Sunday, 6 March 2022

போர் போகும் போக்கு...

 2022-03-06

போர் போகும் போக்கு


திருவிளையாடல் பாணியில்:

சிவன் (கோயில் மண்டபப் புலவராக): பிரிக்க முடியாதது எது?

தருமி: மனிதரும் போரும்!

மனிதரும் போரும் பிரிக்க முடியாதது என்பது உண்மை என்றால் அதன் மறுதலை மனிதரும் அமைதியும் பிரிக்க முடியாதது என்பதும் உண்மை ஆகும்.

போரும் அமைதியும் மனித குல வரலாற்றை வடித்தெடுத்து வந்துள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம். 

மனிதர்கள் போரைப் போற்றியும் (போர்ப் பரணி) வெறுத்தும் (அசோகர்) வந்துள்ளார்கள். எனவே போர் முற்றிலும் தவிர்க்கப் பட முடியவில்லை. இனிமேலும் தவிர்க்கப் பட முடியும் என்று தோன்றவில்லை.

ஓர் எரிமலை திடீரென்று ஒரு நாள் வெடித்து விடுவதில்லை. அதற்குப் பல மாதம், ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அழுத்தம் கூடி வருகிறது.

நிலநடுக்கமும் அவ்வாறே. நிலத்தட்டுகள் ஒன்றோடொன்று மோதி உராய்ந்து கொண்டு பல ஆண்டுகளாக முத்தாய்ப்பு நடத்த பின் தான் நடுங்குகிறது.

மனிதர்களின் செயல்பாடுகளும் (போர் உள்பட) அதே போல் தான். மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப செயல்படலாம் என்பதில் அவர்கள் விருப்பமும் அப்படிச் செயல்படலாம் என்ற நினைப்பும் எல்லாம் இயற்கையில் தானாக நடக்கின்றன. 

மனிதன் தான் வாழ்வை நடத்துவதாக நினைத்துக் கொள்வதும் வரலாற்றை உருவாக்குவதாக, இயக்குவதாக நினைத்துக் கொள்வதும் அவ்வாறே. இப்படி எழுதுவதும் அவ்விதமே.

இதை ஒரு புறம் மனதில் வைத்துக் கொண்டு, போரின் வரலாற்றைப் பார்த்தால், போர் இனி எப்படிப் போகும் என்று ஊகிக்கலாம்.

கையால் சண்டை போட்டு கழுத்தை நெரித்து அல்லது தலையில் கல்லைப் போட்டு ஒருவன் எத்தனை பேரைக் கொல்ல முடியும்?

அட, முகத்துக்கு முகம் பார்த்துச் சண்டை போட்டுக் கத்தியால் குத்தித்தான் ஒருவன் எவ்வளவு பேரைக் கொல்ல முடியும்? அதிலும் எதிராளி உயிருக்குப் பயந்து ஆயுதத்தைப் போட்டு விட்டுச் சரணடைந்து குனிந்து நின்றால் கழுத்தை வெட்டிக் கொல்ல எத்தனை பேருக்கு மனம் வரும்? 

முதல் உலகப் போரிலும் இரண்டாம் உலகப் போரிலும் தூப்பாக்கியால் தூர இருந்து சுட்டுக் கொல்வது எப்படி எதிர்பார்த்த அளவு நடக்கவில்லை என்பது சான்றுகளுடன் Humankind - A Hopeful History என்ற நூலில் விளக்கப் பட்டுள்ளது.

இரண்டு உலகப் போர்களிலும் பெருமளவு கொல்லப்பட்டவர்கள் பீரங்கி, விமானத் தாக்குதால் தான் என்றும் சொல்லப்படுகிறது.

அதாவது மனிதனின் இயல்பான மனசாட்சி எழுவதற்கு இடமில்லாமல், கொல்லப்படுவர்களை நேரடியாகப் பார்க்க வழியில்லாமல் இருக்கும் போது தான் கொத்து கொத்தாக மனிதர்களைக் கொல்ல முடிந்துள்ளது.

நேருக்கு நேர் நின்று ஏறத்தாழ சமவலிமை, வாய்ப்புடன் நடந்த‌ போர் வீரம் போற்றப்பட்ட பழம் காலம் வேறு. இன்று நடக்கும் பொத்தானை அழுத்திக் குண்டு மழை பெய்து, ஏவுகணைகளை ஏவி நடக்கும் கோழைப் போர் வேறு. 

இன்று அது மிக வேகமாக அதிகரித்துள்ளது. ஆளில்லா விமானங்களை ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து இயக்கிக் கொன்று குவித்து விட்டு உடலில் தூசி கூடப் படாமல் வழக்கம் போல் உண்டு உறங்கி எழுந்து மீண்டும் எந்த ஆபத்தும் இல்லாமல் பொத்தனை அழுத்தி பொசுக்கித் தள்ளலாம்.

வேட்டையாடி விலங்கைக் கொல்லும் ஆப்பிரிக்கப் புதர்ப் பழங்குடியினர் முதலில் இறந்த விலங்கு தங்களை வாழ்விக்கப் போவதற்காக அதனிடம் மன்னிப்பைக் கோரிச் சிறு சடங்கு நடத்துகிறார்கள். அதற்கும் வீட்டில் வளரும் கோழி, ஆடு, பன்றி, மாட்டைக் கொன்று தின்பதற்கும் இன்று பண்ணைகளில் வளர்க்கப் பட்டுத் தொழிற்சாலைகளில் இயந்திரங்களால் கொல்லப் பட்டு வரும் இறைச்சியைத் தின்பற்கும் உள்ள வேறுபாடு எவ்வளவு?

அதுபோல் போரும் இயந்திர மயமாகி (industrialized) மனசாட்சியைப் புதைத்து விட்டது. வீரத்திற்கு வேலை இல்லாமல் செய்து விட்டது. வீரம் போனதால் விவேகமும் போய் விட்டது.

அடுத்த கட்டம் (ஏற்கனவே பகுதியளவு நடந்து கொண்டுள்ளது) தானியங்கி இயந்திரமயமாகுதல் (ரோபாட்) தான்.

தற்போது ரோபாட்டைப் பயன்படுத்தி நடக்கும் தாக்குதல்கள் பாராளுமன்ற விவாதத்திற்கு ஒப்புதலுக்கு வருவதே இல்லை. இதுதான் வருங்காலத்தில் மேலும் மேலும் நடக்கும்.
 
போர் என்றாலே பொய்ப் பிரச்சாரம் (எல்லாப் பக்கங்களுக்கும்) நடக்கும் என்பது போக, போரே நடக்குதா நடக்கவில்லையா என்று தெரியாமல் போனாலும் போகலாம். இதுவும் ஏற்கனவே நடந்து வருகின்றது.

அது மட்டுமல்லாது இன்று போரை அறிவிப்பவர்கள் யாரும் போர்க்களத்தில் நின்று போர்  செய்வதில்லை என்பதால் அவர்களுக்குத் தனிப்பட்ட ஆபத்து இல்லை. They don't have their skin in the game. ஊரான் வீட்டுக் காசில் பங்குச் சந்தையில் புகுந்து விளையாடுவது (investment bankers) போல் தான்.

ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், அதன் பங்கு விற்பனைகள் என்று போர் நாட்டைப் பாதுகாக்க, உரிமைக்காக நடந்தது போக அந்தப் போர்வையில் போருக்காக போர் நடக்கிறது.

விளையாட்டு (sports) என்பது எப்படி ஒரு வணிகமயமாகி வீணாகி விட்டதோ அதை விட மோசமாகப் போர் என்பது புரையோடிய‌ அயோக்கியத் தொழில் வணிகமாகி விட்டது.

எப்படி இருந்தாலும் போரில் வீரமோ மனச்சாட்சியோ மீண்டும் நுழைவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் வருங்காலத்தில் போர்க் கொடுமைகளும் அழிவும் அதிகரிக்கவே செய்யும் என்று தோன்றுகிறது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொன்னது போல், மூன்றாம் உலகப் போர் எப்படி நடக்குமோ தெரியவில்லை, ஆனால் நான்காம் உலகப் போர் (அதாவது கோள வெப்பமயமாதலால் வரும் பேரழிவில் தப்பியவர்கள்) கற்களை வீசி நடக்கும் என்று வந்தால் ஒரு வேளை வீரம், விவேகம், மனசாட்சிக்குப் போரில் மறுவாழ்வு வரலாம்.


***

No comments:

Post a Comment