2012-09-21
புரட்டாசி 5, திருவள்ளுவர் ஆண்டு 2043 (21 செப்டம்பர் 2012)
கடல் கடந்த மடல் 4
தமிழ்நாட்டு நலம் நாடிகளே!
அகண்ட நோக்கும் ஆழமான அறிவும் நடுநிலையான ஆய்வும் பரந்த மனப்பான்மையும் வேண்டும் என்று சொல்லாதார் யார்? ஆனால் சிக்கல், மோதல் என்று வரும் போது, அதுவும் அச்சிக்கல், மோதலில் தான் அடி படும் போது மேற்கண்ட அறிவுரையைக் கை விடாதார் யார்? 'சுய நலம் ஜீவ சுபாவம்' என்று அதற்கு விளக்கமும் சொல்வார்கள். ஆனால் ஒப்புரவும் (பொது நலம், பலர் நலம், இன நலம், மனித நேயம் / ALTRUISM) ஜீவ சுபாவம் தானே.
ஒன்று மட்டும் இருந்து மற்றொன்று இல்லை என்றால் தனி உயிரி (INDIVIDUAL
ORGANISM) உருவாகி இருக்கவே முடியாது. ஏன், அறிவியல் புரிதலின் படிக் கூடத் ‘தனி உயிரி’ என்பது ஒரு பல்லுயிர்ச் சூழல் (ECOLOGY) ஆகும்.
எடுத்துக்காட்டாக, நம் குடலில் உள்ள நுண்ணுயிர்கள் தாம் உணவைச் செரிக்கின்றன. செரிமானம் சரியில்லை என்றால் நுண்ணுயிர்ச் சூழல் வயிற்றில் சமநிலையில் இல்லாமலும் இருக்கலாம். மோர், நீராகாரம் என்பதில் உள்ள பாக்ட்ரீயா அச்சமநிலையை மீள வைக்கலாம். எல்லாம் தெரிந்தது தான்; ஆனால் அதைப் பின்பற்றுவதில் தான் தெளிவும் உறுதியும் இல்லை. Our problem
is not ignorance but inaction.
இயற்கையின் அமைப்பில் ஒரு துளி நஞ்சு அருந்தி இறந்து விடலாம். ஆனால் ஒரே முறை ஊட்டமான உணவு உண்டு உடல் நலமும் வளமும் பலமும் பெற்று விட முடியாது. உடலியல் போன்று தான் உளவியலும். சில தடவைகள் நல்லனவற்றைப் படிப்பதாலும் கேட்பதாலும் சிந்திப்பதாலும் செய்வதாலும் அவற்றை அகவயப்படுத்தித் தொடர்ந்து பின்பற்றி ஒழுகுகின்ற தெளிவையும் உறுதியையும் அடைந்து விட முடியாது. ஆனால் வெறுப்பு, பகைமை போன்றவற்றைச் சில சொற்களாலும் செயல்களாலும் விரைவில் தூண்டி விட முடியும்.
வெறுப்பும் பகைமையும் தலைமுறைகளாகத் தொடர்ந்து சுலபமாக நீடிக்கின்றது. ஆனால் நல்லவை அப்படி நீடிப்பதில்லை போல் தோன்றுகின்றது. எனினும் நல்லவை நாடுவோருக்காக எப்போதும் (பல தலைமுறைகளைத் தாண்டியும்) காத்துக் கிடக்கின்றது. சேர, சோழ, பாண்டிய பகைமைகள் ஒழிந்து விட்டன அல்லது வேறு வடிவம் கொண்டு விட்டன. அதே போல் அக்காலத்திலும் அதற்கு முன்பும் எழுந்த இலக்கியங்களும் இலக்கணங்களும் நீதி நூல்களும் இன்றும் வாழ்ந்து வழி காட்டுகின்றன.
வீட்டைக் குப்பையாக்கக் கடும் முயற்சி தேவையில்லை. ஆனால் தூய்மையாக வைத்திருக்கவே தொடர்ந்த முயற்சி தேவைப்படுகின்றது. வீடு என்பது அகத்தையும் (உள்ளம், மனம்) விடுதலையையும் குறிக்கும். நலம் நாடிகள் நல்லனவற்றை நாளும் நாடி நினைவூட்டிக் கொள்வது அதற்குத் தேவையான தெளிவு, உறுதியைக் கொடுக்கும்.
முற்போக்கான முதலாளித்துவம்
தலைவருக்கு அதிலும் இன்றைய அரசுத் தலைவராக விளங்கும் பிரதமருக்கு இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று, தான் தான் தலைவர் என்பதை அடிக்கடி தனக்குக் கீழ் அடுத்த படியில் உள்ளோர்களுக்கு உணர்த்திக் கொண்டு இருப்பதாகும். அதற்கு அமைச்சர்களைத் துறை மாற்றிச் சீட்டுக் கட்டைக் கலைத்துப் போடுவது போல் அவ்வப்போது போடுவது ஓர் உத்தி ஆகும். இப்படிக் கலைத்துப் போடுவது பல சூழல்களில் பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் படும். எனினும் தன் தலைமையை மீள உறுதிப் படுத்திக் கொள்வதும் அதில் அடங்கும்.
பிரிட்டிஷ் கூட்டணி அரசின் பிரதமர் டேவிட் கேமறூன் அமைச்சரவை மாற்றம் செய்துள்ளார். அதில் கன்சர்வேடிவ் கட்சித் தலைவியாக (Chairman) அவர் நியமித்த முஸ்லீம் அம்மையார் சயிதா வார்சியை நீக்கி விட்டார். ஆனால் நிதித்துறை அமைச்சராக (கேபினெட் அமைச்சர் பதவிக்கு உடன் கீழ்) வங்கி அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்த சாயித் ஜாவிட் (42 வயது, முஸ்லீம்) என்பவரை நியமித்துள்ளார். இவர் தந்தை பாகிஸ்தானில் ஒரு சிறு கிராமத்திலிருந்து (17 வயதில்) குடிபெயர்ந்து பிரிட்டனில் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து தன் ஐந்து மகன்களை வளர்த்துள்ளார். அதில் ஒருவரான சாயித் ஜாவிட் 25 வயதில் சேஸ் மேன்ன்ஹாட்டன் (Chase Manhattan) வங்கியின் உதவி பிரெசிடென்ட் ஆக உயர்ந்துள்ளார். பின் டாயிஷ் (Deutshe ஜெர்மன்) வங்கியில் டைரக்டராக வளர்ச்சி பெற்றார்.
மார்கரட் தாட்சரால் ஈர்க்கப்பட்டு அரசியலில் குதித்துக் கன்சர்வேடிவ் கட்சியில் சேர்ந்து 2010-இல் பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளார். கிறிஸ்துவப் பெண்மணியைத் (லாரா) திருமணம் செய்து கொண்டு நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் இவர், தான் மசூதிக்குப் போவதை விடத் தன் மனைவி அதிகமாகத் தேவாலயத்துக்குப் (Church) போய் வருகிறார் என்று சொல்கிறார். தங்கள் காதலுக்கு மதம் தடையாக இருக்கவில்லை என்றும் தன் மனைவி 'மொட்டை செக்ஸியாக இருக்கிறது' என்று சொன்னதால் தான் எப்போதும் மொட்டையாக இருப்பதாகவும் சொல்லியுள்ளார்.
இதையெல்லாம் விட முக்கியமானது என்னவென்றால், முதலாளித்துவத்தின் நல்ல கூறினாலேயே (positive factor) தன்னால் உழைப்பு, திறமையின் அடிப்படையில் இவ்வளவு உயர முடிந்துள்ளது என்று கூறியுள்ளார். முதலாளித்துவம் ஒருவரின் மொழி, இனம், நிறம், மதம் இவற்றைப் பார்க்கவில்லை; பணம் பெருக்கும், இலாபத்தை அதிகரிக்கும் அறிவு, திறமை, உழைப்பு இருக்கிறதா? இருக்கிறது என்றால் வாய்ப்பு கொடுக்கிறது.
(Source: London Evening Standard - Thursday 13
September 2012 page 28 – 29)
முதலாளித்துவம் தோற்று விட்டது, அது உலகையே அழித்து வருகிறது என்று ஒரு புறமும் தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல், உலகமயமாக்கல் (LPG - Liberalization, Privatization and Globalization) என முதலாளித்துவம் வெற்றி பெற்று வளர்ந்து உலகெங்கும் பல கோடியினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி இருக்கிறது என்று மறு புறமும் கூறப்படுகின்றது.
முதலாளித்துவம் என்பது அதற்கு முந்தைய சமூக வடிவங்களிலிருந்து வளர்ச்சியானது, முற்போக்கானது என்று காரல் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். அந்த நோக்கில் அதை வரவேற்க வேண்டும்; ஆதரிக்க வேண்டும் தான். ஆனால் எல்லா நாடுகளிலும் அந்த வளர்ச்சி சீரான முற்போக்காக இல்லை என்பதும் தெளிவு. ஆனால் அவ்வளர்ச்சியைத் தாண்டிக் குதித்து விட்டு (சீனாவில் நடந்தது போல்) போக முயன்று பிறகு பின்னோக்கி வந்து இன்று தங்கு தடையற்ற முதலாளித்துவ வளர்ச்சிக்கு வழி திறந்து விடுவதும் நடந்து கொண்டுள்ளது.
ஆக, முதலாளித்துவம் வளர்ச்சி அடையாமல் அடுத்தக் கட்ட மாற்றம் வர முடியாது. ஆணும் பெண்ணும் பருவமடையாமல் மறு உற்பத்தி செய்ய முடியாது; காய் முற்றாமல் பழுக்க முடியாது; நோய் மோசமாகாமல் நோயாளி சாக முடியாது என்று அவரவர் சுவைக்கு ஏற்ப நினைத்துக் கொள்ளலாம்.
ஆனால் அப்படி நினைத்துக் கொண்டு வாளாயிருந்து விட முடியுமா? வளர்ச்சியும் மாற்றமும் என்பது தலைவிதியா அல்லது சமூக விதியா? எதுவாய் இருந்தாலும் அது தனி மனிதர்களின் கூட்டு முயற்சியால் தான் இயலுகிறது. நமக்கு உயர் நிலைப் பள்ளிப் பருவத்தில் இருந்த மனமுதிர்ச்சி அளவில் இன்றைய பிள்ளைகள் (அதே வயதில்) இருந்தால் பிழைக்க முடியுமா; சமூகச் சவால்களைச் சமாளிக்க முடியுமா? ஒன்பது அல்லது பத்து மாதக் கால அளவில் குழந்தை பெற்றுக் கொள்வதைத் தவிர எல்லாமே நாளுக்கு நாள் காலத்துக் காலம் விரைந்து வளர்ந்து வருவதையும் வர வேண்டிய நெருக்கடிக்குள்ளாகி வருவதையும் பார்க்கிறோமே.
விவசாயம், போக்குவரத்திலிருந்து கணினி வரை எல்லா மனித வினைகளும் விரைவாகவும் எளிதாகவும் முன்னேற்றம் அடைந்து வருவது போல் உளவியல் முதிர்ச்சியும் அடைய இயலாதா? முதலாளித்துவம், உற்பத்தி உறவுகளில் மாற்றம் கொண்டு வருவதால் மட்டுமே, முதிர்ச்சி அடைந்து விடாது; அதற்கு இணையாக உளவியல் களத்தில் முதிர்ச்சி தானியக்கமாக வந்து விடாது. அதில் சமூக சீர்திருத்தவாளர்கள் தங்கள் பங்கைச் செய்யாமல் காய் கனிந்து விடாது. இது நம் நாட்டில் தடம் புரண்டு விட்டதால் முதலாளித்துவம் குறைப் பேற்றுக் குழந்தையாக ஊனமற்றுள்ளது.
இது ஒரு புறம் இருக்க மேற்குலகப் பாங்கான முதலாளித்துவ வளர்ச்சி இன்று உலகமெங்கும் நடைபெற முடியுமா? திறந்த முனை வளர்ச்சிக்கு (open
ended growth) அடுத்து மலிவான கனிம வளங்களுக்கு, உழைப்பாளருக்கு எங்கு செல்வது? செவ்வாய் போன்ற வேறு கோள்களில் மனிதர் போன்ற இனத்தினர் இருந்து அவர்களை (அவர்கள் நம்மை அடிமைப் படுத்தும் முன்) நாம் அடிமை கொண்டால் தான் இயலும்.
அதற்கு முன் அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் பாணியில் இந்தியா, சீனா மக்கள் தொகையினர் முன்னேற்றம் பெற முனைந்தால் காடுகள் மறைந்து, நதிகள் வறண்டு, காற்று மாசு ஆகி, கனி வளங்கள் தீர்ந்து... உலகம் பாலைவனம் ஆகி விடும். எனவே முதலாளித்துவம் வெம்பி வெடித்து விடாமல் சரியான முதிர்ச்சி அடைவதில் எல்லோர் பாதுகாப்பும் அடங்கியுள்ளது. போட்டி மட்டுமன்று ஒத்துழைப்பும் தான் பரிணாம வளர்ச்சியின் இயக்க விசை (driving force).
சமுதாயத்தின் இயல்பான முரண்பாடுகளையும் அவற்றின் ஆக்க பூர்வமான பங்கையும் (creative role) பற்றிய புரிதல் எந்த அளவுக்குப் பரவலாக, ஆழமாக, தெளிவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அச்சமுதாயம் வளமாக, செழிப்பாக இருக்கும்.
அப்போது அவரவரின் முயற்சிக்குத் தகப் பொருள் செல்வம், அறிவுச் செல்வம், பண்புச் செல்வம், மக்கள் செல்வம், அதிகாரம், அருட்செல்வம்... எனச் சேரும், பெருகும் என்பது இயல்பு எனப் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும். அதே சமயம் அதன் எல்லைகளை வரையறுக்காவிடில் விழிப்புடன் கண்காணிக்காவிடில் கட்டுப்பாடின்றிப் போய்த் தீமை விளைவிக்கும் என்ற புரிதலும் செயல்பாடும் இருக்கும். தனி நபர் வழிபாடும் பழிபாடும் இன்றி முயற்சியைப் பாராட்டவும் ஊக்குவிக்கவும் எல்லை மீறலைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் செய்யும் சமநிலை, சரிநிலை இருக்கும்.
சுருக்கமாகச் சொன்னால் சாதியம், வர்க்கவியம், தேசியம், நுகர்வியம் போன்ற புகுத்தப் பட்ட மூளை அடிமைத்தனங்களுக்குப் பதிலாக மனிதர் தம் வளர்ந்த புரிதலின் அடிப்படையில் தங்களைச் சமூகமாக அமைத்துக் கொள்வதிலும் செயல்படுவதிலும் உள்ள சவால்களைச் சந்திக்க, தாமாகவே மேற்கொள்ள வேண்டிய சிந்தனைக் கட்டுப்பாடுகளைக் கண்டறிந்து, வளர்த்தெடுத்துப் பின்பற்றுகின்ற பக்குவதைப் பெற வேண்டும். இது முடியுமா என்று கேள்விக்கு இதைத் தவிர வேறு வழி தெரிந்தால் சொல்லுங்கள் என்பதே பதிலாக இருக்க முடியும். ஏனெனில் இது யார் ஒருவருடை தனிச் சிக்கல் அன்று. மனித உயிரினத்திற்கே ஆன பொதுவான சிக்கல் / சவால் (problem /
opportunity).
"The
highest possible stage in moral culture is when we recognize that we ought to
control our thoughts". - Charles Darwin
நம்முடைய சிந்தனைகளை நாம் கட்டுப்படுத்தியாக வேண்டும் என்று புரிந்து கொள்ளும் நிலை தான் நம் பண்பின் உச்சக் கட்ட வளர்ச்சிப் படியாகும்.
இதில் கருத்து (மனமாற்றம்) முதலா பொருள் (புறச் சூழல்) முதலா என்றும் சீர்திருத்தமா புரட்சியா என்றும் வாதிட்டுக் கொண்டிருப்பது வாழ்க்கையை வார்த்தைகளுக்குள் அடக்கி விட முயலும் முயற்சியாகும். ஒன்றில்லாமல் பிறிதொன்று இல்லை என்பதையும் வந்தாலும் சரியாக இருக்காது, நிலைக்காது என்பதையும் வரலாறு காட்டுவதைக் கற்றுக் கொள்ள வேண்டும். இது நாம் ஒவ்வொருவரும் தனி நபராகவும் குழுவாகவும் உலக அளவில் உயிரினமாகவும் வாழ்ந்து தான் காண முடியக் கூடிய உண்மையாகும்.
புரட்டாசி 5, திருவள்ளுவர் ஆண்டு 2043 (21 செப்டம்பர் 2012)
No comments:
Post a Comment