Thursday, 10 March 2022

வாழ்க்கையின் உண்மை நிலை

 2022-03-09

வாழ்க்கையின் உண்மை நிலை


தேவா:

 ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டு

பேரை நீக்கி பிணம் என்று பெயரிட்டு

சூறையங் காட்டிடை கொண்டுபோய் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே.

 

 சிறியவர்-முதியவர், ஆண்-பெண்,ஏழை-பணக்காரர் என எந்த வித்தியாசமும் பாராமல் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வருவது மரணம்.


மரணம் நிகழ்ந்த மறு நிமிடமே அது வரை இருந்த பெயரை நீக்கி விட்டு பிணம் என்று கூற ஆரம்பித்து விடுவார்கள்.


முதல் ஒரு மணி நேரம் தான் இறந்து போன அதிர்ச்சியும், அழுகையும் இருக்கும்.


பிறகு உறவினர்கள் கூடி எப்போது எடுக்கலாம் என்று முடிவெடுத்து ஊருக்கு வெளியே உள்ள சுடுகாட்டில் கொண்டு போய் எரித்து விடுவார்கள்.


வரும் வழியிலே குளித்து விட்டு அப்போதிருந்தே மறக்க ஆரம்பித்து விடுவார்கள். இது தான் வாழ்க்கையின் உண்மை நிலை.


தொல்:

ஐரோப்பாவில் இடைக்காலத்தில் (medieval period) வீட்டில் மேசை மீது மண்டை ஓட்டை வைத்திருப்பார்களாம், தங்களுடைய முடிவு இதுதான் என்பதைப் பார்க்கும் போதெல்லாம் நினைவூட்டிக் கொள்ள.

"தினமும் நம் நிலையாமையை (இறப்பை) நினைவூட்டிக் கொள்வது அன்றாட வாழ்வை வளமாக வாழ்வதற்காக இடப்படும் எரு (manure) ஆகும்."
    -  பொருள்: அலன் வாட்ஸ் Alan Watts 
    - சொற்கள்: நினைவில் உள்ள அளவில்

ரோமப் பேரரசர்கள் ரோமின் வீதியில் தேரில் வெற்றி ஊர்வலம் போகும் போது பேரரசர் தேரில் நின்று கொண்டிருக்க அவருக்குப் பின்னால் ஓர் அடிமை அவர் தலைக்கு மேல் லாரல் ரீத் (laurel wreath) எனப்படும் இலைகளான வளையத்தைப் பிடித்துக் கொண்டே பேரரசரின் காதில் அவ்வப்போது 'நீ ஒரு நாள் இறக்கப் போகிறவன்' என்று சொல்லிக் கொண்டு வருவானாம். அதாவது வெற்றி ஊர்வலத்தில் மக்கள் வாழ்த்தி, புகழ்ந்து ஆரவாரம் செய்வதால் போதை தலைக்கு ஏறிப் பேரரசரின் கண்களை மறைத்து விடக் கூடாது என்பதற்காக.

நீறு இல்லா நெற்றி மட்டும் பாழ் அன்று. தான் சாம்பலாகப் போவதை நினைவு படுத்துவதற்காக வைத்துக் கொள்ளும் திருநீறு (சாம்பல்) நெற்றியில் இருந்தாலும் அதன் உட்பொருளை நினைக்காவிடில் வாழ்க்கையே பாழ்தான்.

மற்ற விலங்குகள் சாகின்றன. ஆனால் மனித விலங்கு மட்டுமே சாவோம் என்பதை முன்னரே அறியும் என்று சொல்லப்படுகிறது. மற்ற விலங்குகளைக் கேட்டு உறுதி செய்து கொள்ள வழியில்லை.

மனிதன் ஒரு புறம் சாகாமல் என்றுமே இருப்பது போல் (பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை) செயல்படுகிறான். மறு புறம் எப்படியும் செத்து விடுவோம், இல்லாமல் போவோமே என்று எந்த வழியிலாவது (புகழ், சாதனை...) தொடர்ந்து அருவமாகப் பிறர் நினைவில் நிலைக்கப் படாதபாடு படுகிறான்.

"ஆசைகளிலேயே கொடிய ஆசை புகழாசை" 
    - மு.வ.

“Each night, when I go to sleep, I die. And the next morning, when I wake up, I am reborn.” 
― Mahatma Gandhi

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி 
விழிப்பது போலும் பிறப்பு (திருக்குறள்: 339. 34. நிலையாமை)
Death is like a slumber sleep
And birth like waking from that sleep

இன்னொரு பார்வையில் நம்முள் தொடர்ந்து செல்கள் பிறந்தும் இறந்தும் கொண்டே உள்ளன. அதனால் நாம் வாழ்கிறோம் (வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்) என்று சொல்வதும் நாம் சாகிறோம் (செத்துக் கொண்டு இருக்கிறோம்) என்று சொல்வதும் ஒன்றே. ஒரே நாணயத்தின் இரு பக்கங்களே.

இறந்தவன சுமந்தவனும் இறந்திட்டான் - அதை 
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான் (திரைப்படப் பாடல்)

நம் இறப்பைப் பற்றி பகுத்தறிவாகவோ உணர்ச்சிமயமாகவோ அதிகம் சிந்திப்பது அன்றாட வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழ உதவாது.

வாழ்க்கையில் நம்பிக்கை என்பதே நாம் நாளை (பெரும்பாலும்) இருப்போம் என்பது இல்லாமல் இருக்க இயலாது.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு (திருக்குறள்: 336. 34. நிலயாமை)
One was yesterday; not today!
The wonder of the world's way!

இன்னொரு வகையிலும் மனிதன் தான் தப்ப இயலாத சாவால் தினமும் சாகாமல் சாகிறான். எப்படியாவது வாழ்நாளை நீடிக்க என்னென்னவோ மருத்துவச் சித்ரவதைக்குத் தன் உடலை உட்படுத்துகிறான். ஆனால் அன்றாடம் சில உடல், உள நல பயிற்சி, கட்டுப்பாடுகளைக் கொள்ளாமல், 'எப்படியும் சாகப் போகிறோம். இருக்கும் வரை அனுபவிப்போம்' என்று மயங்குகிறான்.

மத நம்பிக்கை உள்ளவர்கள் மறுபிறப்பு (rebirth), உயிர்த்தெழுதல் (resurrection) எனப் பலவற்றை நம்புகிறார்கள்.

பில்லியனர்கள் உடலை (பிணத்தை) ஆழஉறைய வைத்துக் காப்பாற்றி, எதிர்காலத்தில் அறிவியல் தன்னை உயிர்த்தெழ வைக்கும் என்று நம்புகிறார்கள்.

முதுமையைத் தள்ளிப் போடவும் வந்து விட்டால் திருப்பி இளைமையாக்கவும் அறிவியல் ஆய்வுகள் வேகமாக நடைபெறுகின்றன. எலிகளின் முதுமையை பின் திருப்புவதில் சில வெற்றிகள் கிடைத்துள்ளன.

அறிவியல் அறிஞர், அறிவியல் நவீன ஆசிரியர் ஐஸக் அஸ்சிமோவின் 'இரு நூற்றாண்டு மனிதன்' என்ற கதையில் வரும் இயந்திர மனிதன் (ரோபாட்) இரு நூற்றாண்டுகள் ஒரே குடும்பத்தில் பல தலைமுறையினருடன் (பிறந்து வாழ்ந்து இறந்து போகின்றனர்) வாழ்ந்து சலித்து முடிவில் சாக விரும்பும்; அதன் விருப்பப்படி அதன் சொந்தக்காரர் அதைச் சாகச் செய்வார்.

இறப்பு இல்லை என்றால் வாழ்க்கை வாழ்க்கையாக இருக்குமா?

சண்முகசுந்தரம்:

ஜெயகாந்தன் ஒரு நாவலில் (வாழ்க்கை அழைக்கிறது என்று நினைவு) சொல்கிறார்:

என்றாவது ஒரு நாள் சுவாசிப்பதற்கு காற்று இல்லாமல் நான் மரித்துப் போகக்கூடும். அப்போது ஊரெங்கும் சூறைக்காற்று வீசினாலும், எனது சுவாச கோசங்களை இயக்க முடியாதே!

இது போன்ற (இந்த அளவு கவிதை கலந்து இல்லாவிட்டாலும்) நிறைய சொல்லி விட்டார்கள். நாம் அனைவரும் ஒருநாள் சாகத் தான் போகிறோம். அதையே நினைத்துக் கொண்டு, தினம் தினம் சாக வேண்டுமா என்ன?

ஒரு ஜென் கவிதை இதைப் பற்றி மிக அழகாகப் பேசுகிறது.

How admirable!
to see lightning and not think
life is fleeting.
-- Basho

இது தான் என் நிலையும் கூட. அதனால் தான் Dylan Thomas எழுதிய இந்த வரிகள் எனது மனதுக்கு மிகவும் நெருக்கம்.
 
Do not go gentle into that good night,
Old age should burn and rave at close of day;
Rage, rage against the dying of the light.

No comments:

Post a Comment