Tuesday, 26 February 2013

'விஸ்வரூபம் – விளங்கும் உண்மைகள்' - கருத்துகள்

2013-02-26

http://siragu.com/?p=6401
விஸ்வரூபம் – விளங்கும் உண்மைகள்

கீழ்க்கண்ட கருத்தை மேலே உள்ள கட்டுரையின் மீது பதிவு செய்துள்ளேன்.

நடிப்பவர்கள் பிறரைப் போன்று ஒரு தொழில் செய்பவர்கள். அதிலும் அவர்கள் அட்டைக் கத்தி வீரர்கள். போலித் தனத்தைக் காசாக்குபவர்கள். நம் முட்டாள்தனத்தில், மயக்கத்தில் வணிகம் நடத்துபவர்கள். டாஸ்மார்க் போதைக்கும் சினிமா போதைக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறதா? ஆல்கஹால் மருந்தாகப் பயன்படுவது போல் சினிமாவைப் (கலை) பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. அதிலும் இன்றுள்ள அதி தொழில்நுட்பத்தில் நடிப்பவரின் திறமைக்கு எவ்வளவு பங்கு? எடுத்துக் காட்டாக, ஒருவர் பாட்டு எழுதி, இன்னொருவர் இசை அமைத்து, மற்றொருவர் பாடி இருக்க நடித்து உதடு அசைத்தவர் பெயரில் அப்பாடல் அழைக்கப்படும் பொய்மை நமக்குத் தெரியாமலா இருக்கிறது? என்றாலும் மயங்குகின்றோம்.


60, 70 ஆண்டுகளுக்கு முன்பு நடிப்பவர்கள் என்றால் கேவலமாகக் கருதப் பட்டதிலிருந்து இன்று நடிப்பவர்கள் அரசியலையும் ஆட்டுவிக்கும் வண்ணம் ஆகி உள்ளது சரியான வளர்ச்சியா? இந்தப் புற்றுநோய் வளர்ச்சியிலும் அதன் தீர்விலும் நம் ஒவ்வொருவரின் பங்கும் இருக்கின்றது.

ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்த நாட்டில் 'தமிழ்ப்' பள்ளிகள் நடத்தி தாய்மொழியைப் பேணி வரும் சிறந்த ஆக்க வேலைக்கு எதிராக தமிழ்ச் சினிமாவையும் அதன் போலிகளையும் தூக்கிப் போற்றிப் பரப்பி வரும் இன அழிவு வேலையையும் முன்னின்று செய்து வருகிறார்கள்.

இந்தியத் துணைக்கண்டத்தில் சினிமா மோகம் குறைந்த இனங்களின் (குஜராத்தியர்) மனப்பான்மை வேறுவிதமாக இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். சினிமா போதை குறையாமல் தமிழர்களின் (ஈழத்தமிழர்கள் உள்பட) போக்கில் ஆரோக்கிய மாற்றம் வரும் என்று நினைப்பது பகற்கனவு.

கலை உணர்வற்ற கல்மனம் கொண்டவனின் புலம்பல் அன்று இது. நல்ல தமிழ்த் திரைப்படப் பாடல்களைப் போற்றுபவனே. திருக்குறளிலிருந்து கற்றுக் கொள்ளும் சில கருத்துகளைத் திரைப் படப் பாடலிலிருந்தும் கற்றுக் கொள்ளலாம் என்று சொல்லி வருபவனே. கலையைப் போற்றுவது போதையாகி விடக் கூடாது. போலித்தனத்தைப் போற்றும் வரை அடிமையாகத் தான் இருக்க முடியும். போலித்தனத்தில் பொருள் (அர்த்தம்) தேடி விமர்சிப்பது (அதன் முகத்திரையைக் கிழிப்பதற்கு அப்பால்) வீண் வேலை.

இன்றைய நிலையில் நாம் தமிழ் சினிமாவைப் பார்த்து ஆதரிக்காமல் இருந்தாலே போதும்; அதுவே தமிழ் இன, மொழி மறுமலர்ச்சிக்குச் செய்யும் நம்மளவிலான தொண்டாகும். 

***

“ஈழப்போர் என்பது இந்தியா அதிகாரவர்க்கத்திற்கு சவால் விடும் ஒரு வரலாற்று நிகழ்வு” என்பது எப்படி என்று கட்டுரையாளர் இன்னொரு கட்டுரையில் விளக்குவாரா? ஈழப்போர் பற்றிய படமெடுத்து எல்லாப் பக்க உண்மைகளையும் சொன்னால் படம் யாருக்குமே பிடிக்காது. அவரவர் அவரவருக்குப் பிடித்த ‘உண்மைகளை’ மட்டுமே கேட்கவும் பார்க்கவும் விரும்புகின்றோம். அதை நாம் தன்னுணர்வாகத் தாண்டி அடுத்தப் பக்கச் செய்திகளையும் தெரிந்து கொள்ளா விட்டால் மேற்கண்டது போன்ற ‘மாயை’யில் தான் உலவ நேரிடும். ‘இகலுக்கு எதிர் சாய்தல் ஆக்கம்’ (திருக்குறள்: 858) பற்றற்ற பொறுப்புணர்ச்சி தான் நம்மை சரியாக வழி நடத்திச் செல்லும்.


No comments:

Post a Comment