Monday 20 June 2022

மலத்தின் மகிமை - The Power of Shit - மனித சாணத்தின் மதிப்பும் மாண்பும்

 2022-06-04


மலத்தின் மகிமை - The Power of Shit - மனித சாணத்தின் மதிப்பும் மாண்பும் 


BBC இன் Ideas வலைதளக் காணொளி (The extraordinary power of poo), Aeon வலைதளக் கட்டுரை (A short biography of human excrement and its value)  ஆகியவற்றை உட்கொண்டால் தான் வெளி(க்கு வழுக்கி) வந்தது!


Human excrement is not a waste but a good estate (resource / property).


காலைக் கடன் என்பது நம்முடைய கடமை (பழக்கம், வழக்கம்...) என்ற பொருளில் மட்டுமன்று, நாம் நமக்கு உணவளித்த மண்ணுக்குத் திருப்பித் தர வேண்டிய கடன் (தவணை) என்ற உண்மையும் ஆகும்.


அதைக் கழிப்பறையில் விட்டுப் பாதாளச் சாக்கடையில் தள்ளி விடுவது நம் கடனை மண்ணுக்குத் திருப்பி தராத மோசடி, ஏமாற்று, பொறுப்பின்மை ஆகும்.


ஆனால் இந்த மோசடியும் பொறுப்பின்மையும் நவீனகால முன்னேற்றத்தால் வந்த‌ மற்றொரு மலச்சிக்கலும் மனச்சிக்கலும் ஆகும்.


நமக்கு உணவளிக்கும் மண்ணுக்கு நாம் உணவளிக்கிறோமா?


சில நூறு ஆண்டுகளுக்கு முன் மனிதர்களின் கழிவு கால்நடைகளின் கழிவு போல் விவசாயத்தில் எருவாகப் பயன்படுத்தப்பட்டது. மனிதர்களின் சிறுநீர் தோல் பதனிடுவது போன்ற தொழில்களில் தேவைப்பட்டது. அதனால் மனிதக் கழிவுகளுக்கு நல்ல சந்தை இருந்தது.


அதிலும் பணக்காரர்களின் கழிவிற்கு (ஊட்டமான உணவு உண்டதால் பலவகைச் சத்துகள் இருக்கும்) விலை அதிகமாக இருந்ததாம்!


சராசரியாக ஒரு வளர்ந்த மனிதனின் குடலில் 1.5 முதல் 2 கிலோ கிராம் மலம் இருக்குமாம். அதே போல் ஒரு நாளில் நாம் சராசரியாக‌ 500 கிராம் மலம் கழிக்கிறோம்.


மலத்தைப் பொறுப்பான, பாதுகாப்பான‌ முறையில் நம் வசிக்கும் இடத்திலிருந்து நீக்க வேண்டியது அவசியம். ஏனெனில் அதை மற்ற விலங்குகள் போல் வெளியே விட்டு விட்டால் அதிலுள்ள சத்துகளுக்காகப் பலவிதமான, நமக்குத் தீமையான, கிருமிகள், பூச்சிகள் அதில் குடியேறி, இனப்பெருக்கம் செய்து பிறகு நம்மை வந்தடைந்து வருத்திவிடும். 


பூச்சிகள், கிருமிகள் மூலம் வருவதல்லாமல் மழையால் நிலத்தடி நீரில், நீர்த்தேக்கங்களில் கலந்து பலவகை நோய்கள் பரவும்.


இவை இன்றும் உலகின் பல இடங்களில் நடப்பாகவும் அதனால் நோய் / சாவுக்குக் காரணங்களாகவும் உள்ளன.


சில காட்டு விலங்குகள் தங்கள் கழிவை மண்ணைப் போட்டு மூடுகின்றது. இப்பழக்கம் வர இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று நோய்க்கிருமிகள் உற்பத்தியைத் தவிர்ப்பது. மற்றொன்று அவ்வாசனையைக் கொண்டு தன் இருப்பிடத்தைக் கண்டு தன்னைக் கொன்று உண்ணக் கூடிய பிற விலங்குகளிடமிருந்து தப்புவது.


மனிதன் நாடோடியாக வாழ்ந்த காலத்தில் கழித்த இடத்தை விட்டு நகர்ந்து போய் விடுவதால் கழிவை மறைக்க, நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி செய்யாததால் வரக்கூடிய‌ ஆபத்தும் இல்லை.


ஆனால் விவசாயம் செய்ய ஆரம்பித்து ஓர் இடத்தில் தங்கி வாழத் தொடங்கிய பின் கழிவை நீக்கும் முறைகளைக் கையாள வேண்டியதாயிற்று.


'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலில் (கதைத் தொகுப்பு) ராகுல்ஜி, 'மனிதன் தான் கழித்த இடத்திற்குப் பக்கத்திலேயே வாழ்கிறான்' என்று அறுவெறுப்புடன் ஒரு கதைப் பாத்திரத்தின் வழியாக, விவசாய சமுதாயம் தொடங்கிய காலத்துக் கதையில், சொல்லியிருப்பார்.


வயல் வெளிகளிலும் ஆற்றங்கரைகளிலும் கழித்த நாம், பின்பு வீட்டிற்கு வெளியே புறக்கடையில் உலர் கழிப்பறையில் (dry latrine) கழிக்க ஆரம்பித்தோம்.


தற்போது கழிப்பறையை வீட்டிற்குள்ளேயே கொண்டு வந்து விட்டோம். அதிலும் தண்ணீர், சாக்கடைக் குழாய் இணைப்பு வசதிக்காக சமையலறையும் கழிவறையும் பக்கத்திலேயே வந்து விட்டன. அடுத்த கட்டமாக ஒவ்வொரு படுக்கை அறையிலும் (en suite) இணைக்கப் பட்டுவிட்டது.


மண்ணில் விளைந்த பொருள்களை லாரி, தொடர்வண்டி, கப்பல், விமானம் மூலம் பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள இடங்களுக்குக் கொண்டு சேர்க்கிறோம். அவற்றை உண்டு கழிப்பதை அதே போல் திரட்டி விளைவித்த மண்ணுக்குத் திருப்பிக் கொண்டு சேர்ப்பதில்லை. மாறாக தொழிற்சாலை உரங்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம். அதனால் விளையும் கேடுகள் பல.


நவீன உலகில் நாம் கட்டிப் பயன்படுத்தும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களால் விளையும் கேடுகளும் அது போலவே பல உள்ளன.


அதற்காக அவை கூடாது என்பதல்ல. அவற்றைக் கொண்டு மேலும் என்ன செய்ய முடியும் என்பதே முக்கியம். அவ்வாறு சில இடங்களில் செய்யப்படுகின்றன.


இயற்கையின் மறுசுழற்சிச் சமன்பாட்டில் நம் கழிவின் பங்கை நீக்கியதால் நாம் பூமியின் சூழலுக்குப் பெரும் தீமையை விளைவித்து வருகிறோம்.


18 ஆம் நூற்றாண்டில் சீனப் பேரரசர், ஒவ்வொரு குடிமகனும் தன் கழிவைத் திரட்டி மறுசுழற்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று சட்டம் செய்தார்.


ஜப்பானில் மனிதக் கழிவின் மதிப்பு தங்கத்தால் அளக்கப் பட்டது. மனிதக் கழிவைத் திரட்டிச் செல்வதற்காகப் போட்டியும் சண்டையும் ஒரு காலத்தில் நடந்துள்ளன.


தற்போது மனிதக் கழிவைக் கொண்டு எரிவாயு உற்பத்தி செய்யவும் எச்சத்தைக் கொண்டு உரம் செய்யவுமான‌ தொழில்கள் ஆங்காங்கே உருவாகி இயங்கி வருகின்றன.


மனிதக் கழிவை ஆரோக்கியமான முறையில் மறுசுழற்சிக்கு உட்படுத்தக் கூடிய தொழில்நுட்பங்கள் வளர்ந்த அளவுக்கு மனிதக் கழிவைப் பற்றிய அதன் மதிப்பைப் பற்றிய கருத்து மாற்றம் இன்னும் வரவில்லை. அதை வீண் / தேவையற்றது (trash / waste) என்ற எண்ணமே ஆதிக்கத்தில் உள்ளது.


Human excrement is not a waste but a good estate (resource / property).


மலம் போனால் பலம் போகும் என்ற பழமொழி உண்டு (எல்லா லாகிரி வஸ்துகளும் மலக்கட்டை ஏற்படுத்துபவை என்று படித்துள்ளேன்). இந்த கட்டுரையைப் படித்த பின் மலம் (சாக்கடையில்) போனால் பணம் போகும் என்று சொல்லத் தோன்றுகிறது!


மேலும் மறுசுழற்சி இல்லாத‌ மலநீக்கம் மண்வள நீக்கம் என்று சொல்லலாம்.


மலத்தில் அரிசி பொறுக்காதே என்ற பழமொழியும் உண்டு. அதையும் மலத்தின் மதிப்பை மற‌க்காதே என்று சொல்லலாம் போலுள்ளது.


மணம்(!) வீசும் சுவையான(!) இச்சில தகவல்கள் கட்டுரையை முழுமையாகப் படிக்கத் தூண்டட்டும்!


கழிப்பறையில் படிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குப் படிக்கப் பொருத்தமான கட்டுரை!


https://aeon.co/essays/a-short-biography-of-human-excrement-and-its-value


No comments:

Post a Comment