குழந்தைகளுடன் தத்துவ உரையாடல் Philosophy With Children
22.05.2021
https://aeon.co/essays/how-to-do-philosophy-for-and-with-children
அனுப்புகிறவரின் அளப்பு - Sender’s Measure
பிடிவாதம் யாருக்கு?
மூன்று வயது பேத்தி பாட்டியுடன் வெளியில் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பியவுடன் தன் ஆடையை மாற்றும் படிக் கேட்கிறாள். பாட்டியோ வேறு வேலைகளில் மூழ்கித் தட்டிக் கழிக்கிறார்.
'இராத்திரி ஆயிடுச்சு, இந்த டிரஸுடன் படுத்தால் என்ன? இப்ப எதுக்கு மாத்தனும்?' என்று சில முறைகள் சொன்னாலும் மீண்டும் மீண்டும் வற்புறுத்தும் பேத்தி, சட்டென்று, உள்ளங்கைகளை விரித்து மேலும் கீழும் ஆட்டிக் கொண்டு, 'ஏன் பாட்டி இப்படி பிடிவாதம் பிடிக்கிறே? டிரெஸ மாத்துன்னு சொன்னா மாத்த வேண்டியதுதானே?' என்று கடிந்து கொள்கிறாள். யாருக்குப் பிடிவாதம் என்பது நொடியில் மாறி விடுகிறது. இது அடவியின் இரண்டாம் மகள் வாகையின் வாய்த் தோகை.
யார் கண்டு பிடித்தார்கள்?
அதே போன்ற வயதில், நம் குழுவில் இருக்கும் நண்பன் சண்முகசுந்தரத்தின் மகன், ஓசூரில் வாழும் போது, ஒரு நாள் கேட்டான், 'பெங்களூரை யார் கண்டு பிடித்தார்கள்?'. குழந்தைகள் தான் இப்படியெல்லாம் கேட்க முடியும். வளர்ந்தவர்கள் வளைய முடியாதபடி முற்றிக் கெட்(டு)டிப் பட்டு விட்டோம்.
எஞ்சின் டிரைவரின் பிரச்னை
என் தம்பி திருவள்ளுவன் மூன்று / நான்கு வயதில், ரயிலில் போகும் போது, 'எஞ்சின் டிரைவர் எங்கு ஒன்னுக்குப் போவார்?' என்று கேட்க, எங்கள் அப்பா அடுத்த நிறுத்தத்தில் அவனுடன் சென்று இஞ்சின் டிரைவரிடமே கேட்க, டிரைவர் சிரித்துக் கொண்டு, 'ரயில் நிற்கும் போது ஸ்டேஷனில் அல்லது அடுத்த பெட்டியில் போவோம்' என்று சொன்னார்.
ஏன் எல்லாம் இலவசமாக இருக்கக் கூடாது?
அளவறி தொடக்கப் பள்ளிப் பருவத்தில், 'நான் ஏன் பள்ளிக்குப் போக வேண்டும், நீங்களே வீட்டில் சொல்லிக் கொடுக்கலாமே?' என்றான். ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு அப்பாதான் உலக மகா ஜீனியஸ்!
அவனே உயர்நிலைப் பள்ளி வயதில், 'ஏன் எல்லாம் இலவசமாக இருக்கக் கூடாது?' என்று கேட்டான். அவனுக்குப் பண்டமாற்று முறையை விளக்கி விட்டு, நான் படித்த எரிக் டெக்ஸ்லரின் புத்தகத்தைப் பற்றிச் சொல்லி வரும் காலத்தில் அது எல்லாம் இலவசமாக ஆகலாம் என்று நானோ (nano) தொழில்நுடபப் புரட்சியைப் பற்றி அளந்தேன்.
https://en.wikipedia.org/wiki/K._Eric_Drexler - Engines of Creation (Foreward by Marvin Minsky).
யோசித்து வாழணுமா?
மேல்நிலை பள்ளிப் பருவத்தில் அளவறி, 'நாம் ஏன் யோசித்து எதையும் செய்ய வேண்டும்? அவ்வப்போது தோணும் படி வாழ்ந்தால் என்ன?' என்று கேட்டான். 'அப்படியும் வாழலாம். எப்படி வாழ்ந்தாலும் தொடர் விளைவுகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்று நம்முடைய தத்துவச் சாறைப் பிழிந்தேன்.
அப்படி கேட்ட அளவறி கல்லூரிப் பருவத்தில், அவனுடைய முகநூலில், சாக்ரடிஸின், 'யோசித்து வாழாத வாழ்க்கை பயனற்றது' என்ற பொன்மொழியைப் போட்டிருந்தான்; கெட்டு விட்டான்!
"The unexamined life is not worth living" (Socrates)
குழந்தைகள் வளராத பெரியவர்கள் என்பது நம்மிடையே ஊறி உள்ளது. ஆனால் அவர்களும் மக்களே. இதைப் பத்து வயது சிறுவன் கூறியதாகக் கீழ்கண்ட கட்டுரையில் இப்படி உள்ளது:
“குழந்தைப் பருவம், பெரிய பருவம் என்பன வெறும் கருத்துகளே. அவை உண்மையில் இல்லாத பிரிவினைகளை உண்டாக்குகின்றன. எல்லோரும் மக்களே.”
பிள்ளைகளிடம் தத்துவம் பேச என்றே அமெரிக்காவில் வாஷிங்டனில் பள்ளி நடத்தி வரும் ஜானா மோர் லோன் என்ற வாஷிங்டன் பல்கலைக் கழகத் துணைப் பேராசிரியையின் கட்டுரை மேலே உள்ளது.
தத்துவம் என்பது இல்லாமல் யாரும் வாழ இயலாது. அதை அப்படித் தெரிந்து புரிந்து வைத்து இல்லாமல் இருக்கலாம். ஆனால் மனிதர் ஒவ்வொருவரும் எதைச் செய்யலாம், செய்யக் கூடாது, எது நல்லது, எது கெட்டது, எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்துகள் கொண்டிருப்பார்கள். அதற்கு பண்பாடு, பழக்க வழக்கம், மரபு, உலகப் போக்கு போன்றவை காரணங்களாக நாம் நினைத்துக் கொண்டு இருந்தாலும் அவற்றிற்கும் அடித்தளமாக தத்துவம் என்பது இருக்கவே செய்கின்றது.
இது வளர்ந்த பெரியவர்களுக்குத் தீடிரென்று ஒரு குறிப்பிட்ட வயதில் வந்து உதித்து விடுவதில்லை. குழந்தைப் பருவத்திலிருந்தே அந்த பார்வையும் புரிதலும் இருந்து வளர்ந்து வருகிறது.
அதில் குழந்தைகளின் கற்பனை வளம் கொண்ட, கட்டற்ற, திறந்த மனதுப் பார்வையைப் பெரும்பாலோர் பெரிய வயதில் இழந்து இறுகி விடுகிறோம்.
குழந்தைகளுடன் வழக்கமான பெரிய மனிதத் தனமாக உறவை விடுத்து, இருவருமாக சேர்ந்து புதிய உறவில், உரையாடலில் நாம் குழந்தைகளாகப் பெற்றிருந்து இழந்த விட்ட ஆர்வம், ஆச்சரியம், ஆக்கம், கற்பனை போன்றவற்றை கொஞ்சமாவது மீட்கலாம்.
No comments:
Post a Comment