2011-08-20
திருமண வாழ்த்துரை
மணமகன்: ப.தொல்காப்பியன் மணமகள்: செ.முத்துலெட்சுமி
மணநாள்: ஆவணி 25, திருவள்ளுவர் ஆண்டு 2042 (ஞாயிறு 11.09.2011)
அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயம், தென்னங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
இல்லற வாழ்வில் இணைந்து செல்ல இணைந்திருக்கும் மணமக்களுக்கும் அம்மணமக்களை இவ்வாழ்த்து நிகழ்வில் வாழ்த்த மேடையிலும் பந்தலிலும் இணைந்திருக்கும் அனைவருக்கும்
வணக்கம்!
நண்பர் தென்னை கணேசனும் நானும் 25 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்கள். அவர் தம்பி இராமசாமியையும் அதே போல் நெடுங்காலமாக அறிவேன். இருவர் குடும்பங்களின் படிப்படியான முன்னேற்றத்தையும் கணேசன் வாயிலாகக் குடும்பச் செய்தியாகத் தெரிந்து வருகின்றேன். நண்பர் கணேசனும் எங்கள் குடும்பத்தில் ஒருவராகப் பழகி வருபவர். என் பெற்றோர் உடன்பிறப்புகள், அவர்களின் துணைவியார்கள், சில உறவினர்கள் என்று என் உறவு சுற்றத்தை அறிந்தவர்; சிலரிடம் பழகியவர்.
அந்த அடிப்படையில் தென்னை.கணேசன் குடும்பத்தில் பலருக்கு நேரடியாகத் தெரியாதவன் என்றாலும் அவரின் உறவு சுற்றத்தைப் பற்றி அறிந்தவன் என்ற வகையில் அவருடைய அண்ணன் மகன் திருமணத்தில் மணமக்களை வாழ்த்திச் சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் பொறுப்பைக் கணேசன் எனக்கு இன்று இங்கு வழங்கியுள்ளார். அதற்கு அவருக்கு நன்றியைத் தெரிவிக்கும் வேளையில் இது மணமக்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையட்டும் என்று விழைகிறேன்.
மனிதனுடைய பிறப்பும் இறப்பும் அவன் கையில் இல்லை என்று நாம் அனைவரும் அறிவோம். ஆனால் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் எவற்றை எப்போது சேர்ப்பது, எவற்றை எப்போது விடுவது என்பது நம் கையில் உள்ளது. இதைச் செய்வதில் ஒரு சிக்கல் என்னவென்றால், இவற்றை அலசி ஆராய்ந்து முடிவு செய்து கொண்டு வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாது. இவற்றை அலசி ஆராய்வதும் வாழ்வதும் இணையாக நடக்கும்; இணையாகவே நடக்க முடியும். ஆக, வாழ்க்கை என்பதே ஆய்வு, புரிதலின் வளர்ச்சி. ஆய்வு, புரிதல் என்பதே வாழ்க்கையின் மலர்ச்சி. இது தான் வாழ்வின் நோக்கம். இதைத் தவிர்த்து நாம் செய்யும் சாதனைகள, அனுபவிக்கும் வேதனைகள் எல்லாம் இதை நோக்கிய பயணமே; அப்பயணத்தில் கடக்க வேண்டிய காட்சிகளே.
இவை எல்லாம் மணமக்களுக்கு இப்போதே புரிந்து விடாது. ஆனால் நிலை வைப்புக் கணக்கில், தொடர் வைப்புக் கணக்கில் (fixed deposit, recurring deposit) போட்டு வைக்கும் சிறு பணம் பெருகி எப்படி 10, 20, 30 ஆண்டுகளுக்குப் பிறகு பயன் தருமோ அது போல் இக்கருத்துகளை உள்ளத்தில் போட்டு அவ்வப்போது அசை போட்டு வந்தால் பெரும் பயன் தரும்; வாழ்வு சிறப்புறும்.
இவை எவையும் என்னுடைய கண்டு பிடிப்புகள் அல்ல. இவை மூத்தவர்களும் முன்னோர்களும் அறிஞர்களும் வலியுறுத்திச் சொல்லியவையே. ஆனால் இவற்றை என் வாழ்க்கையில் உரசிப் பார்த்துப் பின்பற்றிப் பயனடைந்ததால் மணமக்களுக்குச் சொல்ல விழைகிறேன்.
இந்தத் திருமண விழா அழைப்பிதழில் மூன்று திருக்குறள் வரிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை
அன்பின் வழியது உயிர்நிலை
பெரியாரைப் பேணித் தமராக் கொளல்
எது அறன் என்பதற்கு அந்த முழுக்குறளையும் பார்த்தாலே போதும்.
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பதில்லாயின் நன்று
மனித சமுதாய விலங்கு. அவன் தன் விருப்பப் படியே 100 விழுக்காடு வாழ்ந்து விட முடியாது. பிறர் விருப்பப் படியே 100 விழுக்காடு வாழ்ந்து விட முடியாது. 'உனக்காகவே நான் வாழ்கிறேன்' என்று திரைப்படப் பாடல் பாடலாம். ஆனால் நடப்பு உலகில் அது விதிவிலக்கே.
எனவே மனிதன் சில உரிமைகளைப் பெறுவதற்காகச் சில கடமைகளை மேற்கொள்வதே சமுதாயத்திற்கும் அவனுக்கும் உள்ள ஒப்பந்தம். அதைச் சிறிய அளவில் மேற்கொண்டு கற்று, பின்பற்றிப் பழகி வளருவதற்கான வாய்ப்பே இல்வாழ்க்கை.
குடும்பம் என்பது சிறிய சமுதாயம். சமுதாயம் என்பது பெரிய குடும்பம். இரண்டிலும் பிறருடன் ஒத்து வாழ்வது தான் சவால்; சாதிக்க வேண்டிய சாதனை. இதையும் வலியுறுத்தித் திருவள்ளுவர் 'ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்' என்று குறிப்பிட்டுள்ளார்.
சுருக்கமாகச் சொன்னால், எப்படி விட்டுக் கொடுத்தும் கேட்டுப் பெற்றும் ஒத்து வாழ்வது என்பதே மணமக்கள் முன் உள்ள, நம் அனைவர் முன் உள்ள வாழ்க்கைப் பெரும்பணி ஆகும். ஆனால், எந்த அடிப்படையில் ஒத்துப் போவது?
அவரவருக்கு அவரவர் எண்ணமே, தேவையே, இன்பமே பெரிது. தனி உயிர்த் துடிப்பே சுய நலம் தான். ஆனால் அந்த உயிர் உருவாகுவதும் பின் வளர்வதும் இருவர் என்ற ஆண், பெண் இணைப்பாலும் அதைச் சுற்றி உறவு, சுற்றம், நட்பு, இனம், சமுதாயம் என்ற பிணைப்பாலுமே ஆகும்.
அதைத் தான், அந்தக் குடும்பம், உறவு, சுற்றம், நட்பு, இனம், சமுதாயம் என்ற பிணைப்பு எனும் அன்பைக் கொண்டு தான் இங்கு உயிர் நிலைக்கிறது என்பதைத் திருவள்ளுவர், 'அன்பின் வழியது உயிர்நிலை' என்றார். ஆக, அந்த அன்பு என்பது தான் ஒத்துப் போவதற்கும், விட்டுக் கொடுத்தும் கேட்டுப் பெற்றும் வாழ்வதற்கு அடிப்படை.
இதைத் தமிழறிஞர் டாக்டர் முவ வலியுறுத்திச் சொன்னார்:
"வாழ்க்கையில் பிணக்கு(சிக்கல்) ஏற்படுவது இயற்கை. அப்போது அறிவு மட்டும் இருந்தால் பயனில்லை, அன்பு இருந்தால் பயனுண்டு"
கணவன் மனைவி உறவில் கணக்குப் பார்த்தால் பிணக்கு தான் வரும் என்பார்கள். ஆனால் கணவன் மனைவி உறவில் மட்டுமன்று, பெற்றோர் பிள்ளை, அண்ணன் தம்பி, அக்கா தங்கை, மாமா மச்சான்.... என்று எல்லா உறவுகளிலும் கணக்குப் பார்க்க வேண்டும். ஆனால் கணக்கை ஒழுங்காக முழுமையாகப் பார்க்க வேண்டும். உடனடிக் கணக்கையும் பார்க்க வேண்டும். தொலை நோக்குக் கணக்கையும் பார்க்க வேண்டும். நடப்புக் கணக்கையும் பார்க்க வேண்டும். நிலைப்புக் கணக்கையும் பார்க்க வேண்டும்.
அறிவு கணக்குப் பார்க்கும். ஆனால் பொதுவாகச் சரியாகப் பார்க்காது. பெரும்பாலும் அறிவு, கணக்குப் பார்க்கும் போது அன்பைக் கழித்து விட்டுத் தான் கணக்குப் பார்க்கும். ஆகவே அது தப்புக் கணக்காகவே வந்து முடியும். அதனால் தான் அறிவு மட்டும் இருந்தால் பயனில்லை என்றார். அறிவின் கணக்கு அரைகுறைக் கணக்கு. ஆகையால் அது பிணக்கைப் பிளவாக்கி விடும்.
நினைத்துப் பாருங்கள். நாம் இந்த உலகில் பிறக்க என்ன தவம் செய்தோம்? எந்த வகையில் நாம் அதற்குத் தகுதியானோம்? காற்று, நீர், வெப்பம், மரம் செடி கொடிகள், ஆறு மலை கடல்கள், புழு, பூச்சி, பறவை, விலங்குகள், அவற்றை அனுபவிக்க ஆறு புலன்கள் இவை நமக்கு இலவசமாக வழங்கப் பட்டுள்ளன. இதுவே இறைவனின் அன்பு அல்லது இயற்கையின் அன்பு.
ஆனால் நாம் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தப் பல கட்டளைகள், விதிகள், எதிர்பார்ப்புகள், முன் நிபந்தனைகளை வைக்கிறோம். அவை கூடாது என்பதன்று. ஏனெனில் அன்பு ஒரு குருட்டு விசை. இயற்கை / இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாது எல்லோருக்கும் மேற்கண்ட இலவசங்களை வழங்கியுள்ளது. ஆனால் மனித வாழ்க்கை என்பது விருப்பு வெறுப்புகளுக்குள் விளையாடுவது. எனவே விருப்பு வெறுப்புகள் மனதில் படியும் கறைகள், மாசுகள். அதைப் போக்குவது அன்பு.
இதையே டாக்டர் முவ 'அன்பு மனமாசைக் கழுவும் கருவியாகிறது' என்றார்.
ஆக, அறனாகிய இல்வாழ்க்கை என்பது அன்பின் வழி நின்று ஒத்து வாழ்வது என்று அறிந்தோம். அதை நாமாக, ஒருவராக, மணமக்கள் இருவராகச் சாதிக்க இயலாது. அங்கு பெரியோர் துணை வேண்டும். பண்பில் மூத்தோர், முன்னோரைப் பேணி அவர் தம் வழிகாட்டுதல்களை அருகில் வைத்துக் கொண்டால் செய்த தவறுகளை மீண்டும் செய்து துன்புறாது தப்பிக்கலாம்.
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை
அன்பின் வழியது உயிர்நிலை
பெரியாரைப் பேணித் தமராக் கொளல்
என்ற இந்த மூன்றும் ஒரு தொடக்கமாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. அவையே போதும் என்று நினைத்து விடக் கூடாது.
அறமாக இருந்தாலும் அன்பாக இருந்தாலும் பெரியோர் சொல் கேட்பதாக இருந்தாலும் எல்லாவற்றிலும் அளவு உள்ளது. எதையும் முழுமையாகக் கண்களை மூடிக் கொண்டுப் பின்பற்றக் கூடாது. 'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' என்றார் திருவள்ளுவர்.
மெய்ப்பொருள் என்றால் என்ன? அதை எப்படிக் காண்பது?
மெய்ப்பொருள் காண்பது என்பது உணவை உண்டு செரித்து உடலுக்குத் தேவையான ஊட்டமாக உயிர்த்துக் கொள்வது. கண்களை மூடிக் கொண்டு சொன்னதை அப்படியே பின்பற்றுவது என்பது உயிர் ஆபத்தில் இருக்கும் போது பிறர் குருதியை உடலில் நேரடியாக ஏற்றிக் கொள்வது போன்றது.
அது போல் வாழ்வில் நாம் சிந்திக்க இயலாத தடுமாற்றம், துன்பத்தில் இருக்கும் போது அவசரத்திற்கும் அவசியத்திற்கும் பெரியோர், மூத்தோர் சொல்வதை அப்படியே கேட்டு மீளலாம். ஆனால் அன்றாட நடைமுறையில் அவற்றை நாம் சிந்தித்து, உரசிப் பார்த்து நம்முடைய அனுபவமாக உயிர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே மெய்ப்பொருள் காண்பதாகும்.
எனவே இந்த மூன்று திருக்குறள் வரிகளையும் இவை போன்ற பல நல் வாழ்விற்கான சூத்திரங்களையும் தழுவி உள்ளடக்கிக் கடந்து சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் வாழ்க்கை என்பது 'அளவறிதல்' என்று சொல்லி விடலாம்.
'மிகினும் குறையினும் நோய் செய்யும்' என்று திருவள்ளுவர் சொன்னது உணவில் மட்டுமன்று உணர்விலும் தான், உழைப்பிலும் தான், உறக்கத்திலும் தான், துய்ப்பிலும் தான், துயரத்திலும் தான். வரவு செலவிலும் தான். உறவு உரசலிலும் தான்.
வாழ்வில் தேவையற்ற பண்புகள் என்று எதுவும் இல்லை. கோபம் இல்லாது, பொய் சொல்லாது, போட்டி மனப்பான்மை இல்லாது, மான அவமானங்கள் இல்லாது வாழ முடியாது. ஆனால் எல்லாம் இடமறிந்து, காலமறிந்து, பயன் கருதி, அளவோடு இருக்கும் போது, பின்பற்றும் போது வாழ்க்கை வளமாகும்.
எனவே உடலைப் பேணுங்கள். உள்ளத்தைப் பேணுங்கள். உறவைப் பேணுங்கள். அதற்கு அன்புச் செல்வத்தை, அறிவுச் செல்வத்தை, பொருள் செல்வத்தை, அருள் செல்வத்தைப் பயன்படுத்துங்கள்; வாழ்வாங்கு வாழுங்கள் என்று மணமக்களை உங்கள் எல்லோர் சார்பிலும் வாழ்த்தி இந்த வாய்ப்பிற்கும் உங்கள் நேரத்திற்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.
நன்றி வணக்கம்.
வாழ்த்துரை வழங்குபவர்கள்
வ.வேம்பையன் (கல்பாக்கம்) - வே.தொல்காப்பியன் (இலண்டன்)
தமிழர் திருநாள் அறக்கட்டளை, மறைமலை நகர் – 603209