Sunday, 3 March 2024

மனதைக் கவனி - இப்படி எளிமையாகவும் புரிந்து கொள்ளலாம் - 2

 03-Mar-2024

மனதைக் கவனி - இப்படி எளிமையாகவும் புரிந்து கொள்ளலாம் - 2

மனம் ஒரு கண்ணாடி

நம்முடைய காலைத் தொடைக்குப் பின்பக்கம் மடிக்க முடிகிறது. ஆனால் காலை முன்பக்கம் மடிக்க முடியமா? முடியாது. தொடை, காலை இணக்கும் முட்டியின் அமைப்பு அப்படிச் செய்ய முடியாத படி அமைந்துள்ளது. இதை நாம் புரிந்து கொள்கிறோம். புத்தகத்தில் படித்து அன்று. நம் உடலைப் பற்றிய நம் சுய அறிவால். அதனால் காலைத் தொடைக்கு முன்பக்கம் மடிக்க முயல்வதில்லை.

இதை நம் மனதிற்கும் பொருத்திப் பார்ப்பதுதான் மெய்யுணர்வு. மனதால் புரிந்து கொள்ளக் கூடியதையும் புரிந்து கொள்ள முடியாததையும் பிரித்து ஆய்ந்து அறிந்து, ஒப்புக் கொண்டு, மனம் தன்னால் இயலாததில் இயலும் என்று மயங்குவதை அடையாளம் கண்டு தவிர்த்துக் கொள்வதே 'மனம் இற்றுப்' போதல். 

மனதை எங்கு பயன்படுத்த வேண்டுமோ, எப்படிப் பயன்படுத்த வேண்டுமோ அப்படி அளவாகப் பயன்படுத்திக் கொள்ளப் பழகுவதுதான் மெய்யுணர்வு. இதை விரிவாகப் பார்க்கும் போது அதில் கடவுள் நம்பிக்கை ஓர் உத்தியாகப் பயன்படலாம். கடவுள் நம்பிக்கை இல்லாமலும் பழகிக் கொள்ள முடியும். அதனால் கடவுள் நம்பிக்கை அவசியமில்லை.

காலைப் பின்பக்கம் மடிக்க எந்த முட்டி இணைப்பு உதவுகிறதோ அதே முட்டி இணைப்புதான் காலை முன்பக்கம் மடிக்க விடாமல் தடுக்கிறது. அதே போல் மேற்கண்டவாறு மனதைப் புரிந்து கொள்வதும் அதைப் பயன்படுத்துவதும் தவிர்ப்பதும் மனமே தான். மனம் அப்படிப் பக்குவப்படுவதை, முதிர்ச்சி அடைவதை நாம் 'தன்னை அறிதல்', 'ஞானம் பிறந்தது', 'மனத்தூய்மை', 'மனத்திட்பம்', 'தவம்' என்று பலவாறு சொல்கிறோம்.

மு.வ. இதையே 'மனம் ஒரு கண்ணாடி. அதில் மாசு படிந்திருந்தால் தன்னையும் தெளிவாகக் காட்டாது, தன்னில் பிரதிபலிப்பவற்றையும் தெளிவாகக் காட்டது' என்று சொல்லியுள்ளார்.

தன்னிலை விளக்கம் - 1

 20-Feb-2024

தன்னிலை விளக்கம் - 1

குடும்ப வளர்ப்பு, சூழலால் முதலில் மு.வ. நூல்கள் மூலம் தன்னை அறிதல் என்பது மேலோட்டமாக இருந்தது. பிறகு நாத்திக, பகுத்தறிவு சிந்தனைகளில் என் கவனக்குவிப்பு இருந்தது.

என்றாலும் பள்ளிப் பருவத்திலேயே ஆழமாகப் புரியாத வகையில் 'தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே, ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே' என்ற வள்ளலார் பாடல் என்னை ஈர்த்தது, அதைப் பாடிக் கொண்டிருந்தது நினைவில் உள்ளது.

ஓசூரில் வாழ்ந்த காலத்தில் பெரியார் படிப்பக‌த்தில் வரும் தோழர்களிடம் பிறருக்குப் பகுத்தறிவைப் பரப்புவதை விட நாம் முதலில் அதைச் சரியாகப் புரிந்து கொள்வதும் வளர்த்துக் கொள்வதும் அதன்படி வாழ்வதும் முக்கியம் என்று வலியுறுத்திப் பேசி வந்துள்ளேன். நண்பர் தென்னை கணேசன் இதை நன்றாக அறிவார்.

ஒருமுறை மா.லெ.கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஓசூரில் என் இல்லத்தில் வந்து உரையாடிக் கொண்டிருந்து விட்டு, நீங்கள் வழமையா தி.க.காரர் போல் பேசவில்லை என்று சொல்லிச் சென்றார். என் கருத்துகளைச் சொல்வதிலும் திறந்த மனதுடன் மாற்றுக் கருத்துகளை அணுகுவதிலும் உள்ள பக்குவத்தையே அவர் குறிப்பிட்டார் என்று அனுமானித்தேன்.

அதே சமயம் சண்முகசுந்தரத்தின் நண்பர் சந்திரசேகர் என்னைக் குறித்து சண்முகசுந்தரத்திடம் ‘he has more heat than light’ என்று சொன்னார் என்பதைச் சண்முகசுந்தரம் மூலம் அறிந்தேன். அதுவும் ஒரு வகையில் உண்மை. உணர்ச்சிதான் இயக்கும். வெறும் அறிவு மட்டும் வினைக்குத் தூண்டாது.

நானும் நண்பன் ஆறுமுகப் பெருமாள் பிள்ளையுமாக பெங்களூர் சென்று அறிவியல் நூல்கள் வாங்கிப் படித்து வந்ததால் பகுத்தறிவு மட்டும் போதாது என்றும் அறிவியல் மனப்பான்மையின், உலகையும் நம்மையும் அறிவியல் பூர்வமாகப் புரிந்து கொள்வதன் முக்கியத்துவ‌ம் விளங்கியது. இதில் நண்பர்கள் சண்முகசுந்தரம், தில்லைக்குமரன் வழியாக அறிமுகமான சில‌ நூல்களுக்கும் பங்குண்டு.

பிறகு, நண்பர் பேராசிரியர் வீரபாண்டியன் மூலம் மார்க்சிய பெரியாரியல் சிந்தனைகள் வந்து சேர்ந்தன. முன்பு இருந்த நாத்திகம், பகுத்தறிவு என்பது பெரியாரியலின் ஒரு அம்சமே. ஆனால் வீரபாண்டியன் மூலம் பெரியாரியலை விரிவாகப் புரிந்து கொள்ள வழி கிடைத்தது.

தம்பி திருவள்ளுவன் மூலம் வந்த ஓமியோபதி அடிப்படைகள் குறிந்த கருத்துகளும் இவற்றிற்கிடையில் வளம் சேர்த்தன.

ஓசூர் பெரியார் படிப்பகத்தில் வெறும் பகுத்தறிவு என்று இல்லாமல் அறிவியல் கண்ணோட்ட விளக்கங்களும் நடத்தினோம். சண்முகசுந்தரத்தின் துணைவியார் அவ்விதம் உயிரியல் அறிவியல் வகுப்பு வழங்கினார்.

தென்னை.கணேசன் மூலம் அறிமுகமான புலவர் நாகூரான் சைவசித்தாந்த  வகுப்பு எடுத்தார்.

பெரியார் படிப்பகம் ஆரம்பிக்கும் முன்னரே, நண்பர்கள் நாங்கள் தங்கியிருந்த அறைக் கூடத்திலேயே கு.வெ.ஆசான், குடந்தை கதிர். தமிழ்வாணன் போன்றோரின் வரலாறு, தமிழ் இன்பம், இலக்கண‌ம் பற்றிய‌ வகுப்புகள் நடத்தினோம். அறிவுப் பணி, நல்ல, முற்போக்கு சிந்தனைகளைப் படிப்பதும் பகிர்வதும் பிறரிடமிருந்து பெறுவதும் தொடர்ந்து நடந்து வந்தன.

அடுத்து பதின்கவனகர் கனகசுப்புரத்தினம் அவர்கள் தொடர்பால் மெய்யுணர்வுப் பார்வை கிடைத்தது. ஆனால் அதை அப்போது மெய்யுணர்வு என்று நான் உணரவில்லை. பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை, பெரியாரியல் உடன் அப்பார்வை சில புதிய, ஒன்றை ஒன்று நிறைவு செய்யும், கோணங்களைத் தந்தது. நான் அறிவியல் பார்வையில் அவருடன் பகிர்ந்து கொண்டதை அவர் மேடைப் பேச்சில் குறிப்பிட்டும் வந்தார்.

என்றாலுமே திருக்குறளில் அறத்துப்பாலில் துறவறவியலின் அதிகாரங்களில் என் கவனம் திரும்பவில்லை. பாயிரம் அதிகாரங்கள் மனப்பாடமாய் இருந்தாலும் மனதை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

அதன் பின் தேடியவற்றையும் கிடைத்தவற்றையும் சுருக்கிச் சொன்னால் இன்று பகுத்தறிவு, அறிவியல், சமுதாய சிந்தனைகள் சரியான திசையில் செல்ல ஒவ்வொருவருக்கும் தன்னைப் பற்றிய, தான் யார் என்பது பற்றிய தெளிவு அவசியம் என்று புரிகிறது. அதை மெய்யுணர்வு என்று சொல்வதில் அல்லது வழக்கத்திலுள்ள ஆன்மீகம் என்று அழைப்பதில் எனக்குத் தயக்கமில்லை.

ஆனால் இதில் வளர்ந்து வரும் தெளிவு, உறுதி அப்படியான பெயர்களுக்குள் அடைப்பட்டுக் கொள்ளாமலேயே புரிந்து கொள்ள முடியும் என்று புலப்படுகிறது. அதை அவ்வப்போது பகிர்ந்து கொண்டு வருகிறேன். சில என் எழுத்தாக இருக்கலாம். சில அலன் வாட்ஸ் போன்றோரின் பேச்சாக இருக்கலாம். மற்றும் சில அறிவியல் தளத்தில் உள்ளவர்களின் கட்டுரை, பேட்டியாக இருக்கலாம். சில ஆன்மீக, குறிப்பாக ஞான மார்க்க, உரைகளாக இருக்கலாம்.

பகுத்தறிவு, அறிவியல், சமுதாய நலன் என்பவை தேவையில்லாமல் போய் விடவில்லை. அவை இன்றும் என்றும் அவசியம். அறிவியல் மனிதர் வந்தடைந்துள்ள, வளர்த்தெடுத்துள்ள ஒப்பற்ற கருவி. ஆனால வழக்கம் போல், அதாவது மதத்தின் உண்மையான அடிப்படை போல் அறிவியலும் சீர்கெட்டு வருகிறது. 

மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு அப்பால் மதம் என்று எதுவும் உள்ளதா?

இங்கு மதம், மெய்யுணர்வு இரண்டும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

அறிவியலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அப்பால் அறிவியல் என்றும் எதுவும் உள்ளதா?

இரண்டுக்குமே இல்லை என்றும் இருக்கிறது என்றும் சொல்லலாம்.

பின்பற்றுபவர்களின் பண்பைத் தவிர்த்து பின்பற்றப்படும் கொள்கை என்பது வெறும் மனக்கோட்டையே என்ற பார்வையில் இல்லை.

பின்பற்றுதல் என்பது என்றுமே 100 விழுக்காடு சரியாக இருக்க முடியாது, கொள்கை என்பது ஒரு செம்மையான முழுமையான ஒரு வகையில் அடையா இயலாத‌ நிலையைச் சுட்டுவது என்ற பார்வையில் இருக்கிறது.

---

இது என் மனப்போக்கு வளர்ந்து வந்தது பற்றி ஒரு மேலோட்டமான சுருக்கம். இதில் பல நெளிவு, சுளிவு, வளைவு, வழி தவறுதல்கள் எல்லாம் கொடுக்கப்படவில்லை. 

இது ஒரு வகையில் எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் கதை. இது போல் ஒவ்வொருவருக்கும் கதை இருக்கும். நம் பெயரே நம் கதையின் பெயர்தான்.

எல்லோருடைய‌ வாழ்க்கைக் கதையும் முக்கியம். எதுவும் உயர்வு தாழ்வு கிடையாது.

ஒரு வகையில் நம் கதைகள் என்பது இருப்பின் கதைகளே. 

(தொடரும்...)

மனதைக் கவனி - இப்படி எளிமையாகவும் புரிந்து கொள்ளலாம் - 1

 20-Feb-2024

மனதைக் கவனி - இப்படி எளிமையாகவும் புரிந்து கொள்ளலாம் - 1

"மனம் ஓடுவதைத் தடுத்து நிறுத்த முயல வேண்டாம். மனம் உயரப் பழகுவோம்." - டாக்டர் மு.வ.

"மனதைத் தள்ளி நின்று வேடிக்கைப் பார்க்கக் கற்றுக் கொள்வோம்." - டாக்டர் மு.வ.

உடலை நாம் எப்படி அணுகுகிறோமோ அதே போல் மனதையும் அணுகுவதே மெய்யுணர்வின் சாரம் (the essence of spirituality) என்று சொல்லலாம்.

எடுத்துக்காட்டாக, உடலுக்குள் என்ன உணவு போகிறது என்பதில் நமக்கு விழிப்புணர்வு உள்ளது. முழுமையாக இல்லாவிட்டாலும் குறைந்த அளவாவது உள்ளது. ஆனால் அதே போன்ற விழிப்புணர்வு நம் மனதுக்குள் என்ன போகின்றது என்பதில் உள்ளதா? பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.

உடலை மனதைக் கொண்டு ஆளுகிறோம். முறையான உணவு கட்டுப்பாட்டிலோ, உடற்பயிற்சி செய்வதிலோ, பல் விளக்குவதிலிருந்து குளிப்பது, நோய் வராமல் தடுக்க முயல்வது, வந்தால் அதற்கு உரிய மருத்துவம், ஓய்வு கொடுப்பது என்று உடலைப் பராமரிப்பதிலோ நாம் மனதைப் பயன்படுத்துகிறோம்.

ஆனால் மனதை ஆள எதைப் பயன்படுத்துவது? மனதையே தான் பயன்படுத்த வேண்டும். வேறு வழியில்லை. வேறு கருவி இல்லை.

உடலை ஆள மனதைப் பயன்படுத்துவதே பெரிய சவாலாக உள்ளது.

ஆங்கிலத்தில் "The spirit is willing but the flesh is weak" என்ற சொல்வழக்கு உள்ளது.

என்றால் மனதை ஆள மனதைப் பயன்படுத்துவது மாபெரும் சவால்தானே.

சினம் இறக்க கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும் 
மனம் இறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே தாயுமானவர்

இங்கு 'மனம் இறக்க' என்பதை 'மனதை ஆள' என்று புரிந்து கொள்வது தான் சரி. மனதை அதாவது எண்ண ஓட்டத்தை முற்றிலும் நிறுத்தி விடுவது சமாதி. அதைச் சாதிக்க முடிந்தாலும் அப்படியே இருந்து விட முடியாது. அதிலிருந்து வெளிவந்துதான் ஆக வேண்டும். எண்ண ஓட்டம் முன்பு போல் ஆரம்பித்து விடும்.

மனதைக் கவனிப்பது என்பது நமக்குத் தெரியாத புதிய வித்தை அன்று. எனக்கு கடுங் கோபம் வந்து விட்டது. எனக்கு அவமானமாகப் போய் விட்டது. நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன். அவர்கள் பாராட்டியது எனக்குப் பெருமையாக இருந்தது. அதைச் செய்து முடித்தது எனக்குப் பெருமிதமாக இருந்தது. எனக்கு இருமனமாக இருக்கிறது. ஒரே குழப்பமாக இருக்கிறது. இப்படி எல்லாம் நாம் சொல்வது எதைக் காட்டுகிறது? நம் மனதை நம்மால் கவனிக்க முடிகிறது என்பதைத்தானே.

ஆனால் அப்படிக் கவனிப்பது உடனுக்குடன் இல்லாமல் பொதுவாக அம்மனநிலையைக் கடந்த பின்பே தெரிவதாக உள்ளது. குழப்பம், தயக்கம் போன்றவற்றை அவை இருக்கும் போதே நம்மால் கவனிக்க முடிகிறது.

இப்படித் தானியக்கமாக (automatically / involuntarily)  மனதைக் கவனிப்பதைச் சுய உணர்வுடன் (conscious attention) அவ்வப்போதே கவனிக்க முடியமா?

முயற்சி செய்தால் தானே முடியும் முடியாது என்பது தெரியும். அதிலும் எந்த அளவுக்குத் தெளிவு, உறுதியுடன் முயற்சி செய்கிறோம் என்பதும் முக்கியமல்லவா? ஏனோ தானோ என்று முயற்சி செய்து விட்டு இதெல்லாம் புரட்டு, ஏமாற்று வேலை, யாராலும் முடியாது என்று தீர்ப்பு சொல்லலாம். அது அவரவர் இயல்பு. 

அவர்களைக் குறை சொல்வதோ அவர்களை எடை போடுவதோ அவர்களின் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதோ நமக்கு அவசியமில்லை. அவர்கள் சொல்வதை வைத்து, இது போன்றவற்றில், நாம் முடிவு செய்வது நம் சுய மரியாதை அன்று.

இதை எழுதுவதால் மனதைத் தொடர்ந்து கவனிப்பதில் முழு நேர வெற்றி பெற்று விட்டேன் என்று நினைத்து விடக் கூடாது. ஆனால் இதை எழுத எனக்குத் தகுதி இருக்கிறதா?

நிச்சயமாக இதை உபதேசிக்க எனக்குத் தகுதி இல்லை. ஆனால் பின்பற்றி ஓரளவு பலன் கண்டவன் என்பதால் நட்பு முறையில் பகிர்ந்து கொள்ளத் தகுதியுள்ளது.

பிறர் படிக்க வேண்டும், பின்னூட்டம் தர வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது. அது அவரவர் உரிமை. ஒரு வகையில் இவை போன்றவற்றை அவர்கள் மனதிற்குள் அனுமதிப்பதா என்று முடிவு செய்வதே இப்பகிர்வின் படியாகும், படித்து விட்டோ அல்லது படிக்காமலோ.

சுய உணர்வுடன் மனதைக் கவனிப்பது என்றால் என்ன?

இரண்டு மணி நேரம் போல் திரைப்படம் பார்க்கிறோம். அதில் வரும் காட்சிகளில் மனதைப் பறி கொடுக்கிறோம். ஆடல், பாடல், மகிழ்ச்சி, சோகம், நகைச்சுவை, காதல், பாசம், வேதனை, அச்சம், ஆபத்து என எல்லா உணர்ச்சிகளிலும் திளைக்கிறோம். ஆனால் ஒரு விநாடி கூட நாம் பார்ப்பவை அத்தனையும் உண்மையல்ல என்பதை நாம் மறப்பதில்லை. அதே சமயம் நினைப்பதும் இல்லை, அதாவது 'நான் திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன், இவை எல்லாம் நடிப்பு, உண்மையல்ல' என்று வாய் வார்த்தையாக, எண்ணமாக மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருப்பதில்லை, நமக்கு நாமே மனதிற்குள் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. ஆனால் அவ்வுண்மையை, அதாவது அது திரைப்படமே, நிஜமன்று என்ற உண்மையை மறப்பதும் இல்லை.

நினைப்பதும் இல்லை. மறப்பதும் இல்லை. இது என்ன புதுக் கரடி என்று என்று கேட்கலாம். புதுக் கரடியோ பழைய கரடியோ, இது சரியா என்று அவரவர் யோசித்து முடிவு செய்து கொள்ளலாமே.

இதே போல் மனதைக் 'கவனிக்காமல்' கவனிக்க முடியுமா? அதாவது ஓர் எண்ணம் தோன்றும் போது, இந்த எண்ணம் எனக்குத் தோன்றுகிறது என்று அதைப் பற்றி நினைக்காமல் கவனிக்க முடியுமா? அப்படித் தோன்றும் அந்த எண்ணத்தையும் கவனிக்க முடியுமா?

(தொடரும்...)

Sunday, 21 January 2024

எண்ணப்புலம் - அறிவுணர்வு

21-Jan-2024

எண்ணப்புலம் - அறிவுணர்வு


எண்ணங்கள் தாமாக எழுந்து மறைகின்றன‌


என்னுடைய அடுத்த எண்ணம் (எந்த சிந்தனை வரும்) என்ன என்று என்னால் கூற முடியுமா? முடியாது.

எண்ணங்கள் எழுகின்றன (வருகின்றன / தோன்றுகின்றன). அவை என்னுடையவை என்று அடையாளப் படுத்திக் கொள்கிறேன். உண்மையில் அவற்றை நான் உருவாக்கியதற்கான சான்று (எப்படி உருவாக்கினேன். என்னென்ன படிநிலைகளில் அவை உருவாக்கம் பெற்றன) எதுவும் எனக்குத் தெரியாது.

நான் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் மூச்சு இயங்கிக் கொண்டுள்ளது. அதே போல்தான் எண்ணம், சொல், செயல்களும். அவற்றை என்னுடையவை என்று அடையாளப் படுத்திக் கொள்வதும் தன்னிச்சையாக எழும் மற்றோர் எண்ணமே.

நம் மனதைச் சற்று நேரம் வேடிக்கை பார்த்தாலே, நம்முடைய முயற்சி எதுவும் இல்லாமல் மூச்சு இயங்குவது போல் எண்ணங்களும் தோன்றி மறைவதை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளலாம்.

எண்ணங்களின் எங்கிருந்து தோன்றுகின்றன?


இதை நாம் நன்கு கூர்ந்து கவனித்து உறுதிப்படுத்திக் கொண்டோமென்றால் எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்ற கேள்வி எழும். காற்று மண்டலம், கதிர்ப் புலம் (field) போல் எண்ணங்களின் மண்டலம் (எண்ணப் புலம்) இருப்பதாகக் கொள்ளலாம். இன்னும் கவனமாகப் பார்த்தால் காற்று மண்டலம், கதிர்ப் புலம் (ex. electromagnetic field) போன்றவை எண்ணங்கள் இல்லாமல் (எண்ணங்களாகத் தோன்றாமல்) இருக்கும் என்றோ இருக்காது என்றோ சொல்ல வழியில்லை.

எண்ணப் புலம் என்பது மின்காந்தப் புலம் போல் அலைகளாக, அதிர்வுகளாக இருக்கலாம். அவை நம் மூளையின் வழியாக எண்ணங்களாக அறியப்படலாம். மின்காந்த (ஒளி) அலைகள் நம் கண்கள் வழியே மூளையால் நிறமாக அறியப்படுவது போல். ஒலி அலைகள் நம் காதுகளின் வழியே மூளையால் ஓசையாக அறியப்படுவது போல்.

பிரபஞ்சத்தில் எந்த ஒன்றும் (நம் உடல்கள் உள்பட) ஓர் உயிரியின் (மனிதனின்) அறிவுணர்வில் (awareness / consciousness / mind-field) தான் தோன்றுகிறது. மனிதர்கள் இல்லாத காலம், அப்போது நடந்தவை என்பன எல்லாம் இன்று இப்போது நம் எண்ணங்களாகவே உள்ளன. 

அதனால் எண்ணப் புலம் என்பது ஒரு கருதுகோள் (hypothesis) என்பதிலிருந்து மறுக்க முடியாத இருப்பாகத் (reality) தெளிவாகிறது. 

இன்னுஞ் சொல்லப் போனால் எண்ணப் புலத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை. எவை தோன்றினாலும் அவை எண்ணப் புலத்தில் தான் தோன்றுகின்றன. இங்கு எண்ணப் புலம் என்பது அறிவுணர்வைக் குறிக்கிறது. ஐம்புலன்களால் உணர்பவை கூட எண்ணப் புலத்தில் தான் தோன்றுகின்றன. 

எடுத்துக் காட்டாக, நம் கண்முன் உள்ள சாவியைப் பலமுறை தேடி விட்டு எங்கே வைத்தோம் என்று கவலைப் பட்டு, திடீரென்று அது இருப்பதைப் பார்க்கிறோம். முன்பும் சாவியின் மீது பட்ட ஒளி நம் கண்களின் வழி விழித்திரையில் விழுந்து மூளைக்குச் சென்றிருக்கும். ஆனால் உண்மையில் பார்ப்பது கண்கள் இல்லை; மூளையும் இல்லை; அறிவுணர்வே (கவனமே / attention which is directed awareness).

இதே போல் மற்ற புலன்களுக்கும் நாம் யோசித்துப் புரிந்து கொள்ளலாம்.

நான் பார்க்கிறேன் என்ற அறிவுணர்வு இல்லாத பார்த்தல் இல்லை.
நான் கேட்கிறேன் என்ற அறிவுணர்வு இல்லாத கேட்ட‌ல் இல்லை.
நான் தொடுகிறேன் என்ற அறிவுணர்வு இல்லாத தொடுதல் இல்லை.
நான் சுவைக்கிறேன் என்ற அறிவுணர்வு இல்லாத சுவைத்தல் இல்லை.
நான் முகர்கிறேன் என்ற அறிவுணர்வு இல்லாத முகர்தல் இல்லை.
நான் நினைக்கிறேன் என்ற அறிவுணர்வு இல்லாத நினைத்தல் இல்லை.

நான் இல்லாத அறிவுணர்வு இல்லை.
அறிவுணர்வு இல்லாத நான் இல்லை.

எனவே நான் = அறிவுணர்வு.

அறிவுணர்வே நான். நானே அறிவுணர்வு.


மேற்கண்ட தர்க்கத்தை உற்றுச் சிந்தித்தால், இந்த உடலையும் நான் அறிவுணர்வால் தான் அறிகிறேன். அதனால் அறிவுணர்வே என் முதன்மையான இருப்பு / அடையாளம். மற்றவை, இந்த உடல், பெயர், மொழி, இனம், பால், படிப்பு, பதவி, சொத்து, உறவு எல்லாம் இரண்டாம் பட்சமே, அறிவுணர்வுக்கு அடுத்தே.

இப்போது இருக்கும் இந்த உடல் சம்பந்தப்பட்ட அடையாளங்களில் கூட நாம் எது முதல் (ஆண் / பெண்), எது அடுத்து (தமிழன்) எது அதற்கு அடுத்து (இந்தியன்)... என வரிசை வைத்துள்ளோம். அதன்படி நடந்து கொள்கிறோம்.

இப்போது இவை எல்லாவற்றிற்கும் மூலமான, இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய, இவை எல்லாவற்றையும் கடந்த, எது இல்லாவிடில் இவை எதுவும் இருக்க இயலாதோ, அத்தகைய அடையாளத்தை, அறிவுணர்வை (எப்போதும் இருந்து வருவதை) கண்டு கொண்டோம். இதுவே ஆன்மீகம். இதுவே ஞானம். இதுவே மோட்சம். இதுவே விடுதலை. இதுவே வீடுபேறு. இதுவே பிறப்பு இறப்பு அறுத்தல். இதுவே நிர்வாணம். இதுவே பகுத்தறிவின் (ஞானம்) உச்சம். இதுவே ஆன்ம விசாரணையின் (ஆன்ம நம்பிக்கை இல்லை) முடிவு. இதுவே வள்ளலாரின் மரணமிலாப் பெருவாழ்வு. இதுவே தூங்காமல் தூங்குவது.

இந்தத் தெளிவு என்பது நம் அன்றாட வாழ்க்கை ஒத்திசைவாக, ஒழுங்கமைதியாக நடக்க மிக அவசியம்.

எப்படி?

ஓர் எடுத்துக்காட்டு. ஒரு பணக்காரனின் தூக்கத்திற்கும் (கனவுகளற்ற ஆழ்ந்த தூக்கம்) ஒரு பரம ஏழையின் தூக்கத்திற்கும் என்ன வேறுபாடு? எந்த வேறுபாடும் உண்டா? அந்த கனவுகளற்ற ஆழ்ந்த தூக்கத்தில் பணக்காரன் என்னவாக இருந்தான்? அதே போல் ஏழை என்னவாக இருந்தான்? 

ஆழ்ந்த தூக்கத்தில் இருவரும் இல்லாது போய் விடவில்லை. தூக்கத்திலிருந்து எழுந்ததும் இருவரும் நன்றாக நிம்மதியாக ஆழ்ந்து தூங்கினேன் என்று ஒப்புக் கொள்கிறார்கள். ஆக அவர்கள் அந்த ஆழ்ந்த தூக்கத்திலும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் உடல் மனங்களாக (பணக்கார, ஏழை) இல்லை. வெறும் அறிவுணர்வாக இருந்தார்கள். தங்களுக்கு அத்தூக்கத்தில் உடல் மன உணர்வு இல்லை என்பதை விழித்ததும் சொன்னார்கள் (மரக்கட்டை போலத் தூங்கினேன்). எது அதை அறிந்தது? அதுவே அறிவுணர்வு.

அடுத்து. இருவரின் ஆழ்ந்த அத்தகையத் தூக்கத்திற்கு இடையே எந்த வகையிலும் வித்தியாசம் இல்லை. அவை ஒன்றே. அறிவாளியின் ஆழ்ந்த தூக்கமும் அடிமுட்டாளின் ஆழ்ந்த தூக்கமும் ஒன்றே. ஆழ்ந்த தூக்கத்தில் அனைவரின் இருப்பு, அடையாளம் ஒன்றே.

அதே போல் என்னுடைய அறிவுணர்வுக்கும் பிறருடைய அறிவுணர்வுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டிற்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என்றால் இரண்டும் ஒன்றே. என்னுடைய உடலில் உள்ள ஹைட்ரஜன், கார்பன் அணுகளுக்கும் பிறர் உடல்களில் உள்ளதற்கும் உயிரற்றவற்றில் உள்ளதற்கும் எந்த வேறுபாடு இல்லை என்பதைப் போல்.

அறிவுணர்வு ஆணா பெண்ணா? அறிவுணர்வு மரமா, பூச்சியா, விலங்கா? அறிவுணர்வு தூய அறிவுணர்வே. வேறு எல்லாம் (ஆண் / பெண், மரம், செடி, கொடி, மலை, பூமி, சூரியன், கோள்கள் ...) அவ்வறிவுணர்வில் தோன்றுவனவே.

அதாவது ஒரே அறிவுணர்வில் (எண்ணப் புலத்தில்) உயிருள்ளவை, உயிரற்றவை எல்லாமே தோன்றுகின்றன. அதே புலத்தில் ஒவ்வொரு உடல் மனதோடு அவ்வறிவுணர்வு அடையாளப் படுத்திக் கொள்வதும் தோன்றுகிறது. ஒரே நீர் ஓட்டத்தில் பல அலைகள் (அவையும் நீரே) தோன்றுவதைப் போல. ஒரே நீர் ஓட்டத்தில் பல நீர்ச்சுழல்கள் (whirlpools - அவையும் நீரே) தோன்றுவதைப் போல.

எல்லாருக்கும் எல்லாவற்றிற்கும் தோற்றுவாயாக ஒரே அறிவுணர்வு உள்ளது. அறிவுணர்வு என்பதை இறைவன், கடவுள், சிவம் என்று எந்த பெயரிட்டு அழைத்தாலும் முடிவான உண்மை இதுதான். மற்றபடி முருகன், சிவன் போன்ற கடவுளர்கள் வெறும் எண்ண அளவிலான தோற்றங்களே (கற்பனைகளே). அதே சமயம் நம் உடல் போன்றவையும் எண்ண அளவிலான தோற்றங்களே. முருகன், நீதி, நேர்மை, உரிமை போன்ற எண்ணங்களுக்கு வடிவம், நிறம், எடை, மணம், குணம் போன்ற பிற கூறுகள் (அவையும் முடிவில் அறிவுணர்வின் தோற்றங்களே) இல்லை. நம் உடல் போன்றவற்றிற்கு உண்டு.

இத்தகைய ஆய்வு எண்ணங்களும் அதே அறிவுணர்வின் தோற்றங்களே.

ஓடும் நீர் சுழலும் போது அதற்கு ஒரு வடிவம் அமைந்து விடுகிறது. சுழல்வதையும் வடிவத்தையும் பிரிக்க முடியாது. அவை ஒன்றே. அதே போல் எண்ணங்கள் எழும் போது அது உடல் மன வடிவத்தில் அமைந்து விடுகிறது. எண்ணங்களையும் (கருத்து) உடலையும் (பொருள்) பிரிக்க முடியாது. அவை ஒன்றே.

கருத்து முதல் வாதம் / பொருள் முதல் வாதம் என்ற வழக்கு (விளையாட்டு) கருத்தும் பொருளும் (அவையும் முடிவில் அறிவுணர்வின் தோற்றங்களே) இல்லாமல் இருக்க (நடக்க‌) முடியாது.

எல்லாப் பொருள்களும் வெளியில் (space) உள்ளன. வெளி எங்கே உள்ளது? எங்கும் உள்ளது. அந்த வெளியுமே அறிவுணர்வில் தான் தோன்றுகிறது. அதே போல் அறிவுணர்வு எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது (கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார்). Space is non-local. Similarly awareness is non-local.

இந்த வகை விளக்கத்தில் அறிவுணர்வு என்பதும் ஒரு கருத்தே (concept). ஆனால் அது அறிவுணர்வு என்ற இருப்பைச் (existence) சுட்டும் (pointer) கருத்து. நீர் என்ற கருத்து மெய்யான‌ (நிஜமான) நீரைச் சுட்டுவது போல. அதனால் அறிவுணர்வு என்ற கருத்து எதைச் சுட்டுகிறதோ அது கருத்து, பொருள் இரண்டிற்கும் அப்பாற்பட்ட அடிப்படை, மூலம் ஆகும்.

ஆக, நாம் அடைந்த முக்கிய முடிவுகள்


  • ஒரே அறிவுணர்வு உள்ளது.
  • அது மட்டுமே உள்ளது. மற்றவை எல்லாம் அதில் தோன்றுபவையே. அதன் தோற்றமே.
  • அதுவே எல்லாவுமாகத் தோன்றுகிறது.
  • அதுவே தோற்றத்தின் ஒவ்வொரு பகுதிகளுடன் (உடல் மனங்கள்) தனித்தனியாக அடையாளப் படுத்திக் கொள்கிறது. ஒரே சூரியன் பல நீர் நிலைகளில் பல பாத்திரங்களில் உள்ள நீரில் பிரதிபலிப்பதைப் போல.
  • இந்த உடல் மனம் நம்முடைய தற்காலிக அடையாளம்.
  • அறிவுணர்வே நம் பிறப்பு இறப்பற்ற நிரந்தர அடையாளம்.
  • நம் எண்ணம், பேச்சு, செயல் என்று சொந்தம் கொள்பவை இவ்வுடல் மனத்தின் உருவாக்கங்கள் அல்ல. ஏனெனில் நம் உடல் மனம் என்பதே மற்றவை போல் ஒரு தோற்றம்.
  • நம்முடைய தனித்த (பிறவற்றிலிருந்து பிரிந்த - sense of separation) உணர்வு என்பது தோற்றம், கருத்தளவில் உண்மை. ஆனால் மெய்யான‌ (நிஜத்தில்) உண்மையில்லை.

நீர்ச்சுழல் என்பது நீர் ஓட்டத்திலிருந்து தனித்துத் தோன்றுகிறது. அந்த அளவில் அது உண்மை. ஆனால் அது நீரிலிருந்து வேறுபட்டது, பிரிந்து தனித்து நிற்பது என்றால் அது உண்மையில்லை. நீர்ச்சுழலாக (தோன்றி / பிறந்து, சுழன்று, மறைந்து / இறந்து) இருக்கும் போதும் அது நீரே அன்றி வேறில்லை. அது போல் நாம் இந்த உடல் மனமாக இருக்கும் போதும் இல்லாத போதும் அறிவுணர்வே அன்றி வேறில்லை.

அறிவுணர்வைக் கடவுள் என்று அழைத்தால் நாம் ஒவ்வொருவரும் கடவுளே. ஆனால் அது நம்மை அறிவுணர்வோடு அடையாளப்படுத்திக் கொள்ளும் போதே சரி. அதிலிருந்து பிரிந்து தனித்து துண்டித்து நிற்பதாகத் தோன்றும் இவ்வுடல் மனம் அடையாளத்தின் படி சரியில்லை.

அறிவுணர்வு = நான் = இயற்கை = இறைவன் = இருப்பு.


சில கேள்விகள்


நான் அறிவுணர்வு என்ற அடையாளத்தில் எல்லாம் வல்ல கடவுள் என்றால் நான் ஏன் நினைத்தபடி செய்ய முடியவில்லை?

இது பாதி கிணறு தாண்டிய புரிதல் ஆகும்.

அறிவுணர்வு என்ற நிலையில் இச்சா சுதந்திரம் (free will) உண்டு. ஆனால் அதற்கு அங்கு பொருள் (meaning) இல்லை; தேவை (need) இல்லை. ஏனெனில் அது இச்சைகளைக் (விருப்பு வெறுப்புகளைக்) கடந்த நிலை. அதே சமயம் எல்லா விருப்பு வெறுப்புகளுக்கும் ஆதாரமான நிலை.

திரைப்படத் திரைச்சீலை தோன்றும் எல்லாக் காட்சிகளுக்கும் (வெள்ளம், புயல், தீ, காதல், சண்டை, சோகம்...) ஆதாரமாக இருக்கிறது. ஆனால் அந்தக் காட்சிகளைக் கடந்து நிற்கிறது. எந்த வகைக் காட்சியாலும் பாதிக்கப்படுவதில்லை. திரைச்சீலை இல்லாமல் எந்தக் காட்சியும் (பொருளும்) தோன்ற முடியாது.


நான் பிறர் என்ற பிரிவினை வெறும் தோற்றமே என்றால், எல்லாம் நானே (ஒன்றே) என்றால் நான் யாருக்கு என்ன (தீங்கு) செய்தால் என்ன, எப்படி நடந்து (அவமரியாதை, கடுமை, கொடுமை) கொண்டால் என்ன? எல்லாம் எனக்கு நானே செய்து கொள்வது தானே?

கறாராகப் பார்த்தால் ஆம், நான் பிறருக்கு என்ன செய்தாலும், மெய்யுணர்வின் படி, எனக்கு நானே செய்து கொள்வதுதான். ஆனால் அது எல்லோருக்கும் பொருந்தும். பிறர் எனக்கு என்ன செய்தாலும் அது எனக்கு நானே செய்து கொண்டதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதிலும் பாதி கிணறு தாண்டினால் மீண்டும் மாயைக் (பற்று / இன்ப துன்பம்) கிணற்றிலேயே விழுந்து விடுவோம்.

"நாம் பிறருக்கு உதவும் போது நமக்கு நாமே உதவிக் கொள்கிறோம்"
                - ரமண மகரிஷி

“It is one of the most beautiful compensations of life that no man can sincerely try to help another without helping himself.” – Ralph Waldo Emerson
"வாழ்க்கையின் அற்புதமான சமச்சீர் என்னவென்றால் நாம் பிறருக்கு உதவுவதன் மூலம் நாமும் பயனடைவது தான்."
                - ரால்ப் வால்டோ எமர்சன்

இதன் மறுதலையும் உண்மை. அதாவது பிறருக்குத் தீங்கு (எண்ணத்தால், சொல்லால், செயலால்) இழைக்கும் போது நமக்கு நாமே அதைச் செய்து கொள்கிறோம்.

அதே போல் இதன் எதிர்த்தலையும் உண்மை. பிறர் நமக்கு நன்மை செய்யும் போதும் தீங்கு செய்யும் போதும் அவர் அவருக்கே செய்து கொள்கிறார்.

இதை எழுதும் போது எனக்கு நானே உதவிக் கொள்கிறேன்.

உண்மையின் இரு கோணங்கள்


அறிவுணர்வு என்ற அடையாளத்தில் நாம் நின்றால் எல்லாம் (நாம் விரும்புகின்றவை, வெறுக்கின்றவை) நம் செயல்களே, நம் வெளிப்பாடுகளே. யாரையும் எதையும் புகழவோ, இகழவோ, விரும்பவோ, வெறுக்கவோ வழியில்லை.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (திருக்குறள்: 4 1. கடவுள் வாழ்த்து)

கடவுளுக்கு இலக்கணமே விருப்பு வெறுப்பற்றவர் என்பதுதானே.

இந்த உடல் மனம் என்ற அடையாளத்தில் நாம் நின்றால் நமக்கு என்று தனிப்பட்ட வாழ்க்கை (பிறப்பு முதல் இறப்பு வரை பல விருப்பு வெறுப்புகளுடன்) இருப்பது போல் தோன்றுகிறது.

எது உண்மை? இரண்டும் உண்மை.

இரண்டையும் நாம் எந்த விகிதத்தில் (ratio) வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் பொருத்திப் பார்த்துச் சமப்படுத்திச் (balancing) செயல் படுகிறோம் என்பதே நாம் நம்முடன் விளையாடும் வாழ்க்கை விளையாட்டு!

ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு மலர்ச்சி!
ஒவ்வொரு நாளும்
ஒருபடி உயர்ச்சி!

உடல் மன அடையாளத்தை மட்டும் உண்மை என்று நினைத்துக் கொண்டு இருக்கும் கட்டத்தில் அதிலிருந்து விடுபட நீ இந்த உடல் மனம் இல்லை, இவ்வுலகம் வெறும் தோற்றமே / மாயை என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த முதல் பாடத்தை மட்டும் வைத்துக் கொண்டு எடை போடுவது சரியில்லை. முழுமையான பாடப் படிநிலைகளைப் புரிந்து கொண்டால் தான் உண்மை விளங்கும்.

வானவில்லைப் பார்த்து ரசிக்கிறோம். ஆனால் அப்படி உண்மையில் வானத்தில் பல வண்ண வில் ஒன்றும் இல்லை. அது ஒரு தோற்றமே என்பதை மறந்து விடுவதில்லை.

அதே போல் வாழ்க்கையை (இன்ப துன்பங்கள் மாறி மாறி வருவதை) ரசிக்கலாம். ஆனால் அப்படி உண்மையில் இன்பமோ துன்பமோ இல்லை. அவை வெறும் தோற்றங்களே என்பதை மறந்து விடக் கூடாது.

விவேகானந்தர், வேதாந்தம் இந்த உலகை வெறுக்கச் சொல்லவில்லை, இந்த உலகைச் சரியாகப் புரிந்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்றே சொல்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்ட எதையும் நம்பக் கூடாது. அவரவர்கள் திறந்த மனதுடன், எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் யோசித்து, சுய ஆய்வு (ஆன்ம விசாரணை) செய்து உண்மைதானா என்று உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

============

மேற்கண்ட பத்திகளில் பகிர்ந்து கொண்டபடி, நம்மை வெறுத்து, குற்றஞ்சாட்டிப் பிறர் பேசியவை எல்லாமே 'அறிவுணர்வு' என்ற அடையாளத்தில் நமக்கு நாமே சொல்லிக் கொண்டவை தான்!

இது அவர்கள் ஒவ்வொருவர் பார்வையிலும் அவர்கள் அவர்கள் மீதே வைத்த குற்றச்சாட்டுகள் தான் என்றாலும் அவர்களுக்கு அப்புரிதல் வருவது அவர்கள் விருப்பமில்லை.

அதே போல் நமக்கு இப்புரிதல் வருவதும் நம் விருப்பமோ முயற்சியோ இல்லை.

எல்லாம் தானாக நடக்கின்றன. மற்ற இயற்கை நிகழ்வுகளும் நம் உடல் இயங்கங்களும் தானாக (on their own accord) நிகழ்வது போல் எல்லோருடைய எண்ணம், சொல், செயல்களும் தானாக நிகழ்கின்றன. அவை தங்கள் தங்களுடைய எண்ணம், சொல், செயல் என்ற எண்ணங்களும் (attachment thoughts) தானாக எழுகின்றன.

இது தெளிவாக, தெளிவாக 'மனத்திருள் குறையும்', 'மனத்தொளி பெருகும்'. This is what is enlightenment! ஞானப்பிரகாசம் (அறிவு ஒளி)!

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு (திருக்குறள்: 352 / 36. மெய்யுணர்தல்)

இந்த ஒளியில் பார்க்கும் போது நமக்குப் பெருமை / மானம் இல்லை; சிறுமை / அவமானம் இல்லை. வெறுப்புகள் நீர்த்துப் போகும். அதனால் விருப்புகளும் நீர்த்துப் போகும். இன்பமும் நீடிக்காது, துன்பமும் நீடிக்காது என்பது உறுதியாகும். பற்றற்ற பொறுப்புணர்ச்சியில் மகிழ்ச்சியுடன் கடமைகளைச் செய்வோம்.

நம்முடைய கருத்துகள், கொள்கைகள், விழுமியங்கள், மதிப்பீடுகள், உறவுகள், உடல், உலக நலம் பற்றிய கவலைகள்... என எல்லாமே இவ்வொளியில் மாறிவிடும், செம்மையுறும்.

மன அலைவு குறைவதால் பசி குறையும். குறைந்த தூக்கத்திலேயே முழுப்புத்துணர்ச்சி வரும். வெகுநாள் இருந்து வரும் சில உடல் உபாதைகள் கூடச் சரியாகலாம்.

அதே சமயம் இந்த ஒளியோடு நம்முடைய உடல்-மனம் அடையாளத்தில் நின்று பார்ப்பதையும் சமப்படுத்த வேண்டும்.

'எல்லாம் நானே' என்பதால் பிறர் உண்டு நான் பசியாற முடியது. அதே சமயம் நான் - பிறர் (sense of separation) என்ற கருத்து, தோற்ற அளவிலான, வாழ்க்கை நாடகத்திற்கான, பிரிவினையைத் தீவிரமாக எடுத்துக் கொண்டால் 'மனத்திருள் கவ்வும், மனத்துயர் பெருகும்'.

மனம் போல் வாழ்வு

"அதே சமயம் இந்த ஒளியோடு நம்முடைய உடல்-மனம் அடையாளத்தில் நின்று பார்ப்பதையும் சமப்படுத்த வேண்டும்." என்பதின் நடைமுறை என்ன?

குறிப்பாக, நம்முடைய, பிறரின் குறைகளை, பலகீனங்களை மறக்காமல் (அப்போதுதான் மீண்டும் அதே தவறைச் செய்யாமல் இருப்போம்) ஆனால் அதற்காக வெறுப்பு, கோபம், ஆற்றாமை போன்ற சிந்தனைகள் நம் மனதை ஆக்கிரமித்து விடாமல் அவற்றைப் புறக்கணித்து நம்முடைய, பிறரின் நற்குணங்கள், பலங்களைப் பற்றிய சிந்தனைகளுக்கு ஊக்கம் கொடுத்து அவற்றை நம் மனதில் நிரப்ப வேண்டும்.

இதை நான் பின்பற்றிப் பலன் கண்டு வருவதால் தான் பகிர்ந்து கொள்கிறேன். அதே சமயம் இவை எப்பொழுதும் என் இயல்பாக இருக்கும் அளவுக்கு மாறிவிடவில்லை. வழக்குதலும் மீண்டு எழுந்து நினைவுபடுத்திக் கொண்டு பின்பற்றலும் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

எண்ணப் புலம் என்பது எங்கும் பரவியுள்ளது (non-local = universal) என்று மேற்கண்ட கட்டுரையில் பார்த்தோம். அப்படி என்றால் நம் சிந்தனை யாரை நோக்கி, யாரைப் பற்றி, எந்தவிதமாக உள்ளதோ அதற்கு ஒரு விளைவு இருக்கும்.

அதனால் தான் நம்முடைய எண்ணங்கள் பிறரின் குறைகளைப் பற்றி, அவர்களின் சுடுசொற்களைப் பற்றி அதிகம் இருக்கக் கூடாது.

வெள்ளத் தனையது மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு (திருக்குறள்: 595 - 60. ஊக்கமுடைமை)

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் (திருக்குறள்: 706 - 71. குறிப்பறிதல்)

பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின் (திருக்குறள்: 709 - 71. குறிப்பறிதல்)

பிறரைப் பற்றிய நம் எண்ணம் உடன்பாடாக இருந்தால் அது நம் முகம், உடல் அசைவு எல்லாவற்றிலும் (பணிவான பேச்சுக்கு அப்பாற்பட்டு) வெளிப்படும்.

தகவல் பரிமாற்றத்தில் முகம், உடலசைவுகள் (body language) பேச்சை (குரல் மென்மை/வலிமை, உச்சரிப்பு...) விடப் பெரும்பங்கு வகிப்பதை அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்டவை குறித்து கருத்துகள், கேள்விகள், ஐயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

வாழ்நாள் சிறியது; வாழ்க்கையோ பெரிது! 

(கனிச்சாறு 2 ஆம் பகுதி பக்கம் 87,88 - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 1973)

என்றும் நினைத்திரு;
இந்நிலம் பெரிது!
குன்றமும் வானும்
கோடி ஆண்டுகள்
நின்று நிலைப்பன!
நீயோ அழிபவன்!
என்றும் இருப்பதாய் 
இறுமாந்து விடாதே!

ஒருநாள் நம்முடல்
உலகினில் அழியும்!
திருநாள் போலத்
திரிந்த வாழ்வெலாம்
இருளுள் மூழ்கும்
இல்லாமற் போவோம்!
அருமை உறவினர்
அழ அழ அழிவோம்!

பிறப்பன எல்லாம்
பின்னொரு நாளில்
இறப்பதும் உறுதி!
இதுவே இயற்கை!
மறப்பிலா இந்நிலை
மனத்தினுள் இருத்திச்
சிறப்புற எண்ணவும்
செய்யவும் முனைக!

உன்புது வாழ்வை
உவப்புடன் நடத்து!
அன்பும் அறமுமே
அனைத்தினும் உயர்வாம்!
இன்பம் வருகையில்
எக்களிப் புறாதே!
துன்புற நேரினும்
துவண்டு விடாதே!

ஒருநலம் பெறுகையில்
உலக நலம் நினை!
வருநலம் யாவும்
வகுத்துண்டு வாழ்வாய்!
பெருநிலம், விளைவுகள்
பிறவெலாம் பொதுவே!
மருவிலா உள்ளமும்
வாழ்வுமே மகிழ்ச்சி!

வாழ்நாள் சிறியது!
வாழ்க்கையோ பெரிது!
வீழ்நாள் வரினும்
வீழாது நற்செயல்!
தாழ்வும் உயர்வும்
தம்தம் செயல்களே!
சூழ்வன மீறிச்
சுடர்வன செய்வாய்!

எவ்வழி நினைவோ, அவ்வழி நிகழ்ச்சி!

பெருஞ்சித்திரனார் பாடல்கள் - கனிச்சாறு தொகுதி 3 பாடல் 66

உனக்கு முன்னும், இவ்
வுலகம் இருந்தது!
உனக்குப் பின்னும், இவ்
வுலகம் இருக்கும்!
ஊழியிற் சுழலும், இவ்
வுலக வண்டியில்
நாழியே ஏறிடும்
நல்வழிப் போக்கன், நீ!

தொடங்கிய தெங்கே?
தொடர்வது மெங்கே?
அடங்கா முடிவினில்
அடைவது மென்ன?
என்பவை எல்லாம்
எண்ணினும் விளங்கா!
மன்பதைக் கடலுள்
மண்துகள் அசைவு, நீ!

எந்த இடத்தினில்
இறங்கிடு வாயோ?
அந்த நொடிவரை
ஆர்ப்பரிக் கின்றாய்!
சொந்தமும் சுற்றமும்
சுழன்றிடும் அணுக்கள்!
சிந்துகண் ணீரும்
சிரிப்பும் கனவுகள்!

வந்தது நினையாய்!
வழிதடு மாறுவாய்!
வெந்தது தின்றிட‌
வீணிற் பேசுவாய்;
மந்தையில் ஆடுபோல்
மனத்தைச் சுழற்றுவாய்!
முந்தையர் விட்ட‌
முழுமை தொடருவாய்!

நினைத்தவை எல்லாம்
நிலைத்தவை ஆகா!
அனைத்து முயற்சியும்
அரைகுறை முயற்சியே!
மனத்திருள் குறைந்தால்
மனத்துயர் குறையும்!
மனத்தொளி பெறுதலே
வாழ்க்கையின் மலர்ச்சி!

ஒளிபெற எண்ணுவாய்;
ஒளித்துவை யாதே!
வெளிவான் விரிவுபோல்
விரியட்டும் நினைவுகள்!
துளியே யாயினும்
தூய்மையே வாழ்க்கை!
களிசேர்ப் பதுவும்
கசடிலா எண்ணமே!

ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு மலர்ச்சி!
ஒவ்வொரு நாளும்
ஒருபடி உயர்ச்சி!
எவ்வழி நினைவோ
அவ்வழி நிகழ்ச்சி!
செவ்விய மனமே
செவ்விய வாழ்க்கையாம்!

நற்செயல் நற்சொல் நல்லெண்ணம்

முதலில் நற்செயலைச் செய்வதில் நம் கவனம் இருக்கும். ஆனால் இனிய சொற்களைப் பயன்படுத்துவதில் அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. நற்செயல் மட்டும் போதாது, எதையும் நல்லவிதமாகச் சொல்லாவிடில் பயன் அதிகம் இருக்காது என்று வாழ்க்கை அனுபவம் கற்றுக் கொடுக்கும். ஆனால் பிறர் இல்லாத போது அவர்களைப் பற்றிக் குறை சொல்வது நீடிக்கும். 

அடுத்த கட்டம் எண்ணங்களையே தூய்மையாக, உடன்பாடாக ஆக்குவது. அதாவது எதிர்மறை எண்ணங்களைப் புறக்கணிப்பது. அந்த‌ பழக்கத்தால் எதிர்மறை எண்ணங்கள் வலிவிழக்கும்; வருவது குறையும்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற (திருக்குறள்: 34 / 4. அறன்வலியுறுத்தல்)

பயனில எண்ணாமை

எண்ணங்களை நாம் உருவாக்காததால் அவை எழுவதை நிறுத்த முடியாது. கனவுளற்ற ஆழ்ந்த தூக்கம் போல் ஒருவர் ஆழ்ந்த தியானத்தில் நினைவுகள் எழுவதை நிறுத்த முடியலாம். ஆனால் அந்த‌ நிலையில் நீடிக்க முடியாது. தூக்கத்திலிருந்து எப்படியும் ஒருவர் எழுந்து விடுவார். எழாமல் (விழிக்காமல்) இருக்க முடியாது.

அதே போல் ஆழ்ந்த தியானத்திலிருந்து ஒருவர் எப்படியும் வெளியே வந்து விடுவார். மேலும் சிந்தனைகள் அற்ற ஆழ்ந்த தியானத்தில் வேறு எதையும் (சொல், செயல்...) செய்ய வாய்ப்பே இல்லை. அது ஒரு பெரும் தளர்ச்சியான ஓய்வு. வெளியே வந்த பின் அதற்குப் பயன் இருக்கும்.

ஆழ்ந்த தியானத்திலிருந்து வெளியே வராமல் இருந்தால் அது சமாதி ஆகி உயிர் துறக்க (வடக்கிருந்து உயிர் துறத்தல், சாகும் வரை உண்ணா விரதம்) நேரிடும். சமாதியிலேயே இருந்து உயிர் விடுதலைக் கௌரவத் தற்கொலை என்று சொல்லலாம்.

எண்ணங்கள் எழுவதை நிறுத்த முடியாது. ஆனால் அவற்றைப் புறக்கணிக்கலாம் அல்லது முக்கியத்துவம் கொடுக்கலாம்.

மூச்சு விடுவதை நிறுத்த முடியாது (சில நிமிடங்களுக்கு மேல்). ஆனால் மூச்சு வேகத்தைத் தற்காலிகமாகக் குறிப்பிட்ட மணித்துளிகள் கூட்டவோ குறைக்கவோ முடியும்.

அதே போல் இதயத்துடிப்பை நிறுத்த முடியாது. ஆனால் இதயத் துடிப்பு வேகத்தைத் தற்காலிகமாகக் குறிப்பிட்ட மணித்துளிகள் கூட்டவோ குறைக்கவோ முடியும்.

இவை இரண்டும் நம் நேரடி அனுபவ உண்மைகள்.

அதே போல் நம் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவோ புறக்கணிக்கவோ முடியும் என்பதும் நம் நேரடி அனுபவ உண்மை.

நம் வாழ்க்கையின் படிப்படியான உலகியலான சாதனைகள் (படிப்பு, வேலை, குடும்பப் பொறுப்பு...) நம்மால் எந்த சமயத்தில் எவ்வித எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்ற திறமை இல்லாமல் நடந்திருக்காது.

ஏற்கனவே நம்மிடம் உள்ள இந்தத் திறனை இப்போது மேலும் கூர்மைப்படுத்த முனைகிறோம்..

"The highest possible stage in moral culture is when we recognize that we ought to control our thoughts".  - Charles Darwin
நம்முடைய சிந்தனைகளை நாம் கட்டுப்படுத்தியாக வேண்டும் என்று புரிந்து கொள்ளும் நிலை தான் நம் பண்பின் உச்சக் கட்ட வளர்ச்சிப் படியாகும்.

டார்வினின் மேற்கோளில் 'சிந்தனைகளைக் கட்டுப்படுத்துதல்' என்பதை விரும்பாத‌ சிந்தனைகளை வராமல் தடுத்து நிறுத்துதல் என்று எடுத்துக் கொள்ளாமல் அவை வருவதைத் தவிர்க்க முடியாது ஆனால் புறக்கணிக்க முடியும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இவை எதுவும் என்னுடைய கண்டுபிடிப்புகள் அல்ல. ஆனால் படித்துச் சிந்தித்து உணர்ந்து தெளிந்த உண்மைகள். ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல் இவை என் முழுமையான இயல்பாகி விடவில்லை. அப்படியான முழுமைச் செம்மை (perfect) நிலை இவ்விருமைக்குள் (duality) இருக்க முடியாது. ஆனால் அதை நோக்கி படிப்படியான முன்னேற்றம் பெற வாய்ப்புள்ளது. எப்போதும் எங்கும் உள்ளதைக் காணவில்லை என்று தேடித் திரிந்து, தேடுவதே அதுதான் என்று தெளிவதே வாழ்க்கை!
=============