Tuesday 17 August 2021

நம் வியர்வை நம்மைக் காட்டிக் கொடுக்கும் - கட்டிக் காக்கவும் செய்யலாம்

 நம் வியர்வை நம்மைக் காட்டிக் கொடுக்கும் - கட்டிக் காக்கவும் செய்யலாம்

13-Aug-2021

அனுப்புகிறவரின் அலம்பல்:

சேலை கட்டும் பெண்ணுக்கு மட்டுமில்லை, நம் எல்லோருக்குமே தனித்துவமான வாசம் உண்டு.

மனிதன் மட்டும் தான் பெயர் வைக்கிறான். 'மனிதன்' என்ற பெயரை விடப் 'பெயரன்' என்ற பெயர் மனிதனுக்குப் பொருத்தமானதாகும்.  மற்ற உயிருள்ள, உயிரற்றவற்றிற்கும் மனிதனே பெயர் கொடுக்கிறான். நாமம் (பெயர்) இல்லாது ரூபம் (வடிவம்) இல்லை. 

மற்ற உயிரினங்கள் தனி நபரை அறிந்தும் தெரிந்தும் வைத்துள்ளன என்பதை மனிதன் விலங்குகளோடு கொள்ளும் உறவாலும் அறிவியல் ஆய்வுகளாலும் அறிகிறோம். ஒரு மாடு/ஆடு/நாய்/சிங்கம்/புலி/எறும்பு... தன் இனத்தை/குழுவைச் சேர்ந்த மற்றொரு தனி நபரை அடையாளம் கண்டு கொள்வது வேதியியல் சமிஞ்கைகள் மூலமே. அதாவது ஒவ்வொரு தனிநபருக்கும் தனித்துவமான வாசனை இருக்கிறது. மனிதனும் இப்படி தான் பிறப்பில் இருக்கிறான். மனிதக் குழந்தை தாயை அடையாளம் கண்டு கொள்வது பார்வையால் அன்று. அதற்குச் சில மாத வளர்ச்சி தேவை. அதற்கு முன் அது தாயின் வாசனையைக் கொண்டே அறியும். அதே போல் தொடுதல் மூலமும் அறியும்.

'ஔவை சண்முகி' திரைப்படத்தில் கமல், 'சண்முகி' வேடத்தில் தன் மகளுக்குக் குளித்த பின் துவட்டி விடும் போது, சிறுமி கமலை அடையாளம் கண்டு கொள்ள, 'கள்ளி, எப்படிக் கண்டு பிடிச்சே' என்று 'சண்முகி' கேட்க, சிறுமி, 'அப்பா வாசனை எனக்குத் தெரியுமே' என்பாள். கதை வசனம் எழுதிய கிரேஸி மோகன் நிச்சயம் கிரேஸி (crazy) இல்லை.

சிந்திக்கத் தொடங்கும் மனிதன் படிப் படியாக வாசனை நுட்பத்தை இழக்கிறான். மேலும் வாசனைக் குழப்பதை/ஏமாற்றதை உண்டு பண்ண பலவிதமான வாசனைப் பொருள்களைப் பூசிக் கொள்கிறான்.

கூந்தலுக்கு இயற்கையான‌ வாசனை (திருவிளையாடல்) இருக்கிறதோ இல்லையோ, மண்டையில் வேர்த்தால் அது கூந்தலுக்கும் வாசம் தரும். மண்டை காச்சல் வேறு மண்டை வேர்த்தல் வேறு என்று சொல்லாமலே நமக்குத் தெரியும்!

மற்ற விலங்குகள் தனி நபரை அடையாளம் கண்டு கொண்டாலும் அந்தத் தனி நபர் எதிரில் இல்லாத போது எப்படி அதை அடுத்த தனி நபருக்குக் குறிப்பிட்டுத் தகவல் பரிமாற்றம் செய்கின்றன என்பதை இதுவரை அறிவியலால் விளங்கிக் கொள்ள இயலவில்லை. எடுத்துக் காட்டாக, குழுவாக வேட்டையாடும் காட்டு நாய், ஓநாய், சிங்கம் போன்ற விலங்குகள் குழுவின் உறுப்பினர்கள் கண்ணுக்குத் தெரியாமல் (புதர் மற்ற மறைவுகளில்) இருக்கும் போது எப்படியான தகவல் பரிமாற்றம் செய்து வேட்டையாடுதலை ஒருங்கிணைக்கின்றன என்பது வியப்பே. 

சில விலங்குகள் பல குட்டிகள் போடுகின்றன. அவை தாயைத் தொடர்ந்து செல்கின்றன. சில தாய் விலங்குகள், பாதுகாப்பு கருதி, தங்கள் குட்டிகளை ஒவ்வொன்றாக அடிக்கடி வெவ்வேறு மறைவிடத்திற்கு எடுத்துச் சென்று சேர்க்கின்றன. தாயைப் பின்பற்றும் குட்டிகளில் ஒன்று பின் தங்கி விடுகின்றது; வழி தவறி விடுகின்றது.

இது போன்ற நேரங்களில் அத்தாய் விலங்குக்குத் தனக்கு எத்தனை குட்டிகள் உள்ளன என்ற எண்ணிக்கை எப்படித் தெரிகின்றது? அதற்குக் கணக்கு (1,2, 3...) தெரியுமா?

குட்டிகளுக்குப் பெயர் வைப்பதில்லை; வருகைப் பதிவு எடுப்பதில்லை. வாசனையைப் பயன்படுத்தினாலும் எத்தனை விதமான வாசனை என்ற கணக்கு தெரிய வேண்டுமே.

ஆனால் எப்படியோ குட்டிகளைத் தவற விடாமல் தாய் பாதுகாக்கின்றது.

டிஸ்கவரி, பிபிசி போன்ற டிவி ஆவணப்படத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது: ஆப்பிரிக்கப் புதர் மனிதர்கள் (bush people), வேட்டையாடி வாழ்பவர்கள் (hunter-gatherer) பற்றியது. அப்பழங்குடிக் குழுவில் உள்ள ஒவ்வொருவரின் வாசனையும் மற்ற எல்லோருக்கும் தெரியும் என்று சொல்கிறார்கள். அக்குழுவைச் சேர்ந்த ஒருவர், மணலில் உள்ள ஒரு கால் தடயத்தை முகர்ந்து பார்த்து, இன்னார் இத்தனை மணி நேரத்திற்கு முன்பு இத்திசையில் சென்றார் என்று சொல்கிறார்.

சரி, ஆலாபனை எல்லாம் முடிந்து இப்ப கச்சேரிக்கு / கட்டுரைக்கு வருவோம்.

வியர்வை வெளிப்படுத்தும் இரகசியங்கள் பற்றியது.

நான் முன்பு வேலை செய்த அலுவலகத்தில் (லண்டனில்) ஒரு பிப்பைன்ஸ் பெண்மணி (மேலாளர்), இந்தியர்கள் அருகில் வந்தால் you smell spicy என்று கேலி செய்வார். அவரால் அந்த அளவுக்கு நுட்பமாக நுகர முடிந்ததா என்று தெரியவில்லை. ஆனால் நாம் சாப்பிடுவது வியர்வையில் ஒழுகுகின்றது (leaks out).

அதைக் கொண்டு ஒருவரின் பால், வயது, அவருக்கு வர வாய்ப்புள்ள நோய்கள் எனப் பலவற்றை அறிய வாய்ப்புள்ளது; அத்தகைய ஆய்வுகளும் கருவிகளும் வந்து கொண்டுள்ளன; விரைவில் பயன்பாட்டுக்கு வரலாம்.

படித்துப் பாருங்கள்.



No comments:

Post a Comment