால் மெய்யுணர்வுப் பார்வை கிடைத்தது. ஆனால் அதை அப்போது மெய்யுணர்வு என்று நான் உணரவில்லை. பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை, பெரியாரியல் உடன் அப்பார்வை சில புதிய, ஒன்றை ஒன்று நிறைவு செய்யும், கோணங்களைத் தந்தது. நான் அறிவியல் பார்வையில் அவருடன் பகிர்ந்து கொண்டதை அவர் மேடைப் பேச்சில் குறிப்பிட்டும் வந்தார்.

என்றாலுமே திருக்குறளில் அறத்துப்பாலில் துறவறவியலின் அதிகாரங்களில் என் கவனம் திரும்பவில்லை. பாயிரம் அதிகாரங்கள் மனப்பாடமாய் இருந்தாலும் மனதை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

அதன் பின் தேடியவற்றையும் கிடைத்தவற்றையும் சுருக்கிச் சொன்னால் இன்று பகுத்தறிவு, அறிவியல், சமுதாய சிந்தனைகள் சரியான திசையில் செல்ல ஒவ்வொருவருக்கும் தன்னைப் பற்றிய, தான் யார் என்பது பற்றிய தெளிவு அவசியம் என்று புரிகிறது. அதை மெய்யுணர்வு என்று சொல்வதில் அல்லது வழக்கத்திலுள்ள ஆன்மீகம் என்று அழைப்பதில் எனக்குத் தயக்கமில்லை.

ஆனால் இதில் வளர்ந்து வரும் தெளிவு, உறுதி அப்படியான பெயர்களுக்குள் அடைப்பட்டுக் கொள்ளாமலேயே புரிந்து கொள்ள முடியும் என்று புலப்படுகிறது. அதை அவ்வப்போது பகிர்ந்து கொண்டு வருகிறேன். சில என் எழுத்தாக இருக்கலாம். சில அலன் வாட்ஸ் போன்றோரின் பேச்சாக இருக்கலாம். மற்றும் சில அறிவியல் தளத்தில் உள்ளவர்களின் கட்டுரை, பேட்டியாக இருக்கலாம். சில ஆன்மீக, குறிப்பாக ஞான மார்க்க, உரைகளாக இருக்கலாம்.

பகுத்தறிவு, அறிவியல், சமுதாய நலன் என்பவை தேவையில்லாமல் போய் விடவில்லை. அவை இன்றும் என்றும் அவசியம். அறிவியல் மனிதர் வந்தடைந்துள்ள, வளர்த்தெடுத்துள்ள ஒப்பற்ற கருவி. ஆனால வழக்கம் போல், அதாவது மதத்தின் உண்மையான அடிப்படை போல் அறிவியலும் சீர்கெட்டு வருகிறது. 

மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு அப்பால் மதம் என்று எதுவும் உள்ளதா?

இங்கு மதம், மெய்யுணர்வு இரண்டும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

அறிவியலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அப்பால் அறிவியல் என்றும் எதுவும் உள்ளதா?

இரண்டுக்குமே இல்லை என்றும் இருக்கிறது என்றும் சொல்லலாம்.

பின்பற்றுபவர்களின் பண்பைத் தவிர்த்து பின்பற்றப்படும் கொள்கை என்பது வெறும் மனக்கோட்டையே என்ற பார்வையில் இல்லை.

பின்பற்றுதல் என்பது என்றுமே 100 விழுக்காடு சரியாக இருக்க முடியாது, கொள்கை என்பது ஒரு செம்மையான முழுமையான ஒரு வகையில் அடையா இயலாத‌ நிலையைச் சுட்டுவது என்ற பார்வையில் இருக்கிறது.

---

இது என் மனப்போக்கு வளர்ந்து வந்தது பற்றி ஒரு மேலோட்டமான சுருக்கம். இதில் பல நெளிவு, சுளிவு, வளைவு, வழி தவறுதல்கள் எல்லாம் கொடுக்கப்படவில்லை. 

இது ஒரு வகையில் எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் கதை. இது போல் ஒவ்வொருவருக்கும் கதை இருக்கும். நம் பெயரே நம் கதையின் பெயர்தான்.

எல்லோருடைய‌ வாழ்க்கைக் கதையும் முக்கியம். எதுவும் உயர்வு தாழ்வு கிடையாது.

ஒரு வகையில் நம் கதைகள் என்பது இருப்பின் கதைகளே. 

(தொடரும்...)

No comments:

Post a Comment