Wednesday, 21 November 2012

கடல் கடந்த மடல் 7

2012-11-21


கடல் கடந்த மடல் 7

தமிழ்நாட்டு நலம் நாடிகளே!

நம் நிலையே சூழ்நிலை

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பிரபல எழுத்தாளர் - பேச்சாளர், தமிழர்களின் மோசமான மனப்பான்மையை எண்ணி வருந்தி, தமிழர்களின் குருதியை (இரத்தம்) முற்றாக இறுத்து (வடித்து) விட்டுப் புது தன்மானக் குருதியை ஏற்றினால் தான் தமிழர்கள் உருப்படுவார்கள் என்று சொன்னார். அதாவது தமிழர்களின் இயல்பிலேயே ஏதோ குறை உள்ளது என்பது தான் அதன் பொருள். இது உண்மையாக இருக்குமா? தமிழர்களுக்கு என்று தனி இயல்பு உள்ளதா?

சென்னையில் முட்டி மோதிக் கொண்டு பேருந்தில் ஏறும் தமிழன் பெங்களூர் சென்றால் வரிசையில் நின்று ஏறவில்லையா? அதே போல் பெங்களூர் கன்னடன் சென்னைக்கு வந்தால் இடித்துத் தள்ளிக் கொண்டு ஏறவில்லையா? இது ஒரு சிறு எடுத்துக்காட்டு தான். ஆனால் மனிதர் குணம் என்பது குருதியிலோ தலை எழுத்தாகவோ இல்லை என்று காட்டுகின்றது. மனிதர் சூழ்நிலையையும் சூழ்நிலை மனிதரையும் பாதித்து இயங்குகின்றன. நாம் சூழ்ந்து உருவாக்கும் நிலை தான் சூழ்நிலை. அதில் வரலாற்றுப் பின்னணியும் (சூழ்நிலை) அடங்கும்.

பிரிட்டனில் 1997-இல் ஆட்சியைப் பிடித்த தொழிற்கட்சி (டோனி பிளேர் தலைமையில்) தொழிலாளர்களுக்குக் குறைந்த பட்ச ஊதியத்தைச் (minimum hourly rate) சட்டமாக்கியது. டோனி பிளேர் பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின் இலாப நோக்கமுள்ள ஒரு தொழிலை ஆரம்பித்தார். அதில் வேலை செய்யப் புதிய பட்டதாரி இளைஞர்களை நியமித்த போது அவர்களுக்கு ஊதியம் தராமல் இலவசமாக வேலை வாங்கினார். நீடித்து வேலைக்கு வைத்தால் ஏமாற்ற முடியாது என்பதால் மூன்று மாதங்களுக்கு மேல் யாரையும் வைத்துக் கொள்ளாமல் புதியவர்களை ஊதியமில்லா வேலைக்கு அமர்த்திக் கொண்டார். இதைச் சமூகப் பொறுப்புள்ள நிறுவனங்கள் கண்டறிந்து கண்டனம் தெரிவித்துக் குட்டு வெளிப்பட்டவுடன் இப்போது குறைந்த பட்ச ஊதியம் தருவதாக அவர் நிறுவனம் அறிவித்துள்ளது. டோனி பிளேர் பல கோடிப் பணக்காரர் (multi millionaire). கத்தோலிக்க மதத்திற்கு மாறியவர். ஈராக் மீது அத்துமீறல் போர் தொடுக்கக் 'கடவுளைக்' காரணம் காட்டியவர்.

உள்ளத்தனையது உயர்வு

மேலும் மனிதர் எதைத் தொடர்ந்து ஆழமாக நம்புகின்றனரோ அந்த நம்பிக்கையே அதை உண்மையாக்கி விடும் ஆபத்து உள்ளது. அதற்காக மனிதர் தன்னால் பறக்க முடியும் என்று ஆழமாக நம்பினால் பறந்து விட மாட்டார்கள். ஆனால் நமக்கு மொழிப் பற்று இல்லை, இனப்பற்று இல்லை, நம்மிடையே ஒற்றுமை இல்லை நேர்மை இல்லை, நியாயம் இல்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தால் அதுவே அப்பண்புகளைப் பாதிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதே போல் பொய்யாகவும் போலித் தனமாகவும் மொழிப்பற்று, இனப்பற்று, ஒற்றுமை இருப்பதாக ஆரவாரம் செய்து கொண்டு இருப்பதால் மட்டுமே அப்பண்புகள் வளர்ந்து விடா. அதிலும் இத்தகைய போலி ஆரவாரம் செய்து கொண்டு நடைமுறையில் எதிராக வாழ்ந்து கொண்டு இருப்பதே பெரிய தீமை விளைவிக்கும்; அதுவே தமிழ்நாட்டில் நடந்துள்ளது; நடந்து வருகின்றது. இதில் இவரை, அவரை என்று சிலரைக் குறை சொல்லிக் கொண்டு இருப்பது நம் பொறுப்பை, கடமையைத் தட்டிக் கழிப்பதாகும்.

சென்ற ஆண்டு (2011) கோடைகாலத்தில் (ஆகஸ்டு) பிரிட்டனில் காவல் துறையினர் ஒரு நபரைச் சந்தேகத்தின் பேரில் (அவர் சாலையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு பயமுறுத்தியதாக) சுட்டுக் கொன்று விட்டனர். இது இலண்டனின் கிழக்குப் பகுதியில் (வறுமை, குற்றங்கள் அதிகம் உள்ள பகுதி) நடந்தது. அதை எதிர்த்துக் காவல் நிலையத்தின் முன் சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர். எப்படியோ அது (காவல் துறையினர் மீது இருந்த வெறுப்பு ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது) பெரிய கலவரமாக மாறிப் பிரிட்டனின் பல பகுதிகளுக்கும் பரவிக் கடைகளைக் கொள்ளை அடிப்பது, உடைப்பது, தீ வைத்து எரிப்பது என்று சில நாள்களுக்கு நாட்டின் சில நகரங்கள் குறிப்பாக இலண்டன் அமளி துமளிப் பட்டது. அதில் பள்ளியின் கோடை விடுமுறையால் பல சிறுவர்களும் வேடிக்கை போலச் சேர்ந்து கொண்டனர். கடைசியாகக் காவல் துறையினரால் (கண்ணீர் புகை வீச்சு, லத்தி சார்ஜ், துப்பாக்கி சூடு எதுவும் இல்லாமல்) அடக்கப் பட்டது. அப்போது தொலைக்காட்சியில் ஓர் இடத்தில் கலவரம் நடந்ததைத் தெருவில் உள்ள வீடியோ காமிராவில் பதிவானதைக் காண்பித்ததைப் பார்த்த ஒரு தாய் அக்கலவரத்தில் தன் மகள் ஈடுபட்டுள்ளதைக் கண்டார். உடனே காவல் துறைக்குப் போன் செய்து வீட்டில் இருந்த தன் மகளைக் (காட்டிக் கொடுத்து) கைது செய்ய வைத்தார். அந்தத் தாய் இப்படிச் செய்வதற்கு முன் தனக்கு உள்ளக் குமறலாக இருந்ததாகவும் ஆனால் நேர்மையான எந்தப் பெற்றோரும் செய்யக் கூடியதையே தான் செய்ததாகவும் சொன்னார்

பயணம் செய்தவர்கள் விட்டுச் சென்ற விலையுயர்ந்த பொருள்கள், பணம் முதலியவற்றை நேர்மையாக மீண்டும் அவர்களிடம் ஒப்படைத்த ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் பற்றிய செய்திகள் பல நாடுகளிலும் - தமிழ்நாடு உள்பட - வந்து கொண்டு இருக்கின்றனவே.

வழி தவறிய வழிகாட்டி

நமக்குக் கணக்குச் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் பிறகு 2 + 2 = 5 என்று சொன்னால், அவரே சொல்லி விட்டார் என்று நாமும் 2 + 2 = 5 என்று பின்பற்றுவோமா? நம்மைப் புகை பிடிக்க வேண்டாம் என்று சொன்ன மருத்துவர் புகை பிடிப்பதைப் பார்த்து விட்டு அவரே புகை பிடிக்கிறார் என்று அவர் முன்பு சொன்னதைப் புறக்கணிப்போமா? அதே போல் நமக்கு ஒரு காலத்தில் உணர்வூட்டிய எழுத்தாளர், பேச்சாளர், தலைவர் பின்னால் வழி தவறினால் அவர் முக்கியமா அவர் ஊட்டிய உணர்வு முக்கியமா? இந்த மண்ணும் மரபும் மொழியும் பண்பும் கலையும் கருத்தும் (இலக்கியம்) முதலா அல்லது 'இன்றிருப்பார் நாளை இல்லை' என்ற நிலையாத் தனி நபர் முதலா?

கருத்து வேறுபாடுகளைக் கடந்து மனித நேயத்துடன் அனைவரிடமும் பண்புடன் நடந்து கொள்ளுதல் வேறு. தனி நபரை முன்னிறுத்தி வழி பாடும் பழி பாடும் செய்து கொண்டு இருப்பது வேறு. முன்னது வேண்டத் தக்கது; பின்னது விடத் தக்கது.

மலிவுப் பதிப்பா - மாண்புப் பதிப்பா

தனி நபராக நம்மை நாம் பிறருடன் ஒப்பிட்டுக் கொண்டு நம்மைப் போற்றிக் கொள்வதும் தூற்றிக் கொள்வதும் நம்முடைய உண்மையான செம்மையான வளர்ச்சியைப் பாதித்துத் திரிக்கும். நம் பிள்ளைகளையும் அது போல் பிறர் பிள்ளைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து கொண்டு அலைவது நம் முதிர்ச்சிக் குறைவுக்கு அடையாளம். இது நம் மொழி, இன அளவிலும் பொருந்தும். தொடக்க நிலையில் இது போன்ற ஒப்பிடுதல் தேவைப் படலாம். ஆனால் அதுவே வளர்ச்சிக்கு முன்னேற்றத்திற்கு முழுமையான அளவு கோலாகி விட முடியாது. அப்படி ஆகி விடுமானால் ஊடகத்திலும் ஊரிலும் வெறும் மலிவுப் பதிப்புகளே மிஞ்சும்.

'திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்ற திரைப் படப் பாடலைக் கேட்டு ஆமோதிக்கிறோம். எவ்வளவு சட்டம், தண்டனைகள் போட்டாலும் 'திருடுவது தவறு; நெறி அன்று' என்ற பிடிப்புறுதி ஒவ்வொருவருக்கும் இல்லாவிடில் திருட்டை ஒழிக்க முடியாது. அதே போல் 'நாமாகப் பார்த்து நெறியில் நடக்கா விட்டால் நன்னெறி தழைக்காது' என்றும் பாடலாம். எவ்வளவு சட்டம், தண்டனைகள் போட்டாலும் 'நெறிப்படி வாழ வேண்டும்' என்ற பிடிப்புறுதி ஒவ்வொருவருக்கும் இல்லாவிடில் நன்னெறி தழைக்காது.

நம்மிடம் 5 ரூபாய் தான் இருக்கும் போது அடுத்தவருக்கு 10 ரூபாய் கொடுக்க முடியுமா? நம்மிடம் இருப்பதைத் தான் பிறருக்குக் கொடுக்க முடியும்; இருக்கும் அளவுக்குத் தான் கொடுக்க முடியும். மாண்பும் மானமும் இதற்கு விதிவிலக்கல்ல. நாம் மாண்புப் பதிப்பாகாமல் பிறருக்கு மாண்பை உணர்த்தவும் முடியாது; பிறரிடம் மாண்பை வளர்க்கவும் முடியாது. அதே போல் நாம் மாண்பைப் போற்றாமல் மலிவுகளைப் போற்றிக் கொண்டு இருந்தால் மலிவுகள் தான் பெருகும்.

அந்த இனத்தைப் பார், இந்த இனத்தைப் பார் என்று அவர்களின் நிலைக்கு நாம் போகத் தேவையில்லை. நமக்கு என்று ஓர் இலக்கு தனி நபராகவும் இனமாகவும் கொள்ள வேண்டும்.  'தமிழன் என்றோர் இனம் உண்டு; தனியே அவர்க்கென குணம் உண்டு' என்று நாமக்கல் கவிஞர் பாடியதை முழங்குகின்றோம். ஆனால் அந்தத் தனிக் குணம் என்ன என்று தெரிந்து கொண்டோமா? புரிந்து கொண்டோமா? வகுத்துக் கொண்டோமா? பொதுவான மனித இயல்பு வரையறைகளுக்கு உள்பட நமக்கு எனத் தனித்தன்மையை வகுத்துக் கொள்வதில் தான் நம் வாழ்வின் பொருள் (அர்த்தம்) உள்ளது.

ப்ரெயன் வில்லியம் ஹா என்ற ஆங்கிலேயர் பிரிட்டனின் ஈராக் போரை எதிர்த்து, பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு முன்பு பத்தாண்டுகள் 24 மணி நேரமும் பகல், இரவு, வெயில், மழை, பனி எல்லா நேரங்களிலும் அங்கேயே இருந்து அமைதி வழியில்  போராடி உயிரை விட்டார்
(http://en.wikipedia.org/wiki/Brian_Haw)

சுயக் கட்டுப்பாடும் சுற்றுப் புறக் கட்டுப் பாடும்

தமிழர்க்கு என்றோ அல்லது வேறு எந்த இனத்தினருக்கோ இயற்கையிலேயே எந்தத் தனி இயல்பும் கிடையாது. எல்லோருக்கும் பொதுவான மனித இயல்பே உள்ளது. ஆனால் அதில் உள்ள ஒவ்வொரு குணங்களும் (கூறுகளும்) சூழ்நிலையைப் பொறுத்து வெளிப்படுகின்றன அல்லது அமிழ்ந்து கிடக்கின்றன. சூழ்நிலை எப்படி உருவாக்கின்றது? நிலம், நீர், காற்று போன்ற இயற்கைச் சுற்றுப் புறத்திற்கு அப்பால் மனிதரின் சமுதாயச் சூழ்நிலை அச்சமுதாயத்தில் வாழும் மனிதர்களால் தான் உருவாகின்றது. அதில் எல்லோருக்கும் சம அளவு பங்கு இல்லை. ஆனால் பங்கே இல்லாமல் இல்லை. நம்முடைய பங்கை வளர்த்துக் கொள்வதும் தேய்த்துக் கொள்வதும் சூழ்நிலையால் நடக்கலாம்; அப்படி வளர்த்துக் கொள்வதும் தேய்த்துக் கொள்வதும் சூழ்நிலையைப் பாதிக்கலாம்.

ஒவ்வொரு மனிதரும் தன்னைத் திருத்திக் கொண்டால் உலகம் சீர்ப்படும் என்பது ஒரு பக்கம். சமுதாயம் தனி மனிதர் நெறியாக வாழ வழி வகுக்க வேண்டும் என்பது மறு பக்கம். சுயக் கட்டுப்பாடும் தேவை. சுற்றுப் புறக் கட்டுப் பாடும் தேவை. நம்மை நாம் நெறிப் படுத்திக் கொள்வதுடன் சமுதாயத்தில் பிறர் அப்படி நெறியுடன் வாழ உதவுவது, உழைப்பது, குரல் கொடுப்பது, போராடுவது என்பன முடிவில் நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவியாகும்.

"நாம் பிறருக்கு உதவும் போது நமக்கு நாமே உதவிக் கொள்கிறோம்"
                - ரமண மகரிஷி

“It is one of the most beautiful compensations of life that no man can sincerely try to help another without helping himself.” – Ralph Waldo Emerson
"வாழ்க்கையின் அற்புதமான சமச்சீர் என்னவென்றால் நாம் பிறருக்கு உதவுவதன் மூலம் நாமும் பயனடைவது தான்."
                - ரால்ப் வால்டோ எமர்சன்

தமிழ்நாடி.
கார்த்திகை 6, திருவள்ளுவர் ஆண்டு 2043 (நவம்பர் 21, 2012)

No comments:

Post a Comment