Tuesday, 17 August 2021

தக்காளி பூத்திருக்கு

தக்காளி பூத்திருக்கு

2021-06-28

ஜூம் சந்திப்பில் வாகை (அடவியின் இரண்டாம் மகள்; முதல் மகள் வெண்பா), வீட்டுத் தக்காளிச் செடியில் தக்காளி காய்த்திருப்பதைத் தக்காளி பூத்திருக்கு என்று சொன்னதைச் சொல்லிச் சிரித்துக் கொண்டு இருந்தோம்.

தக்காளிக்காய் பூத்ததால் வந்த பாடல் (உளறல்)


தக்காளி பூத்திருக்கு
தாழம்பூ பழுத்திருக்கு
பாப்பாளி கொழுத்திருக்கு
பாகல்குலை தள்ளி(யி)ருக்கு

வெண்டைக்காய் வெடித்திருக்கு
வெள்ளரிக்காய் வீங்கி(யி)ருக்கு
சுண்டைக்காய் சுருங்கி(யி)ருக்கு
சுரைக்காய் படர்ந்திருக்கு

அவரைக்காய் அரும்பி(யி)ருக்கு
ஆவக்காய்  மலர்ந்திருக்கு
துவரைகாய் துவண்டிருக்கு
தூதுவளை துளிர்த்திருக்கு

மாங்காய் மறைந்திருக்கு
மாதுளங்காய் மண்டியிருக்கு
தேங்காய்த் திரண்டிருக்கு
தெளிவாய்க் கருத்திருக்கு
(நம்ம கடையில் தெளிவான கருத்துகள் இருக்கு. சந்தடி சாக்கில் கொஞ்சம் 'தற்புகழச்சி'க்காய்!)

பூசுனைக்காய் பொங்கியிருக்கு
புடலங்காய் சுருண்டிருக்கு
பொல்லாங்காய் பரவியிருக்கு
புரட்சிக்காய்க் காத்திருக்கு
(உலகில் பொல்லாங்கு ஒழிந்து புரட்சி மலருமா?)

முருங்கைக்காய் முகிழ்ந்திருக்கு
முளைக்கீரை மொட்டுவிட்டிருக்கு
பருவங்கள் குழம்பி(யி)ருக்கு
பலகாய்கள் வெதும்பி(யி)ருக்கு 

வாழைக்காய் வளர்ந்திருக்கு
வாசமல்லி விளைஞ்சிருக்கு
வாழ்க்கை வளைஞ்சிருக்கு வாகை-வெண்பா
வாய்நல்லா முளைச்சிருக்கு

No comments:

Post a Comment