Monday 23 May 2022

ஆதி சங்கரர் தத்துவ உபதேசம் !

 ஆதி சங்கரர் தத்துவ உபதேசம் !

2022-05-23

Shared by Logesh:

ஆதி சங்கரர் தத்துவ உபதேசம் !
ஸ்ரீ ரமண மகரிஷி எழுதிய தமிழ் பாடல் !
------------------------------------------------------------------
உள்ளது நாற்பது அனுபந்தம் நூலில் 
39 வது பாடலை பகவான் ஸ்ரீ ரமணர் எழுதிய விபரங்களை சீடர் அண்ணாமலை ஸ்வாமி விவரிக்கிறார்.

இந்த பாடல் 1930 களின் பின்பகுதியில் எழுதப்பட்டது.

அத்வைதம் பற்றி ஸ்ரீ பகவான் 
சில கருத்துக்களை குறிப்பிட்டார்.

சாதாரண நடவடிக்கைகளில் அத்வைதத்தை கடைபிடிக்கக் கூடாது. மனதளவில் வேறுபாடு இல்லாமல் இருந்தால் போதும். 

மனதில் வண்டி வண்டியாக வேறுபாடான சிந்தனைகளை வைத்துக்கொண்டு, எல்லாமே ஒன்றுதான் என்று வெளியில் பாசாங்காக நடிக்கக் கூடாது.

மேல்நாட்டுக்காரர்கள் கலப்புத் திருமணம் செய்து கொள்கிறார்கள். எல்லோருடனும் சமமாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். இதை மட்டும் செய்து என்ன பயன் ? போரும், போர்க்களங்களும்மட்டும்தான் விளைவு ! இந்த எல்லா நடவடிக்கைகளால், யாருக்கு சந்தோஷம் கிடைத்தது ?

இந்த உலகம் ஒரு பெரிய நாடக மேடை ! ஒவ்வொருவரும் தனக்கு எந்த பாத்திரம் ஒதுக்கப்பட்டிருக்கிறதோ, அதற்கு ஏற்ப நடிக்க வேண்டும் ! வேறுபட்டதாக இருப்பது பிரபஞ்சத்தின் இயற்கை ! ஆனால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வேறுபட்ட உணர்வு இருக்கக் கூடாது. " என்று ஸ்ரீ பகவான் விளக்கம் அளித்தார். 

அவர் சொன்ன விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அவற்றை தொகுத்து தமிழில் ஒரு பாடலாக எழுதித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். 

ஸ்ரீ பகவான் சம்மதித்தார்.
       
ஆதி சங்கரர் எழுதிய தத்துவ உபதேசம் என்ற நூலில் வரும் 87 வது பாடல் இதே கருத்தை தெரிவிக்கிறது. அதை தமிழில் வெண்பாவாக எழுதினார். அந்த வெண்பா அவருக்கு திருப்திகரமானதாக இருந்தது. அந்த பாடலை என் டைரியில் எழுதிக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டேன்.

இந்த பாடல் -- உள்ளது நாற்பது அனுபந்தம் -- என்ற நூலில் 39 வது பாடலாக பிரசுரம் செய்யப்பட்டது என்று அண்ணாமலை ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

அந்த பாடல் : --

அத்துவிதம் என்றும் அகத்துறுக ஓர்போதும்
அத்துவிதம் செய்கையில் ஆற்றற்க -- புத்திரனே
அத்துவிதம் மூவுலகத்து ஆகும் குருவினோடு
அத்துவிதம் ஆகாது அறி.

பொருள் :--

இரண்டு அல்ல ஒன்றே என்ற அத்வைத உண்மையை உள்ளத்தில் உணர்வாயாக !
ஆயினும் அதை செய்கையில் காட்டாதே !
புத்திரனே ! மூன்று உலகத்திலும் நீ அத்வைதத்தை கடைபிடித்தாலும், பரம்பொருளின் வடிவமான குருவிடம் அத்வைதம் காட்டுவது ஆகாது என்ற உண்மையை அறிவாயாக !

ஸ்ரீ ரமண மகரிஷி போற்றி போற்றி...

நமோ பகவதே ஸ்ரீ ரமணாய🙏🙏🙏

=========================

அனுப்புகிறவரின் அனுபந்தம்:

"சாதாரண நடவடிக்கைகளில் அத்வைதத்தை கடைபிடிக்கக் கூடாது. மனதளவில் வேறுபாடு இல்லாமல் இருந்தால் போதும். "

'சாதாரண நடவடிக்கை' என்ற சொற்கள் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது.

'எல்லாம் ஒன்றே' என்பதற்காக அடுத்தவர் சாப்பிட்டு நான் பசியாற முடியாது. அதே போல் நான் சாப்பிட்டு அடுத்தவர் பசியாற முடியாது.

"...அத்வைதத்தைக் கடைபிடிக்கக் கூடாது. மனதளவில் வேறுபாடு இல்லாமல் இருந்தால் போதும்." என்பதை அப்படியே விழுங்கக் கூடாது. ரமணரின் சொற்களை விட அவர் வாழ்ந்த வாழ்க்கையைக் கொண்டே நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது எல்லாப் பெரியவர்களுக்கும் (புத்தர், ஏசு, நபிகள், காந்தி, பெரியார்...) எல்லோருக்கும் பொருந்தும்.

வெறும் 'மனதளவில் வேறுபாடு இல்லாமல் இருந்தால் போதும்' என்பதால் நம் நடப்பில் ஒரு மாற்றமும் தேவையில்லை என்று பொருள் இல்லை.

அடுத்த வரியில் '...எல்லாமே ஒன்றுதான் என்று வெளியில் பாசாங்காக நடிக்கக் கூடாது' என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

மனதில் மட்டும் இருந்து என்ன பயன், நடப்பில் இல்லை என்றால்?

மனதில் பாசாங்காக இல்லாமல் உண்மையாக ஊறியிருந்தால், அது நடப்பில் வெளிப்படாமல் இருக்க இயலாது என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டியது.

No comments:

Post a Comment