Friday, 20 August 2021

மனதைக் கட்டும் முன் மனதைக் காட்டு!

மனதைக் கட்டும் முன் மனதைக் காட்டு! - சரியாரந்தம்

2021-Aug-19

மனம் என்று தனியாக எதுவும் இல்லை. அஃது ஒன்றன் பின் ஒன்றாக வரும் சிந்தனைகளின் தொடர்ச்சியே.

ஆறு என்று தனியாக, ஓடும் நீரைத் த‌விர்த்து எதுவும் இல்லை என்பது போல் தான் இதுவும்.

ஆனால் நீர் ஓடாத போதும் அது ஓடிய‌ மணல் தடத்தை ஆறு என்று பேச்சு வழக்கில் சொல்கிறோம். அது சரியான பயன்பாடு இல்லை. 

நாம் சொற்களைக் கறாரான பொருளுடன் (அர்த்தம்) பெரும்பாலும் அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதில்லை. அப்படிப் பயன்படுத்த முனைந்தால் கோடி கோடியான புதுச் சொற்கள் தேவைப்படும். எனவே நாம் நம்மிடம் இருக்கும் சொற்களையே இடம், பொருளுக்குத் தக்கவாறு மீளப்  பயன்படுத்துகிறோம்; புரிந்து கொள்கிறோம்.

நம்மை இவ்வுடல், சிந்தனைகளுடன் அடையாளப்படுத்திக் கொள்வது என்பதில் தொடங்கி எல்லாவற்றையும் நாம் பொருண்மைப் படுத்திப் (objectification) பார்க்கிறோம். 'பொருண்மைப் படுத்தி', 'பார்க்கிறோம்' என்று சொல்லும் போது (இது மொழியின் சிக்கல் / கட்டுமானம், அதைப் பிறகு பார்ப்போம் - subject - verb - object structure) ஏதோ இரண்டு தனித்தனியான செயல்களாகத்  (two separate processes) தவறான பொருளைத் தருகின்றது.

உண்மையில் பொருண்மைப் படுத்துவதும் (objectification) பார்ப்பதும் (perception) ஒன்றே. பொருண்மைப் படுத்துதலே பார்த்தல்; பார்த்தலே பொருண்மைப் படுத்துதல்.

இலைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் 'மரம்' என்ற ஒரே சொல்லைக் கொண்டு குறிக்கிறோம். இது நாம் செய்யும் மற்றொரு ஏமாற்று (தனக்குத் தானே) வித்தையைக் காட்டுகிறது. அதாவது ஒன்றைப் பொருண்மைப் படுத்த நாம் அதைச் சாராம்சப் படுத்தவும் (abstract) வேண்டும்.

ஆறு, மரம்... என்று சொல்லும் போது ஒரு குறிப்பிட்ட நிலையான வடிவத்தை நாம் சொல்வதில்லை. பலவிதமான வடிவங்கள், நிலைகளின் தொகுப்பில் நாம் சாராம்சமான கூறுகளை, பண்புகளை மட்டுமே குறிக்கிறோம். இதை நாம் எந்தவிதமான தன்னுணர்வு (conscious / intentional effort) முயற்சி இல்லாமலே செய்கிறோம், குழந்தைப் பருவத்திலிருந்தே.

எனவே நம்மால் அந்தச் சொல்லை எல்லா மரங்களையும் எல்லா ஆறுகளையும் அவற்றின் எல்ல நிலைகளையும் (நீர் ஒடுவது, ஒடாதது, இலைகள் உள்ளது, இல்லாதது, கிளைகள் உள்ளது, இல்லாதது...) குறிக்கப் பயன்படுத்தவும் புரிந்து கொள்ளவும் முடிக்கின்றது.

இதை நாம் பயன்படுத்தும் எல்லா சொற்களைப் பற்றியும் நினைத்துப் பார்த்து விளங்கிக் கொள்ளலாம்: நாற்காலி, வண்டி, விலங்கு, பூ, பழம், மேகம், மலை...

[In reality, there are no objects / things; they are never static; all such objects are concepts (abstractions); what exists includes such concepts and beyond (not captured by such) concepts. As concepts they are 'real'; as reality they are just concepts. ]

இதற்கு மாறாக நாம் ஒன்றைக் குறிக்கப் பல சொற்களைப் பயன்படுத்தவும் செய்கிறோம். இதற்கும் நாம் சில வசதிக்கேற்ற எல்லைகளை வகுத்துக் கொள்கிறோம்.

ஒரே நீர் ஒட்டத்தை, அருவி என்றும், ஆறு என்றும், கால்வாய் என்றும் பல சொற்களால் இடம், பொருளுக்குத் தக்கவாறு குறிக்கிறோம்.

அதனால் மனம், நினைவு, சிந்தனை எல்லாம் ஒரே செயல் ஓட்டத் தோற்றத்தைக் (apparent process) குறிக்கப் பயன்படுத்தும் பல சொற்களே.

ஓர் அக உறுப்பாகப் பார்க்கும் போது 'மனம்' என்கிறோம். சில சிந்தனைகள் முன்பு நடந்ததானவை (அதுவும் தோற்றமே) பற்றி இருப்பதை 'நினைவு' என்கிறோம். மற்றவற்றை 'சிந்தனை' என்று பொதுவாகச் சொல்கிறோம். பகல் கனவு, கற்பனை என்ற சொற்களையும் பயன்படுத்துகிறோம். ஆனால் அவை அனைத்தும் எண்ண ஓட்டங்களே. எண்ண ஓட்டங்களைப் பற்றிச் சிந்திப்பதும் எண்ண ஓட்டங்களே. 

எனவே மனத்தைக் கட்டுப் படுத்துவது என்பதும் சிந்தனைகளைக் கட்டுப் படுத்துவது என்பதும் ஒன்றே.

எண்ணங்கள் எங்கிருந்து எழுகின்றனவோ (இந்த சொல்லே 'எண்ணங்கள் எங்கோ ஓர் இடத்தில் தங்கி இருப்பது போலவும் அங்கிருந்து எழுந்து வருவது போலவுமான' ஒரு பொய்யை / மாயையைக் கொண்டுள்ளது) அதே மூலத்திலிருந்து அவ்வெண்ணங்களைக் கட்டுப் படுத்த வேண்டும் என்ற எண்ணங்களும் எழுகின்றன.

மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்ற எண்ணம் இல்லாவிடில் மகிழ்ச்சி என்பதும் இல்லை. எனவே மகிழ்ச்சி என்பதும் எண்ணமே.

"If you are happy and you don't know you are happy, there is nobody home" - Alan Watts

We can also reverse this as: if you don't know (think) you are happy, you are not happy at all!

இது துன்பத்திற்கும் பொருந்தும். துன்பப்படுகிறேன் என்ற எண்ணம் இல்லாவிடில் துன்பம் இருக்குமா?

இதை ஒத்துக் கொள்வதோ, மறுப்பதோ எல்லாம் எண்ணங்களே.

எல்லாம் (நான், பிற, உலகம், பிரபஞ்சம், மகிழ்ச்சி, துயரம், நன்மை, தீமை, நீதி, அநீதி, அடிமைத்தனம், விடுதலை...) எண்ணங்களாக உள்ளதை புரிந்து கொள்வதும் ஓர் எண்ணமாக இருந்தாலும் அவ்வெண்ணம் எண்ணங்களின் காலை வாரிவிட்டு வீழ்த்துவதாகும்; முள்ளை முள்ளால் எடுப்பது போல்; எடுத்தவுடன் குத்திய முள்ளையும் எடுக்க உதவிய முள்ளையும் தூக்கி எறிந்து விட வேண்டும்.

அதுதான் நாம் சிந்தனைகளைக் கட்டுப்படுத்தியாக வேண்டிய தேவை.

செல்வம் என்பது சிந்தையின் நிறைவே
அல்கா நல்குரவு அவா எனப்படுமே (குமரகுருபரர்)

சிந்தனை (மனம்) நிறைவு என்பது தான் செல்வம் (பொருள் செல்வம், அருள் செல்வம், அறிவுச் செல்வம், உறவுச் செல்வம், புகழ்ச் செல்வம், சாதனைகள், வீடுபேறு... எல்லா வகைகளுக்கும் பொருந்தும்).

அதற்கு மாறாக ஆசை (அவா) இருப்பது தான் தீராத (அல்கா) வறுமை (நல்குரவு) ஆகும். இது எல்லா வகை ஆசைகளுக்கும் (சிந்தனைகளைக் கட்டுப் படுத்த வேண்டும் என்பது உள்பட) பொருந்தும்.

The aim is not, to be happy (not, to think) but to be free from the need to be happy (to think).

நம் தேவை மகிழ்ச்சியாக இருப்பதன்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தேவை இல்லாமல் இருப்பது ஆகும்.

நம் தேவை சிந்திப்பதைக் கட்டுப்படுத்துவது அன்று; சிந்திப்பதைக் கட்டுப்படுத்தும் தேவை (ஆசை) இல்லாமல் இருப்பது ஆகும்.

குழப்பமான தெளிவு இதுதான்!

கேட்கிறவருக்குப் புரியவில்லை என்றால் அது சித்தாந்தம்; சொல்பவருக்கும் புரியவில்லை என்றால் அது வேதாந்தம்!

புரிய வேண்டிய தேவையே இல்லை என்றால் அது சரியாரந்தம் ('சரி யார்?'  என்பதன் அந்தம்/முடிவு).

சரியார் என்றால் சரி யார் (யார் சரி)?
சரியார் என்றால் சரிய (வழுக்கல், வீழ்தல் இல்லாத‌ வழி) மாட்டார்.

No comments:

Post a Comment