Thursday, 15 September 2011

தமிழ் ஓர் இன்பம்

2011-09-15


தமிழ் ஓர் இன்பம் - அதைத்
தட்டில்லாது  உண்போம்
'தட்டு' என்பது தமிழைத் துய்க்க நமக்கு எதுவும் (இடைப்பொருள் ‍- தட்டு) தேவையில்லை. 'தட்டு' என்பது தட்டுபாட்டைக் குறிக்கும். தமிழ் தட்டுப்பாடு ('தமிழுக்கு இல்லைத் தட்டுப்பாடு' திரைப்படப்பாடல்) இன்றி கிடைக்கிறது. தட்டு என்பது எல்லை, வரையறை என்றும் கொள்ளலாம். எனவே தமிழை அளவின்றி (தட்டின்றி) அனுபவிக்கலாம் என்றும் பொருள் கொள்ளலாம்.

சோறும் கறியும் உண்டிடத் திகட்டும்
சொல்லும் பொருளும் சுவையே கூட்டும்
சாறும் சதையும் சலித்தே போகும்
சீரும் அசையும் செந்தமிழ் ஆகும்                        (தமிழ் ஓர் இன்பம்)

எதுவும் பழகப் புளிக்கும் வாட்டும்
எதுகை மோனை இதயம் மீட்டும்
அதுவும் இதுவும் அடைந்திட அலுக்கும்
அணியும் தொடையும் ஆவலை வளர்க்கும்    (தமிழ் ஓர் இன்பம்)

வீடும் வாசலும் இடிந்தே வீழும்
வினையும் பெயரும் விரிந்தே வாழும்
காடும் கடையும் காலத்தில் குலையும்
கற்றதும் கேட்டதும் ஞாலத்தில் விளையும்
    (தமிழ் ஓர் இன்பம்)

உடலும் உயிரும் மடிந்து மறையும்
உரையும் பாவும் படிந்து நிறையும்
கடலும் காசும் வற்றி வறளும்
காலம் வெல்லும் வெற்றிக் குறளும்
                    (தமிழ் ஓர் இன்பம்)



No comments:

Post a Comment