நான் வேறு, நான்- நான் வேறா?
2022-07-15
தேவராஜ்
கீழே உள்ள விளக்கம் புரியவில்லை. புரிந்தால் விளக்கவும்.
ரமணரின் கீதாசாரம்
“நான்” என்னும் எண்ணம் (கருத்து) வேறு, “நான்-நான்” என்னும் உணர்வு வேறு. முன்னதை நாம் பொதுவாக நமது விழிப்பு நிலையில் அனுபவிப்போம். நமது அகந்தை அனுபவங்களும் அதனுடன் தொடர்பு கொண்டது தான். அதுதான் நம்மை படாத பாடு படுத்துகிறது. பின்னதாகிய “நான்-நான்” என்னும் உணர்வு நம்முடன் எந்த நிலையிலும் இருப்பது. அந்த உணர்வை ஓரளவுக்கு இப்படி விளக்கலாம்.
வெகு காலம் முன்பு எப்போதோ எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் ஒன்றை ஒரு நாள் நாம் பார்க்கும் போது, “நான் இப்படியா இருந்தேன்” என்று எவருக்கும் தோன்றும் அல்லவா? அந்த எண்ணம் நமது உடலைப் பொறுத்ததே. உடலுக்கு ஒரு வளர்ச்சியோ, தளர்ச்சியோ உண்டு. அதன்படி புகைப்படமும் இருக்கும்.
அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டபோது உங்களால் அந்தக் காலத்திய உணர்வை மீண்டும் அசை போட்டு, இப்போது எண்ணிப் பாருங்கள்.
அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட போது உங்களது உடல், மனம், மற்றும் ஏனைய எண்ணங்களைத் தவிர அப்போது “நான்” என்று இருந்த உங்கள் இருப்பாகிய உணர்வும், இப்போது “நான்” என்ற உங்களது உணர்வும் வேறு வேறு என்றா உணர்கிறீர்கள்?
உங்களைப் பொறுத்தவரை “நான்” என்ற உணர்வு எந்த மாற்றமும் இல்லாது அப்படியேதானே இருக்கிறது? உடல் வளர்ந்திருக்கலாம், தளர்ந்திருக்கலாம், மனமோ எண்ணங்களோ அடியோடு மாறியிருக்கலாம். ஆனாலும் “நான்” என்ற உணர்வு ஏதும் மாறாது அப்படியேதானே இருக்கிறது?
“நான்-நான்” என்ற அந்த உள்ளுணர்வைப் பிடித்துக் கொண்டு எப்போதும் இருக்கப் பாருங்கள். அதுதான் உங்கள் உண்மையான சொரூபம் என்றும், அதுவே உங்களைச் சுற்றியுள்ள அனைத்து சீவராசிகளின் உண்மையான
சொரூபம் என்றும் காலப் போக்கில் உணர்வீர்கள். அதுதான் க்ஷேத்திரஞ்ஞன் என்று கூறப்படும் ஆன்ம சொரூபம் என்று சொல்லலாம். அதற்கு எல்லை இல்லை, காலமோ, தேசமோ எதுவும் இல்லை. சுருங்கச் சொன்னால் அது ஒன்றுதான் இருப்பது அதை ஒருவன் அப்படி இருந்து தான் உணர முடியுமே தவிர யார், எவர் எப்படி விளக்கியும், சொல்லியும் அதை உணரவைக்க முடியாது.
இதுதான் ஜீவ-ஈஸ்வர ஐக்கியம் அல்லது அபேதம் என்று கூறப்படுகிறது. மோக்ஷம், விடுதலை, வீடுபேறு என்று விதவிதமாகச் சொல்லப்படுவதெல்லாம் அதை உணருவதில் தான் இருக்கிறது. அவன் அருளிருந்தால் அந்த உணர்ச்சி இங்கேயே, இப்போதே கைவரக் கூடும். ஏனென்றால் அதுவன்றி வேறு எதுவும் இல்லை.
=================
தொல்:
மேலே அழுத்தம் (highlighted in red) கொடுக்கப்பட்ட வாக்கியத்தின் படி, இதை விளக்கிப் புரிய வைக்க முயல்வது, புரிந்து கொள்ள முயல்வது இயலாது.
என்றாலும் மேற்கண்ட கீதாசாரம் எழுதப்பட்டுள்ளது, விளக்கிச் சொல்லிப் புரிய, உணர வைக்க முற்பட்டுள்ளது.
எனவே அதே பாணியில் நாமும் முயற்சி செய்வோம்.
மெய்யுணர்வுத் தேடலில் பல நிலைகள் உள்ளன. தோராயமாக இப்படிச் சொல்லலாம்.
1. தூண்டுதல்
ஏதோ ஒரு வகையில் நாம் கொண்டிருக்கும் கருத்துகளின் மேல் அடிப்படையான சந்தேகம் வருவது. இது நமக்கோ பிறருக்கோ நடந்த அதிர்ச்சி தரும் துன்பமான சம்பவமாகப் பெரும்பாலும் இருக்கும். என்றாலும் சில சமயங்களில் எதிர்பாராத இன்பமான ஒன்றாகவும் இருக்கலாம். மேலோட்டமான ஐயம் எல்லோருக்கும் பல நேரங்களில் வரும். இஃது அப்படியானதன்று. நம்மை உலுக்கிக் குலுக்க வைக்கும் வகையானது.
இஃது அதிர்ச்சியான சம்பவம் இல்லாமல், இருப்பின் (existence) உண்மை பற்றிய ஆர்வம், அறிவுத் தாகத்தாலும் வரலாம்.
2. தேடல்
நாம் பார்க்கும் உலகம், நம்மைப் பற்றிய நம் புரிதல் என்பன ஆட்டம் கண்டு பலவற்றைப் படிப்பது, விவாதிப்பது, தியானம் போன்றவற்றைப் பின்பற்றுவது, சத்சங்கத்தில் கலந்து கொள்வது என இந்நிலைக்குள் எனோ தானோ முதல் தீவிரமான பலப் படிக்கட்டுகளில் பல வழிகளை, பல குருக்களை, பல ஆன்மீக மடங்களை, பல தத்துவங்களைத் தேடுவது.
3. புரிதல் / உணர்தல்
இதிலும் பலப் படிக்கட்டுகள் இருக்கும். அறிவு பூர்வமாகப் புரிந்து கொண்டதாகத் தோன்றும். உணர்வு பூர்வமான அனுபவம்
இல்லையே என்று ஏங்கும். சில நொடிகள் வரும் அனுபவத்தை எப்படி நீடிப்பது என்று துடிக்கும். புரிந்தது போலும் இருக்கும். புரியாதது போலும் இருக்கும்.
அடுத்தவர்களுக்குச் சொல்லி விளக்க முற்படும்.
4. முடிதல்
இதை நிலைபெறுதல் (gaining stability) என்றும் சொல்லலாம். இதுவும் பல கட்டங்களின் வழிப் படிப்படியாகச் செம்மையாகும். முடிவாக எப்படி அமையும் என்பதும் பல வகைப் படும். ஒருவர் இதைப் பரப்ப மடம், நிறுவனம், குழு, சங்கம்... அமைக்கலாம். சொல்வதற்குத் தனக்கு அந்நியமாய் யாரும் இல்லை என்று அமைதியாக, வெளிச்சத்திற்கு வராமல் வாழ்ந்து மறையலாம். இந்த இரண்டு கோடிகளுக்கும் இடையில் பலவாறு அமையலாம். ஆனால் முடிவு எப்படி அமைந்தாலும் தேடல் முடிந்து விடும். தாகம் தணிந்து விடும்.
இஃதை ஒரு வழிகாட்டியாகக் கொண்டோமானால் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அளந்து கொள்ளலாம்.
மெய்யுர்ணவுத் தேடலில் ஒருவர் எழுப்பும் கேள்வியே அவர் எந்த நிலையில் அதற்குள் எந்தப் படிக்கட்டில் உள்ளார் என்பதைக் காட்டிவிடும்.
எனவே பதில் அதைப் பொறுத்தே இருக்கும். ஆனால் நம்மைப் போல் ஒரு குருவிடம் நேரடியாகக் கேள்வி கேட்டு பதில் பெறாமல் குரு முன்போ தற்காலத்திலோ பிறருக்குச் சொன்ன பதில்களை, எழுதிய நூல்களைப் படிக்கும் போது பல நிலை, படிக்கட்டுகளில் உள்ளவர்களுக்கானதை எல்லாம் முன்னும் பின்னும் படித்துப் பார்த்து, புரிந்து கொள்ள முற்பட்டுக் குழப்பிக் கொள்ளலாம். அப்படிக் குழப்பிக் கொள்ள வாய்ப்பு அதிகம்.
இதற்காகவே ஒரு குருவின் தொடர்பு அவசியம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் எல்லாம் மாறி வருவது போல் இதுவும் இக்காலத்தில் மாறி விட்டது. இன்று பல புரிதல் நிலைகளில் உள்ள நண்பர்கள் ஒருவருக்கொருவர் கலந்து பேசித் தெளிவாக்கிக் கொள்ள வாய்ப்பு வந்து விட்டது. தகவல் தொடர்பு தொழில்நுடப வளர்ச்சி, வலைதளங்கள், சமூக ஊடகங்கள் போன்றவை அதை எளிமை ஆக்கி விட்டன.
இதை இத்தோடு நிறுத்திக் கொள்வோம்.
***
'அது ஒன்றுதான் இருப்பது' என்று சொல்லி விட்டு, 'அவன் அருளிருந்தால் அந்த உணர்ச்சி இங்கேயே இப்போதே கைவரக் கூடும். ஏனென்றால் அதுவன்றி வேறு எதுவும் இல்லை'.
பெரியார் சொல்வார்: பைத்தியக்காரன் மதுபோதையில் உளறுவது போல் என்று. அதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு.
ஒன்றுதான் இருக்கிறது என்றால் 'அவன்' அதுவாகத் தானே இருக்க முடியும். அப்படியென்றால் 'அவன்' யாருக்கு அருள் பாலிப்பது? ஒன்றுதான் இருப்பது என்கிற போது அஃது இப்போதே அப்படித்தானே இருக்க முடியும். அப்படி
இருக்க அதை 'கைவரக் கூடும்' என்று பிறகு ஒரு நேரத்தில் நடப்பதற்கு என்ன இருக்க முடியும்? ஒரே உளறல், குழப்பம்.
இது 'தேடல்' நிலையில் ஒரு படிக்கட்டில் உள்ளவர்களுக்குச் சொல்லப்படுவது. இதில் மேற் சுட்டிக்காட்டியவாறு உள்ள முரண்பாடுகளை ஒருவர் அடையாளம் கண்டு கேள்வி கேட்டால், அவர் அடுத்தப் படிக்கட்டுக்குப் போய் விட்டார் என்று பொருள். 'புரிதல் / உணர்தல்' நிலைக்குத் தயார் என்று கூடச் சொல்லலாம்.
மேலே மெய்யுணர்வுத் தேடலில் தோராயமாக நான்கு நிலைகள் சொன்னது போல், புரிதலில் பல கோணங்கள் உள்ளன. அவற்றை ஏற்கனவே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
https://tholthamiz.blogspot.com/2022/02/blog-post_8.html
நிலையில்லாக் காட்சியைக் காட்டும் / காணும் / காட்சியாகத் தோன்றும் நிலையானது எது?
- காலம், இடம் என்பதன் பொய்மை (அதாவது இக்கணத்தில் தோன்றுவதல்லாமல் வேறு இருப்பு இல்லை; கனவிலும் காலம், இடம் வருகின்றது என்பதுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்)
- மாறும் காட்சிகளுக்கு ஆதாரமாக இருக்கும் மாறா ஒன்று (என்ன பெயர் வேண்டுமென்றாலும் அதற்கு வைத்துக் கொள்ளலாம்)
- அம்மாறும் காட்சிகளுக்குள் இந்த (நம்) உடல், மனம் என்பனவும் அடங்கும்.
- பிறப்பு, வாழ்வு, இறப்பு, இன்பம், துன்பம் என்பன நம் உண்மை இருப்பு அல்ல
- மாறா அவ்வொன்றே நம்மின் உண்மையான இருப்பு (அறிவுணர்வு)
- நான் இந்த உடல் மனம் மட்டுமே என்ற தனித்த ஒன்று என்பது கருத்துச் சிறை.
- நானும் இருப்பும் ஒன்றே என்ற புரிதலில் நான் இந்த உடல் மனமும் தான் என்ற முழுமையில் சிறையும் (தளையும்) இல்லை; விடுதலை (மோட்சம்) என்பதும் இல்லை.
- காண்பான், காணுதல், காட்சி மூன்று (திரிபுடி trio) ஒரு சேர எழுந்து மறைகின்றன
- அம்மாறா ஆதாரமே (ஆன்மாவே) எல்லாத் தோற்றமாகவும் உள்ளது.
- அம்மாறா ஆதாரம் இருப்பாகவும் (சத்), அறிவாகவும் (சித்) பேரின்பமாகவும் (ஆனந்தம்) உள்ளது. இப்பேரின்பம் என்பது இன்பம் துன்பம் என்ற இரட்டைகளுக்கு (துவைதம், duality) அப்பாற்பட்டது.
- அம்மாறா ஆதாரமே எல்லையற்ற கட்டற்ற சுதந்திரம் (விடுதலை, வீடுபேறு, நிர்வாணம், மோட்சம்...); அதுவே நம் இயல்பு இப்போதே...
- அவ்வியல்பு மறக்கப் படலாம்; மறைக்கப் படலாம். ஆனால் நீக்க முடியாது; விலக்க முடியாது; துறக்க முடியாது..
இப்படியான அம்சங்களை ஒவ்வொன்றாகத் தனித்தனியாகப் புரிந்து கொள்ள முயல்வது எல்லா ஐயங்களையும் (மறத்தல், மறைத்தல்) தீர்க்காது. ஆனால் முழுமையை நோக்கித் தள்ளும்.
மேலே எல்லாக் கோணங்களும் கொடுக்கப்படவில்லை. ஒவ்வொருவரின் வயது, இயல்பு, அனுபவம், படிப்பு, தொழில் போன்றவற்றிற்கு ஏற்பப் புதிய கோணங்கள் தேவைப்படலாம்.
அறிவியல், பகுத்தறிவுப் பார்வையுள்ளவர்களுக்குத் தகக் கொள்ள வேண்டிய கோணங்கள் பிறருக்குத் தேவைப்படமால் போகலாம் அல்லது அவர்களுக்கு அவை முக்கியமானவையாக இருக்கா.
ஆக, இப்படியான பல கோணங்களில் ஒன்றுதான், 'நான்' என்ற எண்ணம் வேறு, 'நான்-நான்' என்ற உணர்வு வேறு என்பதும்.
'நான்' என்ற பிரிவினை உணர்ச்சியை / எண்ணத்தை உண்மை என்று நம்பிக்கொண்டிருப்பவருக்கு, அதன் பொய்மையைச் சுட்டிக்காட்ட, விளக்க, 'நான்' என்ற எண்ணம் (கருத்து) வேறு, 'நான்-நான்' என்ற உணர்வு வேறு என்ற மற்றொரு பொய்யான பிரிவினை ஓர் உத்தியாகப் பயன்படுத்தப் படுகிறது.
'நான்' என்ற கருத்தையும் (concept / எண்ணத்தையும்) 'நான்' என்ற இருப்பையும் (existence / உணர்வையும்) பிரித்துக் காட்டுவதற்காக இரண்டாவதை 'நான்-நான்' என்று ரமணர் குறிப்பிடுவார். அஃது ஓர் உத்தியே தவிர உண்மையாக நான்-நான் என்று ஏதோ தனியாக இருப்பதாகப் பொருள் இல்லை.
குத்திய முள்ளைத் தோண்டி எடுக்க மற்றொரு முள்ளைப் பயன்படுத்துவது போல்தான் இதுவும். குத்திய முள்ளை எடுத்த பின் அதை எடுக்கப் பயன்பட்ட முள்ளையும் சேர்த்துத் தூக்கி எறிந்து விட வேண்டும்.
முந்தைய மின்னஞ்சலில் அனுப்பிய ரமணரின் வாக்கியத்தைக் கவனிப்போம்:
"மேலே மேலே போகப் போக, முந்திய படிகள் பூர்வ பக்ஷமாகிவிடும் (ஆரம்ப நிலைக்கு மட்டுமே உதவியாக அமைந்து பின்னர் அர்த்தமற்றதாகிவிடும்)."
முதலில் நமக்கு 'நான்-பிற' என்ற பிரிவினை என்பது ஒரு கருத்தேயன்றி உண்மையான இருப்பு அன்று என்பதில் ஐயமற்ற தெளிவு, உறுதி உள்ளதா?
மேலே வலைப்பதிவில் சொன்னவாறு 'இப்படியான அம்சங்களை ஒவ்வொன்றாகத் தனித்தனியாகப் புரிந்து கொள்ள முயல்வது எல்லா ஐயங்களையும் தீர்க்காது. ஆனால் முழுமையை நோக்கித் தள்ளும்'.
எனவே நாம் ஒவ்வொரு கோணமாக, அம்சமாகப் புரிந்து கொள்வதையும் (analysis) அதே சமயம் எல்லா அம்சங்களையும் சேர்த்துப் பார்த்துப் புரிந்து கொள்வதையும் (synthesis) இணையாகச் செய்து வர வேண்டும்.
நான்-பிற என்ற பிரிவினை ஒரு கருத்தே என்று தெளிவாகி விட்டால், மேற்கண்ட ரமணரின் கீதாசாரம் தேவையில்லை. படித்தாலும் இது நமக்குப் பொருந்தாது என்று விட்டு விட வேண்டும். இல்லாவிடில் அந்த முள் நம்மைக் குத்தும் குடையும்.
நான்-பிற என்ற பிரிவினை ஒரு கருத்தே என்பதில் ஐயம் இருக்குமானால் அந்த ஐயத்தைச் சொன்னால் அது குறித்து மேலும் கலந்து கொள்ளலாம்.
சில சமயங்களில் ஓர் அம்சத்தில் முழுத் தெளிவு வராவிடிலும் அதைத் தற்சமயத்திற்கு ஒரு கருதுகோளாக (hypothesis) அனுமானித்துக் (asume) கொண்டு பிற அம்சங்களை, கோணங்களை ஆய்வு செய்யலாம். ஒரு கோணத்தில் ஏற்படும் தெளிவு மறு கோணத்தில் உள்ள ஐயத்தைத் தெளிவாக்கலாம்.
கணிதம், அறிவியல், விளையாட்டு, இசை, சங்கீதம், தச்சு வேலை, ஓவியம் போன்ற மற்ற பாடங்களைக் கற்றுக் கொள்வதில் ஒரு கட்டமைப்பு (structure) இருப்பது போல் இதிலும் தேவை. அந்த வழிகாட்டுதல் இல்லாவிடில் வழித்தடம் இல்லாத அடர்ந்த காட்டில் எந்தப் பக்கம் போவது என்று தடுமாறிச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்போம்.
=============
16-Jul-2022
தேவராஜ்
" நான் " இல்லை என்றால், எல்லாம் இருக்கும் (உடல், மனம், எண்ணம், உலகம், இன்பம், துன்பம்.... ), ஆனால் அதன் மேல் நாட்டம் இல்லாமல் இருக்கும் ?
உள்ளதை உள்ளதாகப் பார்க்கும் பார்வை. இருவர் நன்கு உறங்கும்போது அவ்விருவருக்கும் எந்த வித வேற்றுமையும் இல்லை அல்லவா, அது போன்றதே இப்பார்வையும். ஆனால் உறக்கத்தில் அந்த நிலை அறியாமையில் மூழ்கியுள்ளது. அப்படியல்லாது அது அறிவுடன் விளங்குவதே அப்பார்வையின் இலக்கணம்.
தேகத்தின் மேல் அபிமானம் இல்லாதவராய், உலக இயக்கங்களில் மையல் கொண்டு மயக்கம் அற்றவராய், மனதில் உருவாகும் பலவிதமான ஆசைகளையும் அகற்றியவராய், எப்போதும் ஆன்மாவினிலேயே தானாக நிலை பெற்றவராய், சரீரம் சம்பந்தப்பட்ட சுகதுக்கம் எனும் இரட்டைகளை ஒழித்தவராய் உள்ள விவேகிகளாகிய அவர்கள் அந்த அழிவற்ற மோக்ஷ வீட்டினை ஆளும் ஞானியர் ஆவார்கள்.
தேகம் இருக்கும், ஆனால் அவர்களுக்கு அதன் மேல் அபிமானம் இருக்காது. உலகம் இருப்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள், ஆனால் அவர்கள் அதன் விதவிதமான தோற்றங்களில் மயக்கம் அடைந்து தன்னிலை தளர மாட்டார்கள்.
எண்ணமும் எழலாம், அதனைத் தொடர்ந்த ஆசைகளும் கிளைத்து எழலாம். ஆனாலும் எண்ணக் குவியல்களாம் மனதில் எளிதாகப் பற்றக் கூடிய பலவிதமான ஆசைகளைத் தவிர்த்தவர்களாக இருப்பார்கள்.
எண்ணங்களையும், ஆசாபாசங்கள் கிளர்ந்து எழுவதையும் ஒரு நீர்ப்பரப்பின் மேல் எழுந்து மறையும் நீர்க்குமிழிகளைப் போலப் பார்த்துக்கொண்டு அவைகளால் எந்த விதமான சலனங்களும் இல்லாது அமைதியாக இருப்பார்கள்.
எப்போதும் தனது இயல்பாக “உள்ள நிலையான” ஆன்மா ஒன்றிலேயே அவர்கள் லயித்து நிற்பார்கள், அல்லது அப்படி இருக்க முயற்சி செய்வார்கள்.
அவர்கள் தேகம் என்ற எண்ணம் இல்லாதவர்கள் ஆதலால் அதனினும் வேறான உலகம் என்பதைக் காணாததினால், அதனை ஒட்டிய இன்பம்-துன்பம் போன்ற பலவகையான இரட்டைகளை அவர்கள் ஒழித்தவர்களாய் காணப்படுவார்கள். அத்தகைய விவேகிகளாக இருக்கும் அவர்களே எனது இறுதி நிலையாகிய மோக்ஷ பதத்தை அடைந்த ஞானியர்கள் ஆவார்கள் என பகவான் கிருஷ்ணர் சொல்கிறார்.
அறிவுக்கு மட்டும் தோன்றுவது, வெறும் அறிவார்த்தமாக இருக்குமே அன்றி அனுபவமாக பரிணமிக்காது.
அண்டத்தில் உள்ளதுதான் பிண்டமாகிய நம்முள்ளும் இருக்கிறது என்பது இறுதி உண்மை.
==========
16-Jul-2022
தொல்:
மேலே உள்ள வாக்கியங்கள் ஒவ்வொன்றும் ஒரு கோணத்தில் பார்த்தால் சரி, மறு கோணத்தில் பார்த்தால் உளறல் என்பது புரிவது தான் இறுதி உண்மை!
=======
17-Jul-2022
தொல்:
ஓஷோ (ரஜினிஷ்) சொல்வார்: மனம் எதையாவது ஒன்றைப் பிடித்துக் கொண்டு நிச்சயத்தை, பாதுகாப்பைத் தேடும். என் வேலையே நீ அப்படி எதிலும் நிற்க (settle) முயல்வதைத் தட்டி விடுவதே, தள்ளி விடுவதே, காலை வாரி விடுவதே. (என்னுடைய வார்த்தைகளில், ஆனால் அவர் சொன்ன பொருள் இதுதான்).
[நம்முடைய காலை நாமே வாரிக் கொள்ள நமக்குத் தெரிந்து விட்டால் ஓஷோவோ, ரமணரோ யாரும் தேவையில்லை.]
இதுவரை மனம், 'படிப்பு, திறமை இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்', 'பணம், சொத்து சேர்த்து விட்டால் பாதுகாப்பு', 'உடற்பயிற்சி, நல்ல உணவு இருந்தால் நோய்களிலிருந்து தப்பிக்கலாம்'... இப்படி பலவற்றை மாறி மாறிப் பிடித்து எப்படியாவது வாழ்க்கையில் ஒரு ஸ்திரத்தன்மையை, மனதில் ஓர் அமைதியை அடையப் பார்த்தது.
இவை எதுவும் நிலைக்காது என்று ஒரு கட்டத்தில் உணர்ந்தவுடன், 'எல்லாம் ஒன்றே', 'நம்முடைய நிஜ நான் அழியாதது'... என்று இஃதுதான் இறுதி உண்மை, அதுதான் முடிவான புரிதல், இவ்வளவுதான், அவ்வளவுதான் என்று அதே முறையைப் பின்பற்றிப் பிடித்துக் கொள்ள ஆன்மீக உண்மைகளை நாடித் தேடி அலைகிறது, சுழல்கிறது.
படிப்பு, திறமை, செல்வம், உறவு, புகழ் என்பதற்கு ஏங்கியது போக, இறுதி உண்மை, மோட்சம், விடுதலை, வீடுபேறு, ஞானமடைதல், ஆத்மசொரூபத்தில் லயித்தல்... என்பதற்கு ஏங்குகிறது.
எதற்கு ஏங்குகிறது என்பது துயரம் (suffering), தளை (bondage), அடிமைத்தனம் (slavery) அன்று. ஏங்குகிறது என்பதே துயரம், தளை, அடிமைத்தனம். உண்மையைத் தேடுவதே அஃதை உணரத் தடையாக உள்ளது. அல்லது உண்மையைத் தேடுவதே உண்மை(யின் சொரூபம்) - an expression of the totality - என்றும் சொல்லலாம்.
உலகம், தனித்த நான், பிற, உடல், மனம், அறிவு, எண்ணங்கள் என்பனவற்றின் தோற்றத் தன்மையைப் புரிந்து கொள்வது தொடக்கத்தில் தேவை. அதற்கு அவற்றிற்கு அப்பாற்பட்ட ஒன்று இருப்பதான பொய் (பேரான்மா, விடுதலை, வீடுபேறு...) அந்தக் கட்டத்தில் அவசியம்.
ஆனால் புரிதல் விரிவும் ஆழமும் அடைய அடைய அப்படி இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒன்றை உருவகப்படுத்திக் (objectification) கொண்டு தேடுவது என்பதும் அதே தோற்றத்தன்மையே (appearance) என்று விளங்கும், விளங்க வேண்டும். இல்லாவிடில் வண்டி பாதி வழியில் சேற்றில் சிக்கி நகர முடியாமல் போய் விட்டதாகும். கரையைக் கடக்க வேண்டிய படகு ஆற்றின் நடுவில் மண்மேட்டில் தட்டி நின்று விட்டது என்று ஆகும்.
இதை மனதில் ஓர் அலைவரிசையில் அசை போட்டுக் கொண்டே, அடுத்த அலைவரிசையில் வேறு ஒரு கோணத்தில் அலசுவோம்.
***
" நான் " இல்லை என்றால், எல்லாம் இருக்கும் (உடல், மனம், எண்ணம், உலகம், இன்பம், துன்பம்.... )
இந்த இடத்தில் 'நான்' என்பது தனித்த-நான் என்பதாகக் கொண்டால் சரி. ஆனால் தனித்த-நான் என்பது ஒரு கருத்து (கட்டுமானம் - construction) என்ற அடிப்படையில் அஃது எழாத போது உடல், மனம், எண்ணம், உலகம், பிற இருக்கும் / இருக்காது என்று சொல்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை; எனவே உளறல்.
"அண்டத்தில் உள்ளதுதான் பிண்டமாகிய நம்முள்ளும் இருக்கிறது என்பது இறுதி உண்மை."
எல்லாம் ஒன்றே என்றால் அண்டம், பிண்டம் என்று இரண்டு உள்ளதா? உள்ளது என்ற கருத்து, அனுமானத்தில் (concept, assumption) மேற்கண்ட வாக்கியம் சரி. ஆனால் அப்படியான பிளவு ஒரு கருத்தே தவிர மெய்யான இருப்பு அன்று என்ற கோணத்தில் உளறல்.
"அறிவுக்கு மட்டும் தோன்றுவது, வெறும் அறிவார்த்தமாக இருக்குமே அன்றி அனுபவமாக பரிணமிக்காது."
அதே போல் அறிவு (புரிதல்), அனுபவம் என்று இரண்டு உள்ளது என்ற கருத்து, அனுமானத்தில் மேற்கண்ட வாக்கியம் சரி. ஆனால் அப்படியான பிளவு மெய்மையில் இல்லை என்ற கோணத்தில் உளறல்.
அஃது எப்படி, ஒன்றை அறிவது, தெரிந்து வைத்திருப்பது என்பது வேறு, அஃதை அனுபவிப்பது வேறுதானே?
எடுத்துக்காட்டாக, தஞ்சைப் பெரியகோவிலைத் தெரிந்து வைத்திருப்பதும் அதை நேரில் பார்த்து அனுபவிப்பதும் ஒன்றாகுமா? மாம்பழத்தின் சுவையைப் பற்றிப் பிறர் சொல்ல அறிவதும் அதைச் சுவைத்து அனுபவிப்பதும் வெவ்வேறுதானே?
ஒரு கோணத்தில் அறிவும் அனுபவமும் வெவ்வேறே. ஆனால் அஃது ஓர் அனுமானத்தின் மேல் நிற்கிறது. அதாவது மாம்பழத்தின் சுவையைக் கேட்ட அறிவு-அனுபவத்தையும் (knowing-experience) மாம்பழத்தைச் சுவைத்த அறிவு-அனுபவத்தையும், அதாவது இரண்டு அறிவு-அனுபவங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறோம். இரண்டுமே அதனதன் அளவில் பிளவுபடாத அறிவு-அனுபவங்களே.
தஞ்சைப் பெரிய கோவிலைப் பற்றிப் படித்த போது, பிறர் சொல்லக் கேட்ட போது, அஃது ஓர் அனுபவமே, அஃது ஒரு புரிதலே.
நாம் அறியாத அனுபவம் (unknown experience) என்று ஒன்று இருக்க முடியுமா? அதே போல் அனுபவிக்காத அறிவு (unexperienced knowing) என்று ஒன்று உள்ளதா? When we say yes, we are actually comparing two knowing-experiences.
இது சொல் விளையாட்டு போல் தோன்றலாம். ஆனால் யோசித்துப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
சில எடுத்துக்காட்டுகள் உதவியாக இருக்கும்.
நான் சாவி எங்கே என்று தேடுகிறேன். மேசையில், அலமாரியில், பேண்ட் பையில்... கிடைக்கவில்லை. மீண்டும் மீண்டும் தேடுகிறேன். 'இங்கதானே வச்சேன். வச்சது வச்ச இடத்தில் இருக்கா' என்று சத்தம் போடுகிறேன். அது கேட்டு வந்த துணைவியார், மேசை மேல், கண் முன் இருக்கும் சாவியைச் சுட்டிக் காட்டி, 'கண் தெரியலயா, இங்கதானே இருக்கு' என்கிறார்.
என்ன ஆயிற்று? முன்பு நான் மேசையில் தேடிய போது அந்த சாவியை என் கண்கள் பார்த்திருக்கத்தானே வேண்டும்? ஒளி அதன் மீது பட்டு என் கண்களின் வழியாக விழித்திரையில் பிம்பம் விழுந்திருக்குமே. ஆனால் நான் ஏன் பார்க்க வில்லை? நான் பார்த்தேன், ஆனால் பார்க்க வில்லை. அதாவது நான் பார்த்தால் மட்டும் (அனுபவம்) போதாது, நான் பார்த்தேன் என்ற அறிவும் (புரிதல்) வேண்டும்.
உண்மையில் அனுபவம் அறிவு என்று இரண்டு இல்லை. நான் 'பார்க்கிறேன்' என்ற அறிவு இல்லாத 'பார்க்கிறேன்' என்ற அனுபவம் கிடையாது. அதே போல் 'பார்க்கிறேன்' என்ற அனுபவம் இல்லாத 'பார்க்கிறேன்' என்ற அறிவு கிடையாது.
இதே போல், நாம் படிப்பதிலோ, தொலைக்காட்சி பார்ப்பதிலோ, வேறு வேலையிலோ ஆழ்ந்து இருக்கும் போது துணைவியார் கூப்பிட்டது, சொன்னது காதில் விழுந்திருக்கும் (அனுபவம்), ஆனால் காதில் 'வாங்கி'யிருக்க (அறிவு) மாட்டோம். காதில் வாங்காதபோது (knowing) காதில் விழுந்திருக்கும் (experience) என்பது அனுமானமே தவிர, அது காதில் விழாதது போல் தான்.
இந்த இடத்தில் அறிவு (knowing, knowledge), புரிதல் (understanding), தெரிதல் (seeing - I see the point), உணர்தல் (sensing - it makes sense) என்பன எல்லாம் ஒரே பொருளில் பயன்படுத்தப் படுகின்றன.
அடுத்த அலைவரிசையில் இதனுடன் தொடர்புள்ள ஒரு கோணத்தைப் பார்ப்போம்.
***
தூங்கப் போனால் தொடர்ந்து விமானச் சத்தம் கேட்பது இடைஞ்சலாக இல்லை; ஆனால் துணைவியார் வானொலி, யூடூப் கேட்டால் இடைஞ்சலாக இருக்கிறது. ஏன்? ஏனெனில் விமானச் சத்தத்தை மனம் புரிந்து கொள்ள முற்படவில்லை. அது வெறும் சத்தமாக மட்டும் அறிவு-அனுபவமாக இருக்கின்றது.
ஆனால் வானொலியில் ஒலிக்கும் அரசியல், வாழ்வியல் உரையாடல்கள், தியான இசைகள், யூடூப் நேர்காணல், பட்டிமன்றம், திரைப்படப்பாடல், நகைச்சுவை போன்றவற்றை வெறும் சத்தமாக கேட்ட முடிவதில்லை. மனம் அதன் அர்த்தத்தை நம்மை அறியாமல் அலசுகிறது. எனவே தூங்க முடிவதில்லை.
முன்பு வால்யூமைக் குறைத்துக் கொள்ளச் சொல்வேன். இப்போது அதையும் ஒரு சவலாக எடுத்துக் கொள்வேன். அந்த உரையாடலை, பட்டிமன்றத்தை, பாடலை, இசையைப் புறக்கணிக்க முயலாமல் அறிவு-அனுபவமாக (knowing-experience only; don't try to make sense or take side or judge) மட்டும் ஆழ்ந்தால் விரைவில் தூங்கி விடுகிறேன். அவையும் விமானச் சத்தங்கள் போல் ஆகி விடுகின்றன. I am not claiming I have mastered this. Sometimes I succeed and sometimes I fail. As with everything else this is also a work-in-progress / subject to continuous improvement.
இவ்வறிவு அனுபவம் சுட்டுக் காட்டுவதென்ன? எப்போது அர்த்தம் (பொருள் meaning) இல்லையோ அப்போது அப்பொருளும் (object, thing) இல்லாதது போல் ஆகி விடுகிறது.
http://tholthamiz.blogspot.com/2011/04/35.html
தமிழில் matter-க்கும் meaning-க்கும் பொருள் என்ற ஒரே சொல் இருப்பது அதன் ஒன்றிய நிலையைக் குறிக்கிறதோ? இந்தப் பார்வையில் 'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு (25. அருளுடைமை: 247)' என்ற வரி பல கருத்துகளைப் பொதிந்து உள்ளதாகப் படும்.
- செல்வம் இல்லாதவருக்கு இவ்வுலகத்தில் வாழ்க்கை கிடையாது.
- பொருளாக (வெறுமையை / பிரம்மத்தை) பார்க்கும் மாயை இல்லாதவருக்கு இவ்வுலகம் என்பதே கிடையாது.
- பொருள் பொதிந்த (meaningful) பார்வை இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை (ஏனெனில் பொருள் இல்லாமல் - without meaning - இவ்வுலகம் இல்லை)
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளாணாம் மாணாப் பிறப்பு (36. மெய்யுணர்தல்: 351)
"பொருளாக இல்லாததைப் பொருளாக உணருவதால் மாயை (மருள்) பிறக்கிறது" என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
அடுத்த அலைவரிசையில் மேலுள்ள அலைவரிசைகளில் பகிர்ந்து கொண்டதைக் கொண்டு, நமக்குள்ள மற்றும் ஓர் அனுமானத்தை வெளிப்படுத்துவோம்.
***
நமக்கு எத்தனைப் புலன்கள் உள்ளன?
ஐம்புலன்கள்: தொடுதல், பார்த்தல், கேட்டல், சுவைத்தல், முகர்தல்.
திருவள்ளுவர் முதல் ஐம்புலன்கள் என்று சொல்லப்பட்டு வருகின்றது.
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள (திருக்குறள்: 1101)
In this bangled beauty dwell
The joys of sight sound touch taste smell
(What more erotic portrayal of a woman we want?)
அவ்வப்போது ஆறாவது புலன் என்று மனம் அல்லது அறிவு என்பதும் சேர்த்துக் கொள்ளப்படும்.
மனிதனை ஆறறிவு விலங்கு (உயர்திணை) என்றும் பிற ஐந்தறிவு உயிரினம் (அஃறிணை) என்றும் சொல்கிறோம்.
அதே திருவள்ளுவர், 'மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி (திருக்குறள்: 453)' என்றும் சொல்லியுள்ளார்.
ஆக, நமக்குப் புலன்கள் ஐந்தா, ஆறா?
தொடுகிறேன் என்று உணராத (அறியாத) தொடுதல் உண்டா?
பார்க்கிறேன் என்று உணராத (அறியாத) பார்த்தல் உண்டா?
கேட்கிறேன் என்று உணராத (அறியாத) கேட்டல் உண்டா?
சுவைக்கிறேன் என்று உணராத (அறியாத) சுவைத்தல் உண்டா?
முகர்கிறேன் என்று உணராத (அறியாத) முகர்தல் உண்டா?
சிந்திக்கிறேன் என்று உணராத (அறியாத) சிந்தித்தல் உண்டா?
ஆக, நமக்கு அறிதல் (மனம்) என்ற ஒரு புலன் (sense / faculty) தான் உள்ளது என்றும் அதுவே ஐம்பொறிகளின் (organs) வழியாக அறிகிறது என்றும் சொல்லலாமா? யோசித்துப் பார்ப்போம்.
அடுத்து, கடைசி அலைவரிசையில் இந்த ஒரு புலனையும் புலனாய்வு செய்வோம்.
***
1. ஆறு புலன்கள் வழியாகப் பிறவற்றை அறியும் அனுபவமே நான். சதுர வடிவம் ஓர் உடலைக் குறிக்கிறது.
2. மனம் என்ற ஒரே ஒரு புலனைக் கொண்டு ஐம்பொறிகளின் வழியாகப் பிறவற்றை அறியும் அனுபவமே நான். சதுர வடிவம் ஓர் உடலைக் குறிக்கிறது.
3. தனித்த-நான் மனம் என்ற ஒரே ஒரு புலனைக் கொண்டு ஐம்பொறிகளின் வழியாகப் பிறவற்றை அறிந்து அனுபவிக்கிறது. சதுர வடிவம் ஓர் உடலைக் குறிக்கிறது.
4. 'தனித்த-நான்' என்பதும் அறியப்படுவதால் வேறு ஏதோ ஒன்று அதை அறிய வேண்டும். அது தனித்த-நான் என்ற கருத்து, உடல், மனம், ஐம்பொறிகள், பிற எல்லாவற்றையும் அறிவதால் அதை நான்-நான் என்று அழைப்போம். சதுர வடிவம் தோன்றும் எல்லாவற்றையும் (உடல், மனம், உலகம், பிற...) குறிக்கிறது.
இதன் படி 'மனம்' என்ற புலனும் இல்லை. ஏனெனில் 'நான்' என்ற ஒன்று இல்லாமல் மனம் இல்லை. மேலும் மனம் (அறிவு) அறியப்படும் ஒரு பொருள் ஆவதால் அதுவும், ஐம்பொறிகள் போன்று, ஒரு கருவியே. அதற்கு என்று தனித்த இருப்பு இல்லை.
சரி, நான்-நான் என்பதும் அறியப்படுகிறதே. அப்படியென்றால் அஃதும் ஓர் அறியப்படும் வஸ்துதானே. அஃதை அறிவது எது?
அது தன்னைத் தானே அறிகிறது என்று சொல்லலாம். அப்படியென்றால் 'தனித்த-நான்', 'மனம்', 'ஐம்பொறிகள்' இவையும் தன்னைத் தானே அறியலாமே?
அறியாத ஐம்பொறிகள் இல்லை என்று ஏற்கனவே பார்த்தோம். அதாவது அறியாத (உணராத) போது, ஐம்பொறிகள் இருந்தன, அவற்றின் வழி சமிஞ்கைகள் வந்தன, அவை புறக்கணிக்கப் பட்டன (கவனம் அவற்றில் இல்லை) என்பது பிறகு சொல்லப்படும் கதை, அனுமானம். ஆனால் அறியாத அக்கணத்தில் ஐம்பொறிகள் இல்லை அல்லது இருந்தன என்று சொல்ல எந்தச் சான்றும் இல்லை.
அதே போல் தனித்த-நான் இல்லாத போது அறிவு (மனம்) இருக்குமா? நான் என்ற உணர்ச்சி எழாதபோது அறியும் உணர்ச்சியும் இருக்காது.
அடுத்து 'நான்' என்ற உணர்ச்சியை அதுபோல் பின் தள்ளிப் பார்க்க முடியுமா? கருத்தளவில் நான்-நான் என்று ஒன்று தனித்த-நான் என்பதை அறிவதாகக் கொள்ளலாம். ஆனால் தனித்த-நானையும் நான்-நான் என்பதையும் எப்படிப் பிரித்து அறிவது?
நான்-நான் என்பதை அறிய நான்-நான்-நான் என்று ஒன்று பிறகு அதை அறிய நான்-நான்-நான்-நான் என்ற ஒன்று... என்று முடிவில்லாமல் சொல்லிக் கொண்டே போகலாம்.
இதுவரைதான் பகுத்துப் பார்த்தல் பயன்படும். இனி தொகுத்துப் பார்க்க வேண்டும்.
காண்பான், காணுதல், காட்சி மூன்று (திரிபுடி trio) ஒரு சேர எழுந்து மறைகின்றன
நான், மனம் (அறிவு), ஐம்பொறிகள் (உடல்), அவை வழியாக அறியப்படுபவை (பிற) என்பனவற்றை ஒரு படிநிலையாகப் (hierarchy) பார்க்கிறோம். அவை தனித்தனியாகப் படிநிலை வரிசையில் இருப்பதற்கு நம்முடைய நேரடி அனுபவத்தில் சான்று உள்ளதா?
தொடுவதை அறிகிறேனா, தொடுவதை அறிகிறேன் என்று அறிகிறேனா?
பார்ப்பதை அறிகிறேனா, பார்ப்பதை அறிகிறேன் என்று அறிகிறேனா?
அதே போல் பிற பொறிகளுக்கும் சொல்லலாம்.
சிந்திப்பதை அறிகிறேனா, சிந்திப்பதை அறிகிறேன் என்று அறிகிறேனா?
நம்முடைய நேரடி அறிவு அனுபத்தில் 'நான், மனம், ஐம்பொறிகள், பிற பொருள்கள், உயிருள்ளவை, உயிரற்றவை' எல்லாம் ஒரே காட்சியில், ஒரே தோற்றத்தில் தான் உள்ளன. அவை அனைத்தும் ஒன்றாகத் தோன்றி ஒன்றாக மறைகின்றன. நான் எழாத போது பிற இருக்கும் என்பதும் அதே காட்சியில் ஒரு பகுதியே.
அவற்றிற்கிடையே 'நான்' என்பது 'மனம்' என்ற புலனைக் கொண்டு 'ஐம்பொறிகளின்' வாயிலாகப் பிற பொருள்கள், உயிருள்ளவை, உயிரற்றவை எல்லாவற்றையும் அறிகிறது என்று ஒரு கதை, கற்பனை இட்டுக் கட்டப்படுகிறது.
அக்கற்பனையும் அதே தோற்றத்தின் ஒரு பகுதியே தவிர அதற்கு மேலேயோ கீழேயோ பக்கத்திலோ வெளியேயோ இல்லை.
முன்பு பகிர்ந்து கொண்ட கனசதுரப் படத்தில் எப்படி ஆழம் கற்பனை செய்து கொள்ளப் படுகிறதோ, எப்படி இக்கணத்தில் கடந்த காலமும் எதிர் காலமும் கற்பனை செய்து கொள்ளப் படுகின்றனவோ அதே போல், இந்த ஒரு தோற்றத்திற்குள், மேற்கண்ட படிநிலையை (இதனால் இதைக் கொண்டு இது நடக்கிறது - cause and effect is an illusion) கற்பனை செய்து கொள்ளப் படுகிறது.
அந்தக் கற்பனை யாருடைய கற்பனையும் இல்லை. ஏனெனில் அக்கற்பனையில் தோன்றுவதற்கு அப்பால் 'நான்' என்று எதுவும் தனியாக இல்லை. எப்படிச் சித்திரத்தில் உள்ள படம் எதையும் தனிச்சையாகச் செய்ய முடியாதோ அதே போல், கற்பனையில் தோன்றும் நான், மனம், பிற எப்படி எதையும் செய்ய முடியும்? The whole structure of cause and effect, history, past-present-future collapses. There is no ground to stand, there is nothing to hold on to, nothing to believe, nothing to doubt... all are in the only one appearance in this moment which is eternal.
This is the deeper end of seeking. At the same time there is no depth at all, in another sense. Everything is flat. All are at the same level.
இந்த கணத்தில் தோன்றும் தோற்றத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பது விளங்கியிருக்கலாம். அப்படி இருக்கிறது என்று கருத்தும் இக்கணத்தின் தோற்றத்தின் பகுதியே என்பதும் புரிந்திருக்கலாம்.
இக்கணத்தின் காட்சி மட்டுமே உண்மை என்ற அளவில் காட்சிக்குள் தோன்றுபவை அவ்வுண்மையின் உண்மை ஆகும். ஆக, தனித்த நான், மனம், அறிவு, ஐம்பொறிகள், பிற, காரண காரிய சங்கிலித் தொடர், வரலாறு, பிறப்பு, இறப்பு, நீதி, அநீதி, பொருள், புகழ், மோட்சம் தேடுதல்.... எல்லாம் உண்மை ஆகும்.
சரி, இக்கணத்தில் தோன்றும் காட்சியாவது உண்மையில் இருக்கிறதா என்பதை (this is the deepest point) பிறகு பார்க்கலாம்.
==========