2011-04-29
கமால் அத்தா துர்க்
1996-இல் ஒரு நாள் இலண்டனில் எங்கள் வீட்டிற்கு கேபிள் டிவி இணைப்பு கொடுக்க வந்தவரின் நிறம், மீசையைப் பார்த்ததும் பிரித்தானியர் அல்லர் என்று தெரிந்தது. அவரோ என் பெயர் 'யன்' என்று முடிவதையும் என் மீசையையும் கண்டு 'நீங்கள் அர்மீனியரா?' என்று வினவினார். 'இல்லை, இந்தியன்' என்றேன். அவர் உடனே, நாங்கள் (அர்மீனியர்) உலகத்தின் மிகப் பெரும் பழமையான இனத்தினர், இன்று நிலை தாழ்ந்து போயிருக்கிறோம் என்று ஆரம்பித்துச் சொல்லிக் கொண்டு போனார். நானும், நாங்களும் இந்தியாவின் பழம் பெரும் குடியினர், தமிழர்கள், இன்று பழம் பெருமையான நிலையில் இல்லை என்று பதிலுக்குப் பெருமை-புலம்பல் ஒத்து ஊதினேன்.
பதின்மூன்றாம் நூற்றாண்டில் தான் துருக்கிப் பகுதிக்கு (மத்திய ஆசியாவிலிருந்து) வந்த துருக்கியர்கள் தங்களை ஆதிக் குடியினர் என்றும் அவர்களிலிருந்து தான் பிரித்தானியர் போன்றோர் பிரிந்து சென்றனர் என்றும் அடித்துச் சொல்கின்றனர் என்று இந்நூலில் (கமால் அத்தா துர்க்) சொல்லியிருப்பதைப் படித்ததும் எனக்கு மேற்கண்ட நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.
மற்றொரு நாள் பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டு இருந்த போது பக்கத்தில் இருந்தவர் அறிமுகம் செய்து கொண்டு பேச்சுக் கொடுத்தார். அவர் ஒரு துருக்கியர். ஜெர்மனியில் பல ஆண்டு காலம் வாழ்ந்து வருவதாகவும் துருக்கியர் இல்லாது ஜெர்மனியில் பல அவசியமான வேலைகள் நடைபெறாது என்றும் என்றாலும் தாங்கள் ஜெர்மனியர்களால் மோசமாக நடத்தப் படுவதாகவும் 12 ஆண்டுகள் ஜெர்மனியில் வாழ்ந்தாலும் குடியுரிமை கிடைப்பது அரிது என்றும் சொன்னார்.
இன்னும் ஒரு நாள் (அப்போது பசுமைக் கட்சியில் - Green Party - உறுப்பினராக இருந்தேன்) தெருவில் நின்று கொண்டு ஈராக்கிலிருந்து பிரிட்டிஷ் படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று துண்டறிக்கைகளைக் கொடுத்துக் கொண்டு இருந்த போது ஒரு குர்தியர் (Kurdish) வந்து எங்களைப் பார்த்து கடுமையாகச் சாட ஆரம்பித்து விட்டார். உங்களுக்குத் தெரியுமா நாங்கள் (குர்தியர்) சதாம் ஆலும் துருக்கியர்களாலும் எப்படிப் பட்ட கொடுமைகளுக்கு உள்ளாகிறோம் என்று, இங்கு பாதுகாப்பாக நின்று கொண்டு நீங்கள் பிரிட்டிஷ் படைகளைத் திரும்ப வேண்டும் என்று கூறுகிறீர்கள், அப்படி இப்படி என்று. அவரைச் சமாதானப் படுத்தி எல்லா அடக்குமுறைகளையும் நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொல்லி ஒரு வழியாகத் தப்பினோம்.
சதாமுக்கு எதிராகக் குர்தியருக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்கிக் கொண்டே அதே குர்தியர் போராட்டங்களை (தீவிரவாதிகள் என்று துருக்கி சொல்கிறது) அடக்கத் துருக்கிக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்கியதைப் பிரபலமான அமெரிக்க மொழியியல் அறிஞர், தத்துவ அறிஞர், சமூகச் செயலாளி நோம் கோம்ஸ்கி எடுத்துக் காட்டியுள்ளார். குர்தியர் நாடு ஈராக் துருக்கி எல்லைகளில் பரந்து உள்ளது.
காலனி ஆதிக்க நாடுகள் தங்கள் பலம், வசதிக்கேற்ப ஆசிய, ஆப்பிரிக்க அரசு, மக்கள் சமுதாயத்தைப் பங்கு போட்டுக் கொண்டதில் பல பழம் பெரும் இனங்கள் சிதறுண்டன. பல இனங்கள் வலிந்து (இலங்கையில் தமிழர், சிங்களர் போன்று; பாகிஸ்தானில் சிந்தியர், பாஞ்சாபியர் போன்று; ஆப்பிரிக்காவில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன) சேர்ந்து வாழத் தள்ளப் பட்டனர்.
துருக்கியர் அர்மீனியர்களை இலடசக்கணக்கில் இனப்படுகொலை செய்தது குறித்து இன்றும் துருக்கிக்கும் (இனப்படுகொலை இல்லை என்று மறுக்கிறது) அர்மீனியாவுக்கும் இடையில் சிக்கல்கள் நிலவுகின்றன. இது 1915-16-இல் நடந்தது. அர்மீனியர்கள் 15 இலட்சம் பேர் இறந்தனர் என்றும் துருக்கி 3 இலடசம் பேர் தான் என்றும் சொல்கின்றன.
துருக்கியில் வாழும் (20 விழுக்காடு என்று சொல்லப்படுகிறது) குர்தியருக்கு மொழி, பண்பாடு உரிமைகள் உள்பட பல கிடையாது. அதைச் சரி செய்யாமல் துருக்கிக்கு ஐரோப்பிய யூனியனில் இடம் கிடைக்காது. அதன் பொருட்டு, கண் துடைப்புக்காகச் சில சலுகைகள் வழங்கப் படுகின்றன.
இவற்றை இங்கே குறிப்பிடக் காரணம் ஓர் இனம் தான் அடிமைப்பட்டு இருந்து போராடி விடுதலை அடைந்த பின் அதே விதமான அடக்கு முறைகளைக் கொஞ்சமும் மனசாட்சி இன்றி அடுத்த இனத்தவர்கள் மீது செலுத்துவது வரலாற்றில் பக்கம் பக்கமாக இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டவே ஆகும். அதற்காக இன்று நாம் எதிர் கொள்ள வேண்டிய சிக்கல்கள் இல்லாமல் போய் விடவில்லை. ஆனால் இந்த வரலாற்றுப் பாடங்களைப் புறக்கணித்து விட்டுச். சென்றால் நடிகர்கள் மாறியிருப்பார்களே தவிர நாடகம் அதுவாகவே இருக்கும்.
இன்னொரு பார்வையில் 'காலனி ஆதிக்க' நாடகம் போய் 'உலகமயமாக்கல், தாராளப்படுத்துதல்' என்ற வேறு நாடகப் பெயர்களில் அதே காட்சிகள் (இயற்கை வளங்கள், வணிக வாய்ப்புகள், மூளை, உடல் உழைப்புச் சுரண்டல்கள்) நடந்து வருகின்றன. தடை செய்யப்பட்ட தொழில் வேறு பெயரில் நடத்தப் படுவது போலவே இதுவும்.
இதெல்லாம் நமக்கு இன்று தெரியும் உண்மைகள், பாடங்கள். ஆனால் இந்த நூலின் உள்ளடக்கத்திற்கு வர நாம் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பின் செல்ல வேண்டும். இன்றைக்கு (2011) நூறு ஆண்டுகளுக்கு முன் ஏறத்தாழ 600 ஆண்டுகளாக உயர்ந்து விளங்கிய ஆட்டோமான் (Ottoman) பேரரசு [இன்றைய துருக்கி, ஈராக், எகிப்து, அர்மீனியா, பல்கேரியா, கிரீஸ், ஹங்கேரி, கிரிமியா, பாரசீகம் (ஈரான்), அல்பேனியா பகுதிகளை உள்ளடக்கியது] உடைந்து சிதறி அதன் இறங்கு முகத்தில் இருந்தது.
அப்படி வலிவிழந்த துருக்கியிலிருந்து விடுதலை அடைய பல நாடுகள் முயன்றன. அவற்றைத் தூண்டி விட்டு, காலனி ஆதிக்க நாடுகள் (பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தலி) தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டன. எகிப்து பிரிட்டன் வசம் சிக்கியது. லிபியா இத்தலியின் ஆதிக்கத்துக்குள் விழுந்தது. அது அன்று துருக்கியின் தலைநகரமான கான்ஸ்டாண்டிநோபிளில் பிரிட்டிஷ் படைகள் நின்று சுல்தானைக் கொண்டு பொம்மை ஆட்சி செய்யும் அளவுக்கும் சென்றது.
துருக்கி சுல்தான் பல நாடுகளிலும் வாழும் இஸ்லாமிய மதத்தினருக்கும் சேர்த்துக் 'கலீபா'வாக (Caliph / Khalifa) விளங்கினார். அரசியலும் மதமும் ஒன்றாய் பிரிக்க முடியாத படி இருந்தன.
இந்த சூழ்நிலையில் துருக்கியில் பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் துருக்கியரைத் தட்டி எழுப்ப எழுதினர், பாடினர். ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று படித்து வந்த இளைஞர்கள் நாட்டை அந்நியர் பிடியிலிருந்து மீட்டுத் துருக்கியரின் பெருமை மீண்டும் நிலை நாட்ட இயக்கம் கண்டனர். அதில் வழக்கம் போல் பல கட்சியினர், குழப்பங்கள். இவற்றிற்கிடையே இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு இவற்றால் வீழ்ந்து விடாமல் துருக்கியரின் விடுதலையைச் சாதித்தவன் கமால் அத்தா துர்க்.
அதோடு நின்று விடாமல், அரசையும் மதத்தையும் பிரித்தது முதல் குடியரசை நிறுவியது, துருக்கி மொழியை லத்தீன் எழுத்துக்களைப் கொண்டு எழுதும் முறையைக் கொண்டு வந்தது, மக்களை ஐரோப்பிய உடை, நடை, பாவனை, பண்புகளுக்கு மாற்றியது துருக்கியருக்குள் இருந்த சாதி போன்ற பிரிவினைகளை ஒழித்தது, ராணுவத்தையும் அரசாங்கத்தையும் பிரித்தது, இஸ்லாம் அரசு மதமாக இருந்ததை நீக்கியது, ராணுவத்திற்கு அரசின் மதச்சார்பின்மையைக் காக்கும் பொறுப்பைக் கொடுத்தது எனப் பல புரட்சிகர சீர்திருத்தங்களைச் சட்டமியற்றி நடைமுறைப் படுத்தித் துருக்கியரைத் தலைகீழாகப் புரட்டி எடுத்தான் கமால்.
இவை யாவும் 15 ஆண்டுகளில் நடந்தது என்பது பெரிய சாதனை. கமாலின் ஆளுமைக்கு எடுத்துக் காட்டு. அதே சமயம் பல வகைகளில் (முதல் உலகப் போருக்குப் பின் காலனி ஆதிக்க நாடுகளின் சோர்வு) சூழ்நிலை கனிந்து இருந்ததை மறுக்க முடியாது.
கமால் ஒரு ராணுவக் கேப்டன். இலங்கையில் தமிழீழத் தனி அரசைத் தமிழ்ப் போராளிகள் நடத்தி வந்தது போல் அங்கோராவைத் தலைநகராகக் கொண்டு கான்ஸ்டாண்டிநோபிளுக்கு எதிராகப் போட்டித் துருக்கி அரசாங்கத்தை நடத்தி வந்தான் கமால். அதுவே கடைசியில் மக்களின் அதிகார பூர்வமான அரசாகியது. அது முதல் அங்கோரா துருக்கியின் புதிய தலைநகர் ஆகி விட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் 'ஐரோப்பாவின் நோயாளி' என அழைக்கப்பட்ட துருக்கி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் புத்துயிர் பெற்று ஐரோப்பாவின் மற்ற நாடுகளின் பாதையில் நாகரிகக் குடியரசாக மலர்ந்து விட்டது..
1938 இல் கமால் அத்தா துர்க் இறந்த பின்பு துருக்கி பல முறை ராணுவ ஆட்சியில் விழுந்து எழுந்தது. இன்றுள்ள அரசு இஸ்லாமியச் சார்புடையவர்களால் நடந்து வருகிறது. ராணுவம் தலையிடுமோ என்ற நிலை உள்ளது.
நாம் வரலாற்று நூல்களை அதன் பாத்திரங்களை எடை போடும் போது நூல் எழுதப் பட்ட காலம், அவ்வரலாறு நிகழ்ந்த காலம் இவற்றை மனதில் கொண்டே செய்ய முடியும். இன்று மேற்குலக நாடுகளின் பண்பாடு, பொருளாதார முறைகள், அரசியல் அமைப்புகள் எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு வரவேற்கத் தக்கவை அல்ல என்ற புரிதல் வளர்ந்து வருகின்றது. அதே சமயம் தேசியம் என்ற பெயரில் அரசியல் விடுதலை என்பது உலகமயமாக்கல் பொருளாதார அடிமைத் தனத்தில் சிக்காமல் வாங்க இயலாத நிலை உள்ளது. அப்படிப் பெறும் விடுதலை வெறும் தாளில் உள்ளதே.
இன்று மதத்தின் அடிப்படையிலான அரசு அமைப்புகளோ, மக்களாட்சி என்ற அமைப்புகளோ, சோசலிசம் என்ற அமைப்புகளோ எவையும் அந்தந்த நாட்டின் எல்லா மக்களுக்கும் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவு செய்ய இயலவில்லை. மற்ற நாடுகளைக் கொள்ளையடிக்காமல் போனால் இன்று மேற்குலக நாடுகளில் நிலவும் வாழ்க்கைத் தரம் இருக்க, தொடர முடியாது.
1920 ஆண்டு துருக்கியின் அன்றைய தலைநகரான கான்ஸ்ண்டாடிநோபிளில் பிரிட்டிஷ் படைகள் சுல்தானின் 'அனுமதி'யுடன் ஆக்கிரமித்துக் கொண்டு சுல்தானின் பெயரில் பிரிட்டிஷ் ஹை கமிஷனர் உத்தரவுகளைப் பிறப்பித்து ஆட்சி செய்தார். அதற்கும் இன்று ஈராக்கில் நடப்பதற்கும் ஆப்கானிஸ்தானில் நடப்பதற்கும் என்ன வேறுபாடு? ஒன்றுமில்லை. அதே நாடகம். அதே காட்சிகள்.
வல்லரசுகள், மூன்றாம் உலக நாடுகளில் உள்நாட்டுக் கலகத்தைத் தூண்டி விட்டு அதன் கட்டுப்பாடு ஒழுங்கைக் குலைப்பது அல்லது அப்படியான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது பின்னர் சிக்கல்கள் முற்றி வருவதற்கு ஆயுதங்களை இருபக்கமும் சட்டப்படியும், சட்டத்திற்கு அப்பாற்பட்டும் வழங்குவது, பிறகு காப்பாற்றுவதாகப் படைகளை நுழைத்து பொம்மை ஆட்சியை நிறுவி தனக்குச் சாதகமான வணிக, நிதி ஒப்பந்தங்களைச் செய்து கொள்வது... இவை நேரடிக் காலனி ஆதிக்க ஆட்சிக் காலத்திற்குப் பிறகு கடைபிடித்து வருவதாகும்.
இந்த வலையில் வீழாமல் இருக்க இதுவரை எந்த நாட்டாலும் முடியவில்லை. அதற்கு அந்தந்த நாட்டின் சமுதாயம் ஆள்வோராகவும் ஆளப்படுபவராகவும் ஆழமாகப் பிளவு பட்டு நிற்பது, ஒரு இனக்குழு மற்றொரு இனக்குழுவை அடிமைப்படுத்துவது போன்றவை காரணங்களாக உள்ளன. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பொது அறிவு எச்சரிக்கையை நடைமுறைப் படுத்த முடியவில்லை.
மேற்கத்திய வல்லரசுகள் கையாண்டு வரும் உத்தியை இன்று சீனா, இந்தியா போன்ற வளர்ந்து வரும் ஆதிக்க சக்திகளும் பின்பற்ற வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகிச் செயலில் காட்டி வருகின்றன.
எந்த ஒரு நாட்டின் மக்கள் கூட்டமும் ஒரே சீரான தேவை, பாதிப்புகளை உடையதாக இல்லை. இலங்கைச் சிக்கலில் கூட தமிழன் எங்கு வாழ்கிறான் (வன்னி, யாழ்ப்பாணம், திரிகோணமலை, கொழும்பு...) என்பதைப் பொறுத்து பலன்களும் பாதிப்புகளும் உள்ளன. அதே போல் எந்தச் சமுதாயப் படிக்கட்டில் உள்ளார்கள் என்பதும் பங்கு வகிக்கின்றது. இவை சமுதாயத்தை ஒன்று படுத்தும் முயற்சியின் முன் உள்ள சவால்கள். இவை வல்லரசு நாடுகளின், ஆதிக்க சக்தியாக வளர்ந்து வரும் நாடுகளின் மக்கள் கூட்டத்திலும் நிலவுகின்றது.
முதலாளித்துவம், சோசலிசம் என்பதெல்லாம் மூடிய உலகில் மூடா வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே இருக்கின்றன. ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி எல்லாம் வெறும் ஆட்சி மாற்றம், அதிகார மாற்றமாகவே இருந்தன, அதனால் வீழ்ந்தன. புதிய சமுதாயத்தை பழைய, காலவதியான, நீடித்து இருக்க முடியாத வாழ்க்கை மதிப்பீடுகளைக் கொண்டு கட்டி எழுப்ப முடியாது.
இதை எதிர் கொள்ள ஒரு மக்கள் கூட்டம் இன்று நிலவும் வாழ்க்கை பற்றிய மதிப்பீடுகளை ஆய்வு செய்யாமல் இயலாது. அந்நியர் கருத்துத் தலையீட்டை எதிர்க்காமல் அவர்களின் பொருளாதார, வணிக, அரசியல், ராணுவத் தலையீட்டை எதிர்க்க முடியாது. அந்த வகையில் கமால் அத்தா துர்க் துருக்கியின் வாழ்க்கை முறையை ஐரோப்பிய முறைக்கு மாற்றியதன் மூலம் நெடுங்கால அடிமைத் தனத்திற்கு வழிகோலி விட்டார் என்றும் சொல்ல இடம் உள்ளது.
மதத்தையும் அரசையும் பிரிக்க வேண்டுவது முதல் படி. அதற்குப் பிறகு பல படிகள் உள்ளன. அவற்றைச் சரியாகச் செய்யாவிடில் வழுக்கி மீண்டும் முதல் படிக்கும் கீழே போய் விடும் ஆபத்து உள்ளது.
அதனால் நாம் இந்த நூலைப் படித்து அறிந்து கொள்வது ஒரு குறிப்பிட்ட தீர்வை அன்று. ஒரு தன்னலமற்ற தலைவன் எப்படி இருப்பான் என்பதைத் தெரிந்து கொள்ளவே ஆகும். அதிலும் கமால் தொடக்கத்திலிருந்தே புகழுக்கு அடிமையாகாமல் விழிப்பாக இருந்து வந்துள்ளது வியப்பான ஒன்றாகும். அதற்கு அவன் தந்தை பெரும் காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
துருக்கியைப் பின்பற்றி லிபியாவில், ஈராக்கில், ஈரானில், எகிப்தில் நடந்த அந்நியர் ஆதிக்கத்தை எதிர்த்த விடுதலைப் புரட்சிகளும் ஆட்சி மாற்றங்களும் கமாலின் பாதையில் செல்லவில்லை என்பதைப் பார்க்கும் போது 'துருக்கியின் தந்தை' என்று முஸ்தபா கமால் அழைக்கப்படுவதன் சிறப்பு விளங்குகிறது.
நூலின் இரண்டாம் பதிப்புரையில் சொல்லியுள்ளது போல் முஸ்லிம் அன்பர்கள் வரவேற்பைப் பெற்ற இந்நூல் இன்றைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய ஒன்றாகும். அதற்கு வழி வகுத்துள்ள ஐரிஸ் பதிப்பகத்தாருக்கு நன்றி.