2013-01-26
கூட்டு மயக்கம் / குழு மயக்கம்
ஒரு விஷயத்தை பலர் அலசும் போது ஒவ்வொருவரும் பிறரின் கருத்தை அறிந்து கொள்ளும் முன் தனித் தனியாக அலசி அவரவராக முடிவுக்கு வர வேண்டும். இல்லாவிடில் அடுத்தவரின் கருத்து கேட்பவரின் நடுநிலையைப் பாதித்து விடும். அப்படிப் பாதிக்கும் போது எல்லோருமாகச் சேர்ந்து கூட்டு மயக்கம் / குழு மயக்கம் அடைந்து ஒரே முடிவுக்கு வரும் படி அவர்களை அறியாமல் தள்ளப்படுவர்.
இது விரிவாக ஆராய்ச்சி செய்யப் பட்டுள்ளது. இதைத் தவிர்க்கப் பல யோசனைகளும் திட்டங்களும் முன் வைக்கப் பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக, ஒரு விஷயத்தைப் பற்றிக் கலந்து பேசக் கூடும் போது, அவ்விஷயத்தைப் பற்றிய சார்பற்ற வெளிப்படையான கருத்துகளை மட்டும் கூறி விட்டு ஒவ்வொருவரையும் அவர்களின் வாதப் பிரதிவாதக் கருத்துகளைத் தாளில் எழுதி மேசையின் மீது வைத்து விட்டு, பிறகு ஒவ்வொருவராக அவர்கள் கருத்துகளைப் படித்து விளக்க வேண்டும். இப்படிச் செய்யும் போது யாரும் அவர் தாளை எடுத்துத் திருத்தம் செய்யக் கூடாது. அவரவர் முறை வரும் போது தாளில் எழுதியுள்ளதையே (கருத்து இப்போது மாறுபட்டு இருந்தாலும்) படித்து விளக்க வேண்டும். கடைசியாக எல்லா உடன்பாட்டு, எதிர்மறைக் கருத்துகளையும் பட்டியல் இட்டு மதிப்பெண்கள் கொடுத்து முடிவுக்கு வரலாம். ஒவ்வொரு கருத்துக்கும் மதிப்பெண் கொடுப்பதை அனைவரும் வாக்களித்து முடிவு செய்யலாம்.
இப்படிச் செய்வதால் முடிவு செப்பமாக அமைய வாய்ப்பு அதிகரிக்கும் என்பதை விட நன்கு பேசத் தெரிந்த ஒருவரோ அல்லது முதலில் சொல்லப் படும் கருத்தோ முடிவைத் திரித்து விடுவதைத் தவிர்க்கலாம். அதே சமயம் எந்த ஒரு முறையும் அதில் பங்கேற்பவர்களின் பொறுப்புணர்ச்சி, தன்னறிவு, சிந்திக்கும் திறன் போன்றவற்றைப் பொறுத்தே பலன் தரும்.
No comments:
Post a Comment